பள்ளி சீருடையில் திருமணம் செய்த மாணவ, மாணவி மீது வழக்கு - வைரலாகும் காணொளி

குழந்தை திருமணம்

பட மூலாதாரம், AFP

    • எழுதியவர், நடராஜன் சுந்தர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

பள்ளி சீருடையில் மாணவிக்கு மாணவன் தாலி கட்டி திருமணம் செய்து கொள்வது போன்ற காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவி மீது குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அந்த மாணவன் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவர் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பேருந்து நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருந்த மாணவிக்கு, மாணவன் ஒருவர் தாலி கட்டுவது போன்று காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.

இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி மாலையில் நடந்ததாக தெரிய வந்தது. மேலும், 17 வயதாகும் தாலி கட்டிய மாணவி 12ஆம் வகுப்பு படித்து வருவதும் தாலி கட்டிய 18 வயது மாணவன் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், தாலி கட்டிக் கொண்ட இருவர் மீதும் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கடலூர் மாவட்ட சமூக நலத்துறையினர் புகார் அளித்தனர். இதையடுத்து இருவரிடமும் மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் விசாரணை நடத்தினர். அதன் முடிவில் மாணவியை குழந்தைகள் நல காப்பகத்துக்கும் மாணவனை சிறார் கூர்நோக்கு இல்லத்துக்கும் அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.

போலீஸ் என்ன சொல்கிறது?

குழந்தை திருமணம்
படக்குறிப்பு, சக்தி கணேசன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

இந்த விவகாரம் தொடர்பாகக் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் பிபிசி தமிழ் பேசியது. அப்போது அவர், "மாவட்ட சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நலக் குழுவினர் முழுமையாக விசாரணை செய்தனர். இந்த விஷயத்தில் இருவரும் விளையாட்டுத் தனமாக ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனாலும், இது தவறானது. ஆகவே இவர்கள் மீது குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது," என்று கூறினார்.

இந்த நிலையில், சிறார்கள் தாலி கட்டிக் கொண்ட காணொலியை சமூக ஊடகத்தில் பகிர்ந்த பாலாஜி கணேஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாணவி தாலி கட்டிக் கொள்ளும் காணொளியை பகிர்ந்தது குறித்து அவரது பெற்றோர் சம்பந்தப்பட்ட நபரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.‌ இந்த விவகாரத்தில் தங்களை அந்த நபர் அவதூறாகத் திட்டியதாக பெற்றோர் காவல் துறையிடம் புகார் அளித்தனர்.

2px presentational grey line
2px presentational grey line

அதன் பேரில் பாலாஜி கணேஷ் மீது சிறுவர்களின் புகைப்படத்தை சமூக ஊடகத்தில் அடையாளப்படுத்தியது மற்றும் சிறுமியை களங்கப்படுத்தியதாக சிறார் நீதிச் சட்டம், பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, "சிறுவர்கள் இருவரும் விளையாட்டாகத் திருமணம் செய்து கொண்டாலும், அது வெளியே குழந்தை திருமணமாகத் தான் கருதப்படும்," என்று இந்த வழக்கு தொடர்பாக புகார் கொடுத்திருக்கும் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி சித்ரா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"சம்பந்தப்பட்ட மாணவனும் மாணவியும் காதலித்துள்ளனர். மாணவிக்கு வயது 17, மாணவனுக்கு வயது 18. அதனால் இருவர் மீதும் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யும்படி புகார் அளித்தோம்," என்கிறார் சித்ரா.

பள்ளி சீருடை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இதற்கிடையே, கடலூரில் இதேபோன்ற மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. அதில் மாணவியிடம் அவரது அக்கா கணவர் தவறாக நடந்து கொண்டதாகவும் அதில் இருந்து தப்பிக்க தமது காதலனிடம் மாணவி தாலி கட்டிக் கொண்டு குங்குமம் வைப்பது போன்ற புகைப்படத்தை எடுத்துக் கொண்டுள்ளார். இந்த படமும் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து பேசிய சமூக நலத்துறை அதிகாரி சித்ரா, "சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து எச்சரித்து குழந்தைகள் நலக் குழு மூலமாக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. உடன் இருக்கும் நண்பர்கள் வழங்கிய தவறான யோசனைகலால்தான் இப்படி சிறார்கள் வரம்பு மீறி நடந்து கொள்கின்றனர்," என்று கூறினார்.

