பாஜக ஆட்சிக்கு வந்தபின் ஆர்.எஸ்.எஸ் எப்படி தன்னை மாற்றிக்கொண்டுள்ளது?

- எழுதியவர், பைசல் முகமது அலி
- பதவி, பிபிசி செய்தியாளர், நாக்பூரிலிருந்து

ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்) ஒரு பார்வை
- டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவர் என்பவர் ஆர்எஸ்எஸ் அமைப்பை நிறுவினார்.
- இந்த அமைப்பை 1925 ஆம் ஆண்டு கேசவ பலிராம் ஹெட்கேவர் நாக்பூரில் தொடங்கினார்.
- இந்து புருஷ் சங்கத்தில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகலாம் என்று ஆர்எஸ்எஸ் தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
- இந்தியாவில் இந்த அமைப்புக்கு 50 ஆயிரம் கிளைகள் உள்ளன
- மகாத்மா காந்தி படுகொலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டது
- மகாத்மா காந்தியின் கொலைக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் அமைப்பு தடை செய்யப்பட்டது.
- 2009ஆம் ஆண்டு முதல் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக மோகன் பகவத் பதவி வகிக்கிறார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) தமது தலைமையகத்திற்குத் திரும்பும்போது அந்த அமைப்பு நிறைய மாறியுள்ளதாக தோன்றியது. அதே எட்டு ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்த வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் பாரதிய ஜனதா கட்சி, பெருப்பான்மையுடன் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது.
இந்த அமைப்பின் சீருடைகள், பழுப்பு நிறத்தில் இருந்து அடர் பழுப்பு நிறமாக மாறியுள்ளது. அரைக்கால் சட்டைகள், முழு கால் சட்டைகளாக மாறியுள்ளன. ஆனால், தொண்டர்களின் சீருடையில் மட்டும் மாற்றம் ஏற்படவில்லை. இந்த அமைப்பிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
நாக்பூரில் உள்ள ரெஷிம் பாக் பகுதியில் ஆர்எஸ்எஸ் தலைமையக வளாகத்தில் பல புதிய கட்டடங்கள் வந்துள்ளன. அமைப்பினர் இடம் விட்டு இடம் மாறி கொண்டிருக்கின்றனர். அவர்களின் அணிவகுப்பில் பங்கேற்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஓரளவு அதிகரித்திருக்கலாம். ஆனால், அவர்களது நிகழ்ச்சியில் பங்கேற்கும் விருந்தினர்களின் எண்ணிக்கை நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது.
1925ஆம் ஆண்டு விஜயதசமி அன்று நிறுவப்பட்ட ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்) அதன் 100வது ஆண்டு விழாவை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டாடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமி நாள் என்பது இந்த அமைப்புக்கு முக்கிய நாளாகும். அப்போது நாக்பூரில் நடைபெறும் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு நாடு முழுவதும் இருந்து உறுப்பினர்கள் பெரும் ஆர்வத்துடன் அங்கு கூடுவார்கள்.
இம்முறை நடந்த நிகழ்வில் நடந்த மற்றொரு முக்கியமான மாற்றம் - மலையேறும் வீராங்கனையான சந்தோஷ் யாதவ் முக்கிய விருந்தினராக வரவழைக்கப்பட்டார்.
அந்த நிகழ்வில் சந்தோஷ் யாதவ் பேசுகையில் , "ஒருவரை பற்றி தெரிய வருவதற்குமுன் வெறுப்புணர்வை வளர்க்க கூடாது. உலகம் முழுவதும் சனாதன கலாசாரம் பரப்புவது அனைத்து இந்தியர்களின் பொறுப்பு," என்று தெரிவித்தார்.
ஊடகங்களுக்கும் பெண்களுக்கும் அளிக்கப்படும் முக்கியத்துவம்
இந்த அமைப்பு பெண்களை உறுப்பினராக சேர்த்து கொள்வதில்லை என்று அவ்வப்போது விமர்சிக்கப்படுகிறது. இது ஆண்கள் மட்டுமே உறுப்பினராக சேரக்கூடிய அமைப்பு. இந்த விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராஷ்டிர சேவிகா சமிதி என்ற பெயரில் பெண்களுக்கான தனி அமைப்பு இருப்பதாக இந்த அமைப்பு கூறி வருகிறது.
