அரசியல் கட்சிகள் இலவசங்கள் வழங்குவதை இந்திய தேர்தல் ஆணையம் தடுக்க முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்படும் இலவசங்களுக்கான நிதி விவரங்களை இனி இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்ற திட்டத்தை அக்கட்சிகளுக்கு எழுதிய கடிதத்தில் தேர்தல் ஆணையம் முன்மொழிந்துள்ளது.
அக்கடிதத்தில், அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்படும் இலவச திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் நிதி பற்றிய விவரங்கள் முழுமையாக அளிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பது அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட உரிமை என்றாலும், இத்தகைய வாக்குறுதிகளால் வாக்காளர்கள் மத்தியில் ஏற்படும் தாக்கத்தை தேர்தல் ஆணையம் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
இந்த முன்மொழிவு குறித்து அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை வரும் அக்டோபர் 19ஆம் தேதிக்குள் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சில மாதங்கள் முன், இலவசங்கள் வழங்கும் கலாசாரம் நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானவை என்றும், இந்திய மக்கள் குறிப்பாக, இளைஞர்கள் இந்த இலவசங்கள் வழங்கும் கலாசாரம் பற்றி கவனமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, மாநில கட்சிகள் வழங்குவது இலவசங்களா அல்லது நலத்திட்டங்களா என்ற விவாதங்கள் எழுந்தன.
இலவசங்கள் வழங்கப்படுவது குறித்த அரசியல் கட்சிகள் வாக்குறுதி கொடுக்க தடை விதிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது இலவசங்கள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.


இவ்வாறான அறிவிப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் தேர்தல் ஆணையம் எதற்கு என்று உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கருத்து தெரிவித்திருந்தது. அத்துடன் இது குறித்து விவாதிக்க ஒரு குழுவையும் அமைக்க வேண்டுமென உத்தரவிட்டது.
'சங்கடத்தை உருவாக்குகிறது'
இந்நிலையில், தேர்தல் ஆணையம் இத்தகைய ஆலோசனையை முன்வைத்துள்ளது. இந்த ஆலோசனை உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின் அடிப்படையில்தான் வழங்கப்பட்டது என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ். ஓய். குரேஷி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

"இந்த விவகாரம் குறித்து அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி, இதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. உண்மையில், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்றும், அதில் அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் தங்கள் கருத்துகளை கூறலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், தேர்தல் ஆணையம் அரசமைப்பு சட்டத்தால் நிறுவப்பட்ட ஓர் அமைப்பு என்றும், அதனால் இத்தகைய குழுவில் தங்களால் ஈடுபட முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதற்கு மாறாக, இந்த முன்மொழிவை அளித்துள்ளது."



"தற்போது இது விவாத நிலையில்தான் உள்ளது. இதற்காக முறையான முன்மொழிவு படிவத்தை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அரசியல் கட்சிகளின் கருத்துகள் வரவேற்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்றே நினைத்தது. ஏனென்றால், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு நிபுணத்துவம் இல்லை.
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா இல்லையா என்பதும், இதற்கான பட்ஜெட்டை சரிப்பார்ப்பதும் நாடாளுமன்றத்தின் வேலை. நாடாளுமன்றம் இதுகுறித்து விவாதிக்கக்கூட இல்லை. இது தேர்தல் ஆணையத்திற்குதான் ஆபத்தான விஷயமாக உள்ளது. அரசியல் விவகாரங்களில் தேர்தல் ஆணையத்தை இழுப்பது அந்த ஆணையத்திற்கு சங்கடத்தை உருவாக்குகிறது," என்கிறார் குரேஷி.
அரசியல் கட்சிகள் நிலைப்பாடு என்ன?
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் முன்மொழிவை நிராகரித்துள்ளன.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், அரசியல் கட்சிகளின் கொள்கைகளில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை. இத்தகைய முன்மொழிவு, அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் என்றும், அரசியல் கட்சிகளில் உரிமைகளை ஒடுக்கும் செயல் என்றும் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், @ComradeDRaja/Twitter

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி. ராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், "அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கூற வேண்டியதில்லை. இது போன்ற முன்மொழிவுகளை அளிப்பதற்கு முன், இதற்கு முன் நடந்த தேர்தலில், 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாகவும், ஒவ்வொரு குடிமகனுக்கும் 15 லட்சம் தருவவதாகவும் தேர்தல் வாக்குறுதி அளித்த பிரதமர் நரேந்திர மோதியிடம் கேள்வி கேட்க வேண்டும்," என்கிறார்.
மேலும், இத்தகைய திட்டங்களை முன்வைப்பது நாடாளுமன்றத்தின் கடமை என்கிறார் ராஜா. "சுதந்திரமாக மற்றும் நேர்மையாக தேர்தல் நடத்துவதும், அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சமயத்தில் சமவாய்ப்பை அளிப்பதையும் உறுதி செய்வதும்தான் தேர்தல் ஆணையத்தின் பணி. அரசியல் கட்சிகளின் கொள்கைகளில் தலையிடுவதல்ல.
தேர்தல் குறித்த கொள்கைகள் ஏதேனும் வரையறுக்கப்பட்டால், அது நாடாளுமன்றத்தின் மூலமாகவே வர வேண்டுமே தவிர, தேர்தல் ஆணையம் மூலமாக அல்ல," என்று முடித்தார் ராஜா.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












