எச்சில் ஆபத்தில் இருந்து பாலத்தை பாதுகாக்க நடவடிக்கை

எச்சிலால் அரிக்கப்பட்டுள்ள பாலத்தின் மூட்டு ஒன்று
படக்குறிப்பு, எச்சிலால் அரிக்கப்பட்டுள்ள பாலத்தின் மூட்டு ஒன்று

வெள்ளைக்காரர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கொல்கத்தா நகரின் பிரசித்தி பெற்ற ஹௌரா பாலத்திற்கு தற்போது ஒரு ஆபத்து வந்துள்ளது.

வெள்ளத்தாலோ பூகம்பத்தாலோ இந்த ஆபத்து வரவில்லை. வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு எல்லாவற்றையும் வாயிலே போட்டு நன்றாகக் குதப்பி மக்கள் துப்பும் எச்சிலால்தான் இந்த ஆபத்து.

ஆம் இந்த பாலத்தினை தாங்கி நிற்கும் இரும்புத் தூண்களின் மூட்டுக்கள் எச்சிலாலேயே அரிக்கப்பட்டு வருகின்றனவாம்.

எச்சில் தாக்குதலில் இருந்து இந்த மூட்டுக்களைக் காப்பாற்ற தற்போது பிளாஸ்டிக் இழை கண்ணாடிக் கவசம் போடுவதற்கு ஏற்பாடு நடந்துவருகிறது.

கொல்கத்தாவில் கங்கை ஆற்றின் நடுவே 1937ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம் 26,500 டன்கள் எடையில் எஃகுவைக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்த பிரம்மாண்டக் கட்டமைப்பை 78 இரும்புத் தூண்கள் தாங்கி நிற்கின்றன.

ஒவ்வொரு நாளும் ஐந்து லட்சம் வாகனங்களும் ஐந்து லட்சம் பாதசாரிகளும் பயன்படுத்தும் அளவுக்கு பரபரப்பான ஒரு பாலம் இது.

இந்தப் பாலத்தைக் கடந்து போகிறவர்கள் வெற்றிலை போட்டுவிட்டோ அல்லது புகையிலையை மென்றுவிட்டோ துப்புகிற எச்சில் இந்த பாலத்தையும் அதன் தூண்களையும் இணைக்கும் மூட்டுக்களை அரித்து வருகின்றனவாம்.

ஹௌரா பாலம்

இந்தப் பாலத்தையே வலுவிழக்கச் செய்யும் அளவுக்கு அரிப்பு வேகமாக நடந்துவருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

"மூன்று வருட காலத்திலே மூன்று மில்லி மீட்டர் அளவுக்கு இந்த மூட்டுகள் அரிக்கப்பட்டு நாசமாகியுள்ளன. பாலத்தை தாங்கி நிற்கிற 78 தூண்களிலும் இதே வேகத்தில் அரிப்பு நடந்துகொண்டு போனால் மொத்த பாலமுமே வலுவிழந்துபோய்விடும்." என்று இந்தப் பாலத்தை உருவாக்கிப் பராமரித்துவரும் கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையின் தலைவரான எம்.எல். மீனா கூறினார்.

எச்சில் அரிப்பிலிருந்து இரும்பு மூட்டுக்களைக் காப்பாற்ற கண்ணாடி இழைக் கவசம் போடும் யோசனைக்கு அதிகாரிகள் தற்போது வந்துள்ளனர்.

இந்தக் கண்ணாடி இழைக் கவசங்களை மூட்டுக்கள் மீது போட்டு எச்சில் படாதபடி செய்துவிட்டால் அவற்றை அரிப்பிலிருந்து காப்பாற்றலாம். கொஞ்ச நாளைக்கு ஒரு முறை கழுவி எச்சிலை அகற்றிவிடலாம்" என துறைமுக அறக்கட்டளைத் தலைவர் மீனா தெரிவித்தார்.

78 தூண்களுக்கும் கவசங்களை அணிவிக்கும் பணி இன்னும் மூன்று நான்கு மாதங்களில் முடிந்துவிடும் எனத் தெரிகிறது.

இந்த கண்ணாடி இழைக் கவசங்களில் 'எச்சில் துப்பாதே' என்ற வாசகத்தோடு சாமிப் படங்களையும் சேர்க்கப் போகிறார்களாம்.

அப்போதுதான் நம்மாட்கள் எச்சில் துப்பத் தயங்குவார்கள் என்பதால் இந்த யோசனை என அதிகாரி ஒருவர் கூறினார்.