"சமூக ஊடகங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை ஒரு‌‌ ட்ரெண்ட் ஆகவே பார்க்கும் போக்கு உள்ளது. இதனால் ஏற்படும் பின்விளைவுகள் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவதில்லை. இதனால் பாதிக்கப்படும் மாணவியாலை சரியாக படிப்பைத் தொடர முடியாமல் போகலாம். இதற்கு மேல் வாழ்க்கை இல்லை என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விடவும் கூடும். சமூக வலைத்தளத்தில் தங்களைப் பற்றிய தகவல் பரவியதால் அதை எதிர்கொள்ளும் தைரியமும் அவர்களிடத்தில் இருக்காது. அவர்களுக்கு மறுவாழ்வு ஆலோசனைகள் வழங்கப்படும். அவர்களின் பெற்றோருக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும். பிறகு மாணவியை அவரது பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைப்போம்," என்கிறார் சித்ரா.

"தொடர்ச்சியாக விழிப்புணர்வுகள் கொடுத்தும் பலனில்லை"

குழந்தை திருமணம்

பட மூலாதாரம், ANI

இது போன்ற சம்பவங்கள் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஜெய்ஸ்ரீ வேலுச்சாமியிடம் பிபிசி தமிழ் பேசியது.

"இந்த காணொளியை எடுத்த நபர் உள்பட அனைவர்‌ மீதும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன். இது மிகவும் வரம்பு மீறிய செயலாகக் கருதப்படுகிறது. இதுவரை எங்கள் தரப்பில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளோம். போதை பழக்கம், கஞ்சா 2.0, போக்சோ உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக பல வடிவங்களில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் ஆசிரியர்கள் மத்தியில் மாணவிகள் மீதான பாலியல் சீண்டல் சம்பவங்கள், பள்ளி மாணவர்கள் திருமணம் செய்து கொள்ளும் விளையாட்டுப்போக்குஉள்ளிட்டவை அதிகரித்து வருகின்றன," என்று ஜெய்ஸ்ரீ தெரிவித்தார்.

ஒருகாலத்தில் இருந்த சாலையில் அடிப்பட்ட நபர்களைக் காப்பாற்றும் மனநிலை கடந்து, அதைக் கைபேசியில் வீடியோ எடுக்கும் மனநிலைக்கு சமூகம் மாறியுள்ளதாகவும் கூறினார் ஜெய்ஸ்ரீ.

"பாலியல் சீண்டலை வீடியோ எடுப்பதும், ஆசிரியர் தவறாக பேசினால் அதை மறைத்து மறைந்து வீடியோ எடுகும் போக்கும் காணப்படுகிறது. யாரும் நடக்கும் தவறுகளை உடனே அரசு கொடுத்துள்ள பல்வேறு இலவச உதவி எண்ணை அழைத்து தெரிவிக்க முன்வருவதில்லை.

இந்த வீடியோ எடுக்கும் கலாசாரத்தை வன்முறையாகக் கண்டிக்கிறேன். ஒருவரின் வன்முறையை ரசிப்பது, பிறரின் உடல் நெருக்கத்தை ரசிப்பது போன்ற மனநிலைகள் சமுதாய சீரழிவைக் காட்டுகின்றன. இதுபோன்ற சம்பவத்திற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் காலப்போக்கில் இதுவே ஒருவகை கலாசாரமாக மாறலாம்.

பள்ளி மற்றும் கல்லூரி பருவத்தில் நடக்கும் பதின்வயது திருமணம் என்பது அந்த சூழலுக்கு உகந்தது இல்லை என்ற புரிதலுடன் மாணவர்கள் இருந்தாலே போதுமானது," என்கிறார் ஜெய்ஸ்ரீ வேலுச்சாமி.

Banner
காணொளிக் குறிப்பு, கடற்கரையில் குகை அமைத்து வாழும் முதியவர், வெளியேற்றும் அரசு - ஏன்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: