இந்துவாக மாறிய உத்தர பிரதேச முஸ்லிம் குடும்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டார்களா? – கள நிலவரம்

- எழுதியவர், ரஜ்னிஷ் குமார்
- பதவி, பாக்பத்தில் இருந்து பிபிசி நிருபர்

முஸ்லிமாக இருந்து இந்துவாக மாறியவர்கள் சந்தித்த பிரச்னைகள் என்ன?
- 2018 இல் பாக்பத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் இந்துக்களாக மாறினர்.
- இந்துவாக மாறிய பிறகு சாதி பட்டியலில் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருந்தது.
- முஸ்லிமில் இருந்து இந்துவாக மாறிய உத்தரபிரதேச ஷியா வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் வசீம் ரிஸ்வியும் பிரச்னைகளை சந்தித்தார்.
- முஸ்லிம்கள் இந்துக்களாக மாறினால் முன்னோர்களின் சாதி அவர்களுக்கு கிடைக்கும் என்கிறது விஷ்வ ஹிந்து பரிஷத்.

நான்கு வயது சிறுமிக்கு மதம் பற்றி என்ன தெரியும்? ஃஸோயா என்ற பெயரில் தான் அழைக்கப்பட்டாலும், தன் பெற்றோர் முஸ்லிம்கள் என்பதால்தான் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது என்பதை அந்தக்குழந்தை அறியமாட்டாள்.
குழந்தைகளின் மதம் அவர்களின் விருப்பப்படி தீர்மானிக்கப்படுவதில்லை. உலகெங்கிலும் உள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மதம் என்ன என்பதை தீர்மானிக்கிறார்கள். பெற்றோர்கள் மதம் மாறினால், அந்த மதத்தை ஏற்கும்படி பிள்ளைகளுக்கு நெருக்குதல் கொடுக்கப்படுகிறது.
உத்தர பிரதேசத்தின் பாக்பத் மாவட்டத்தில் உள்ள பதர்கா கிராமத்தில் ஒரு நான்கு வயது சிறுமியின் பெயரைக் கேட்டபோது, அவள் தனது பெயர் ஃஸோயா என்று கூறினாள்.
பெயரைச் சொன்னதும் ஃஸோயா வெட்கத்துடன் தன் குட்டி விரல்களை வாய் மீது வைத்துக்கொண்டாள். அருகில் அமர்ந்திருந்த அவளது மூத்த சகோதரி ஃஸோயாவைத் தட்டி, உன் பெயர் குடியா என்று கூறுகிறார். அக்கா சொன்னதும் தன் பெயர் குடியா என்று அந்தச் சிறுமி திருத்தி கூறினாள்.
இதற்கிடையில், ஃஸோயாவின் சகோதரரை அண்டைவீட்டுக்குழந்தை அனஸ் என்று அழைக்கிறது. ஏழு வயது அனஸ் தன் தந்தை தில்ஷாத்தை பார்க்கிறான்.
தில்ஷாத் அந்தக் குழந்தையைக் கடிந்துகொண்டு, "பள்ளியில் இவன் பெயர் அமர் சிங். அதே பெயரால் அவனை கூப்பிடு," என்றார். அனஸ் என்று அழைத்த குழந்தையும் தில்ஷாத்தின் பதிலில் திகைத்து அமைதியாக அங்கிருந்து செல்கிறது.

இந்துவாக மாறிய நோக்கம்
2018 இல் தில்ஷாத்தின் குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் இந்துவாக மாறியுள்ளனர். இவர்களில் மூன்று சகோதரர்கள் நௌஷாத், தில்ஷாத் மற்றும் இர்ஷாத், அவர்களது மனைவிகள் மற்றும் குழந்தைகள் அடங்குவர்.
கூடவே இந்த சகோதரர்களின் தந்தை அக்தர் அலியும், தனது மனைவியுடன் இந்துவாக மாறினார். தாங்கள் கஷ்டங்களை சந்தித்தபோது முஸ்லிம்கள் தங்களை ஆதரிக்கவில்லை என்று அவர்கள்ள் புகார் கூறினர். எனவே அவர்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேற முடிவு செய்தனர். இந்தக் குடும்பம் இந்துவாக மாறியபோது, ஃஸோயா ஆறுமாத குழந்தையாக இருந்தாள்.
