சிவமூர்த்தி முருகா சரணகுரு - லிங்காயத்துக்கள் யார்? கர்நாடக அரசியலில் அவர்களின் பங்கு என்ன?

பட மூலாதாரம், Dr Shivmurthy Muruga sharanauguru
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி செய்திகளுக்காக
சிவமூர்த்தி முருகா சரணகுருவின் கைது லிங்காயத்துகள் மட்டுமன்றி அனைத்து சமூக மக்களிடையிலும் பெரும் அதிர்வலையைக் கிளப்பியுள்ளது. காரணம், வறியவர்களின் மீது கவனம் செலுத்தும் மடாதிபதியாக - ஒரு ட்ரெண்ட் செட்டராக - இருந்த ஒருவர், தற்போது, இரு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
மடாதிபதிகள், சாமியார் உள்ளிட்டோர் பாலியல் குற்றங்களில் கைதாவது புதிதல்ல என்றபோதும் இவரது விவகாரத்தில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என இரண்டுமே அமைதி காக்கிறது. யார் இவர்? கர்நாடக அரசியலில் இந்த நிகழ்வு அவ்வளவு கவனம் பெற காரணம் என்ன?
டாக்டர் சிவமூர்த்தி 17 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட லிங்காயத் மடங்களை ஆன்மிகப் பள்ளிகளாக மாற்றியதில் பிரபலமானவர். மத்திய கர்நாடகாவில் இருந்துகொண்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, குறிப்பாக லிங்காயத் மக்கள் அதிகமிருக்கும் வடக்குப் பகுதிகளுக்கு அதனை விரிவுபடுத்தி கிளைக்குழு மடங்களை உருவாக்கினார்.
இந்த ஆன்மிகப்பள்ளிகளில் இருந்து வெளிவரும் அனைவரும் வடக்கு கர்நாடகா மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள துணை மடங்களின் தொகுப்பில் வேலை செய்கிறார்கள். இப்படி, பயிற்சி பெற்ற சுவாமிகளை சிறிய மடங்களுக்கு அனுப்பும் இந்த முறைமையால், அவர்கள் தங்களை பின்பற்றுபவர்களை கட்டுப்படுத்தவும், அதன் மூலம் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளில் செல்வாக்கு செலுத்துபவர்களாக மாறவும் உதவுகிறது,'' என்கிறார் பெல்காவி ராணி சனம்மா பல்கலைகழகத்தின் அரசியல் அறிவியல் பேராசிரியரும் துறைத்தலைவருமான கமலாக்சி ஜி தாடபட்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மேலும் வாக்கு வங்கி விளையாட்டை எளிதாக விளையாடும் மாநிலத்தில், லிங்காயத் மடங்கள் இந்த அரசியலில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். குறிப்பாக, 2023 (சட்டமன்றம்) மற்றும் 2024 (மக்களவை) தேர்தல்களில், லிங்காயத் மடங்களுக்கு இடங்களை ஒதுக்குவதில் உத்தரப்பிரதேசத்தின் உதாரணத்தை கர்நாடகா பின்பற்றினால் நீங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை,'' என்றும் பேராசிரியர் தடாபட் கூறினார்.


அரசியலில் மடங்களின் பங்கு என்பது கர்நாடகாவுக்கு புதிதல்ல. மாநிலங்களின் மறுசீரமைப்புக்குப் பிறகு, மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய அரசியல் தலைவர்கள் மடங்களின் வளாகத்தில் கூட்டங்களை நடத்துவார்கள். பின்னர் அரசியல் கட்சிகள் மடத் தலைவர்களின் பேச்சைக் கேட்பது வழக்கம்,'' என்று பசவாவின் போதனைகள் நிபுணரான ரம்ஜான் தர்கா கூறுகிறார்.
லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகர்கள் ஆகிய உயர் சாதியினர் அல்லது ஆதிக்க சமூகங்கள் போட்டியிட்டு தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராக்கியது 50, 60களில் நடந்தது. சொல்லப்போனால், லிங்காயத்துகள் அனுபவித்த செல்வாக்குதான் வொக்கலிகர்களைக் கூட தங்கள் சொந்த மடம் அமைக்க வைத்தது. அதைத் தொடர்ந்து, ஓபிசி மற்றும் எஸ்சி பிரிவினரும் கூட தங்கள் சொந்த மடங்களை அமைத்துள்ளனர்.
இந்த நிலையில், மடம் நடத்தும் விடுதியில் தங்கிப்படிக்கும் இரு இளம் பருவ மாணவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட லிங்காயத் சமூகத்தின் முதல் பெரிய தலைவர் டாக்டர் சிவமூர்த்தி முருகாதான். கடந்த வியாழன் (செப் 1) இரவு அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், கோவிட்-க்குப் பிறகு அவருக்கு நெஞ்சு வலி மற்றும் ஒவ்வாமை ஏற்பட்டதாக கூறப்பட்டதால், விமானத்தில் பெங்களூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அத்துடன், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தை மீறியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Dr. Shivamurthy Murugha Sharanaru/Facebook

பட மூலாதாரம், AFP
எப்படி மக்கள் செல்வாக்கைப் பெற்றன இந்த மடங்கள்?
- "அவர் செய்த முதல் காரியங்களில் ஒன்று (அது சமூகத்தில் புரட்சிகரமானதாகக் கருதப்பட்டது) அவர் தன்னை ஜகத்குரு அல்லது உயர்ந்த இறைத்தூதர் என்று அழைக்கவில்லை. மாறாக, அவர் தன்னை ஷரணகுரு என்று அழைக்க விரும்பினார், அதாவது நான் கடவுளின் அடிமை. அல்லது, நான் எல்லோருக்கும் முன்பாக தலைவணங்குகிறேன் என்றார்.
- மேலும் அவர் பசவாவின் தத்துவத்தை நடைமுறை அடிப்படையில் பின்பற்றி அதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தினார். வெறும் பௌதீக கட்டமைப்பு அல்லது அடைமொழிகளை உருவாக்கவில்லை,'' என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத மாநில அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர்.
- அதுபோக, இல்லாத வறியவர்களுக்கு திருமணங்கள் நடத்தி வைத்ததும் இன்ன பிற சமூக நிகழ்வுகளும் அவரை செல்வாக்கு மிக்கவராக மாற்றியது. அத்துடன் அவர் நம்பிக்கையுள்ள ஆதரவாளர்களையும் கொண்டிருந்தார்.
- வாழ்க்கையின் பல்வேறு தரப்பு மக்களுக்கு விருது வழங்கும் நடைமுறையை அவர் தொடங்கினார், அது மக்களிடையே பிரபலமான செயல்களில் ஒன்றாக உள்ளது. அவர் பசவண்ணாவின் தசோஹக் கருத்தைப் பின்பற்றினார், குறிப்பாக சிக்ஷனா தாசோஹா,'' என்று இந்த அதிகாரி கூறினார். முருகா மடம் கர்நாடகாவில் 150 ஆன்மீக மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது.

பட மூலாதாரம், Dr. Shivamurthy Murugha Sharanaru
- அதிக எண்ணிக்கையிலான கல்வி நிறுவனங்களை நடத்துவது லிங்காயத் சமூகத்தின் பண்புகளில் ஒன்றாகும். கிறிஸ்தவ நிறுவனங்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் கான்வென்ட்களை நடத்தினால், லிங்காயத் மடங்கள் "சமீபத்திய தசாப்தங்களில் நகர்ப்புறங்களுக்குச் செல்வதற்கு முன், கர்நாடகாவின் கிராமப்புறங்களில் கான்வென்ட்களை நடத்துவதாக" சொல்லப்படுகிறது.
- லிங்காயத்து மடங்கள் ஒவ்வொன்றும் சமூக மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் செயல்முறையைத் தொடங்கின. இதன் விளைவாக பெரும்பான்மையான மக்கள் அந்தந்த மடங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ளனர்.
- ஒருவர் உணவுடன் கூடிய கல்வியை வழங்குவதில் பிரபலமடைந்தார் என்றால், மற்றொருவர் கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் மற்றும் விலங்குகள் நலனில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார். மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல் ஆகியவற்றுக்கு எதிராக பிரசாரம் செய்யும் மடங்கள் ஒருபுறம் என்றால், சமூகப்பிரச்னைகளில் கவனம் செலுத்தும் மடங்கள் மறுபுறம்.
- இப்படியாக, "கல்வியும் சமூக விடுதலையும் அதிகமான மக்களை மடங்களில் இணைத்து, செல்வாக்கைப் பெற்றன. இப்படித்தான் அவர்கள் அரசியல் செல்வாக்கில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள்,'' என்று பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு அதிகாரி கூறினார்.
- பிற லிங்காயத் மடங்களின் தலைவர்களிடமிருந்து டாக்டர் சிவமூர்த்தி வேறுபடுகிறார். லிங்காயத்தை ஒரு மதமாக அறிவிக்கக் கோரி, அப்போதைய முதல்வர் சித்தராமையாவிடம், கோரிக்கை வைத்த லிங்காயத்துகளின் பிரதிநிதிகள் குழுவை ஆதரித்த முதல் சுவாமிஜிக்களில் இவரும் ஒருவர்.

பட மூலாதாரம், AFP

பட மூலாதாரம், Getty Images
ஆனால், வேத சடங்குகளைப் பின்பற்றும் வீரசைவ லிங்காயத்துகள் அதைக் கடுமையாக எதிர்த்தனர். இந்த நிலையில்தான், 2018ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு காரணம், லிங்காயத்தை தனி மதமாக முன்மொழிந்த சித்தராமையாவின் நடவடிக்கையே என்று அரசியல்களத்தில் வாத விவாதங்கள் சூடு பிடித்தன.
இன்று அந்த கசப்பான அனுபவம்தான் காங்கிரஸ் தலைவர்களை வாயடைக்க வைத்துள்ளது. 1984 ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி பெங்களூரு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ``நான்கு நாட்களில் புதிய முதல்வர் பதவிக்கு வருவார்'' என்று கூறினார். அதன்படி, பக்கவாதத்தால் அவதிப்பட்டு வந்த முதல்வர் வீரேந்திர பாட்டீலை பதவி நீக்கம் செய்தார். அன்றிலிருந்து லிங்காயத்துகளின் முழு ஆதரவையும் காங்கிரஸ் பெறமுடியவில்லை. எனினும், கட்சியில் சில லிங்காயத்துகள் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து கேட்டபோது, என் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் ஒரு மூத்த காங்கிரஸ் தலைவர் பிபிசியிடம் பேசினார்: "சட்டம் தன் கடமையைச் செய்யட்டும் என்று சொல்வது கடினமல்ல. ஏனெனில் அது அப்படியேதான் இருக்கிறது. ஆனால், இந்த வழக்கில் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக எங்கள் இதயம் சென்றாலும், நாங்கள் ஒரு இந்து விரோத கட்சி என்பது போல தவறாகப் புரிந்து கொள்ளப்படுவோம்'' என்றார்.
"வேறு ஏதாவது சொன்னால், முஸ்லிம் ஆதரவுக் கட்சி என்று அழைக்கப்படும் ஒரு விசித்திரமான சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம். ஆனால் இதே கருத்தை வேறு கட்சித் தலைவர் சொன்னால், அவரை யாரும் அப்படி அழைப்பதில்லை. மீடியாக்களால் சித்தரிக்கப்படுவது போல நாங்கள் வில்லன்களாகிவிட்டோம்'' என்கிறார் மற்றொரு காங்கிரஸ் தலைவர்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த இரண்டு நாட்களாக, எந்த பாஜக தலைவரும் மதகுருவுக்கு ஆதரவாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. மாநிலத்திலுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளில், 108-ல் கணிசமான வாக்குப் பங்கைப் பெற்றுள்ள பெரிய சாதிக்குழுவை (லிங்காயத்) புண்படுத்தும் வகையில், அரசியல் கட்சிகள் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்பது தெளிவாகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக, கர்நாடகா இதுவரை அதிகமான லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த முதல்வர்களையே கண்டுள்ளது. 23இல் 10 பேர் லிங்காயத்துகள், ஆறு பேர் வொக்கலிகா சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஐந்து பேர் ஓபிசி மற்றும் இரண்டு பேர் பிராமணர்கள்.
1984ல் வீரேந்திர பாட்டீல் நீக்கப்பட்டதில் இருந்து லிங்காயத் சமூகம் காங்கிரஸுக்கு அதிக அளவில் வாக்களிக்காதது போல, 2013 தேர்தலில் பி.எஸ். எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து கட்சி நீக்கியதால் பாஜகவின் தோல்வியையும் அக்கட்சி உறுதி செய்தது.
பின்னர் எடியூரப்பா கர்நாடக ஜனதா பக்ஷாவைத் தொடங்கினார் மற்றும் குறிப்பிடத்தக்க வகையில் 12 சதவீத வாக்குகளைப் பெற்று பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார்.
இந்தக் காரணங்களால்தான், எடியூரப்பாவை ஓரம் கட்டிய பாஜக, பின்னர் திடீரென அவரை நாடாளுமன்றக் குழு உறுப்பினராக மட்டுமின்றி, கட்சியின் மத்தியத் தேர்தல் குழு உறுப்பினராகவும் ஆக்கியுள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












