குஜராத் சட்டப் பேரவைத் தேர்தல்: முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசுவது தோல்விக்கு வழிவகுக்குமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஜனீஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர், அகமதாபாத்
அகமதாபாத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான மனித வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (HDRC) 6 ஏப்ரல் 2016 அன்று துப்புரவுப் பணியாளர்களைப் பணியமர்த்துவதற்கான விளம்பரத்தை வெளியிட்டது.
இந்த விளம்பரத்தில் பிராமண, சத்திரிய, பனியா, படேல், ஜெயின் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று எழுதப்பட்டிருந்தது. அந்த விளம்பரத்தின் கீழே என்.ஜி.ஓ.வின் இயக்குநர் பிரசாத் சாக்கோவின் கையொப்பம் இருந்தது.
துப்புரவுப் பணியாளர்கள் பணிக்கான இந்த விளம்பரம் வைரலானது. இந்த விளம்பரத்தில் உயர்சாதியினருக்கு முன்னுரிமை அளிப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
இது குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்ததுடன், அந்நிறுவனத்தின் அலுவலகம் மீது மக்கள் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்களில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான NSUI மற்றும் பல வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். பிரசாத் சாக்கோ தலைமறைவானார்.
பிரசாத் சாக்கோவிடம் இப்படி ஒரு விளம்பரத்தை வெளியிடக் காரணம் என்ன என்று கேட்டபோது,"நேர்மையுடன் விளம்பரத்தை வெளியிட்டேன். உயர் சாதியினரிடையில் இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், தலித்கள் பல நூற்றாண்டுகளாகச் செய்து வரும் பணிகளுக்கு உயர் சாதியினரை நியமிக்கும் போது என்ன எதிர்வினை இருக்கும் என்று பார்க்க வேண்டும் என்பதற்காகத் தான் இப்படிச் செய்தேன்" என்றார்.
ராஜீவ் ஷா அகமதாபாத்தில் உள்ள மூத்த பத்திரிகையாளர். பி.சி.சாக்கோவின் சோதனை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது என்றும் இந்த விளம்பரம் உயர் சாதியினரின் மனப்போக்கை அம்பலப்படுத்தியது என்றும் கூறினார்.
ராஜீவ் ஷா கூறுகிறார், "எச்டிஆர்சி அலுவலகத்தின் மீது NSUI ஆட்கள் நடத்திய தாக்குதல், குஜராத் காங்கிரஸ் சாதிய மற்றும் வகுப்புவாத உயர் சாதியினரால் நிரம்பியுள்ளது என்பதைக் காட்டுகிறது. 2002 குஜராத் தேர்தல் கலவரத்துக்குப் பிறகு, பாஜகவுக்கு பயந்துதான் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. பாஜகவின் இந்துத்துவா மற்றும் பெரும்பான்மைவாத அரசியலுக்கு வெளிப்படையாக சவால் விடுவதில் இருந்து காங்கிரஸ் ஒதுங்கி நிற்கிறது. 2002 கலவரம் பற்றி தேர்தலில் பேசினால் தனக்குப் பாதிப்பு ஏற்படும் என அஞ்சுகிறது."
2002 கலவரம் பற்றிப் பேசினால் இந்துக்களுக்குக் கோபமா?
2002 கலவரத்தைப் பற்றி காங்கிரஸ் பேசினால், குஜராத்தில் ஹிந்துக்கள் அதிருப்தி அடைந்து பாஜகவுக்கு ஆதரவாக அணி திரண்டுவிடுவார்களா?
இது குறித்துக் கூறிய ராஜீவ் ஷா, "காங்கிரஸின் இந்த பயம் நியாயமானதாக இருக்கலாம். 2002 குஜராத் கலவரத்தின் நியாயம் இருப்பதாக குஜராத்தின் நகர்ப்புற நடுத்தர வர்க்க இந்துக்கள் நம்புகிறார்கள் என்பது என் கருத்து. இத்தகைய சூழ்நிலையில், காங்கிரஸ் எதிர்த்தால், இந்த நடுத்தர வர்க்கம் பாஜகவுக்கு ஆதரவாக இன்னும் பலமாக அணிதிரளலாம். ஆனால் இந்த உத்தியால் பாஜகவை காங்கிரஸ் தோற்கடிக்க முடியாது என்பதும் ஒரு உண்மை. பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் நேரடியாக எதிர்கொள்ள வேண்டும்." என்றார்.
2002 பிப்ரவரி 27-28-ல் குஜராத்தில் தொடங்கிய கலவரம் பல நாட்கள் நீடித்தது.

பட மூலாதாரம், Dipam Bhachech/Getty Images
கோத்ராவில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்6 பெட்டி தாக்கப்பட்ட பிறகுதான் குஜராத் முழுவதும் கலவரம் தொடங்கியது. கோத்ராவில் எஸ்6 ரயில் பெட்டி தீ வைத்து எரிக்கப்பட்டதில் 59 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் அயோத்தியிலிருந்து அகமதாபாத் திரும்பிய கரசேவகர்கள்.
இதற்குப் பிறகுதான் குஜராத்தில் கலவரம் வெடித்தது. அரசாங்கப் புள்ளிவிவரங்களின்படி, இந்தக் கலவரங்களில் மொத்தம் 1044 பேர் கொல்லப்பட்டனர், அதில் 790 முஸ்லிம்கள் மற்றும் 254 பேர் இந்துக்கள்.
2002 டிசம்பரில் குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது, மேலும் கலவரம் நடந்த பகுதிகளில் பாஜக பெரிய வெற்றியைப் பெற்றது.
கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள 65 இடங்களில் 53 இடங்களை பாஜக கைப்பற்றியது.
2002ல் குஜராத் சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 182 இடங்களில் பாஜக 126 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் 73 இடங்களை பாஜக வென்றது.
சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில்தான் பாஜகவுக்கு அதிகபட்ச இழப்பு ஏற்பட்டது. இந்தப் பகுதியில் உள்ள 11 பா.ஜ.க அமைச்சர்களில் பெரும்பாலானோர் தங்கள் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ளத் தவறினர்.
2002-ல் பாஜக 50 சதவீத வாக்குகளுடன் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது, ஆனால் காங்கிரஸ் சுமார் 40 சதவீத வாக்குகளை பெற்றும் படுதோல்வியடைந்தது.

பட மூலாதாரம், SEBASTIAN D'SOUZA/Getty Images
'பாரபட்சம் இல்லை'
குஜராத் முன்னாள் முதல்வரும், பா.ஜ.க மூத்த தலைவருமான நிதின் படேல் கூறுகையில், "பாஜக ஆட்சியில் யாருக்கும் பாகுபாடு காட்டப்படவில்லை. பில்கிஸ் பானோ விவகாரத்தைப் பொருத்தவரை அனைத்தும் சட்டப்படி தான் நடந்துள்ளது. குஜராத்தில் 2002ல் நடந்த கலவரம் குறித்துப்பேசுவோர், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் பற்றிப் பேச மறந்து விடுகின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் பெரும்பாலான கலவரங்கள் நடந்துள்ளன, கலவரத்தை பாஜக அரசு கட்டுப்படுத்தியுள்ளது. இப்போது எந்த ஒரு சாராரையும் திருப்திப்படுத்தும் அரசியலை நாங்கள் கட்டுப்படுத்தியுள்ளோம். எந்தக் கட்சியும் சமாதான அரசியலைச் செய்யத் துணிவதில்லை.
இந்த விஷயத்தில் பாஜகவின் நிலைப்பாடு புரிந்துகொள்ளத்தக்கது, ஆனால் காங்கிரஸ் ஏன் இப்படிச் செய்கிறது?" என்று கேள்வி எழுப்புகிறார்.
அகமதாபாத்தில் உள்ள சமூக அறிவு மற்றும் செயல் மையத்தின் இயக்குநரும், பிரபல சமூக விஞ்ஞானியுமான அச்யுத் யாக்னிக் கூறுகிறார் - "ஒன்றும் செய்யவில்லை என்றால், கட்சிக்கு ஏராளமான மக்கள் வாக்களிப்பார்கள் என்று காங்கிரஸ் தரப்பு நினைக்கிறது. எனவே, கலவரம் பற்றிப் பேசக்கூடாது என்ற கொள்கையை காங்கிரஸ் பின்பற்ற ஆரம்பித்தது."
"இந்தத் தோல்விக்குப் பிறகு, அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் முன்வைக்கப்பட்ட முதல் கருத்து என்னவென்றால், 25,000 க்கும் அதிகமான முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் கட்சி பொதுவாக தோல்வியடைந்துள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்கு கேட்க கூட முஸ்லிம் பகுதிக்கு செல்லவில்லை. அக்கட்சி மென்மையான இந்துத்துவாவின் பாதையை பின்பற்றியது, ஆனால் காங்கிரஸுக்கு மாநிலத்தில் பலம் கிடைக்கவில்லை. குஜராத்தில் இந்துத்துவ அரசியலுக்கு பதில் இந்து எதிர்ப்பு அரசியலாக இருந்திருக்க வேண்டும், ஆனால் கட்சி மென்மையான இந்துத்துவாவை ஏற்றுக்கொண்டது, அது இன்றுவரை தோல்வியடைந்துள்ளது." என்று அச்யுத் யாக்னிக் கூறுகிறார்.

பட மூலாதாரம், Dipam Bhachech/Getty Images
குஜராத் தேர்தல் பொறுப்பாளராக ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சர் ரகு சர்மாவை காங்கிரஸ் நியமித்துள்ளது. 2002 கலவரத்திற்குப் பிறகு குஜராத்தில் காங்கிரஸின் அரசியல் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது என்று அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில், "நாங்கள் கடந்த காலத்தில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. 2002 கலவரத்தில் இருந்து மக்கள் வெளியே வந்துவிட்டார்கள், இப்போது வளர்ச்சி குறித்த பேச்சு தான் முதன்மைப்படுத்தப்பட வேண்டும். இங்கு வேலையின்மை, வறுமை, வசதிக் குறைபாடு மற்றும் கல்வி தொடர்பான கேள்விகளை எழுப்ப வேண்டும்."
ராகுல் காந்தி இந்துத்துவா அரசியலை நேரடியாகத் தாக்குகிறார், ஆனால் குஜராத்தின் மாநிலப் பிரிவு அதை ஏன் தவிர்க்கிறது?
இந்தக் கேள்வியால் கோபமடைந்த ரகு ஷர்மா, "ராகுல் காந்தி இந்துத்துவா மற்றும் இந்துவுக்கு எதிரானவர் அல்ல. நீங்கள் இந்தப் பிரச்சாரத்திலிருந்து வெளியே வரவேண்டும். நாங்கள் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் அல்ல. நீங்கள் எங்களை கேள்விகளால் சிக்க வைக்க விரும்புகிறீர்கள்." என்று பதிலளித்தார்.
இஸ்லாமியர்களுக்கான பிரதிநிதித்துவம்
அச்யுத் யாக்னிக் கூறுகையில், "காங்கிரஸ் முதலில் அதன் தலைவர்களின் சித்தாந்தப் புரிதலை அதிகரிக்க வேண்டும். பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்களுக்கு இந்துத்வா என்றால் இந்து மதம் இல்லை என்பது கூடத் தெரியாது. இந்துத்துவத்திற்கு எதிராக பேசுவது இந்து மதத்திற்கு எதிராக பேசுவதாகாது. காங்கிரஸில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் வலதுசாரிகளாக இருக்கின்றனர்." என்றார்
குஜராத்தில் 10 சதவீத முஸ்லிம்கள் இருக்கும் நிலையில், பாஜக முஸ்லிம்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. பதிலுக்குக் காங்கிரஸும் முஸ்லிம்களின் வேட்புமனுவை நிராகரிக்கத் தொடங்கியது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 முஸ்லிம்களுக்கு மட்டுமே காங்கிரஸ் சீட்டு வழங்கியது, அதில் மூன்று பேர் வெற்றி பெற்றனர்.
தரியாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ கியாசுதீன் ஷேக் சமீபத்தில் முஸ்லிம்கள் மக்கள் தொகை அடிப்படையில் குறைந்தது 18 சீட்டுகளைப் பெற வேண்டும் என்றும் அவ்வளவு இல்லை என்றாலும், குறைந்தது 10-11 சீட்டுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கோருகிறார்.
மக்கள் தொகை அடிப்படையில் முஸ்லீம்களுக்கு காங்கிரஸ் ஏன் டிக்கெட் கொடுக்கவில்லை என்று ரகு சர்மா கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், "வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு கட்சி டிக்கெட் வழங்குகிறது" என்றார்.
இது பாஜக தொடர்ந்து முன்வைக்கும் வாதம்.
அக்டோபரில், கர்பாவின் போது கற்களை எறிந்ததற்காக சில முஸ்லிம் இளைஞர்கள் பொதுவெளியில் சாலையில் கட்டிவைக்கப்பட்டுத் தாக்கப்பட்டனர்.
காங்கிரஸின் மாநிலப் பிரிவு, இது குறித்து மௌனம் காத்தது, ஆனால் ஜமால்பூர் கேடியாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கேடாவாலா மற்றும் தரியாபூர் காங்கிரஸ் எம்எல்ஏ கியாசுதீன் ஷேக் ஆகியோர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த விஷயத்தில் காங்கிரஸின் மௌனத்தால் சிறுபான்மையினர் மனதில் கவலை அதிகரித்துள்ளது என்று கேடாவாலா கூறியிருந்தார்.
இஸ்லாமியர்களுக்காகப் பேசுவது குற்றமா?
பரோடாவைச் சேர்ந்த சமூக சேவகர் ஜுபைர் கோப்லானி. குஜராத்தில் முஸ்லிம்களைப் பற்றி பேசுவது குற்றமாகிவிட்டது என்கிறார்.
"பாஜக மீது நம்பிக்கையில்லை. பாஜக தேர்தலில் வெற்றி பெற, முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அவசியம். ஆனால் காங்கிரஸை வெளிப்படையாக எதிர்க்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவ்வாறு செய்தால் தேர்தலில் தோற்றுவிடும் என்று அக்கட்சி நினைக்கிறது. 2002 கலவரத்தை காங்கிரஸ் மறக்க விரும்புகிறது அல்லது நினைவுகூர விரும்பவில்லை."
மேலும் அவர், "2002 கலவரம் குறித்துக் கேள்வி எழுப்பினால், அதற்கு எதிராக இந்துக்கள் ஒன்றுபடுவார்கள் என்று காங்கிரஸ் கருதுகிறது. காங்கிரஸின் இந்தச் சிந்தனைக்குக் காரணம், 2002 கலவரத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான அட்டூழியங்களைப் பெரும்பான்மை இந்துக்கள் ஒப்புக்கொண்டதே. காங்கிரஸ் ஒருவேளை இந்த ஒருமித்த கருத்துடன் உடன்படாததை வெளியிடத் தயங்குகிறது. இல்லை என்றால் வெளிப்படையாக பேச வேண்டும். ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்தும் குரலை நாங்கள் எதிர்பார்த்தோம் ஆனால் அதுவும் முஸ்லிம்கள் குறித்த விவகாரங்களைத் தவிர்த்து வருவதாக தெரிகிறது." என்கிறார்.
மேலும் ஜுபைர் கோப்லானி,"ராகுல் காந்தி உறுதியளிக்கிறார். அவர் இந்துத்துவா அரசியலுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசுகிறார், ஆனால் மாநில காங்கிரஸ் பிரிவு முற்றிலும் எதிர்மாறாக உள்ளது. சோனியா காந்தி, ராஜீவ் காந்தியை விட ராகுல் காந்தி மதச்சார்பற்றவர். ஊடகங்களில் அவர் பப்புவாகச் சித்தரிக்கப்பட இதுவே காரணம்." என்கிறார்.
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் துணைத் தலைவர் அர்ஜுன்பாய் ரட்டாவா, "பாஜக இந்தத் தேர்தலில் மத துருவமுனைப்பை உருவாக்கும் வகையில், இதுபோன்ற எந்தப் பிரச்சினையையும் முன்னெடுக்க தமது கட்சி விரும்பவில்லை" என்று கூறுகிறார்.
முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவம் பற்றிப் பேசுவது மத துருவமுனைப்பை ஊக்குவிப்பதாகுமா? இதற்கு அவரது பதில், "பாஜக அதைத் தவறாகப் பயன்படுத்துகிறது. அதனால் தான் நாங்கள் விரும்பினாலும் அந்த பிரச்சினைகளை எழுப்ப முடியவில்லை. ஆனால் ஆம் ஆத்மி கட்சி எழுப்பும் பிரச்சினைகளில் அனைத்து சமூகத்தினரின் அபிலாஷைகளும் அடங்கும்." என்பது தான்.
ஆம் ஆத்மி கட்சியின் மௌனம்

பட மூலாதாரம், MANAN VATSYAYANA/Getty Images
பில்கிஸ் பானோ விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியும் முற்றிலும் மௌனம் காக்கிறது. பில்கிஸ் பானோவை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மாநில அரசின் ஒப்புதலுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2002 கலவரத்தில் பில்கிஸ் பானோ கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார், அவருடைய மூன்று வயது மகள் கலவரக்காரர்களால் அவர் கண் எதிரே படுகொலை செய்யப்பட்டாள்.
பலக் அகமதாபாத்தில் உள்ள குஜராத் லா சொசைட்டியில் BBA படித்து வருகிறார். 2002 கலவரத்தின் போது அவருக்கு மூன்று வயதுதான்.
அவரிடம் 2002 கலவரம் பற்றி ஏதாவது தெரியுமா என்றால், எதுவும் தெரியாது என்று பலக் கூறினார். குடும்ப உறுப்பினர்கள் இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லையா அல்லது படிக்கவில்லையா என்று கேட்டதற்கும், பலக், "எனக்கு விசேஷமாக எதுவும் தெரியாது" என்கிறார்.
பலக்கிடம் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது, மாலைப்பொழுது, அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றின் முகப்பில் அவர் அமர்ந்திருந்தார். குஜராத்தில் எந்தத் தலைவர்களைப் பிடிக்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பலக், "மோடி தான். பாருங்கள், இந்த நதி முகப்பும் மோடியால் தான் உருவாக்கப்பட்டது. மோடியால்தான் குஜராத்தில் பாஜக வெற்றி பெறுகிறது. இந்த முறையும் மோடியால் பாஜக வெற்றி பெறும்." என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













