திமுகவின் முரசொலி கட்டுரை: ஸ்டாலின் கூட்டணி கட்சிகளின் விமர்சனங்களை விரும்புவதில்லையா?

மு.க. ஸ்டாலின்

பட மூலாதாரம், Facebook/MKStalin

படக்குறிப்பு, மு.க. ஸ்டாலின்
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலாக, தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி கண்டனம் தெரிவிக்கும் வகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. இன்று வெளியான முரசொலி வலிமையான கூட்டணியை வலியுறுத்துகிறது. கூட்டணிக் கட்சிகள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைப்பதை தி.மு.க. விரும்பவில்லையா?

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், அதனைக் கண்டித்து சி.பி.எம்மின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், மின்கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டுமெனக் கோரியிருந்தார்.

ஆனால், அவரது அந்த அறிக்கையை தி.மு.க. சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. அடுத்த நாளே தி.மு.கவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், பாலகிருஷ்ணனுக்குப் பதிலளிக்கும் வகையில் ஒரு முழு பக்கத்திற்கும் கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் தி.மு.கவிற்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் இடையில் சிண்டு முடிந்துவிட, கூட்டணியை முறித்துவிட பலர் காத்துக்கொண்டிருப்பதை பாலகிருஷ்ணன் மறந்துவிடக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

"மார்க்சிஸ்ட் ஆளும் கேரளத்தில் கூட மின்கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. பாலகிருஷ்ணனுக்கு அது தெரியாது இருக்க முடியாது. தமிழ்நாட்டில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக எதிர்கட்சியினர் இன்று குரல் கொடுப்பதுபோல கேரளத்தில் மின்கட்டண உயர்வுக்கு கேரளத்து எதிர்க் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். விமர்சனங்களை கட்டவிழ்த்து விட்டனர். அதையும் பாலகிருஷ்ணன் அறிந்திருப்பார்."

கே. பாலகிருஷ்ணன்

பட மூலாதாரம், Facebook/kbcpim

படக்குறிப்பு, கே. பாலகிருஷ்ணன்

"கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான அரசே மின் கட்டண உயர்வை வேறு வழியற்ற நிலையில் தான் அறிவித்திருக்கும் என்பது நமக்கு தெரியும். அத்துடன் நாம் விடும் அறிக்கை பூமராங் போல பல நேரங்களில் நம்மை நோக்கி திரும்பி விடக் கூடாது என்பதில் எச்சரிக்கை தேவை. திமுக கூட்டணி கட்சி ஆயிற்றே; இந்த மின் கட்டணம் உயர்வால் அந்தக் கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் பாலகிருஷ்ணன் இத்தகைய அறிக்கையை வெளியிட்டு இருக்கலாம். ஆனால் கழகத்திற்கும் அதன் தோழமை கட்சிகளுக்கும் இடையே சிண்டு முடிந்து வலிமைமிகு கூட்டணியை முறித்து விட சந்தர்ப்பம் கிடைக்காதா என நாக்கை தொங்கவிட்டு காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் என்பதை பாலகிருஷ்ணன் அறியாதவர் அல்ல," என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முரசொலியில் வெளிவந்த இந்தக் கட்டுரை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று (20 செப்டம்பர்) அந்நாளிதழின் தலையங்கம் 2024ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்க வலிமையான கூட்டணியை வலியுறுத்தியிருக்கிறது.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

"கூட்டாட்சியை இந்தியா முழுமைக்கும் உருவாக்குவது என்பது வலுவான கூட்டணிகளால்தான் முடியும் என்பதை பல ஆண்டுகளாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்திவருகிறார். தமிழகத்தில் அடைந்த வெற்றி என்பது உடன்பாட்டுச் சிந்தனைகள் கொண்ட கட்சிகள் கூட்டணி வைத்துச் செயல்படுவதன் மூலமாகத்தான். அதேபோல அகில இந்திய அளவிலும் அமைய வேண்டும் என்பதை சேலத்தில் நடந்த கூட்டத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியிருக்கிறார். இதனை அகில இந்தியக் கட்சிகள் அனைத்தும் உணர்ந்தாக வேண்டும்."

இந்த இரண்டு கட்டுரைகளையும் வைத்துப்பார்க்கும்போது, வலிமையான கூட்டணியை விரும்பும் தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் விமர்சனத்தை விரும்பவில்லையா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

தி.மு.க. கூட்டணியில் கூட்டணிக் கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கக்கூடாதா?

பட மூலாதாரம், Facebook/MKStalin

"கூட்டணிக் கட்சிகள், தங்களுக்கெனத் தனியாக கட்சி நடத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் மக்களுக்காக பேசுகிறார்கள். கூட்டணிக் கட்சியாக இருப்பதால்தான் அப்படிப் பேசுகிறார்கள். எதிர்க்கட்சிகளைப் போலப் பேசுவதாக இருந்தால், எடப்பாடி பழனிச்சாமியும் அண்ணாமலையும் சொல்வதைப்போல, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்று சொல்வார்களே... அப்படி ஏதும் பேசவில்லையே... காலை உணவுத் திட்டம் போன்ற நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தால் பாராட்டுகிறார்கள். மின்சாரக் கட்டணம் நடுத்தர மக்களையும் தொழில்துறையையும் பாதிக்கும் வகையில் இருப்பதால் அதனைச் சுட்டிக்காட்டுகிறார்கள். அதில் என்ன தவறு கூட்டணி வலுவாக இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எல்லா இடங்களிலும் பேசி வருகிறார். ஆனால், முரசொலியில் மாற்றுக் கருத்து வந்தாலே விமர்சிக்கிறார்கள். மலையாள மனோரமா விழாவில் பேசிய முதலமைச்சர், எதிர்க்கட்சிகளின் ஆக்கபூர்வமான விமர்சனங்களை எடுத்துக்கொள்வதாகவே பேசினார். ஆனால், முரசொலி அதற்கு முரண்பாடாக எழுதுகிறது. தி.மு.க. இப்படி நடந்துகொள்ளக்கூடாது" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.

ஆனால், முரசொலியில் வந்த கட்டுரை பாலகிருஷ்ணனுக்குக் கொடுக்கப்பட்ட பதில் அல்ல என்கிறார் தி.மு.கவின் செய்தித் தொடர்பாளரான கான்ஸ்டைன்டீன்.

சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு

"அது தோழர் பாலகிருஷ்ணன் மூலம் தேவையில்லாத விமர்சனங்களை முன் வைப்பவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பதில். அவருக்குக் கொடுக்கப்பட்ட பதில் அல்ல. மின் கட்டணத்தைப் பொறுத்தவரை, 100 யூனிட்டிற்குக் கீழே பயன்படுத்துவோர் 1.02 கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு சுத்தமாக கட்டணம் உயர்த்தப்படவில்லை. 100 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துவோர் 60 லட்சம் பேர். இவர்களுக்கான கட்டணம் 215 ரூபாய் அதிகரித்திருக்கிறது. 600-700 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வசதியானவர்களுக்குத்தான் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. உண்மையைச் சொல்லப்போனால், இந்த இக்கட்டான சூழலில் 100 யூனிட் மின்சாரத்தை இலவசமாகக் கொடுப்பதே கடினம். அதனைப் புரிந்துகொள்ள வேண்டும்.

இம்மாதிரியான பின்னணியில் உடனிருக்கும் கட்சிகளே இப்படி வார்த்தையை விட்டால், எதிர்கட்சிகள் அதைப் பற்றிக் கேட்பார்கள். "உங்க தோழமை கட்சியே சொல்லுது, பதில் சொல்லுங்க" என்பார்கள். யாருக்கு பதில் சொல்வது? களத்தில் எதிரி அ.தி.மு.கவும் பா.ஜ.கவும்தான். பா.ஜ.க. கட்டண உயர்வு பற்றி கேள்வியெழுப்பினால், குஜராத்தில் என்ன மின்கட்டணம், அங்கே இருப்பதைவிட இங்கே குறைவு எனப் பதில் சொல்லலாம். அ.தி.மு.க. கேள்வி எழுப்பினால், 2018ல் நீங்களும் கட்டணத்தை உயர்த்த முயற்சித்து, தேர்தலை முன்னிட்டுத்தானே உயர்த்தாமல் விட்டீர்கள் என்று கேட்கலாம். ஆனால், கூட்டணிக் கட்சிகளே கேள்வியெழுப்பினால் என்ன செய்வது. ஆனால், பாலகிருஷ்ணனுக்குப் பதில் சொல்வதன் மூலம் எதிரிகளுக்கு பதில் சொல்லியிருக்கோம்" என விளக்கமளிக்கிறார் கான்ஸ்டைன்டீன்.

முரசொலியில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி

பட மூலாதாரம், Murasoli

படக்குறிப்பு, முரசொலியில் வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதி

அப்படியானால், தி.மு.கவின் கூட்டணிக் கட்சிகள், அரசின் செயல்பாடுகள் குறித்து எவ்வித விமர்சனத்தையும் செய்யக்கூடாது என தி.மு.க. எதிர்பார்க்கிறதா? எனக் கேட்போது, "100க்கு 200 சதவீதம் விமர்சனம் வைக்கலாம். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் வி.சி.க., சி.பி.எம்., காங்கிரஸ் போன்றவர்கள் விமர்சனங்களை முன்வைத்தார்களே, அதற்கு நாங்கள் ஏதும் சொல்லவில்லை. விமர்சனங்களை முன்வைக்கும் நண்பர்களே உறுதியானவர்கள் என்பதில் தெளிவாக இருக்கிறோம்" என்கிறார் கான்ஸ்டைன்டீன்.

சி.பி.எம்மைப் பொறுத்தவரை, முரசொலியில் வெளிவந்த கட்டுரை, தங்களுக்கிடையிலான உரையாடலின் ஒரு பகுதி என்கிறது.

"தி.மு.கவைப் பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளின் எல்லா விமர்சனங்களையும் எதிராக பார்ப்பதாக நான் நினைக்கவில்லை. உதாரணமாக கள்ளக்குறிச்சி விவகாரத்தை எடுத்துக்கொண்டால், மூன்று மாவட்டங்களையும் ஒன்றாகத் திரட்டி போராடினோம். அதற்கடுத்து முதலமைச்சரைச் சந்தித்தபோது, அந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதாக சொன்னார். அதேபோல கே.பி. பார்க் குடியிருப்பு விவகாரம். அதனை மாநில அரசு, மத்திய அரசு, உலக வங்கி ஆகியவை இணைந்து செயல்படுத்துகின்றன. உரிய கட்டணத்தைச் செலுத்தினால்தான் குடியேற முடியும் என அதிகாரிகள் கூறிவந்தனர். ஆனால், நாங்கள் விடாமல் சண்டை போட்டோம். துவக்கத்தில் அதிகாரிகள் உறுதியாக இருந்தார்கள். பிறகு இறங்கி வந்தார்கள். அதேபோல, கூவம் நதிக் கரையோரம் குடியிருந்தவர்களை அகற்றி பெரும்பாக்கத்தில் குடியமர்த்தினார்கள். நாங்கள் தொடர்ந்து போராடியதில் 178 பேருக்கு நகருக்குள்ளேயே இடம் கிடைத்தது.

தி.மு.க. கூட்டணியில் கூட்டணிக் கட்சிகள் விமர்சனங்களை முன்வைக்கக்கூடாதா?

பட மூலாதாரம், Getty Images

போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்த பிரச்சனையில் சி.பி.எம்மின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு. கையெழுத்திடவில்லை. தி.மு.கவின் தொழிற்சங்கமான தொ.மு.சவுக்கும் இதில் ஏற்பில்லை என்றாலும், முதலமைச்சர் சொல்வதற்காக அதில் கையெழுத்திடுவதாகச் சொன்னார்கள். மலையாள மனோரமா நிகழ்ச்சியில் சி.பி.எம்., தீக்கதிர் ஆகியவவை முன்வைக்கும் விமர்சனங்களை கவனிக்கிறோம் என முதல்வர் பேசியிருக்கிறார். இரு கட்சிகளுக்கும் இடையில் அம்மாதிரியான ஒரு உறவுதான் இருக்கிறது. மின்கட்டண விவகாரத்தைப் பொறுத்தவரை ஆளும் கட்சிக்கு கடுமையான நெருக்கடி இருக்கிறது. ஆகவே இதுபோன்ற கட்டுரைகள் வெளியாகின்றன. இதை நாங்கள் ஒரு உரையாடலாகப் பார்க்கிறோம். இது தொடரும்" என்கிறார் சி.பி.எம்மின் மாநிலக் குழு உறுப்பினரான கனகராஜ்.

ஆனால், தமிழ்நாட்டில் மோதி எதிர்ப்பில் உருவாகியிருக்கும் கூட்டணி தி.மு.கவிற்கு வசதியாக இருப்பதாகச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "கூட்டணிக் கட்சியென்றால், ஆளும் கட்சி எப்படிச் செயல்பட வேண்டுமெனச் சொல்வார்கள். இத்தனைக்கும் பல மாவட்டங்களில் கனிம வளக் கொள்ளை நடக்கிறது. கூட்டணிக் கட்சிகள் எதுவும் இதைப் பற்றிப் பேசுவதேயில்லை. காரணம், எல்லோரும் மோடி எதிர்ப்பில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இது தி.மு.கவிற்கு வசதியாகப் போய்விட்டது" என்கிறார் குபேந்திரன்.

2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் இதே கூட்டணியை அப்படியே தொடர விரும்புகிறது தி.மு.க. ஆனால், கடந்த தேர்தலில் கொடுத்த அளவுக்கு இடங்களைப் பகிர்ந்தளிக்க விரும்பாது என்பது நிச்சயம். இந்தப் பின்னணியில், இதுபோன்ற 'உரையாடல்கள்' வரும் நாட்களிலும் தொடரக்கூடும்.

Banner
YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: