கேசிஆரின் தேசிய அரசியல் பிரவேசம் வெல்லுமா? - ஓர் அரசியல் பார்வை

- எழுதியவர், ஜிங்கா நாகராஜூ
- பதவி, பிபிசிக்காக
டெல்லியைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஒருவர், ஹவாலா ஊழல் புகார் தொடர்பான சிபிஐ விசாரணை சரியான பாதையில் செல்லவில்லை என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் சிபிஐ மீது லஞ்ச ஒழிப்பு ஆணையம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவு வழங்கியதைத் தொடர்ந்து, வழக்கு தொடர்ந்தவர் ஒரே இரவில் பிரபலமானார்.
அந்த 70 வயது பத்திரிகையாளர், சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா மாநில முதலமைச்சர் கே. சந்திசேகர் ராவின் முகாம் அலுவலகத்தில் அவருடைய விருந்தினராக ஓரிரு நாட்கள் தங்கினார். கேசிஆர் உருவாக்க விரும்பும் தேசிய கட்சி தொடர்பாக, டெல்லியில் அறிவுஜீவிகளுடன் கூட்டம் ஒன்றை ஒருங்கிணைக்க அந்த பத்திரிகையாளருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. கேசிஆரின் விருப்பம் குறித்து டெல்லியில் மூத்த பத்திரிகையாளர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அறிவுஜீவிகளை மொபைலில் அழைத்து தெரிவித்தார் அந்த பத்திரிகையாளர்.
அவர்கள் அனைவரும் ஹைதராபாத்தில் உள்ள தங்கள் நண்பர்களை மொபைலில் அழைத்து கேசிஆர் தேசிய கட்சி தொடங்குவது குறித்த விவரங்களை விசாரித்தனர். ஆனால், செப்டம்பரில் நடைபெறவிருந்த அந்த கூட்டம் என்ன காரணத்தினாலோ நடைபெறவில்லை. எனினும், கேசிஆரின் தேசிய கட்சி தொடங்குவதற்கான திட்டங்கள் குறித்து சில அறிவுஜீவிகள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.
தெலங்கானா ராஷ்டிர சமிதி என்ற தமது கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிர சமிதி என்று அவர் மாற்றியுள்ளார். தற்போதுள்ள சூழ்நிலைகளில் தேசிய கட்சி என்பது சாத்தியமானதா? பிராந்திய அளவில் பலம் பொருந்திய கேசிஆர், 'தெலங்கானா தலைவர்' என்ற அடையாளத்தைக் கடந்து, மற்ற மாநிலங்களில் மதிப்பைப் பெற்று, தேசிய தலைவராக உருவெடுப்பாரா? இதுதொடர்பான விவாதம், மேற்கூறிய வட்டாரங்களில் நடைபெற்றது. வட இந்திய அறிவுஜீவிகளுடன் கூட்டங்களை ஒருங்கிணைத்து, தான் திட்டமிட்டுள்ள தேசிய கட்சியை தொடங்குவது குறித்த விவாதத்தை முன்னெடுக்க ஆர்வமாக உள்ளார் கேசிஆர்.

பட மூலாதாரம், FACEBOOK/ARVIND KEJRIWAL
மூன்றாவது தேசிய கட்சிக்கு இங்கு இடமில்லையா?
இந்தியாவில் புதிய தேசிய கட்சி தொடங்கப்பட்டு வெகு காலமாகிவிட்டது. சுதந்திரத்திற்கு பிந்தைய தேசிய கட்சிகளின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், பாஜகவை தவிர வேறு எந்தவொரு தேசிய கட்சியும் தற்போது இல்லை. சில கட்சிகள் தங்கள் கட்சிப் பெயருக்குப் பின்னால் 'அனைத்திந்திய' (அஇஅதிமுக, ஏ.ஐ.எம்.ஐ.எம், அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ், அனைத்திந்திய ஃபார்வார்டு பிளாக்) என்ற முன்னொட்டை சேர்த்துக்கொண்டாலும், அவற்றில் எந்த கட்சியும் அனைத்திந்திய கட்சியாக உருவெடுக்கவில்லை.
சில கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் போட்டியிட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இடங்களில் வெற்றி பெற்று, தேர்தல் ஆணையத்தின்படி, தேசிய கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றாலும், அதன் உண்மையான நோக்கில் அக்கட்சிகள் தேசிய கட்சியாக விஸ்தரிக்கவில்லை. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, வேறொரு மாநிலத்தில் ஆட்சியமைத்த முதல் பிராந்திய கட்சியாக உள்ளது. தங்கள் மாநிலத்திற்கு வெளியே தேசிய கட்சியாக இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் இருப்பும் மிகக் குறைவாகவே உள்ளன. மற்றொருபுறம், பல்வேறு கம்யூனிச கட்சிகளின் இருப்பும் சுருங்கி, தேசிய கட்சி அங்கீகாரத்தை இழக்கும் நிலையில் உள்ளது.


இந்தியாவில் உள்ள இரு தேசிய கட்சிகளில் ஒன்றான இந்திய தேசிய காங்கிரஸ் 1885ம் ஆண்டிலும் மற்றொரு கட்சியான பாஜக கிட்டத்தட்ட நூற்றாண்டு கழித்து 1980ம் ஆண்டிலும் தொடங்கப்பட்டது.
1885-1980க்கு இடைப்பட்ட இந்த காலத்தில் எத்தனையோ தேசிய கட்சிகள் தோன்றி மறைந்திருக்கின்றன. பல்வேறு பொதுவுடைமை கட்சிகள், முஸ்லிம் லீக், ஜனசங்கம், பல்வேறு விவசாய கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் இந்த காலத்தில் தோன்றியிருந்தாலும், அவையனைத்தும் வேறொன்றாக மாறியிருக்கிறது அல்லது முழுவதும் இல்லாமல் போய்விட்டது. இதே போக்கை தேர்தல்களிலும் நாம் பார்க்கலாம்.
1952ல் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலின் போது 14 தேசிய கட்சிகள் இருந்தன. 2019 பொதுத் தேர்தலில் இந்த எண்ணிக்கை ஏழாக குறைந்தது. வடகிழக்கில் செயல்படும் தேசிய மக்கள் கட்சி, தேசிய கட்சி அங்கீகாரத்தைப் பெற்றதால், தற்போது இந்த எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது. அதிலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வரையறைபடி பெறப்பட்ட தேசிய அங்கீகாரமே அன்றி, இந்தியா முழுமைக்குமான கட்சி என்ற அர்த்தத்தால் அல்ல. அக்கட்சிகளை பன்மாநில கட்சிகள் என்று அழைப்பதே சரியாக இருக்கும்.
ஒரு கட்சி பெறும் வாக்குகளின் அடிப்படையிலும் அந்த கட்சி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை அடிப்படையிலுமே அக்கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது. ஒரு கட்சி தன் மாநிலத்திற்கு வெளியே போட்டியிட்டு சில தொகுதிகளை வென்றாலோ அல்லது குறைந்தது 4 மாநிலங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டிருந்தாலோ மட்டுமே ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படும்.
ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்கான தகுதிகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ல் வரையறுக்கப்பட்டுள்ளது. அதைத்தவிர்த்து, 'தேசிய கட்சியை' உருவாக்குவது என்று ஒன்று இல்லை. ஒரு கட்சி 'தேசிய கட்சி' என்ற அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து பெற வேண்டும். ஒரு கட்சி தானாகவே அவ்வாறு அறிவிக்க முடியாது.

பட மூலாதாரம், FACEBOOK/NARENDRA MODI
பிராந்திய கட்சிகளின் யுகத்தில் 'தேசிய அங்கீகாரம்'
1952ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பிராந்திய கட்சிகள் உள்ளன. 1952ம் ஆண்டில் 19 பிராந்திய கட்சிகள் தேர்தல்களில் போட்டியிட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. எனினும், இந்தியாவில் 1984க்குப் பிறகே பிராந்திய கட்சிகள் அரசியல் மேடைகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. அதுதான், இந்திய தேசிய காங்கிரஸ் ஒன்றிய ஆட்சியை தானாகவே பிடித்த கடைசி ஆண்டு.
அதன்பிறகு அக்கட்சியின் வீழ்ச்சி தொடங்கியது. 1989 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை. தெலுகு தேசம் கட்சியின் தலைவர் என்.டி.ராமா ராவின் முயற்சியால் பிராந்திய கட்சிகளின் 'தேசிய முன்னணி' கூட்டணி ஆட்சியமைத்தது. அப்போதிலிருந்து, இந்த கூட்டணி, பாஜகவுடன் தேசிய ஜனநாயக கூட்டணியிலோ அல்லது காங்கிரஸுடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடனோ இணைந்து ஆட்சியமைக்கிறது.
ஒரு தேசிய கட்சி தாமாகவே ஒன்றிய ஆட்சியை அமைக்கும்போது, ஐந்தாண்டு கால ஆட்சியையும் முழுமையாக அந்த அரசு நிறைவு செய்கிறது. 1989-2014 இடைப்பட்ட காலத்தில் எந்தவொரு தேசிய கட்சியாலும் கூட்டணியின்றி ஒன்றிய ஆட்சியை அமைக்க முடியவில்லை. 2014ம் ஆண்டிலிருந்துதான் எந்தவொரு கட்சியின் தேவையுமின்றி ஒரு தேசிய கட்சி ஆட்சியமைக்கும் போக்கு மீண்டும் தொடங்கியது.
நரேந்திர மோதியின் தலைமையிலான பாஜக இதனை சாதித்தது. நாடு முழுவதும் பாஜக பலத்தை அதிகப்படுத்தி வந்தாலும், பல்வேறு மாநிலங்களில் பிராந்திய கட்சிகள் பாஜகவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தியுள்ளது. பிராந்திய கட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் காலூன்ற பாஜக சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. இதனால், அக்கட்சிகளுடன் போட்டியிடுவதை விடுத்து பல்வேறு மாநிலங்களில் பிராந்திய கட்சிகளுடனேயே பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மற்றொருபுறத்தில், காங்கிரஸின் பலம் குறைந்துவருகிறது என்றாலும், இந்திய அளவில் இருப்பு கொண்டுள்ள மற்றொரு கட்சியாக காங்கிரசே உள்ளது.
தேசிய அரசியல் இந்த இரு கட்சிகளையும் சுற்றியே உள்ளது. தேசிய அரசியலை சுற்றிவரும் மற்றொரு துருவமாக கேசிஆரும் உருவாகுவாரா என்பதே இப்போது உள்ள பெரிய கேள்வி.
இரு தேசிய கட்சிகள் மட்டுமே உள்ள நிலையில், அதில் ஒன்று இவ்வளவு பரந்துபட்ட நாட்டில் சரிவை சந்தித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். இதிலிருந்து மற்றொரு தேசிய கட்சிக்கான வெற்றிடம் இங்கு இருப்பதாக தோன்றுகிறது. இந்த பார்வையிலிருந்து அணுகினால், சந்திரசேகர் ராவின் முயற்சி நன்றாக இருப்பதாக தோன்றுகிறது.

பட மூலாதாரம், FACEBOOK/KCR
இந்த வெற்றிடத்தை கேசிஆர் வரித்துக்கொள்வாரா?
எங்கெல்லாம் காங்கிரஸ் பலமிழந்து வருகிறதோ, அங்கெல்லாம் பாஜகவோ அல்லது பிராந்திய கட்சியோ வலுப்பெற்று வருகிறது. எனினும், ஆந்திர பிரதேசத்தில் காங்கிரசால் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜகவால் ஆக்கிரமிக்க முடியவில்லை. மாறாக, தற்போதைய ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அந்த இடத்தை ஆக்கிரமித்தது. ஆந்திராவில் காங்கிரஸ் முற்றாக இல்லாமல் ஆன நிலையில், பாஜகவால் அம்மாநிலத்தில் நுழைய முடியாத நிலை உள்ளது. இத்தகைய மாநிலங்களில் கேசிஆர் வெற்றிபெற முடியுமா?
தெலங்கானா, தமிழ்நாடு, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரசோ அல்லது பாஜகவோ பெரிதளவில் இருப்பை கொண்டிருக்கவில்லை. இந்த மாநிலங்களில் உள்ள பிராந்திய கட்சிகள், எந்த தேசிய கட்சியும் தங்கள் இடத்திற்குள் நுழையாமல் இருப்பதை உறுதிசெய்துள்ளன. இந்த மாநிலங்களில் எந்த புதிய தேசிய கட்சியும் வளர முடியாது. அதாவது, காங்கிரசால் உருவான வெற்றிடத்தை ஒன்று பாஜக அல்லது பிராந்திய கட்சியே ஆக்கிரமிக்கும்.
இந்த வெற்றிடத்தில் எந்த புதிய கட்சியும் நுழைய முடியாது. டெல்லியில் மோதியை பதவியிலிருந்து அகற்றுவதற்காகவே தான் புதிய தேசிய கட்சியை அமைப்பதாக கேசிஆர் கூறுகிறார். தன்னுடைய சொந்த மாநிலத்தில் பாஜக வலுவடையாமல் இருப்பதை உறுதி செய்துள்ள கேசிஆர், இப்போது மற்ற மாநிலங்களில் பிராந்திய கட்சிகளுடன் போட்டியிட வேண்டும். இதுவொரு வித்தியாசமான அரசியல் சூழல்.


எனவே, புதிய தேசிய கட்சியை அமைப்பதற்கான கேசிஆரின் பேச்சுகள், தெலங்கானாவுக்கு வெளியே எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. புதிய கட்சி குறித்து அவருடைய அறிவிப்புக்குப் பின்னர் அதுவொரு விவாதமாக மாறுகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பட மூலாதாரம், FACEBOOK/YS JAGAN MOHAN REDDY
ஆந்திர பிரதேசத்தில் என்ன எதிர்வினை?
மற்றொரு தெலுங்கு மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் நிலைமை என்னவென்றால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் ஆக்கிரமித்துள்ள இடத்தில் ஓர் ஊசி கூட நுழைய முடியாது என்பதுதான். பாஜகவால் இங்கு தாமாக போட்டியிட முடியவில்லை. ஆந்திராவில் பாஜக மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே போட்டியிட வேண்டிய நிலை உள்ளது.
நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியின் நிலைமையும் இதுதான். 10 ஆண்டுகால கட்சி இது என்றாலும், இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளது. முந்தைய தேர்தல்களில் வெறும் ஓர் இடத்தை மட்டுமே பிடித்த ஜன சேனா கட்சி, அதன் ஆதரவாளர்களை ஏமாற்றமடைய வைத்துவிட்டது. நிலைமை இப்படி இருக்கையில், கேசிஆரால் அமைக்கப்படும் புதிய கட்சிக்கு ஏதேனும் வாய்ப்பு இருக்குமா? "அது கடினமானது" என்கிறார், அனந்தபுரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசியல் அறிவியல் விரிவுரையாளர் ஏ.சந்திர சேகர்.
"ஆந்திராவில் தேசிய கட்சிகள் எவ்வித தேவையையும் கொண்டிருக்கவில்லை. காங்கிரஸ் மற்றும் பாஜகவின் நிலைமையை பார்த்தாலே இதுபுரியும். நிலைமை இப்படியிருக்கையில், எப்படி புதிய கட்சி கால் பதிக்க முடியும்?" என்கிறார் சந்திர சேகர்.
ராயலசீமா வித்யாவந்துலா வேதிகாவின் ஒருங்கிணைப்பாளர் எம். புருஷோத்தம ரெட்டியின் வாதம் வேறாக உள்ளது. "தேசிய கட்சி என்கிற கேசிஆரின் சொல்லாடல் வெறும் முழக்கம்தான். அவருடைய அரசியல் இலக்கு என்பது இன்னும் தெலங்கானா மாநிலம்தான். தெலங்கானாவில் பலன்களை பெறுவதற்குத்தான் அவர் தேசிய கட்சி என்ற முழக்கத்தைப் பயன்படுத்துகிறார். ஏனெனில், தெலங்கானாவில் இன்றைக்கு அவருடைய அரசியல் போட்டியாளர் பாஜக. இதுவொரு உத்தி. ஆந்திர பிரதேசத்தில் எவ்விதத்திலும் அவர் கால் பதிக்க முடியாது," என்கிறார் புருஷோத்தம் ரெட்டி.
போலாவரம் அணையின் கட்டுமானம் மற்றும் ராயலசீமா நீரேற்று பாசன திட்டத்தை நிறுத்த முயற்சித்தது போன்ற நடவடிக்கைகளால், கேசிஆர் ஆந்திராவில் பிரபலமற்ற ஒரு நபராக கருதப்படுகிறார். ஆந்திர மக்கள் அவரை 'தெலங்கானா கேசிஆர்' என்றே பார்ப்பார்கள், தேசிய தலைவராக அல்ல" என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், FACEBOOK/RAHUL GANDHI
தெலங்கானாவில் என்ன நிலை?
கேசிஆரின் தேசிய திட்டங்களுக்கு தெலங்கானாவிலிருந்து வரும் எதிர்வினைகள் தனித்துவமானவை, அவருடைய ஆதரவாளர்கள், அவரை மோதிக்கு மாற்றான நபர் என கொண்டாடிவரும் நிலையில், மற்ற சிலர் அவருடைய தேசிய இலக்குகள் அனைத்தும் வெறும் நாடகமே என புறந்தள்ளுகின்றனர்.
பாஜக தேசிய அளவில் ஆட்சியை பிடித்துவிட்ட நிலையில், இந்த நாடு மிக சிக்கலான வரலாற்று கட்டத்தை அடைந்துள்ளது. இதிலிருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு தன் உத்திகளின் மூலம் தேசிய அரசியலுக்குள் கேசிஆர் நுழைவதாகவும் அதனை வரவேற்க வேண்டும் எனவும், அவருடைய ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
"காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்த நாட்டில் தோல்வியை சந்தித்துள்ளன. பாஜக அந்த வெற்றிடத்தில் நுழைந்து தற்போது நாட்டையும் சமூகத்தையும் அழித்துவருகிறது. இந்த அழிவுகளுக்கு மத்தியில் நாட்டை மீட்க புதிய உத்தி தேவை. கேசிஆர் தன் புதிய உத்தியின் மூலம் தேசிய அரசியலில் நுழைகிறார். இது தவிர்க்க முடியாத வரலாற்று தேவை. இதுகுறித்த தெளிவான அறிக்கைகளை அவர் வெளியிடாவிட்டாலும், தன்னுடைய பல்வேறு உரைகள் மூலம் இதுகுறித்து குறிப்பால் உணர்த்தியுள்ளார் கேசிஆர். அவருடைய உத்தி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான சாத்தியங்களை கொண்டுள்ளதாக தோன்றுகிறது. இது, கொள்கை ரீதியிலான ஆதரவாளர்களையும் மக்களையும் அவர்பால் கொண்டு வரும்" என்கிறார், பிரபல அரசியல் ஆர்வாளரும் தெலங்கானா அரசின் ஆலோசகருமான தன்கசாலா அஷோக். "அப்போது நேரு கண்ட கனவுகளை தற்போது கேசிஆர் காண்கிறார். இத்தகைய எண்ணங்கள் வெற்றிபெறுவது நாட்டின் தற்போதைய தேவையாக உள்ளது," என்கிறார் அஷோக். இதிலும் கருத்து வேறுபாடுகள் உண்டு.
கேசிஆரின் தேசிய கட்சி திட்டத்தை வரவேற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் கே.நாராயணா, எச்சரிக்கை ஒன்றையும் விடுக்கிறார். "நாட்டிலுள்ள ஒவ்வொரு நிறுவன கட்டமைப்பையும் அழித்துவரும் பாஜகவை எதிர்த்துப் போட்டியிட கேசிஆர் புதிய தேசிய கட்சியை அமைக்கிறார். அதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், பாஜகவை எதிர்க்க ஏற்கனவே பல கட்சிகள் மற்றும் மாநில முதலமைச்சர்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளை இது பாதிக்கச் செய்யக் கூடாது," என்கிறார் நாராயணா.
கேசிஆரின் தேசிய கட்சி என்பது வெற்று முழக்கமே என்கிறார் மற்றொரு அரசியல் ஆய்வாளர் தெலக்கப்பள்ளி ரவி.
"தெலங்கானாவில் வரும் சட்டமன்ற தேர்தலை தேசிய அரசியல் என்ற பெயரில் சந்திக்க கேசிஆர் நினைக்கிறார். தேர்தல்கள் மாநில அளவிலும் முழக்கங்கள் தேசிய அளவிலும் உள்ளது. தேசிய கட்சி என்பதை தவிர அதில் தேசிய கொள்கை என்பது இல்லை. இது வரும் சட்டமன்ற தேர்தலுக்கானதே. முந்தையை தேர்தல்களில் பாஜகவால் ஏற்படுத்தப்பட்ட ஆபத்துகளை உணர்ந்து கூட்டாட்சி முன்னணி என்ற யோசனையை முன்வைத்தார். இப்போது தேசிய கட்சி என்ற யோசனையை முன்வைக்கிறார்" என, தெலக்கப்பள்ளி ரவி தெரிவிக்கிறார். "புதிய அரசியல் கட்சியை தொடங்குவது என்பது ஜனநாயகத்தில் வரவேற்கப்படக்கூடிய ஒன்று. முதலமைச்சர்கள் பிரதமர்களான வரலாறு இந்த நாட்டில் உள்ளது. சரண் சிங், மொரார்ஜி தேசாய், வி.பி. சிங், தேவகவுடா உள்ளிட்ட பிரதமர்கள் முதலமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட தேசிய கட்சியின் போக்கை எதிர்த்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் கூடாரத்திலிருந்து வந்தவர்கள் இவர்கள். ஆனால், கேசிஆர் மற்ற யாரையும் மதிக்கவில்லை. இந்த மனப்பான்மையுடன் எப்படி தேசிய இலக்கை அவர் அடைவார்? தெலங்கானாவில் மீண்டும் வெற்றிபெற இந்த இருமுனை முழக்கங்களை முன்வைப்பதாக நான் நம்புகிறேன். பாஜகவை மத்தியில் தோற்கடிப்பது இதன் ஒரு அம்சம், தெலங்கானாவில் பாஜகவை எதிர்த்து மீண்டும் வெற்றிபெறுவது மற்றொரு அம்சம்" என்றார் அவர்.
கேசிஆரின் தேசிய கட்சி வெளியில் தோன்றும் அளவுக்கு புனிதமானது அல்ல என, தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டாக்டர். மல்லு ரவி கூறுகிறார். "பாஜகவுக்கு எதிரான கூட்டணியை ஒன்றிணைக்கும் முயற்சி நடைபெறும்போது அதில் இணையாமல் ஏன் புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டும்? பாஜகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பிப்பது, பாஜகவுக்கு எதிரான கூட்டணியை வலுவிழக்கச் செய்யுமே தவிர, வகுப்புவாத சக்திகளை தோற்கடிக்காது," என்கிறார், டாக்டர். மல்லு ரவி.

பட மூலாதாரம், FACEBOOK/TRSPARTYONLINE
'தெலங்கானா' அடையாளம் அவருடைய பாதையை அடைத்துவிடுமா?
வலுவான பிராந்திய கட்சிகள் நாடு முழுவதும் உருவாகியுள்ளன. பாஜகவின் இந்து-இந்தி கொள்கையை எதிர்க்க பிராந்திய விருப்பங்கள் பல மாநிலங்களில் பிரதானப்படுத்தப்பட்டுள்ளன. கேசிஆரும் தன்னுடைய வலுவான பிராந்திய உணர்வுகளுக்காகவே அறியப்படுபவர். கடந்த இரு தசாப்தங்களாக அவர் தெலங்கானா தலைவராக அறியப்படுகிறார். தெலங்கானா அரசியல் முகமாக அவர் மாறியுள்ளார். இதேபோன்று, வலுவான பிராந்திய உணர்வுகளை கொண்டுள்ள மாநில மக்கள், வேறொரு பிராந்தியத்திலிருந்து வந்த மற்றொரு தலைவரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்வார்களா? அவருடைய பிராந்திய நெருக்கத்தைக் கடந்து தேசிய தலைவராக உருவெடுப்பாரா? 'தெலங்கானா' அடையாளம் அவருடைய பாதையை அடைத்துவிடுமா?
"நரேந்திர மோதியும் குஜராத் தலைவர்தான். ஒரே இரவில் தேசிய தலைவராக அவர் உருவெடுக்க பாஜக பொறுப்பாக இருந்தது. தேசிய அரசியலில் நுழைய மோதி புதிய கட்சியை ஆரம்பிக்கவில்லை. பிரதமர் பதவிக்கான போட்டியாளராக நரேந்திர மோதி உருவான போது, பாஜக காங்கிரஸுக்கான மாற்றாக உருவெடுத்திருந்தது. பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே ஆட்சி அமைத்திருந்தது. பல்வேறு மாநிலங்களில் முக்கிய சக்தியாக மாறியிருந்தது. வலுவான தேசிய கட்சியின் உதவியின் மூலம் தன்னுடைய குஜராத்தி அடையாளத்தை மோதி நீக்கினார். கேசிஆரும் தேசிய தலைவராக உருவெடுக்க விரும்பினால் தற்போது அவருக்குள்ள பிராந்திய அடையாளத்தை அவர் போக்க வேண்டும்," என்கிறார், ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற அரசியல் அறிவியல் பேராசிரியர் கே. ஸ்ரீனிவாசுலு.
'தெலங்கானா' அடையாளத்துடனேயே கேசிஆர் வலுவாக அறியப்படுகிறார். அதனை நீக்குவது எளிதானதல்ல என்கிறார், ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியர் இ. வெங்கடேசு. இரண்டு தெலுங்கு மாநிலங்களிலும் அரசியல் குறித்து நீண்ட காலமாக ஆய்வுசெய்து வருபவராக வெங்கடேசு உள்ளார்.
"தேசிய தலைவராக தான் அறியப்பட வேண்டும் என்று கேசிஆர் விரும்பினால், அவருடைய கட்சி அமைப்பு ரீதியாக முக்கியமான மாநிலங்களில் இருப்பு கொண்டிருக்க வேண்டும். அது இருக்கிறதா? அமைப்பு ரீதியாக இருந்தால் மட்டுமே அந்த மாநில மக்கள் அவரின்பால் ஈர்க்கப்படுவார்கள். இது மிக கடினமானது. மோதிக்காக பாஜக அந்த வேலையை செய்தது. கேசிஆருக்கு அந்த வாய்ப்பு இல்லை என தெரிகிறது," என்கிறார், அவர். எனினும், பிராந்திய அடையாளம் என்ற தடையை கடக்க வழிகள் இருப்பதாக அவர் கூறுகிறார். கூட்டாட்சி முன்னணி என்பதன் மூலம் இதனை மேற்கொள்ள முடியும். "தேசிய அளவில் கூட்டாட்சி முன்னணிக்கு பிராந்திய அடையாளம் என்பது தடையல்ல. சொல்லப்போனால், அதுவொரு தகுதியாக இருக்கும். அந்த முன்னணியில் நீங்கள் பங்கு வகித்தால், மற்ற பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் கட்சி மூலமாக உங்களை ஆதரிப்பார்கள். இதுவொரு மறைமுக ஆதரவு. இத்தகைய முன்னணியின் தலைவர்கள் கடந்த காலங்களில் தங்களின் பிராந்திய மற்றும் சாதிய அடையாளங்களுக்குள் சிக்கிக்கொள்ளவில்லை. ஏனெனில், அவர்கள் சொந்த கட்சியை ஆரம்பிக்காமல், அத்தகைய கூட்டணியில் ஒருவராக பங்கு வகித்தனர். 'தெலங்கானா' அடையாளத்தை நீக்காமல் தேசிய தலைவராக உருவெடுக்க கேசிஆர் விரும்பினால், அவர் 'பாஜகவுக்கு எதிரான கட்சி'யை ஆரம்பிக்காமல், 'பாஜகவுக்கு எதிரான கூட்டணி'யில் இணைய வேண்டும்" என்கிறார், பேராசிரியர் வெங்கடேசு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