இந்தக் குடும்பத்திற்கு கூலித் தொழில்தான் வாழ்வாதாரம். நௌஷாத் ஒரு மேஸ்திரி. தில்ஷாத் ஊர் ஊராகச் சென்று துணி விற்று வருகிறார். இர்ஷாத் தள்ளுவண்டியில் துணி வியாபாரம் செய்கிறார். அவரது தந்தை அக்தர் அலியும் இதே தொழிலைத்தான் செய்தார். ஆனால் இப்போது அவருக்கு வயதாகிவிட்டது.
2018 ஆம் ஆண்டு அக்தர் அலியின் இளைய மகன் குல்ஷானின் உடல் சந்தேகத்திற்கிடமான நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மகன் கொலை செய்யப்பட்டதாகவும், சமூக மக்கள் தங்களுக்கு உதவவில்லை என்றும் அக்தர் அலி கூறினார்.
யுவ இந்து வாஹினி அமைப்பினர் அவருக்கு உதவினார்கள். பின்னர் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேற முடிவு செய்தார். இந்து மதத்தை ஏற்றுக்கொண்ட பிறகு கிராமத்தைச் சேர்ந்த ஜக்பீர் சிங் தனது வீட்டை அவர்களுக்குக் கொடுத்தார். ஜக்பீர் சிங்கின் குடும்பம் மீரட்டில் வசிப்பதால் கிராமத்தில் உள்ள அவரது வீடு காலியாக இருந்தது.
ஆனால், முஸ்லிமாக இருந்து இந்துவாக மாறும் இந்தக்குடும்பத்தின் பயணம் நீண்டகாலம் நீடிக்கவில்லை. குடும்பத்தின் மகளிருக்கு இந்துவாகும் எண்ணம் இருக்கவில்லை.
இந்துவாக மாறிய பிறகு, நௌஷாத்தின் மனைவி ருக்கையா தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இந்துவாக மாறிய பிறகு இந்த திருமணம் முறிந்துவிட்டதாகவும், இனி திரும்ப வரமாட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். பிள்ளைகளும் மனைவியுடன் சென்றுவிட்டதால் தனியாக இருப்பது மிகவும் கடினமாக இருந்ததாக நௌஷாத் கூறுகிறார்.

இந்துவாக மாறியதால் என்ன கிடைத்தது?
நௌஷாத் இரண்டு மாதங்களில் மீண்டும் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். அவர் மீண்டும் தனது மனைவியை மணந்தார். "நாங்கள் எதற்காக இந்துக்களாக மாறினோமோ அது எதுவும் நடக்கவில்லை," என்று இர்ஷாத் கூறுகிறார். இந்துவாக மாறிய பிறகு இர்ஷாத் தனது பெயரை கவி என்று வைத்துக்கொண்டார். "நீதிக்காக நாங்கள் இந்துக்களாக மாறினோம். ஆனால் இங்கும் எதுவும் கிடைக்கவில்லை," என்று இர்ஷாத் கூறுகிறார்.
"இந்துவாக மாறிவிட்டோம். ஆனால் உறவினர்கள் அனைவரும் முஸ்லிம்கள். இந்துவாக மாறிய பிறகு யாருமே எங்களுடன் உறவு வைத்துக்கொள்ளவில்லை. யாரும் பேசி பழகவில்லை. எல்லோரும் கிண்டல் செய்தார்கள். தொலைபேசி அழைப்புகளுக்குக்கூட பதிலளிக்கவில்லை. மறுபுறம், இந்துக்கள் மத்தியிலும் சாதி அமைப்பு உள்ளது. என்னை இந்துவாக ஆக்கிக் கொண்டேன். ஆனால் சாதி எங்கிருந்து வரும்? சாதி தெரியாவிட்டால் குழந்தைகளின் திருமணம் என்னவாகும்? என் கையாலேயே என் கண்ணை குத்திக்கொண்டது போல உணர்ந்தேன்," என்று இர்ஷாத் கூறுகிறார்.
"எந்த ஒரு இந்துவும் எங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் தான் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் இந்துவாக மாறமாட்டேன் என்று முடிவு செய்திருந்தேன். என் குழந்தைகளை யார் திருமணம் செய்து கொண்டிருப்பார்கள்? இந்துவாக மாறினாலும் பிராமணனாக மாறமுடியாது. தலித் ஆகத்தான் இருக்க வேண்டும். தீண்டாமை கொடுமைக்கு நான் ஏன் இலக்காக வேண்டும்? முஸ்லிமாக மாறுவது எளிது. ஆனால் இந்துவாக மாறினாலும் நம் கடந்த கால வாழ்க்கையிலிருந்து விடுபட முடியாது," என்று அக்தர் அலியின் மூத்த மருமகள் ஷப்ரா காதூன் குறிப்பிட்டார்.
அக்தர் அலியின் முழு குடும்பமும் மீண்டும் முஸ்லிமாக மாறிவிட்டது. ஆனால், அவரது மூன்றாவது மகன் தில்ஷாத் இன்னும் இந்துவாகவே இருக்கிறார். அவர் தனது பெயரை 2018 இல் திலேர் சிங் என மாற்றிக்கொண்டார். திலேர் சிங் தனது ஐந்து குழந்தைகளுக்கும் இந்து பெயர்களை வைத்துள்ளார். இவரது ஐந்து குழந்தைகளும் நான்கு முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்கள். திலேர் சிங் தனது மனைவிக்கு மஞ்சு என்று பெயரிட்டுள்ளார்.
திலேர் சிங் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்துவாக வாழ்கிறார். அதனால் அவருக்கு ஏதாவது பலன் கிடைத்ததா? இந்தக் கேள்வியைக்கேட்டதும் அவர் நீண்ட நேரம் அமைதியாக இருந்தார். பின்னர் மௌனத்தைக் கலைத்த திலேர் சிங், "என்ன கிடைக்கும்? எது கிடைத்தாலும் அது கடின உழைப்பு மூலமே கிடைக்கும். மதத்துடன் பெயர் மாறியது. கிராமத்து இந்துக்கள் உதவினார்கள். ஜெய்பீர் சிங் கொடுத்த வீடு இன்னும் இருக்கிறது. என் அண்ணன் மீண்டும் முஸ்லிமாக மாறிவிட்டார். ஆனால் இன்னும் அதே வீட்டில்தான் இருக்கிறார். அவர்கள் வெளியேறும்படி சொல்லவில்லை,"என்றார்.

இந்துக்கள் சொல்வது என்ன?
ஜெய்பீர் சிங்கின் குடும்பத்தைச் சேர்ந்த சுக்பீர் சிங், "அவர்கள் இந்துக்களாக மாறியதால் அவர்களுக்கு வீடு கொடுக்கப்படவில்லை. வீடு காலியாக இருந்ததால் அளிக்கப்பட்டது. இவர்கள் வசிப்பதால் வீடு சுத்தமாக பராமரிக்கப்படுகிறது. அவர்கள் விரும்பும் மதத்தில் இருக்கட்டும். எங்களுக்கு கவலையில்லை" என்றார்.
"இந்துவாக இருந்து முஸ்லிமாக மாறுவது எளிது. ஆனால் முஸ்லிமில் இருந்து இந்துவாக மாறுவது கடினம். இந்து சமுதாயத்தில் இன்றும் சாதிக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இப்போதும் திருமணங்கள் அவரவர் சாதிக்குள்ளேயே நடக்கின்றன. ஒருவர் முஸ்லிமிலிருந்து இந்துவாக மாறினால், அவரை எந்த சாதி ஏற்றுக்கொள்ளும்? சாதி பிறப்பின் மூலம் வருவது. விருப்பத்தின் அடிப்படையில் அதைப் பெற முடியாது. அவர்கள் எங்கள் 'ஜாட்' சாதிக்கு வர விரும்புகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அவர்களை ஜாட் சமூகம் ஏற்றுக்கொள்ளுமா," என்று சுக்பீர் சிங் கேள்வி எழுப்பினார்.
"இந்தியாவில் 'கர் வாப்ஸி' (சொந்த மதத்திற்கு திரும்புவது) என்ற முழக்கம் ஒரு சமூக மற்றும் அரசியல் ஏமாற்று வேலை," என்று மேற்கு வங்கத்தில் உள்ள ஜாதவர்பூர் பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் அப்துல் மதீன் கூறுகிறார்.
"அவர்கள் 'கர் வாப்ஸி' என்ற கோஷத்தை எழுப்புகிறார்கள், ஆனால் அவர்கள் வீட்டில் எங்கு தங்க வேண்டும், வீட்டின் பால்கனியிலா, முற்றத்திலா? அல்லது கேரேஜில் இருக்கவேண்டுமா? வீட்டின் மணியை அடித்தாலும் யாரும் கதவைத் திறக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். இந்து மதத்தில் உள்ள சாதியின் சங்கிலியை உடைப்பது எளிதல்ல. அம்பேத்கரால் அதை உடைக்க முடியவில்லை. அதில் தோற்றுப்போய் அவர் பௌத்தரானார். இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் போன்ற ஆபிரகாமிய மதங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் ஒரு கூட்டுணர்வு உள்ளது. உடன் இருக்கும் உணர்வு உள்ளது அதாவது நீங்களும் அந்தக் குழுவின் ஓர் அங்கம் மற்றும் அதனுடன் இணைந்திருப்பதாக உணர்கிறீர்கள். ஆனால் இந்து மதத்திற்கு செல்பவர்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைப்பதில்லை," என்று பேராசிரியர் மதீன் குறிப்பிட்டார்.

மதமாற்றத்தின் கஷ்டங்கள்
இந்துவாக மாறுபவர்கள் மனமாற்றத்தால் மாறுவதில்லை. இந்த மதமாற்றங்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. ஆனால் ஒரு முஸ்லிம் மனமுவந்து இந்துவாக மாறினாலும், இந்து சமுதாயத்தின் மனம் மாறுமா? அதாவது இந்து சமுதாயம் அவர்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு தாராளமாகி விடுமா? முஸ்லிமில் இருந்து இந்துவாக மாறுபவர்களின் அடையாளம் மிகவும் சிக்கலானது. இந்து சமூகத்தில் அடையாளம் குறித்து ஏற்கனவே பல நுணுக்கங்கள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையில் இந்த சிக்கலுடன் வாழ்வது மிகவும் கடினம். மதமாற்றத்திற்குப் பிறகு, இந்துக்களின் பெரிய சமுதாயத்தில் நுழைவது கடினம்,"என்று பேராசிரியர் மதீன் தெரிவித்தார்.
"இப்போதுதான் சயீத் நக்வியின் 'The Muslim Vanishes' நாவலைப் படித்தேன். இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் திடீரென அழிந்து போவதாக இந்த நாவலில் சொல்லப்பட்டுள்ளது. தாஜ்மஹால், குதுப்மினார் முதல் செங்கோட்டை வரை எல்லாம் மறைந்துவிடுகிறது. இதைத் தொடர்ந்து எப்படி தேர்தலில் போட்டியிடுவது என்ற கவலையில், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் உள்ளன. அவர்களை திரும்ப அழைத்து வர தேர்தல் ஆணையத்தின் வாயிலுக்கு வெளியே யாகம் நடத்தப்படுகிறது. ஊடகவியலாளர்களுக்கு, போலி விவாதத்திற்கான தலைப்புகள் கிடைப்பதில்லை. இந்த கேள்வியை நீங்கள் கேட்டதும் உடனே இந்த நாவல் என் நினைவுக்கு வந்தது,"என்கிறார் அவர்.
"இஸ்லாமில் இருந்து இந்து மதத்திற்கு வரும்போது சாதி பற்றிய கேள்வி எழுகிறது. ஏற்றுக்கொள்ளல் பற்றிய கேள்வியும் உள்ளது. இதற்கான தீர்வை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அவர்களுடைய முன்னோர்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களோ, அவர்களுக்கும் அதே சாதிப்பெயர் கிடைக்கும். இங்குள்ள எல்லா முஸ்லிம்களின் முன்னோர்களும் இந்துக்கள். தங்கள் முன்னோர்களைப் பற்றி யாருக்குத்தான் தெரியாது. ஷேக் அப்துல்லாவின் குடும்பம் கெளல் பிராமணர் குடும்பம். அதேபோல் ஜின்னாவின் குடும்பத்தைப் பற்றி யாருக்குத்தான் தெரியாது," என்று விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இணைச் செயலர் சுரேந்திர ஜெயின் குறிப்பிட்டார்.
முகமது அலி ஜின்னாவின் முன்னோர்கள் குஜராத்தில் உள்ள லோஹானா- டக்கர் சாதியைச் சேர்ந்தவர்கள். இந்த சாதி வியாபாரம் செய்பவர்களின் சாதியாக குஜராத்தின் இந்துக்களிடையே அறியப்படுகிறது.

இந்து ஆன பிறகு சாதி என்ன?
"இஸ்லாத்தில் இருந்து இந்து மதத்திற்கு திரும்பிய பிறகு ஜாட் இனத்தவர்கள் அவர்களை ஏற்றுக்கொள்வது ஹரியாணாவில் தொடங்கியுள்ளது. கர் வாப்ஸி என்ற கோஷம் வெறும் கோஷமாக இல்லாமல் இந்த வேலை நடந்து கொண்டிருக்கிறது. முஸ்லிம்களில் சாதி இல்லை என்று சொல்பவர்களுக்கு இஸ்லாம் பற்றித்தெரியாது. ஒரு ஷேக், பஸ்மாந்தாவை திருமணம் செய்வாரா? ஷியா மற்றும் சன்னிகளுக்கு இடையே உள்ள பகை யாருக்குத் தெரியாது? இஸ்லாத்தில் இருந்து இந்து மதத்திற்கு வருபவர்களுக்கு தங்கள் முன்னோர்களின் சாதி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் பாடுபட்டு வருகிறோம். மேவாத்தில் உள்ள முஸ்லிம்களின் இந்து கோத்ரத்தையும் நாங்கள் அறிவோம். எனவே, இதில் குழப்பம் அடையத் தேவையில்லை,"என்கிறார் சுரேந்திர ஜெயின்.
"சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு முடிவு கட்ட சாதியற்ற சமுதாயத்தை உருவாக்க விரும்புவதாக சுரேந்திர ஜெயின் கூறியிருக்க வேண்டும். ஆனால், அவர் சாதி அமைப்பை சீர்குலைக்க விரும்பவில்லை, எனவே முஸ்லிமிலிருந்து இந்துவாக மாறிய பிறகும் சாதிகள் பிரித்தளிக்கப்படும் என்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் முஸ்லிம்கள் பற்றிய ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த பிம்பத்தை மக்கள் வெறுப்பார்களா? அல்லது ஏற்றுக் கொள்வார்களா? இந்தக் கேள்வியை விஸ்வ ஹிந்து பரிஷத் தன்னிடமே கேட்டுக் கொள்ள வேண்டும். இந்துக்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய உணர்வு இருந்தால், முஸ்லிம்களுக்கு ஏன் அவர்கள் வாடகைக்கு வீடு தருவதில்லை?" என்று குஜராத் பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பேராசிரியரான கெளராங் ஜானி வினவினார்.
யுவ ஹிந்து வாஹினியின் பாக்பத் மாவட்டத் தலைவர் யோகேந்திர தோமர், முஸ்லிமில் இருந்து இந்துவாக மாற அக்தர் அலியின் குடும்பத்திற்கு உதவினார். இந்தக் குடும்பம் மீண்டும் முஸ்லிமாக மாறியது ஏன்? என்று அவரிடம் கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளித்த யோகேந்திர தோமர், "அவரது குடும்பத்தில் மகளிரும் குழந்தைகளும் வீட்டைவிட்டு சென்றுவிட்டனர். எனவே குடும்பம் மீண்டும் மதம் மாற வேண்டியது வந்தது. ஆனால் எங்களின் முயற்சி ஓயாது. எல்லா முஸ்லிம்களும் 'கர் வாப்ஸி' செய்யவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்," என்று தெரிவித்தார்.

வசீம் ரிஸ்வி இந்துவாக மாறியதன் மூலம் என்ன பெற்றார்?
உத்தரபிரதேச ஷியா வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவரான வசீம் ரிஸ்வி கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இந்து மதத்திற்கு மாறி ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி என்ற பெயரை சூட்டிக்கொண்டார். தனது 51 வருட வாழ்க்கையில் ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி, 50 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் முஸ்லிமாக வாழ்ந்தார். கடந்த 10 மாதங்களாக அவர் இந்துவாக உள்ளார். இந்த 10 மாதங்களை அவர் எப்படி பார்க்கிறார்?
