கர்நாடகாவில் 16 தலித்துகளை பூட்டி வைத்து சித்ரவதை - கர்ப்பிணிக்கு கருச்சிதைவு

பட மூலாதாரம், NDTV
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 16 தொழிலாளர்களை ஒரு வீட்டு அறையில் 15 நாட்களாக அடைத்து வைத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் அவர்கள் பணியாற்றும் காபி தோட்ட ஆலையின் உரிமையாளர்.
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ஜெகதீஷா கெளடா, அவரது மகன் திலக் கெளடா ஆகியோர் இரண்டு மாத கர்ப்பிணி உட்பட தலித்துகளை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இது பற்றிய தகவல் வெளியான பிறகு சம்பந்தப்பட்ட இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உள்ளூர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின்படி ஜெகதீஷா கெளடா, தமது ஜென்னுகடே கிராமத்தில் உள்ள கெளடா தோட்டத்தில் தலித்துகளை தினக்கூலிகளாக பணியமர்த்தியுள்ளார். இந்த தொழிலாளர்கள் ஜெகதீஷா தரப்பிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
அந்த பணத்தை கெளடா தரப்பு திருப்பிக் கேட்டபோது இரு தரப்புக்கும் இடையே சுமூகமற்ற சூழல் நிலவியதாக கூறப்படுகிறது.
இது குறித்து உள்ளூர் போலீஸ் அதிகாரி கூறுகையில், "அக்டோபர் 8ஆம் தேதி, சிலர் தங்கள் உறவினர்களை ஜெகதீஷ் கவுடா சித்ரவதை செய்வதாகக் கூறி, பலேஹொன்னூர் காவல் நிலையத்துக்கு வந்தனர். ஆனால் அன்றைய தினமே, அவர்கள் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டனர், "என்று தெரிவித்தார்.
இருப்பினும் போலீஸார் கெளடாவின் இடத்தை அடைந்தபோது அங்குள்ள அறையில் பலர் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்ததை கண்டனர் என்று என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
"கடந்த 15 நாட்களாக தொழிலாளர்கள் அந்த வீட்டின் அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். 16 உறுப்பினர்களை கொண்ட நான்கு குடும்பங்கள் அங்கு இருந்தனர். அனைவரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள்," என்று போலீஸ் அதிகாரி கூறினார்.
அக்டோபர் 9 ஆம் தேதி, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அர்பிதா, கர்ப்பமாக இருந்தார். போலீஸ் உதவியுடன் மீட்கப்பட்ட அவர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தானும் தனது கணவரும் கெளடா குடும்பத்தாரால் தாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக அப்ரிதா கூறினார். அவரது வயிற்றில் இருந்த சிசு கருவிலேயே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நடந்த சம்பவம் தொடர்பாக சிக்கமகளூரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா பிரசாந்திடம் பேசினோம். அப்போது அவர், புகார் வந்த உடனேயே கெளடாவின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அங்கு 8-10 பேர் வீட்டு அறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். அந்த வீட்டு உரிமையாளரிடம் கேள்வி எழுப்பிய பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்," என்று தெரிவித்தார்.
பாஜக பிரமுகரா?
இதற்கிடையே, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெகதீஷா பாஜகவைச் சேர்ந்தவர் என்று தகவல் பரவியது. ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மாவட்ட செய்தித் தொடர்பாளர் வரசித்தி வேணுகோபால் கூறுகையில், கெளடா பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல என்றும் அவர் வெறும் ஆதரவாளர் மட்டுமே என்றும் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