இதனை கலாசார அமைப்பு என்று குறிப்பிடும் இந்த அமைப்பின் தலைவர்கள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் இருக்கும் பணி சார்ந்த பிரிவினையை ஒப்புக்கொள்கிறது. அதாவது ஆண்கள் வெளியில் வேலை செய்யவும், பெண்கள் வீட்டையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்ளுமாறு இருக்கும் சமூக அமைப்பை ஆதரிப்பவர்கள், ஆனால் இப்போது பெண்களுக்கானதனி அமைப்பை கொண்டிருப்பது அவர்களின் அணுகுமுறையை மாற்றியுள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், தமது ஒரு மணி நேர உரையின் தொடக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்- 'தாய் சக்தி'யாகப் போற்றப்படும் பெண்களுக்கு' ஆர்எஸ்எஸ் அமைப்பில் எப்போதும் வரவேற்பு உண்டு.
1930க்களில், அந்த அமைப்பின் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற காங்கிரஸ் எம்பி அனசுயா பாய் காலே மற்றும் முன்னாள் மத்திய சுகாதார அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் ஆகியோரையும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், ஆர்எஸ்எஸ் ஆண்டு விழா நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராகப் சந்தோஷ் யாதவ் பங்கேற்றது, இந்த மாற்றம் யோசித்து எடுக்கப்பட்ட முடிவாக தெரிகிறது.

ஒரு கொள்கை பிரசாரத்தில் கவனம் செலுத்தாமல் 'சமூகப் பணிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கலாசார அமைப்பு' என்ற பிம்பத்தை முன்னிறுத்திக் கொண்டிருந்த அமைப்பாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்த விவகாரத்தில், அமைப்பின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அமைப்பின் பல பெரிய நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த முறையும் அதுதான் நடந்தது. இது தவிர, இந்த நிகழ்வு பல தனியார் வலைதளங்கள், சமூக ஊடக தளங்கள், பாஜகவுடன் தொடர்புடைய ட்விட்டர் கணக்குகள், பேஸ்புக் பக்கங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டது.
இந்த அமைப்பு பற்றி நன்றாக தெரிந்தவர்கள், அவர்கள் இந்த கொள்கை பரப்பும் நடவடிக்கையில் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தும் உத்தியை கவனித்திருக்கலாம்.
2014 ஆம் ஆண்டு, முதன்முறையாக, அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனில், அந்த அமைப்பின் விஜயதசமி நிகழ்ச்சியை நேரலையில் காட்டியபோது, ஒரு குறிப்பிட்ட கொள்கையை கொண்ட அரசு சாரா அமைப்பின் தனியார் நிகழ்ச்சியை, அரசு ஊடகங்கள் மூலம் ஒளிபரப்புவது சரியா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளில், இந்த விவாதம் அர்த்தமற்றதாக மாறிவிட்டது. மக்கள் இந்த புதிய மாற்றத்தை கேள்வி கேட்பதையே நிறுத்திவிட்டார்கள்.
இது குறித்து, ஊடக விவகார நிபுணரும் எழுத்தாளருமான டாக்டர். முகேஷ் குமார் கூறுகையில், தூர்தர்ஷன் எப்போதும் அரசின் 'சைரன்' போல பயன்படுத்தப்பட்டு வந்தது. ராஜீவ் காந்தி காலத்தில் மக்கள் தூர்தர்ஷனை ராஜீவ் தர்ஷன் என்று அழைக்கத் தொடங்கினர். அந்தக் காலத்திலும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் விளம்பரப்படுத்தப்பட்டன. ஆனால், அது பரவலாக தெரியவில்லை.

ஓர் அரசு சாரா அமைப்பின் நிகழ்ச்சிகளையும் அதன் தலைவரின் உரையையும் நேரலையில் ஒளிபரப்புவதை நியாயப்படுத்த முடியாது. ஆனால் இப்போது அது பற்றிய விவாதம் நின்று விட்டது அது ஆளுங்கட்சியின் தாய் அமைப்பாக இருக்கும் பட்சத்தில், அரசு அதை எப்படி காட்டாமல் இருக்கும்?," என்று கேள்வி எழுப்புகிறார்.
சமூக சமத்துவமின்மை மற்றும் வேலையின்மை குறித்து எழும் விவாதம்
விஜயதசமிக்கு சில நாட்களுக்கு முன்பு, அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே, கிராமப்புற இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிக்க பாடுபட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் அவர், இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் இன்னும் மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் அறிக்கைகளிலும் உரைகளிலும், 'தேசிய ஒற்றுமை', 'நல்லிணக்கம்', 'இந்திய கலாசாரம்', 'புகழ்பெற்ற வரலாறு', 'மகத்தான பாரம்பரியம்', 'இந்தியாவின் மகிமை', 'இந்து மதத்தின் மகத்துவம்', 'உலக குரு' உள்ளிட்ட சொற்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால், சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மை, வறுமை, வேலையின்மை போன்ற பிரச்னைகள் இந்த அமைப்பின் நிகழ்ச்சி மேடையில் பேசுப்படுவது இது முதல் முறையாக இருக்கலாம்.

சமூக நீதி பற்றிய பேச்சுக்கள், இந்த அமைப்பின் நிகழ்ச்சிகளில் அரிதாகவே கேட்கப்படுகின்றன. சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைப் பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் சாதிவெறியர்கள் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் தமது விஜயதசமி உரையில் சாதி என்ற சொல்லை குறிப்பிடாமல், மோகன் பகவத் குதிரை பேரத்தில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று பேசியிருந்தார்.
சில நாட்களுக்கு முன்பு, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் டெல்லியில் உள்ள ஒரு மசூதிக்கும், மதரஸாவுக்கும் சென்றிருந்தார். அதன் பிறகு 'ஆர் எஸ் எஸ்' அமைப்பு எப்போதும் அனைத்து சமூகங்களுடனும் பேச தயாராகவே உள்ளது, ' என்று கூறியது சுவாரசியமானது.
மோகன் பகவத்தின் உரையில், சமூகத்தில் சமத்துவம் பற்றி பேசப்பட்டது, 'சிறுபான்மையினர் என்று அழைக்கப்படுபவர்களுக்கு' உரிமைகள் அளிக்கப்படுவதும் விவாதிக்கப்பட்டது. மேலும் அரசியலமைப்பின் மாண்பைக் காக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இவை அனைத்தும் அந்த அமைப்பில் நடந்த மாற்றத்தின் அறிகுறிகளாகும்.
இந்த அமைப்பை புதுப்பிக்கும் நோக்கத்தில், அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று சமூக வரலாற்றாளர் பத்ரி நாராயண் கூறுகிறார். அவரைப் பொருத்தவரையில், இது அவர்களுக்கு சாதகமாகவே உள்ளது என்று கருதுகிறார்.
மேலும், எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான நிலஞ்சன் முகோபாத்யாய் இதை குறிப்பிடத்தக்கதாக கருதினாலும், 'கடந்த ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன," என்கிறார்.
'டைனிக் பாஸ்கர்' என்ற நாளிதழின் குழு ஆசிரியர் பிரகாஷ் துபே, ஆர்எஸ்எஸ்ஸை 'கூண்டில் அடைக்கப்பட்ட பறவை' என்று கூறுகிறார்.
"இந்த அமைப்பை சுற்றி உருவாக்கப்பட்டுள்ள கருத்துகளில் இருந்து அந்த அமைப்பை சேர்ந்தவர்களால் வெளிவரமுடியவில்லை,' என்கிறார் பிரகாஷ் துபே.
தொழில்நுட்ப உதவியும், கருத்தியல் கொள்கையும்
ஓர் அமைப்பின் மாற்றம் என்பது இரண்டு வகையில் நடக்கும். ஒன்று, தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றம், இரண்டாவது, கருத்தியல் மாற்றம்.
பத்ரி நாராயண் தனது Republic of Hindutva: How the Sangh Is Reshaping Indian Democracy என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார் - "ஆர்எஸ்எஸ் பற்றிய நம்முடைய நம்பிக்கை என்னவென்றால், அதன் தொண்டர்கள் அனைவரும் வயதானவர்கள். அவர்கள் இன்றைய காலகட்டத்தில் இருந்து மிகவும் விலகி இருக்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. அவர்கள் தொழில்நுட்பம் ரீதியாக தொடர்ந்து முன்னேறி வருகிறார். அவர்கள் சமூக ஊடகங்களில் பெரும் இருப்பைக் கொண்டுள்ளனர். அவர்களின் கொள்கைகளைப் பரப்புவதற்காக அதை பெரிதும் பயன்படுத்துகிறார்."
ஜிபி பான்ட் சமூக அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் பத்ரி நாராயண் கூறுகையில், கொரோனா தொற்றுநோய் காலத்தில், சமூகத்தின் பிற பிரிவுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள், ஜூம் மீட்டிங் , சமூகம் ஊடகம் ஆகியவற்றை பயன்படுத்துவது போன்று, இந்த அமைப்பும் தொழில்நுட்ப ரீதியில் வளர்ந்துள்ளது," என்கிறார்.

அதிகரித்து வரும் ஆர்.எஸ்.எஸ். செயல்பாடுகள்
மற்ற அரசு சாரா அமைப்புகளைப் போல இந்த அமைப்பு பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இல்லாததால், பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த அமைப்பின் நிதி ஆதாரங்கள் அதிகரித்துள்ளதா என்பதை உறுதியாகக் கூற முடியாது. பொருளாதார விஷயத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், இந்த அமைப்பு விமர்சனங்களையும் சந்தித்தன.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு அமைப்பின் பொருளாதாரத்தைப் பற்றி கூறுவது கடினம். ஆனால் மதச்சார்பற்ற கட்சிகள் ஒரு காலத்தில் இந்த அமைப்புடன் விலகி இருந்தது. ஆனால், இப்போது அக்கட்சிகள் இந்த அமைப்பை ஏற்றுகொண்டுள்ளது.
'ஃப்ரண்ட்ஸ் ஆஃப் ஆர்.எஸ்.எஸ்', விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் இந்துத்துவா சித்தாந்தத்தை அன்னிய மண்ணில் பரப்பும் பணியை நீண்ட காலமாக தொடர்ந்து செய்து வருகின்றன.'
ஆனால், அதற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது. அமெரிக்காவில், இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பியுள்ளன. மேலும் ஆர்.எஸ்.எஸ். - வி.எச். பி போன்ற அமைப்புகள் அவர்களின் தேர்தல் மற்றும் ஜனநாயக செயல்பாட்டில் தலையிட முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அழுத்தமான அடித்தளத்தை உருவாக்கும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ்
இந்த அமைப்பு குறித்து அறிந்த மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், இந்த அமைப்பை மேலோட்டமாக பார்க்கும்போது இருக்கும் தாக்கத்தைவிட பெரும் ஆழமாக தாக்கத்தை கொண்டுள்ளது. உலகின் அனைத்து பெரிய நகரங்களிலிருந்து தொலைதூர கிராமங்கள் வரை, வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் முதல் துறவிகள் வரை, இந்த அமைப்புடன் தொடர்புடையவர்கள் செயல்பாட்டில் உள்ளனர். பழங்குடியினர் மத்தியில் செயல்படும் ராஷ்டிரிய முஸ்லீம் மஞ்சோ அல்லது வனவாசி கல்யாண் கேந்திராவோ, இந்த அமைப்பின் சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர்.
2014, 2019 தேர்தல்களில், இந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாக குழுக்கள், நேரடியாக மக்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் கருத்துகளைப் பெற்றனர். இதில் சாதி ரீதியான, சமூக ரீதியான விஷயங்களும் கவனிக்க யாரேனும் நரேந்திர மோதி மீது கோபமாக இருந்தாலோ அல்லது அவ்வளவு ஈர்க்கப்படாமல் இருந்தாலோ, அவர்களை வற்புறுத்தி வழிக்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

மாற்றம் எவ்வளவு உண்மையானது?
ஆர்எஸ்எஸ் மாற்றம் குறித்த கேள்விக்கு நிலஞ்சன் முகோபாத்யாய் இவ்வாறு கூறுகிறார், "அவர்கள் தங்களை மாற்றிக் கொண்டு எப்படி புதுமையை கொண்டு வர முடியும்? அவர்களின் முழு விவாதமும் இன்னும் பழைய பிரச்னைகளில்தான் உள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் மக்கள் இத்தகைய சித்தாந்தத்தை மிகவும் கடுமையாக பின்பற்றுகின்றனர். ஆனால், நேர்மையாக அல்ல,"
இதற்கு முகோபாத்யாய் பல உதாரணங்களை உருகிறார். உதாரணமாக, மத்தியில் நரேந்திர மோதியின் அரசு அமைந்த உடனேயே, பல மாநிலங்கள் பசு வதை தொடர்பான சட்டத்தை மிகக் கடுமையாக்கின. இதன் விளைவாக விலங்குகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்துவது கூட கடினமாக இருந்தது. மேலும் நாட்டின் பல பகுதிகளில் பசுக் கடத்தல்காரர்கள் என்று மாட்டு வியாபாரிகள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேபோல், கலப்பு திருமணங்களை கடினமாக்கும் பல சட்டங்கள் பாஜக ஆளும் மாநில அரசுகளால் இயற்றப்பட்டுள்ளன. ஒரு சமயத்தில், கொரோனா பரவலுக்கு தப்லீக் ஜமாத் என்ற முஸ்லீம் அமைப்பு மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பின்னர் அந்த விவகாரத்தில் முஸ்லீம் வர்த்தகர்களைப் புறக்கணிப்பது குறித்து பேசப்பட்டது. சிறிது காலம் கழித்து, உச்சநீதிமன்றம் இது தப்லீக் ஜமாத் மீது அவதூறு ஏற்படும் சதி என்று கூறி, இதற்காக டெல்லி காவல்துறையை கடுமையாக கண்டித்தது.
கடந்த புதன்கிழமையன்று மோகன் பகவத் ஆற்றிய உரையை மேற்கோள் காட்டி நிலஞ்சன் முகோபாத்யாய் இவ்வாறு கூறுகிறார், "இன்றும், இந்துக்களின் எண்ணிக்கை குறையும். அவர்கள் இந்தியாவில் சிறுபான்மையினராக மாறுவார்கள் என்று மக்கள் தொகையைப் பற்றி இதே போன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில், ஆர்.எஸ்.எஸ்ஸின் பிரச்னை என்னவென்றால், அவர்கள் தங்களின் பழமையான கருத்துகளை தவறு என்று கூறமாட்டார்கள். ஆனால், மற்றவர்கள் காலம் செல்லும் போக்கில் போகிறார்கள் என்பார்கள்.

2021 ஆம் ஆண்டில் அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை என்றாலும், மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும்போது சமீப ஆண்டுகளில் முஸ்லிம்களிடையே கருவுறுதல் விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது என்று அரசு புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால் அமைப்புடன் தொடர்புடையவர்கள் பொது நிகழ்ச்சிகளில் முஸ்லிம்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்கின்றனர் என்று பேசுகிறார்கள்.
மோகன் பகவத் தமது உரையில், மத அடிப்படையில் மக்கள்தொகையில் இருக்கும் ஏற்றத்தாழ்வு நாடுகளின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறினார்.
மேலும், The RSS: Icons of the Indian Right' , 'Narendra Modi, The Man, The Times' போன்ற புத்தகங்களை எழுதிய நிலாஞ்சன் முகோபாத்யாய் கூறுகையில், "சொல்வதற்கும் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் அவர்களிடம் தெளிவாக தெரியும். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உள்ள பெரிய தலைவர்கள் தங்களின் நோக்கம் முஸ்லீம்களுக்கு எதிராக இருப்பது அல்ல என்று கூறுவார்கள். ஆனால், அந்த அமைப்புடன் சேர்ந்தவர்கள், முஸ்லிம் வர்த்தகர்களைப் புறக்கணிக்கும் பிரசாரங்களை வெளிப்படையாக நடத்துகிறார்கள்." என்கிறார்.
இந்த அமைப்பில் நீண்ட காலமாக இருக்கும் திலீப் தியோதர், "அந்த அமைப்பில் முரண்பாட்டுகள் உள்ளன, ஆனால் இந்த முரண்பாட்டுகளை சமாளிக்கும் திறன் அமைப்புக்கு உண்டு. இது தொடர் போராட்டம்தான். ஆனால்,, ஆர்.எஸ்.எஸ் ஒரு குரல் கொடுத்தால், மக்கள் வரிசையில் எழுந்து நிற்பார்கள்." என்கிறார்.
மேலும், திலீப் தியோதர் கூறுகையில், "தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றும் பாரதிய மஸ்தூர் சங்கம் முதல் சுதேசி ஜாக்ரன் மஞ்ச் மற்றும் அரசியல் துறையில் ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்ட பாரதிய ஜனதா கட்சி வரை ஆர்எஸ்எஸ்ஸுடன் தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட அமைப்புகள் உள்ளன ஆனால், எந்த கொள்கை ஓர் அமைப்பில் பிறந்ததோ, அதன் முரண்பாடுகளும் அந்த அமைப்பிலேயே தீர்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த அமைப்பு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதனால்தான் அது சங் பரிவார் என்று அழைக்கப்படுகிறது.
பத்ரி நாராயண், தனது புத்தகத்தில், ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் உள்ளடக்கிய ஒரு கலாசார தலைமையை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ்ஸின் நோக்கம் என்பதை ஒப்புக்கொள்கிறார். மேலும், இந்து அல்லாத பழங்குடியின மக்கள், மற்ற சிறுபான்மை குழுக்களைசேர்ந்தவர்களும் இதில் அடங்கும்.
பா.ஜ.கவின் வெற்றி சாதி அமைப்பை சமூகத்திலிருந்து ஒழித்துவிட்டது என்ற கூற்றை மறுக்கும் அவர், சாதி அடையாளம், மேம்பாடு, இந்துத்துவா அமைப்பில் சேர வேண்டும் என்ற ஆசை போன்ற பல்வேறு ஆசைகள் கொண்ட பல்வேறு சாதிகள், சமூகங்களை அணிதிரட்டி இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றும் எழுதுகிறார்.
மேலும் பத்ரி நாராயண், "ஆர்எஸ்எஸ் பற்றி உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. அது மாறிக்கொண்டே இருக்கிறது. அது அதன் பிம்பத்தை அழித்து, பின்னர் ஒரு புதிய பிம்பத்தை உருவாக்குகிறது." என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









