ஜெயலலிதா 'கதைக்கு' கருணாநிதி 'எதிர்கதை'

மகனது வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் தந்தை, மகன் ஏறும் ஏணியைத் தட்டிவிடுவதாக ஜெயலலிதா நேற்று கூறிய குட்டிக் கதைக்குப் பதிலடியாக தி.மு.க. தலைவர் கருணாநிதியும் குட்டிக் கதை ஒன்றைக் கூறியிருக்கிறார்.

'கதைப்போட்டி'
படக்குறிப்பு, 'கதைப்போட்டி'

சென்னையில் நேற்று அ.தி.மு.க. பிரமுகர்களின் இல்லத் திருமணங்களை நடத்திவைத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின் இடையில் மோதல் இருக்கிறது என்பதைப் போல குட்டிக் கதை ஒன்றைக் கூறினார்.

அரசியலில் வளர நினைக்கும் மகன் அதன் பாடங்களைக் கற்றுக்கொள்ள ஏணியில் ஏறுவதாகவும் மகன் மிகவும் வளர்ந்துவிடக்கூடாது என நினைக்கும் தந்தை, அந்த ஏணியைத் தட்டிவிடுவதாகவும் அந்தக் கதையில் ஜெயலலிதா கூறியிருந்தார்.

இதற்குப் பதிலடியாக தி.மு.க. தலைவர் கருணாநிதி, பேராசைப் பெருமாட்டியைப் பற்றிய குட்டிக் கதை என்ற பெயரில் கதை ஒன்றை கூறியிருக்கிறார்.

மகன் எச்சரிக்கையுடன் ஏணியில் ஏறிவர வேண்டும் என அக்கறையுடன் இருக்கும் தந்தையைப் பார்த்து எதிர் வீட்டு சீமாட்டி ஏமாற்றமடைவததுதான் உண்மையான கதை என்று அவர் கூறியிருக்கிறார்.