ஜெயலலிதா மரணம்: இப்போதும் சூழ்ந்திருக்கும் ஆறு சர்ச்சை கேள்விகள்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தபோது அது இயற்கை மரணம் அல்ல என்றும் அவர் கொல்லப்பட்டார் என்றும் அப்போது ஆளும் அதிமுகவில் இருந்த பலரும் சந்தேகம் எழுப்பினார்கள்.
இதையடுத்து அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையத்தின் பதவிக்காலம் பல முறை நீட்டிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தனது இறுதி அறிக்கையை தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று (ஆகஸ்ட் 27ஆம் தேதி) அளித்தது.
அது பற்றிய செய்தி இதோ:
இந்த நிலையிலும் கூட ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் நீடிக்கின்றன. அதில் ஆறு முக்கிய சர்ச்சைகளை இங்கே தொகுத்துள்ளோம்.
1. மருத்துவமனை சென்ற இரவே ஜெயலலிதா இறந்துவிட்டாரா?
இந்தியாவின் முதல் அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரான மோடூரி சத்யநாராயணாவின் பேத்தி என்று தன்னை அழைத்துக் கொள்ளும் கே.எஸ்.கீதா, தனது தாயார் சரோஜினியும் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவும் நெருங்கிய தோழிகள் என்று கூறினார். ஜெயலலிதா தனது "நல்ல நண்பர்" என்று கூறி இவர்தான் முதல் முறையாக வெளிப்படையாக அவரது மரணம் குறித்த சந்தேகங்களை எழுப்பினார். அத்துடன் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கோரி நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னதாக அவர், ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நாள் இரவே இறந்து விட்டார் என்றும் அந்தத் தகவல்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டதாகவும் கீதா டிவி சேனல்களில் தோன்றி குற்றம்சாட்டினார்.
2. யாரோ ஒருவரால் ஜெயலலிதா கீழே தள்ளப்பட்டாரா?
ஜெயலலிதா இறந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவது மரணம் குறித்து மௌனம் கலைந்த அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பி.எச்.பாண்டியன், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி இரவு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் காரசாரமான வாக்குவாதங்கள் நடந்ததாக நினைவு கூர்ந்தார். சசிகலாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் யாரோ ஒருவரால் ஜெயலலிதா கீழே தள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார். ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளில் சசிகலா குடும்பத்தினர் வருத்தப்படவோ அழவோ இல்லை. மாறாக தமது உறவினர்கள் அனைவரையும் மருத்துவமனை முழுவதும் நிரப்பியிருந்தார்கள் என்று பி.எச். பாண்டியன் தெரிவித்தார்.

3. என்ன நோய் என்பது அதிகாரப்பூர்வமாக ஏன் வெளியிடப்படவில்லை?
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆரம்ப நாட்களில் அவருக்கு சரியாக என்ன நோய் ஏற்பட்டது, என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது போன்ற விவரங்கள் அலுவல்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
ஜெயலலிதாவுக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததாகவும் செப்டம்பர் 22ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது கூட அவரால் பேச முடிந்தது என்றும் முதலாவது மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஒன்றரை மாதத்துக்கும் மேலாக ஜெயலலிதாவின் 'காய்ச்சல் நீடித்ததாகவும் அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு' இருந்ததாகவும் கூறப்பட்டு வந்தது.
4. ஜெயலலிதா உடல்நிலை குறித்து லண்டன் டாக்டர் கூறியது
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக வரவழைக்கப்பட்ட லண்டன் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் ரிச்சர்ட் பீல், ஜெயலலிதா கடுமையான செப்சிஸ் (தொற்றுநோயின் உயிருக்கு ஆபத்தான நிலை) காரணமாக இறந்துவிட்டதாக பின்னாளில் கூறினார். கடைசி நாட்களில் அவரது பல உறுப்புகள் செயலிழந்ததாக அவர் தெரிவித்தார்.
"ஒரு வார காலமாக ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்தார். சாப்பிட்டார், சிகிச்சை அளிக்க வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தார். ஆனால், செப்சிஸ் மோசமடைந்த பிறகு அவர் சோர்வாகவும் தூக்கமாகவும் இருந்தார். அவருக்கு ஏற்கெனவே இருந்த நீரிழிவு நோய், தொற்றை கடுமையாக்கியது. அதனால் கடைசி சில நாட்களாக பேச முடியாதபோதும் சுற்றி நடக்கும் விஷயங்களை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது," என்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார் டாக்டர் ரிச்சர்ட் பீல்.

பட மூலாதாரம், ARUN SANKAR / Getty Images
5. ஜெயலலிதா கன்னத்தில் 4 புள்ளிகள் இருந்தது ஏன்?
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அவரது கன்னங்களில் நான்கு புள்ளிகளுடன் இருக்கும் படம், சமூக வலைதளங்களில் வைரலாகியது. அது குறித்து கேட்கப்பட்டபோது, தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு சில நேரங்களில் கன்னங்களில் புள்ளிகள் வரலாம் என்றும் அவருக்கு உடல் உறுப்பு மாற்று சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை என்றும் டாக்டர் பீல் விளக்கினார்.
ஜெயலலிதாவுக்கு எம்பாமிங் செய்த குழுவின் தலைவராக இருந்தவர் சென்னை மருத்துவ கல்லூரியின் உடற்கூறியல் துறையின் அப்போதைய இயக்குநர் டாக்டர் சுதா சேஷய்யன். வென்டிலேட்டரில் தொடர்ந்து இருந்ததால் ஜெயலலிதாவின் உதடுகள் வீங்கியிருந்தன. எம்பாமிங் செயல்பாட்டின் போது மூன்று அல்லது நான்கு எக்கிமோடிக் புள்ளிகள் இருந்தன என்று அவர் கூறினார். உடல் அழுகுவதைத் தடுக்கவும், துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கவும் அவ்வாறு செய்யப்பட்டதாக மருத்துவர்கள் பின்னாளில் விளக்கினர். எக்கிமோடிக் புள்ளிகள் சிதைந்த ரத்த நாளங்களில் இருந்து ரத்தம் வெளியேறுவதால் ஏற்படுகிறது. சுதா சேஷய்யன் பின்னாளில் டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 10ஆவது துணை வேந்தராக நியமிக்கப்பட்டார்.
6. வெளிநாட்டில் ஏன் சிகிச்சை அளிக்கப்படவில்லை?
2017ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதாவின் மரணத்துக்கு திடீர் மாரடைப்பு காரணம் என்று கூறப்பட்டது. இருப்பினும், அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் இருந்தபோதும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த முழு தகவல், அவர் சிகிச்சை பெற்ற நாட்களில் அவருக்கு மிக அருகே இருந்தவர்களிடம் கூட தெரிவிக்கப்படவில்லை என்ற சர்ச்சை நிலவுகிறது.
ஜெயலலிதாவுக்கு ஏன் வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் மருத்துவமனையில் இருந்தபோது அவரது புகைப்படத்தை ஊடகங்களில் வெளியிடாதது ஏன் என்றும் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அவ்வாறு செய்வதை ஜெயலலிதா விரும்பவில்லை என்ற ஒற்றை பதிலை மட்டும் சசிகலா மற்றும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்தனர். இவை குறித்தெல்லாம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்துள்ளது.
ஆறுமுகசாமி ஆணையம் கடந்துவந்த பாதை...
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ம் ஆண்டு, டிசம்பர் 5ம் தேதி காலமானார். அதன்பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், "ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக" குற்றம்சாட்டினார். இதன் பிறகு, எடப்பாடி பழனிசாமியுடன் இணைவதற்கு, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க 2017ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 25ம் தேதி ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை தரப்பு, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, இளவரசி, ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரிடம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியது. மேலும், ஜெயலலிதாவின் சிகிச்சை விவரங்கள் அடங்கிய ஆவணங்களும் இதன்போது ஆராயப்பட்டன.
இதனிடையே 2019-ம் ஆண்டு, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆணையம் சம்பந்தமில்லாத தகவல்களை கேட்பதாக கூறி மருத்துவமனை தரப்பில் தடை கோரப்பட்டது. தொடர்பில்லாத தகவல்களையெல்லாம் ஆணையம் கேட்பதாக மருத்துவமனை சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த மனுவை ஏற்று, ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து 2019, ஏப்ரல் 26 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
நவம்பர், 2021-ல் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவும் வகையில் எய்ம்ஸ் மருத்துவக்குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மருத்துவக் குழு கடந்த சில தினங்களுக்கு முன் ஆறுமுகசாமி ஆணையத்திடம் தன் அறிக்கையை சமர்ப்பித்தது.
ஆறுமுகசாமி ஆணையத்தின் கோரிக்கைக்கு ஏற்ப 2021, டிசம்பரில் உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, சேப்பாக்கத்தில் உள்ள கலசமஹாலில் பெரிய அலுவலகத்தில் இடம் ஒதுக்கித் தரப்பட்டது.
இந்த ஆணையம் அமைக்கப்பட்டபோது அறிக்கை தாக்கல் செய்ய மூன்று மாதங்கள் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆணையத்தின் விசாரணைக் காலம் பலமுறை நீட்டிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கழித்து இன்று அதன் இறுதி அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













