கருப்பை வாய் புற்றுநோயை HPV தடுப்பு மருந்து 90% குறைக்கிறது: ஆய்வில் தகவல்

தடுப்பு மருந்து செலுத்தி கொள்ளும் பெண்

பட மூலாதாரம், Getty Images

யூமன் பாபிலோமா வைரஸ் தடுப்பு மருந்து கருப்பைவாய் புற்றுநோயை கிட்டதட்ட 90 சதவீதம் குறைப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பிரிட்டனை சேர்ந்த புற்றுநோய் ஆய்வு ஒன்று இந்த கண்டுபிடிப்பு "வரலாற்று சிறப்புமிக்கது" என தெரிவித்துள்ளது. அதேபோன்று இந்த ஆய்வில் தடுப்பு மருந்து உயிரை காப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிட்டதட்ட கருப்பைவாய் புற்றுநோய் அனைத்தும் வைரஸ்களால் உருவாவதால் இந்த தடுப்பு மருந்து நோயை ஒழிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இருப்பினும் இந்த தடுப்பு மருந்தை எடுத்து கொண்டபின்னும் கருப்பைவாய் புற்றுநோய்க்கான பேப்ஸ்மியர் சோதனையை சில முறை செய்துகொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பிரிட்டனில் உள்ள 11 - 13 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு இந்த தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது. அதேபோன்று 2019ஆம் ஆண்டிலிருந்து ஆண்களுக்கும் இந்த தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

லேன்செட் சஞ்சிகையில் வெளியான இந்த ஆய்வு இங்கிலாந்தில் 2008ஆம் ஆண்டில் பெண்களுக்கு இந்த தடுப்பு மருந்தை செலுத்தியபின் என்ன ஆனது என்பது குறித்து ஆராய்ந்தது.

இந்த பெண்கள் தற்போது தங்களின் 20களில் உள்ளனர். இந்த தடுப்பு மருந்து புற்றுநோய்க்கு முந்தையை வளர்ச்சியை குறைத்துள்ளதுடன் கருப்பைவாய் புற்றுநோயை 87 சதவீத அளவில் குறைத்துள்ளது.

"இந்த தடுப்பு மருந்து ஏற்படுத்தும் தாக்கம் மிகப்பெரியது" என இந்த அய்வில் பங்கெடுத்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான பீட்டர் சாசினி தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பு மருந்தை பொறுத்தவரை பெண்கள் பாலியல் செய்கையில் ஈடுபடுவதற்கு முன் செலுத்தினால் சிறந்த பலனை தரும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

காணொளிக் குறிப்பு, கருப்பைவாய் புற்றுநோய் என்றால் என்ன?

இந்த HPV தடுப்பு மருந்து திட்டம் சுமார் 450 புற்றுநோய் மற்றும் 17 ஆயிரத்து 200 புற்றுநோய்க்கு முந்தையை கட்டத்தை தடுத்துள்ளது.

இருப்பினும் இந்த தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டவர்கள் வயதாகும்போது புற்றுநோய் பாதிக்கப்பட்டு எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக பீட்டர் சாசினி தெரிவிக்கிறார்.

ஸ்கீரினிங்

தற்போது பிரிட்டனை பொறுத்தவரை 3-5 வருடங்களுக்கு ஒரு முறை புற்றுநோய்க்கான பரிசோதனையை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எனவே "இந்த ஆய்வை படித்துவிட்டு நான் ஏன் இந்த சோதனைக்கு செல்ல வேண்டும் என பெண்கள் யோசிக்க நேரலாம் எனவே இந்த ஆய்வு முடிவுகள் குறித்து அரசு அதிகாரிகள் மீண்டும் யோசிக்க வேண்டும்" என பீட்டர் தெரிவிக்கிறார்.

"தடுப்பு மருந்து செலுத்தி கொள்ளாத பெண்கள் தொடர்ந்து இரண்டு மூன்று முறை பரிசோதனையை மேற்கொள்ள உதவும் புதிய திட்டத்தை நாம் கொண்டு வருவோம் என நம்புகிறேன்" என்கிறார் அவர்.

ஹெச்பிவி தடுப்பு மருந்து குறித்த இறுதி நிலைப்பாடு இது இல்லை.

நீண்ட காலத்திற்கான பாதுகாப்பு குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. அதேபோன்று பூஸ்டர் தேவைப்படுமா என்ற பேச்சுகளும் உள்ளன.

100க்கும் மேற்பட்ட ஹெச்பிவி வைரஸ்கள் உள்ளன.

இதில் இரண்டு வைரஸ்களுக்கு எதிரான பயனளிக்கும் தடுப்பு மருந்தை பிரிட்டன் பயன்படுத்தி வருகிறது. அதேபோன்று ஒன்பது வைரஸ்களுக்கு எதிராக செயல்படும் ஒரு தடுப்பு மருந்தையும் அறிமுகப்படுத்தவுள்ளது.

பாதிக்கப்பட்ட செல்களின் டிஎன்ஏக்களில் புற்றுநோயை உண்டாக்கும் வைரஸ் ஆபத்தான மாற்றத்தை ஏற்படுத்துகிறது. பின் அதை புற்றுநோய் செல்களாக மாற்றுகிறது.

இது எந்த ஒரு பாதிக்கப்பட்ட திசுக்களிலும் நடைபெறும். இந்த வைரஸ் பாலுறவின் சமயத்தில் பரவக்கூடும்.

இருப்பினும் 99% கருப்பைவாய் புற்றுநோய் ஹெச்பிவி வைரஸ்களால் ஏற்படுகின்றன. எனவே இந்த வகை புற்றுநோயை ஒழிக்கும் திட்டமாக 100க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தடுப்பு மருந்தை பயன்படுத்த தொடங்கியுள்ளன.

பிரிட்டன் புற்றுநோய் ஆராய்ச்சியின் தலைமை நிர்வாகி, "இது ஒரு வரலாற்று தருணம். ஹெச்பிவி வைரஸ் தடுப்பு மருந்து ஆயிரக்கணக்கான பெண்களை கருப்பைவாய் புற்றுநோயிலிருந்து காக்கிறது". என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :