2ஜி: சாட்சியாக ஆஜராக ஆ.ராசாவுக்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதி

ஆ.ராசா
படக்குறிப்பு, ஆ.ராசா

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு தொடர்பில் நடைபெற்று வரும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவை அவரது தரப்பு சாட்சியாக விளக்கம் அளிக்க தில்லியில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் திங்களன்று அனுமதி வழங்கியது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தனது தரப்பு சாட்சியாக ஆஜராக தனக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று ஆ.ராசா தாக்கல் செய்திருந்த மனுவிற்கு சிபிஐ தரப்பு எதிர்ப்பு தெரிவிக்காததை அடுத்து அந்த மனுவை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சய்னி, சாட்சிகளின் தரப்பு வாக்குமூலங்களைப் பதிவதென்பது ஜூலை 1ஆம் தேதி துவங்கும் என்று அறிவித்துள்ளார்.

அத்துடன் ராசாவோ அல்லது அவரது பிரதிநிதியோ ஜுலை மாதம் 1ஆம் தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி இன்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலர் சித்தார்த் பெஹூரா, யுனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்த்ரா, கலைஞர் தொலைக்காட்சியின் ஷரத் குமார் ஆகியோரும் தங்கள் தரப்பு சாட்சியங்களாக ஆஜராக விரும்புவோர் பட்டியலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தனர்.

இதற்கும் சிபிஐ தரப்பில் எதிர்ப்பு இல்லாததால் இவர்கள் சமர்பித்த பட்டியலில் உள்ள சாட்சிகள் ஆஜராகி சாட்சியளிக்கலாம் என்றும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் கௌதம் தோஷி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் வினோத் கோனகே ஆகியோர் தங்கள் தரப்பில் எந்த சாட்சியங்களையும் முன்வைக்க விருப்பமில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.