கருப்பைவாய் புற்றுநோய்க்கு இந்திய தடுப்பு மருந்து: விலை ரூ.400

கருப்பை வாய்

பட மூலாதாரம், BSIP/Getty Images

படக்குறிப்பு, முக்கோணமிடப்பட்டுள்ள பகுதிதான் கருப்பை வாய். அதன் அடிப்பகுதியில்தான் இந்த வகைப் புற்றுநோய் ஏற்படும்.

செர்விகல் கேன்சர் என்று கூறப்படும் கருப்பை வாய்ப் புற்று நோய்க்கு ஏற்கெனவே தடுப்பூசிகள் இருந்தாலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் தடுப்பு மருந்தான 'செர்வாவேக்' ரூ.200 முதல் ரூ.400 விலைக்குள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் வியாழக்கிழமை இந்தத் தகவலை தெரிவித்தார்.

200 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்ய திட்டம்

  • குவாட்ரிவேலன்ட் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் வேக்சின் (quadrivalent human papillomavirus (qHPV) vaccine) என்று இந்த தடுப்பு மருந்து அறியப்படுகிறது. குவாட்ரிவேலன்ட் தடுப்பு மருந்து என்பது, நான்கு விதமான வைரஸ் அல்லது வேறு வகை நோய் நுண்மிகளுக்கு எதிராக உடலில் எதிர்ப்பாற்றலை உருவாக்கக்கூடியது. ஹ்யூமன் பாப்பிலோமா வைரசின் சில குறிப்பிட்ட வகைகள் பெண்களுக்கு கருப்பை வாய்ப்புற்று நோயை உருவாக்க வல்லவை. பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசிகள் 90 சதவீதம் வரை கருப்பை வாய்ப் புற்று நோயைத் தடுக்கக்கூடியவை என்பது முன்பே கண்டறியப்பட்டுள்ளது. செர்வாவேக் என்று பெயரிடப்பட்டுள்ள புதிய தடுப்பூசி முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டதாகும்.
சிவப்புக் கோடு
சிவப்புக் கோடு
  • இந்த மருந்தை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் அதர் பூனவாலா, "கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து இன்னும் சில மாதங்களில் அனைவருக்கும் கிடைக்கும். அதன் விலை 200 ரூபாய் முதல் 400 ரூபாய்க்குள் இருக்கலாம், தயாரிப்புகள் முடிந்ததும் அரசுடன் கலந்து பேசி விலை இறுதி செய்யப்படும். விலையை விரைவில் அறிவிப்போம்," என்று ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
  • இப்போது இந்தியாவில் கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து சராசரியாக 2,000 ரூபாய் முதல் 3,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்படும் சீரம் நிறுவனத்தின் இந்தப் புதிய தடுப்பு மருந்தின் விலை, இதை ஒப்பிடும்போது 10 மடங்கு குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • "கருப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பு மருந்து முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை," என்று செர்வாவேக் தடுப்பு மருந்து அறிவிப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கெடுத்த மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
  • அடுத்த இரண்டு ஆண்டுகளில் செர்வாவேக் தடுப்பு மருந்தின் 200 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்யத் தயாராகி வருவதாக பூனவாலா தெரிவித்துள்ளார்.
X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

கருப்பை வாய் புற்றுநோய் அபாயத்தில் இருக்கும் இந்திய பெண்கள்

  • இந்தியாவிலேயே அதிகம் பேரை பாதிக்கக்கூடிய புற்றுநோய்களில் இரண்டாவது இடத்தில் கருப்பை வாய்ப் புற்றுநோய் இருப்பதாகவும் கருப்பை வாய்ப் புற்றுநோய் குணப்படுத்தக் கூடியதாக இருந்துமே இதனால் ஏற்படும் உயிரிழப்புகளில் உலகளவில் நான்கில் ஒரு பங்கு இந்தியாவில் நிகழ்வதாகவும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
  • இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும் 1.25 லட்சம் பெண்கள் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள், 75,000 பேர் உயிரிழக்கிறார்கள். எச்.பி.வி 16, 18 ஆகியவை 83% அதிகமாகப் பாதிக்கக்கூடிய கருப்பை வாய்ப் புற்றுநோய்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பின் அளவு உலகளவில் 70 சதவீதமாக உள்ளது.
  • கருப்பை வாய்ப் புற்றுநோய், கருப்பையின் வாய் பகுதியில் ஏற்படும். அது முற்றிய நிலைக்கு வரும் வரை அதன் அறிகுறிகள் வெளியே தெரியாமல் இருக்கும். ஹ்யூமன் பாப்பிலோமா வைரஸின் நோய்த்தொற்று கருப்பை வாய்ப் புற்றுநோயில் 90 சதவீதத்திற்குக் காரணமாக உள்ளது. இந்தப் புற்றுநோய் எளிதில் பாதிப்பதற்கு, குறைவான நோய் எதிர்ப்பாற்றலும் ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.
  • இந்தியாவில் 15 வயதுக்கு மேற்பட்ட 483.5 மில்லியன் பெண்கள், கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படக்கூடிய அபாயத்தில் உள்ளதாக எச்பிவி தகவல் மையத்தின் (HPV Information centre) இந்தியா குறித்த தரவுகள் குறிப்பிடுகின்றன.
  • அமெரிக்காவின் சிடிசி அமைப்பு, புகைப் பிடித்தல், கருவுறுதலைத் தடுக்கும் மாத்திரைகளை நீண்ட காலத்திற்கு எடுத்துக்கொள்ளுதல், மூன்று அல்லது அதற்கும் மேல் குழந்தை பெற்றுக் கொள்ளுதல், அதிகமான நபர்களுடன் உடலுறவில் ஈடுபடுவது ஆகியவை கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாகக் கூறுகிறது.
செர்விகல் கேன்சர்

பட மூலாதாரம், KATERYNA KON/SCIENCE PHOTO LIBRARY/Getty

எச்.பி.வி தொற்று ஏற்படும் முன்னரே கொடுக்க வேண்டும்

  • இந்தப் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு எச்.பி.வி தடுப்பு மருந்தை 11 முதல் 12 வயதில் கொடுக்குமாறு சிடிசி வலியுறுத்துகிறது. அப்படி முன்பே தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளாத நிலையில், 26 வயதைத் தாண்டிய பிறகு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.
  • ஆனால், 26 வயதைக் கடந்த அனைவருக்குமே எச்.பி.வி தடுப்பு மருந்து பரிந்துரைக்கப்படுவதில்லை. 27 முதல் 45 வயதுக்குள் இருக்கும் பெண்கள் தங்கள் பதின்ம வயதிலேயே தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளவில்லை என்றால், எச்.பி.வி தொற்று குறித்த பரிசோதனையை மேற்கொண்ட பிறகு, மருத்துவருடைய ஆலோசனையின் பேரில் அதை எடுத்துக் கொள்ளலாம் என்றும் சிடிசி குறிப்பிட்டுள்ளது.
  • இதற்கான தடுப்பு மருந்தை 15 வயதுக்கு முன்னமே எடுத்துக் கொண்டால், அதை இரண்டு டோஸ்களாக, 6 முதல் 12 மாதங்கள் இடைவெளியில் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. 15 வயதைக் கடந்தவர்களாக இருந்தால், மூன்று டோஸ்களாக தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது.
  • எச்.பி.வி தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்வது புதிதாக அந்த வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும். ஆனால், ஏற்கெனவே அந்தத் தொற்று இருந்தால் அதை சரிசெய்யாது. அதனால்தான், இதற்கான தடுப்பு மருந்தை, எச்.பி.வி தொற்று ஏற்படுவதற்கு முன்னரே கொடுப்பது சிறந்தது எனக் கூறப்படுகிறது. அதேவேளையில், எச்.பி.வி தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டாலும், சீரான இடைவெளியில் கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனையைச் செய்துகொள்வது நல்லது என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.
  • 2021ஆம் ஆண்டுக்கான எச்.பி.வி தகவல் மையத் தரவுகளின் படி, ஓராண்டுக்கு 1,23,907 பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அதில், 77,348 பேர் உயிரிழந்தனர்.
மனித பாப்பிலோமா வைரஸ்

பட மூலாதாரம், KATERYNA KON/SCIENCE PHOTO LIBRARY/Getty Images

படக்குறிப்பு, மனித பாப்பிலோமா வைரசின் சில வகைகள் புற்றுநோயை குறிப்பாக கருப்பை வாய்ப்புற்று நோயை உண்டாக்குகின்றன.

நன்றி சொன்ன மனிஷா கொய்ராலா

  • உலக சுகாதார நிறுவனத்தின் 2021ஆம் ஆண்டுக்கான கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு நிலை குறித்த இந்தியாவுக்கான தரவுத் தொகுப்பு, நாட்டின் தேசிய தடுப்பு மருந்து திட்டத்தில் எச்.பி.வி தடுப்பு மருந்து இல்லையெனக் குறிப்பிட்டுள்ளது. அதோடு, கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் மிகக் குறைவாகவே கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது.
  • கருப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்காக, 15 வயதுக்குள் 90% பெண் குழந்தைகளுக்கு தடுப்பு மருந்தை வழங்குவது, 35 வயதுக்குள் 70% பெண்களுக்கு கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனையை மேற்கொள்வது, மீண்டும் 45 வயது வரம்பின் போது மேற்கொள்வது, கருப்பை வாய் புற்றுநோய் கண்டறியப்பட்ட பெண்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுவதை உறுதி செய்வது ஆகிய இலக்குகளை 2030ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டுமென்று நிர்ணயித்துள்ளது.
  • பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பயோடெக்னாலஜி துறை மற்றும் பயோடெக்னாலஜி தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில் ஆகியவற்றுடைய கூட்டாண்மையின் விளைவாக உருவான 'கிரேண்ட் சேலஞ்சஸ் இந்தியா' என்ற கூட்டுத் திட்டத்தின் மூலம், உள்நாட்டிலேயே சீரம் நிறுவனத்தால் செர்வாவேக் தடுப்பு மருந்து உருவாக்கப்படுகிறது.
  • பயோடெக்னாலஜி துறையின் செயலாளர் டாக்டர் ராஜேஷ் கோகலே, "இது அனைத்து பங்குதாரர்களின் கூட்டு முயற்சியால் ஏற்பட்டது. மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக, அனைத்து தடைகளையும் உடைத்து தடுப்பூசி உருவாக்கம் மற்றும் மருத்துவத்தில் இந்தியா முன்னிலை வகிக்கும்," என்று தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது.
  • பிரபல நடிகை மனிஷா கொய்ராலா, கருப்பை புற்றுநோய்ப் பாதிப்புக்கு உள்ளாகி, சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். அவர், இந்த நிகழ்வில் மெய்நிகர் வழியில் கலந்துகொண்டு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு நன்றி தெரிவித்தார். "இந்தியாவிலுள்ள பெண்களுக்கு இதுவொரு சிறப்பான நாள். அனைவரும் அணுகக்கூடிய விலையைக் கொண்ட சிகிச்சை, லட்சக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கையை வழங்கும்," என்று அவர் கூறியுள்ளார்.
சிவப்புக் கோடு
காணொளிக் குறிப்பு, அண்ணாமலை Vs பிடிஆர்: வார்த்தை போரில் ஈடுபடும் தலைவர்கள் - மீண்டும் சர்ச்சை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: