பெரியார் சிலை சர்ச்சை: 'ஒரு செங்கல் கூட வைக்க முடியாது' - இந்து அமைப்புகள் எதிர்ப்பது ஏன்?

பெரியார்

பட மூலாதாரம், DHILEEPAN RAMAKRISHNAN

படக்குறிப்பு, பெரியார்
    • எழுதியவர், ஆர்.அருண் குமார்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பெரியார் சிலை வைக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், கோவில் முன்பு சிலையை வைக்கக் கூடாது என்றும், இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளது.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என திருச்சி ஸ்ரீரங்கம் போற்றப்படுகிறது.

இப்படி பல பெருமைகளைக் கொண்ட ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு 'கடவுள் இல்லை' என்ற வாசகங்கள் எழுதப்பட்ட வெண்கலத்திலான பெரியார் சிலை உள்ளது.

இந்நிலையில் ஸ்ரீரங்கத்தில் கடவுளே இல்லை என்று சொன்னவரின் சிலை எப்போது உடைக்கபடுகிறதோ, அப்போது தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும் என்று சினிமா சண்டை பயிற்சியாளர் கனல்கண்ணன் பேசியது சர்ச்சையானது.

கனல் கண்ணன் பேச்சிற்கு திரைத்துறையினர் உட்பட எதிர்ப்பும் ஆதரவும் பெருகியது.

இதைத் தொடர்ந்து பெரியார் சிலை குறித்து அவதூறாகப் பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை கடந்த 15ஆம் தேதி புதுச்சேரியில் காவல்துறையினர் கைது செய்தனர். அவரின் கைதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சர்ச்சை ஓய்வதற்குள், திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பெரியார் சிலை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சியில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சிறப்பு கிராம சபைக் கூட்டம் அருள் மிகு தாருகாவனேஸ்வர் கோவில் நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையைச் சேர்ந்த பிரவீன் என்பவரின் கோரிக்கையை ஏற்று, திருப்பராய்த்துறை ஊராட்சியில் பெரியார் சிலை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதையறிந்த பாஜகவினர் கோவில் முன்பு பெரியார் சிலையை வைப்பது தேவையற்ற சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரித்துள்ளனர்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய திருப்பராய்த்துறை ஊராட்சி மன்றத் தலைவர் பிரகாச மூர்த்தி, "பொதுவாக கிராம சபைக் கூட்டங்களில் அளிக்கப்படும் மனுக்களை நிராகரிக்காமல் பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்புவது தான் எங்களது கடமை. அதேபோலத் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதியன்று சுதந்திர தினத்தை ஒட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் 'திராவிட இயக்க தமிழர் பேரவை' திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரவீன் என்பவர் 'திருப்பராய்த்துறை கடை வீதியில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்' என்று கோரிக்கை விடுத்து மனு அளித்தார்," என்று கூறினார்.

திருப்பராய்த்துறை

"தற்போது பெரியார் சிலை என்பதால் அனைவரும் பதற்றம் அடைந்துள்ளனர். பொது இடங்களில் புதிதாக சிலை அமைப்பது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தடை ஆணை உள்ளது. அதுமட்டுமின்றி திருப்பராய்த்துறையில் ஊராட்சிக்குச் சொந்தமாக பொது இடம் என்று கிடையாது." என்று அவர் மேலும் கூறினார்.

"சிலை வைப்பது தொடர்பான மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர் தான் முடிவெடுக்க முடியும். ஒருவேளை மாவட்ட ஆட்சியர் சிலை வைப்பது குறித்து பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டால், சிலை அமைப்பது தொடர்பாக இடத் தேர்வு, செலவுகள், நீதிமன்ற ஆணை மற்றும் வழக்கு உள்ளிட்டவற்றை சிலை அமைக்கக் கோரும் அமைப்பினர் தான் ஏற்க வேண்டும். திருப்பராய்த்துறை கோவிலின் முன்போ அல்லது உள்ளேயோ சிலை அமைக்க வேண்டும் என எங்கேயும் குறிப்பிடவில்லை. சுய விளம்பரத்திற்காகச் சிலர் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்," என்று கூறினார்.

"ஸ்ரீரங்கத்தில் கூட பெரியார் சிலை காவல் நிலையம் அருகில் தான் உள்ளது. ஆனால் சங் பரிவார் அமைப்பினர் வேண்டுமென்றே கோவில் அருகே சிலை இருப்பது போல் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். அதேபோலத் தான் இங்கேயும் நடக்கிறது. வேறு அமைப்பினர் வந்து சாவர்க்கர் சிலை அமைக்க வேண்டும் என்று மனு அளித்தால் அந்த மனுவையும் கூட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்புவேன். அதைத் தொடர்ந்து அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் முடிவைப் பொருத்தது," எனத் தெரிவித்தார்.

திருப்பராய்த்துறை

பெரியார் சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்திருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் திருச்சி மாநகர இணை செயலாளரும் முன்னாள் மத்திய மந்திரி ரங்கராஜன் குமாரமங்கலத்தின் தனி உதவிச் செயலாளருமாக இருந்த அ.இளங்குமார் சம்பத் பேசுகையில், "பெண்ணுரிமைக்கு பெரியார் உதவியதாக இன்னும் எவ்வளவு நாள் தான் பொய் சொல்லப் போகிறார்கள்." என்று கேட்டார்.

"எந்த ஊரிலும் பெரியார் சிலை இருக்கக் கூடாது எனக் கூறி வருகிறோம். புதிதாக சிலை வருவதற்கு வாய்ப்பு இல்லை. வரவும் விடமாட்டோம். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அனைத்திலும் திராவிட மாடல் ஆட்சி எனக் கூறுவது பழக்கமாகிவிட்டது. சுதந்திரம் வேண்டாம், தமிழன் காட்டுமிராண்டி அவருக்கு சிலை வைக்க வேண்டும் எனக் கூறுவது முட்டாள்தனம்." என்றார்.

"கனல் கண்ணன் கூறியதில் தப்பே இல்லை, கூடிய விரைவில் சிலை எடுக்கப்படும். திமுகவினருக்கு சிலை இங்கிருப்பது பிடிக்கவில்லை. கருணாநிதி கூறியது என்பதால் தான் வேண்டா வெறுப்பாகச் சிலையை வைத்தனர். அவர்களே ஆளை வைத்து எடுத்தால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை என்பது எனது அனுமானம்." என்று அவர் மேலும் தெரிவித்தார்.

திருப்பராய்த்துறை

"தமிழகத்தில் புதிதாக பெரியாருக்கு சிலைகள் அமைக்க ஒரு செங்கல் கூட வைக்க முடியாது. அப்படி வைத்தால் மக்களே உடைப்பார்கள். பஞ்சாயத்து தலைவர் பதவி என்றால் என்ன? ஊரில் அடிப்படை வசதிகள் முறையாக கிடைக்கிறதா என்பதைக் கவனிப்பதா அல்லது யாரோ சிலை வைக்க வேண்டும் என்று மனு கொடுத்தால் அதைப் பெற்றுக் கொண்டு பரிசீலனைக்கு அனுப்புவதா? பெரியாரின் சிலை குறித்து மனுவைப் பெற்றுக்கொண்டு பரிசீலனைக்கு அனுப்புவது வேடிக்கையாக உள்ளது." என்றார் அவர்.

காணொளிக் குறிப்பு, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்: எதிர்கொண்ட சர்ச்சைகளும் பதில்களும்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: