எடப்பாடி பழனிசாமிக்கு அமித் ஷாவின் அறிவுரை - டெல்லி சந்திப்பில் என்ன நடந்தது? அதிகம் அறியாத தகவல்கள்

- எழுதியவர், பரணி தரன்
- பதவி, பிபிசி தமிழ்
டெல்லியில் தன்னை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் தமிழ்நாட்டில் வலுவான எதிர்கட்சியாக அதிமுக திகழ வேண்டுமானால், எந்த பிளவும் இல்லாமல் ஓரணியாக செயல்படுங்கள் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துடன் முறிந்து போன உறவை இனி ஒட்ட வைக்க முடியாது என்று எடப்பாடி பழனிசாமி அவரிடம் தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. என்ன நடந்தது இந்த விவகாரத்தில்?
டெல்லிக்கு இரண்டு நாட்கள் பயணமாக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கே. பழனிசாமி, முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் ஆகியோர் வந்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுகவில் அதுநாள் வரை நிலவி வந்த இரட்டைத் தலைமை முறையை ஒழித்து விட்டு ஒற்றைத் தலைமையை உருவாக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி சார்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டுள்ளதை உயர் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் ஆகியோர் திங்கட்கிழமை இரவு டெல்லி வந்தனர்.
எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் டெல்லி சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கினார். மற்ற அறைகளில் எஸ்.பி. வேலுமணியும் சி.வி. சண்முகமும் தங்கினர்.
30 நிமிட சந்திப்பு

இதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலையில் டெல்லி நார்த் பிளாக்கில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இது ஒரு மாியாதை நிமித்தமான சந்திப்புதான் என்றும் அமித் ஷாவிடம் அரசியல் ஏதும் பேசவில்லை என்றும் கூறினார்.
மேலும் அவர், "கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம், நடந்தாய் வாழி காவிரி திட்டம் ஆகியவற்றை விரைந்து நிறைவேற்ற வேண்டும். கோதாவரி-காவரி திட்டம் இணைக்கப்பட்டால் தமிழ்நாட்டுக்கு தேவையான நீர் கிடைக்கும், விவசாயிகளின் நீர் தேவையும் பூர்த்தியாகும்.
நான் முதல்வராக இருந்த காலகட்டத்திலேயே பிரதமரை சந்தித்து பல முறை கோரிக்கை விடுத்தேன். அதை அவர் பரிசீலிப்பதாக கூறியிருந்தார். அதே கோரிக்கையை இப்போது மத்திய உள்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினேன். அந்த திட்டம் விரிவான திட்ட அறிக்கை கோரல் அளவில் தற்போது இருப்பதாக அறிகிறேன். அதை துரிதப்படுத்தும்படி மத்திய அரசிடம் கோரியுள்ளோம்," என்று தெரிவித்தார்.
"தமிழ்நாடு முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதையும் வேகப்படுத்தி நிறைவேற்றுமாறும் உள்துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன்," என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.


சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும் போதைப்பொருள் கலாசாரம் தீவிரம் அடைந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இந்த விவகாரம் குறித்தும் உள்துறை அமைச்சரிடம் விரிவாக பேசியதாக அவர் கூறினார்.
"தமிழ்நாட்டில் ஆளும் அரசு மெத்தனமாக இருப்பதால் மாநிலம் முழுவதும் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இது பற்றி எல்லாம் ஏற்கெனவே திமுக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காததால் இப்போது உள்துறை அமைச்சரிடம் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்," என்று குறிப்பிட்டார் எடப்பாடி பழனிசாமி.
"தமிழ்நாட்டில் தடையின்றி போதைப்பொருள் கிடைக்கிறது. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் சீரழியக் கூடிய சூழலை எடுத்துச் சொன்னோம். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடந்து வருகிறது. இது குறித்தும் மத்திய அமைச்சரிடம் பேசினேன்," என்கிறார் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாட்டில் வாழ்வதற்கே மக்கள் போராடி வரும் நிலையில், மின் கட்டணத்தை மாநிலத்தில் ஆளும் திமுக அரசு உயர்த்தியிருக்கிறது. இது தேவையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
ஓபிஎஸ், கட்சித் தலைமை விவகாரம் தொடர்பாக அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்றபோது, "மன்னிக்கவும்" என்று மட்டும் கூறி விட்டு பேட்டியை முடித்துக் கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
உண்மையில் என்ன நடந்தது?
இந்த நிலையில் இந்திய உள்துறை அமைச்சர் அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இருந்த 30 நிமிடங்களில் பெரும்பாலான நேரத்தை அவர்கள் அதிமுக விவகாரம் குறித்தும் தங்களை இலக்கு வைத்து மாநில அளவிலும் மத்திய அரசு அளவிலும் வலுத்து வரும் சட்ட அமலாக்க அமைப்புகளின் நடவடிக்கை குறித்தும் பேசியதாக பிபிசி தமிழுக்கு தெரிய வந்துள்ளது.
உள்துறை அமைச்சரை சந்தித்தபோது தமிழக குறைகளை விவரிக்கும் மனு எதையும் அவரிடம் அதிமுக தலைவர்கள் வழங்கவில்லை என்றும் உள்துறை அமைச்சர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எதிர்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள போதிலும், அவரது டெல்லி வருகை தொடர்பாக தலைநகரில் உள்ள கட்சி அலுவலகத்திடமோ அதன் அலுவலர்களிடமோ எந்த தகவலையும் பகிரவில்லை.
உள்துறை அமைச்சரை சந்தித்தபோது எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மட்டுமே அந்த அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். அவர்அதிமுக தலைவர்கள் அமித் ஷாவுடன் நிற்கும் படத்தை தமது செல்பேசியில் படம் எடுத்து விட்டு அறையில் இருந்து வெளியே அனுப்பப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அமித் ஷா அலுவலகத்தில் அரசியல் விவகாரங்களை கவனிக்கும் தனிச்செயலாளர் மட்டுமே அந்த அறையில் இருந்தபடி அதிமுக தலைவர்கள், தமிழ் மற்றும் பகுதியளவு ஆங்கிலத்தில் முன்வைத்த கோரிக்கைகளை அமித் ஷாவிடம் குஜராத்தியில் மொழி பெயர்த்து விளக்கினார்.

எடப்பாடி பழனிசாமி முன்னுள்ள வேறு சட்ட விவகாரங்கள்
- சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. கடந்த 12ஆம் தேதி எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.
- முந்தைய அதிமுக ஆட்சியின் போது, தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் உள்ள தெரு விளக்குகளை, எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்ட அமலாக்கத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகவும், தனக்கு நெருக்கமானவர்களின் நிறுவனங்களுக்கு அரசு விதிகளுக்கு மாறாக அமைச்சராக இருந்த வேலுமணி ஒப்பந்தங்களை வழங்கியதாகவும், இதன்மூலம் அரசுக்கு ரூ.500 கோடி இழப்பை ஏற்படுத்தியதாகவும் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
- இந்த விவகாரம் மட்டுமின்றி கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான ரூ. 12 கோடி அளவிலான ஊழல் முறைகேடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான சந்திரகாந்த் ராமலிங்கம் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டுள்ளார்.
- பெங்களூரு பெருநகர வளர்ச்சிக் குழுமம் (பிடிஏ) ரூ. 575 கோடி மதிப்பிலான குடியிருப்புகள் கட்டும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை சந்திரகாந்த் ராமலிங்கம் பெற்றுள்ளார். அந்த ஒப்பந்தம் தொடர வேண்டுமானால், எடியூரப்பாவுக்கு அவர் ரூ. 12 கோடி அளவுக்கு லஞ்சம் தர வேண்டும் என்று சந்திரகாந்திடம் பிடிஏ ஆணையர் ஜிசி பிரகாஷ் கூறியதாக லோக் ஆயுக்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- இந்த ஊழல் தொடர்பாக எடியூரப்பாவின் பேரனும் சந்திரகாந்தும் பேசுவதாக கூறப்படும் ஆடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- எடப்பாடி பழனிசாமியின் மருமகள் திவ்யாவின் சகோதரி சரண்யாவின் கணவர்தான் இந்த சந்திரகாந்த் ராமலிங்கம். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் ரூ. 500, பண மதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்ட காலத்தில் ரூ. 5.63 கோடி மதிப்பிலான ரூ. 2000 புதிய கரன்சி நோட்டுகளுடன் போலீஸிடம் பிடிபட்டார். சிபிஐ பதிவு செய்துள்ள இந்த வழக்கில் சந்திரகாந்த் ராமலிங்கம், நசீர் அகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வருமான வரித்துறை தனியாக ஒரு வழக்கும் சிபிஐ தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்துள்ளன.
- இது தொடர்பாக ஒருமுறை எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, சம்பந்தி என்பவர் ரத்த சொந்தமே கிடையாது என்று கூறியிருந்தார். தனது உறவினர் மீது தொடரப்பட்ட வழக்கை அவர் சட்ட ரீதியாக எதிர்கொள்வார் என்றும் அதற்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

"தேர்தல் வெற்றியை பாதிக்கலாம்"

எடப்பாடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் அமித் ஷாவின் அலுவலகத்தில் விசாரித்தபோது, அதிமுகவில் தற்போது நீடித்து வரும் பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்தே பணியாற்ற வேண்டும் என பாஜக விரும்புவதாக அவர்களிடம் கூறப்பட்டது.
வலுவான எதிர்கட்சியாக அதிமுக தொடர வேண்டுமானால், அந்த கட்சிக்குள் பிளவு இருக்கக் கூடாது என்றும் அவ்வாறு இருந்தால் அது அடுத்து வரும் தேர்தல்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அமித் ஷா தரப்பில் கூறப்பட்டதாக அவரது அலுவலக வட்டாரங்கள் நம்மிடையே தெரிவித்தன.
ஆனால், ஓ.பன்னீர்செல்வத்துடனான உறவு இனி ஒட்ட முடியாதது என்றும் நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் எண்ணிக்கை அளவில் தமது ஆதரவாளர்களே அதிகம் இருப்பதாகவும் அந்த அடிப்படையில் பாஜக மேலிடம் தன்னுடன் மட்டுமே இனி தேர்தல் மற்றும் அரசியல் உறவைத் தொடர வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அமித் ஷாவின் அலுவலக வட்டாரங்கள் கூறின.
இந்த சந்திப்பு குறித்து அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் பி. வேணுகோபாலிடம் பேசினோம்.
"கட்சி உடைந்து விடக் கூடாது என்பது பாஜக மேலிடத்தின் நல்லெண்ணம். அதே சமயம், தற்போது நடந்து கொண்டிருப்பது அதிமுகவின் உள்விவகாரம். அதிமுகவில் தொண்டர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் யார் பக்கம் இருக்கிறார்களோ அவர்களுடன்தான் பெரும்பான்மை நிர்வாகிகள் துணை நிற்பார்கள்," என்று கூறினார்.

அதிமுக மீது பாஜகவின் அழுத்தம் தொடர்கிறதா?
மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனின் பார்வை

"டெல்லியில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து மாநில நலன்கள் தொடர்பான திட்டங்களை பற்றி பேசியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். இது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும் என்பது எடப்பாடி பழனிசாமிக்கும் அமித் ஷாவுக்குமே வெளிச்சம்.
நான் அறிந்தவரையில், தமிழ்நாட்டில் அதிமுகவில் உள்ள சில முக்கிய தலைவர்களை இலக்கு வைத்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திமுக அதிகப்படியாகவே அதிமுகவை மிரட்டுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு நெருங்கியவரும் தீவிர ஆதரவாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீட்டில் இரண்டு மாதங்களில் மூன்றாவது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி இருக்கிறது. ஆளும் திமுக ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவான போக்குடன் செயல்படுவதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக சந்தேகிக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் பிற மாநிலங்களில் பாஜக எங்கெல்லாம் எதிர்கட்சியாக உள்ளதோ அங்கெல்லாம் ஆளும் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை இலக்கு வைத்து சில சட்ட நடவடிக்கைகள், சோதனைகள் நடத்தப்படுகின்றன. உதாரணத்துக்கு மேற்கு வங்கத்தில் உள்ள ஆளும் எம்பிக்கள், அமைச்சர்கள் வீடுகளில் நடத்தப்படும் சோதனைகள், டெல்லியில் துணை முதல்வர் வீட்டில் நடத்தப்பட்ட சிபிஐ சோதனை, தெலங்கானாவில் ஆளும் கேசிஆருக்கு நெருக்கானவர்களின் வீடுகளில் நடத்தப்படும் அமலாக்கத்துறை சோதனைகள் போன்றவற்றைக் கூறலாம்.
ஆனால், தமிழ்நாட்டில் ஆளும் திமுகவில் உள்ள அமைச்சர்கள், மூத்த தலைவர்கள், முதல்வரின் குடும்பங்களில் உள்ளவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் தொடர்பாக ஆவணங்கள் அல்லது புகார்கள் அளித்தும் அவர்கள் மீது பிற மாநிலங்களில் எடுக்கப்படுவது போன்ற நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு மென்மை காட்டுவதாக அதிமுக மேலிட தலைவர்கள் கருதுகின்றனர்.
அமித் ஷாவை சந்தித்தபோது, ஈபிஎஸ், ஓபிஎஸ் என இரு பிரிவுகளாக அதிமுக செயல்படுமானால், அதனால் பிரியும் ஓட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து அமித் ஷா தமது கவலையை தெரிவித்துள்ளார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, தானும் தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் பயணம் செய்துள்ளேன். எல்லா இடத்திலும் ஓபிஎஸ் எங்கும் பலமாக இல்லை. ஓபிஎஸ் இல்லாவிட்டாலும் கட்சி பலமாகவே இருக்கும் என அமித் ஷாவிடம் ஈபிஎஸ் சொல்லியிருப்பதாக அறிகிறேன்.
இதை எல்லாம் தாண்டி காவிரி கோதாவரி நதி நீர் இணைப்பு, நடந்தாய் வாழி காவிரி போன்ற பிரச்னைகளுக்காக உணர்ச்சிபூர்வமாக அமித் ஷாவை சந்தித்தேன் என எடப்பாடி பழனிசாமி சொல்வதையெல்லாம் நான் நம்பத் தயாராக இல்லை," என்கிறார் குபேந்திரன்.

டெல்லியில் ஈபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்

டெல்லியில் எடப்பாடி பழனிசாமி தமது ஆதரவாளர்களுடன் முகாமிட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வாரணாசியில் செவ்வாய்க்கிழமை இருப்பதாக தெரிய வந்துள்ளது.
அவரது மனைவி விஜயலட்சுமி 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி காலமானார். அதன் ஓராண்டு திதியையொட்டி தமது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் சென்ற அவர், அங்குள்ள கோவிலில் தரிசனம் செய்து விட்டு, செவ்வாய்க்கிழமை வாரணாசிக்கு சென்றார். காசி விஸ்வநாதர் கோவிலில் குடும்பத்துடன் வழிபாடு செய்து விட்டு அவர் சென்னைக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார்.
'அதிமுக எம்பி' ஆக தொடரும் ரவீந்திரநாத்
எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வான பிறகு, அவரது தலைமையிலான கழகம், கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் பி. ரவீந்திரநாத் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியது. இதேபோல, ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை நீக்குவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், ரவீந்திரநாத் தேனி மக்களவை தொகுதி அதிமுக உறுப்பினர் ஆக இருப்பதால், அவரை ஈபிஎஸ் தலைமையிலான கட்சி அவரை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்பில் இருந்து நீக்கி அதன் தகவலை மக்களவை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளது.
ஆனால், இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் யாருடைய தலைமையை ஆதரிக்கிறதோ அதன் அடிப்படையிலேயே சபாநாயகர் முடிவெடுக்க தீர்மானித்துள்ளதாக அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், கட்சிக்குள் பூசல்கள் நிலவினாலும், பி.ரவீந்திரநாத் இப்போதும் அதிமுக உறுப்பினராகவே தொடர்கிறார்.
மக்களவை செயலக விதிகளின்படி கட்சி மேலிடத்தால் ஒரு எம்பி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அது சபாநாயகரால் ஏற்கப்பட்டால், அந்த எம்பி மக்களவையில் சுயேச்சை எம்பி ஆக கருதப்படுவார். ஆனால், முக்கிய மசோதாக்கள் மற்றும் அலுவல்களில் உரையாற்றும் வாய்ப்பு, பிற கட்சிகளுக்கு தரப்படும் பிரதிநிதித்துவம் போல இல்லாமல் அவருக்கு கடைசியாகவே வழங்கப்படும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