"இந்து மதத்திற்கு திரும்புவதில் உள்ள சவால்கள் பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும். இங்கு மக்கள் உங்களை ஏற்றுக்கொள்வதிலை. முதல் பிரச்சனை சாதி மற்றும் வகுப்பு பற்றியது. நீங்கள் ஒரு சாதியை எடுத்துக்கொண்டாலும் அந்த சாதி மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தியாகி என்பதை என் பெயரில் சேர்த்துக்கொண்டேன். ஆனாலும் தியாகி சமூகம் என்னுடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்ளும் என்று சொல்லமுடியாது. என் கடந்த காலம் அவர்களை ஏற்றுக்கொள்ள அனுமதிக்காது. இவை சனாதன தர்மத்தின் பிரச்சனைகள். இங்கு மக்கள் மற்றவர்களை ஏற்றுக்கொள்வதில்லை. ஏழாம் நூற்றாண்டின் மதமான இஸ்லாம் உலகின் இரண்டாவது பெரிய மதமாக மாறியது என்றால் அதற்கும் சில சிறப்புகள் உண்டு,"என்று அவர் கூறினார்.
"இஸ்லாத்தில் கலந்து பழக வாய்ப்புள்ளது. நீங்கள் ஒரு முறை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டால், உங்கள் கடந்த காலம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. திருமண உறவுகளில் பிரச்சனை இல்லை. இஸ்லாத்தில் சாதிக்காக இது போன்ற அவமானங்களை சகிக்க வேண்டியதில்லை. நான் சாகும் வரை இந்துவாக வாழ்வேன், ஆனால் யாரும் என்னுடன் உறவு ஏற்படுத்திக்கொள்ள மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் இங்கும் இல்லை, அங்கும் இல்லை என்றே தோன்றுகிறது. நான் இஸ்லாத்தில் இருந்தபோதும் அமைதி இல்லை. இப்போது இங்கே இருக்கும்போது கூட தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறேன்,"என்கிறார் ஜிதேந்திர தியாகி.
இந்து மதத்திற்கு வந்த பிறகு தனது திருமணம் முறிந்தது. குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டது என்று ஜிதேந்திர நாராயண் தியாகி தெரிவித்தார்.
"நான் என் வாழ்க்கையில் விஷம் கலந்துவிட்டேன் என்றே சொல்லலாம். அதனால்தான் நான் முழு குடும்பத்துடன் இந்து மதத்திற்கு வரவில்லை. முதலில் நான் வந்து பார்க்க விரும்பினேன். ஒட்டு மொத்த குடும்பமும் வராதது நல்லதாகப்போயிற்று," என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
மதம் ஏன் மிகவும் முக்கியமானது?
திருமணமும் குடும்பமும் கூட அழிந்து போகும் அளவுக்கு ஒரு மனிதனின் வாழ்க்கையில் மதம் முக்கியமா? இந்த கேள்விக்கு பதிலளித்த தியாகி, "மனிதநேயத்தை விட முக்கியமானது எதுவுமில்லை. ஆனால் நான் மதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். கர் வாப்ஸி பிரசாரம் உண்மையில் வெற்றியடைய வேண்டுமானால், இந்து மதம் இரு கரம் நீட்டி அவர்களை ஏற்க வேண்டும். இல்லையெனில் அது வெறும் அரசியல் வித்தையாக மட்டுமே இருக்கும்," என்றார்.
ஜிதேந்திர நாராயண் தியாகியின் புகார்கள் குறித்து பதிலளித்த விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தேசிய இணை செயலாளர் சுரேந்திர ஜெயின்," வசீம் ரிஸ்வி ஊடகங்கள் முன்னிலையில் வருவதையும், கட்டுப்பாடில்லாமல் பேசுவதையும் விரும்புகிறார். விஸ்வ ஹிந்து பரிஷத்தை சேர்ந்த நாங்கள் ஒருபோதும் முகமது நபியைப் பற்றி ஆட்சேபனைக்குரிய எதையும் கூறவில்லை. கௌசல்யா மற்றும் ராமரைப் பற்றி பேசுவதை நிறுத்தாவிட்டால், நான் முகமது நபியைப் பற்றி பேசத் தொடங்குவேன் என்று ஓவைசிக்கு எச்சரிக்கை விடுத்தது உண்மைதான். ஆனால் பேசவில்லை. வசீம் ரிஸ்வியும் இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் கட்டுப்பாடில்லாமல் பேச ஆரம்பித்தார். இதன் சுமைகளை அவர் தாங்க வேண்டியுள்ளது," என்றார்.
வசீம் ரிஸ்விக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவர் எங்களுடன் பேசியிருக்க வேண்டும், ஊடகங்களிடம் அல்ல என்று சுரேந்திர ஜெயின் கூறுகிறார். "எட்டி நரசிம்மானந்த் போன்ற தீவிர இந்துவை நாங்கள் ஆதரிக்க முடியாது" என்கிறார் சுரேந்திர ஜெயின்.
இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிறகு உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதில் பாரபட்சம் இல்லை என்ற கூற்றை கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரான ஹிமாத்ரி சாட்டர்ஜி ஒப்புக்கொள்ளவில்லை. "ஒரு அஷ்ரஃப், ஒரு பஸ்மாந்தா முஸ்லிம் வீட்டில் திருமணம் செய்து கொள்வாரா? அங்குள்ள தலித்துகளின் நிலையும் இதேதான். யாரேனும் மதம் மாறினால் அவருடைய சமூக அடையாளம் அவருடன் சேர்ந்து வருகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
அம்பேத்கரின் இயலாமை
மதம் மாறிய பிறகு முன்னோர்களின் சாதியைக் கொடுப்பதைப் பற்றி சுரேந்திர ஜெயின் பேசுகிறார். அது அவ்வளவு எளிதானதா?
"மதம் மாறியதும் சாதியையும் கொடுத்தால் விஷயம் இன்னும் சுவாரசியமாகிவிடும். அப்போது இந்து மத நூல்களில் திருத்தம் செய்ய வேண்டும். சாதியின் தீய வட்டத்திலிருந்து தப்பிக்கவே அம்பேத்கர் இந்து மதத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தார். பல ஆய்வுகளுக்குப் பிறகு அவர் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டார். பௌத்த மதத்தையும் தனக்கு ஏற்றபடி ஆக்கிக்கொண்டார். அதை அம்பேத்கர் 'புதுமை பெளத்தம்' என்று கூறினார். ஆனால் ஜெயின் சாதியை விட்டொழிக்க விரும்பவில்லை," என்று பேராசிரியர் ஹிமாத்ரி சாட்டர்ஜி குறிப்பிட்டார்.
"பேராசிரியர் மதீனின் கருத்தை நான் முன்னெடுத்துச்செல்கிறேன். கர் வாப்ஸிக்கு பிறகு மாஸ்டர் பெட்ரூமில் இடம் கிடைக்குமா? ஒருவரின் முன்னோர்கள் தலித்துகளாக இருந்தால், அவர் மீண்டும் தலித் ஆவதற்கு ஏன் இந்து மதத்திற்கு வர வேண்டும்? பிராமணனாக ஆக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஒருவர் இந்து மதத்திற்கு வந்தால் சுரேந்திர ஜெயின் அவரை பிராமணனாக ஆக்குவாரா? இதில் கேள்வி என்னவென்றால், இந்து மதத்திற்கு ஒருவர் திரும்பிவரும்போது அவர் ஏன் கேராஜில் வாழ வேண்டும்? சுரேந்திர ஜெயின் அவர்களுக்கு மாஸ்டர் பெட்ரூமை அளிக்கட்டும்,"என்று அவர் மேலும் கூறினார்.
திலேர் சிங், தில்ஷாத் ஆக இருந்தபோது, ஊர் ஊராக சுற்றித் திரிந்து துணி விற்று வந்தார். நான்கு ஆண்டுகள் கழிந்த பிறகும் அவர் அதே வேலையைச் செய்கிறார். அவரது மனைவி மன்சுவிலிருந்து மஞ்சு ஆனார். ஆனால் அவர் இன்றும், தனது ஐந்து குழந்தைகளுக்கும் கணவர் திலேருக்கும் தினமும் உணவு சமைக்கிறார். மாற்றம் என்பது பெயரில் மட்டுமே வந்துள்ளது. ஆனால் பெயரில் என்ன இருக்கிறது?
'கர் வாப்ஸி'(வீடு திரும்பல்) யை 'நாம் வாப்ஸி' (பெயர் திரும்பல்) என்று வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏனென்றால் இதில் வீடு என்பது இல்லவே இல்லை என்கிறார் பேராசிரியர் சாட்டர்ஜி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













