பெரியார் சிலை சேதம்: கூகுள் மேப்பை பார்த்து ஓட்டியதால் பெரியார் சிலை மீது லாரி மோதியது

சிலை

விழுப்புரம் அருகே கூகுள் மேப்பை பார்த்து ஓட்டுநர் இயக்கிய போது வழிதவறி தவறான பாதையில் சென்ற கனரக வாகனம் பெரியார் சிலையின் மீது மோதி முழுவதுமாக சேதமடைந்தது. சிலையை சேதப்படுத்திய வாகன ஓட்டுநரைக் கைது செய்துள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான காமராஜர் சாலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பெரியாரின் சிலை நிறுவப்பட்டது. பெரியாரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.

இந்தநிலையில் இரவு புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து டயர்களை ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிரம் மாநிலம் புனே நோக்கிச் சென்ற கனரக லாரி வழி மாறி காமராஜர் சாலை வழியில் சென்றுள்ளது. வழி தவறி வந்ததை உணர்ந்த ஓட்டுநர் லாரியை திருப்ப முயன்றுள்ளார். அப்போது நீண்ட கனரக லாரி என்பதால் அந்த குறுகிய சாலையில் லாரியை திருப்பும் போது அங்கிருந்த பெரியார் சிலை மீது மோதியது. இதில் தந்தை பெரியாரின் முழு உருவ சிலை உடைந்து கீழே விழுந்தது, முழுவதுமாக சேதமடைந்து.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அப்பகுதியில் மேற்கொண்டு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பில் போடப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்த லாரியை காவல்நிலையம் எடுத்து சென்றனர். மேலும் லாரி ஓட்டுநர் மச்சேந்திர ஷ்பலி என்பவரை கைது செய்துள்ளனர்.

பெரியாரின் சிலை சேதமடைந்ததை அறிந்த திமுக மற்றும் திகவினர் சிலையை இடித்தவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து விழுப்புரம் நகர காவல்நிலையத்தின் முன்பு அமர்ந்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நான்குமுனை சந்திப்பிலும் மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

லாரி

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பெரியாரின் சிலை லாரி மோதி சேதமடைந்த சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் நகர காவல் நிலையத்தை தொடர் கொண்டு பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது. அப்போது பதிலளித்த காவலர் தரப்பு, "நேற்று இரவு சுமார் 11 மணியளவில் கனரக வாகன ஓட்டுநர் கூகுள் மேப்பில் வழியை ஆராய்ந்து கொண்டே தவறான வழியில் வந்துவிட்டார்.

நீண்ட கனரக வாகனம் என்பதால் குறுகிய சாலையில் திரும்பும்போது, வாகனத்தின் பின்புறம் தடுத்துள்ளது. இதில் பெரியார் சிலை முழுவதுமாக சேதமடைந்தது. பெரியார் சிலையை சேதப்படுத்தியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்து கை செய்யப்பட்டுள்ளார்," எனத் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: