செம்மொழி மாநாடு ஊழல் புகார் குறித்து விசாரிக்க உத்தரவு

திமுக ஆட்சிக்காலத்தில் கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டில் ரூ 200 கோடி அளவு முறைகேடு என்ற புகாரில் முகாந்திரம் இருப்பின் அது குறித்து மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
கோவையில் 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட செம்மொழி மாநாடு பலரின் கவனத்தை ஈர்த்தது.
வழக்கறிஞர் ரமேஷ்குமார் தான் அம் மாநாட்டுச் செலவுகள் குறித்து தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டபோது அக்கௌண்டட் ஜெனரல் அலுவலகம் ரூ 151.22 கோடி செலவழிக்கப்பட்டதாக தெரிவித்தது, ஆனால் அம்மூன்றுநாள் மாநாட்டிற்காக 350 கோடி ரூபாய் வரை செலவழிக்கப்பட்டதாக அன்றைய முதல்வர் மு கருணாநிதி சட்டமன்றத்திலும் வெளியிலும் கூறியிருக்கிறார்.
கோரிக்கை
எனவே 200 கோடி ரூபாய் வரை முறைகேடாக செலவழிக்கப்பட்டிருக்கலாம் என தான் கருதுவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இது குறித்து புகார் கொடுத்தும் அவர்கள் வழக்கு பதிவு செய்ய முன்வரவில்லை. எனவே கருணாநிதி, அன்றைய நிதி அமைச்சர் அன்பழகன், அன்றைய துணைமுதல்வர் முகஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் மீது செம்மொழி மாநாட்டு ஊழல் தொடர்பில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கவேண்டுமென லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்திரவிடவேண்டுமெனக் கோரி ரமேஷ்குமார் மனுதாக்கல் செய்திருந்தார்.
அவ்வழக்கு இன்று திங்கள் நீதிபதி மாலா முன் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி மனுதாரரின் குற்றச்சாட்டுக்களுக்கு போதிய முகாந்தரம் இருப்பின் அவர் கோரியுள்ளபடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவேண்டுமென லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.








