அதிமுக நெருக்கடி: 'ஓபிஎஸ் அனுதாப அரசியல் செய்கிறாரா?' - அவரது சுற்றுப்பயணம் பலனளிக்குமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எதிர்ப்பு அதிகரித்திருந்தாலும், அதிமுக தொண்டர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், கட்சியைப் பாதுகாக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செல்லவிருப்பதாக, அவருடைய ஆதரவாளரும், கட்சியின் செய்தித் தொடர்பாளருமான கோவை செல்வராஜ் தெரிவித்திருந்தார்.
பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருந்தாலும், கட்சியின் தொண்டர்கள் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக இருப்பதால், இந்த சுற்றுப்பயணம் பயனளிக்கும் என்றும் கோவை செல்வராஜ் கூறுகிறார்.
பின்னணி என்ன?
கடந்த ஜூன் 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ்-ஐ முழுமையாகப் புறக்கணித்தனர். அதோடு, மேடையில் அவர் இருந்தபோதே, அவருக்கு எதிராக பொதுக்குழுவில் பலர் ஒற்றைத் தலைமை தான் கட்சிக்குத் தேவை என்று குறிப்பிட்டு, ஓபிஎஸ்-ஐ முழுமையாக ஓரங்கட்டினர்.
ஒரு கட்டத்தில், இபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில், தான் தனித்து இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டபோது, ஓபிஎஸ் மேடையில் இருந்து கிளம்பினார். அவர் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறியபோது அவருடன் வருவதற்கு ஒரு சிறிய கூட்டம் கூடச் சேரவில்லை என்பதை நேரலைக் காட்சிகளில் பார்க்க முடிந்தது.

பட மூலாதாரம், Getty Images
திடீர் பயணம் ஏன்?
பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற அன்று இரவே, ஓபிஎஸ் டெல்லி சென்றார். அவர் பிரதமர் மோதியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாஜகவின் ஆதரவுடன் மீண்டும் கட்சியில் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ள முயற்சி எடுப்பார் என்றும் கருதப்பட்டது. ஆனால் எந்த சந்திப்பும் நடைபெறவில்லை. ஒபிஎஸ் சென்னைக்குத் திரும்பினார். தற்போது கட்சியை வளர்க்க ஓபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறார் என்கிறார் கோவை செல்வராஜ்.
ஓபிஎஸ் தீடீரென சுற்றுப்பயணம் செய்யவேண்டிய தேவை என்ன என்று கோவை செல்வராஜிடம் கேட்டோம். அவர், ''இந்த சுற்றுப்பயணம் என்பது உடனே முடிவு செய்யப்பட்டது அல்ல. கட்சியில் மாவட்ட செயலாளர் பதவியில் இருப்பவர்கள் பலரும், தங்களை ஒரு குறுநில மன்னர்களைப் போல நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். கட்சியில் உண்மையான தொண்டர்கள் குறிப்பாக எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. அதோடு கட்சிப் பணிகள் எதுவும் செய்யப்படாமல், தொண்டர்கள் குழப்பத்தில், சோர்வில் உள்ளனர். இதைத் தீர்ப்பதற்காக, கட்சியை வளர்ப்பதற்காக, தொண்டர்களுக்கு உற்சாகம் தரும் பயணமாக ஓபிஎஸ் மேற்கொள்ளும் இந்தப் பயணம் இருக்கும்,'' என்றார்.

''எனக்கு எதிராக சதிவலை பின்னப்பட்டுள்ளது''
ஓபிஎஸ் சுற்றுப்பயணத்தின் விவரங்கள் பற்றிக் கேட்டபோது, பயணத்தை முடிவு செய்யும் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது என்கிறார் அவர். ''ஒன்றிய பிரதிநிதிகள், மூத்த தொண்டர்கள் எனப் பலரையும் சென்னைக்கு அழைத்து, அவர்களிடமும் கருத்து கேட்புக் கூட்டம் ஒன்றை நடத்தவிருக்கிறோம். அதில் ஆலோசனை செய்து, பயணத்தை இறுதி செய்யவுள்ளோம். இதுகுறித்து ஓபிஎஸ் விரைவில் வெளிப்படையாக அறிவிப்பார்,'' என்கிறார் கோவை செல்வராஜ்.
டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை வந்த ஓபிஸ்-க்கு மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதேபோல, மதுரை விமான நிலையத்தில் தொண்டர்கள் அவருக்கு ஆதவராக கோஷங்களை எழுப்பி வரவேற்றனர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், "எனக்கு எதிராக சதி வலை பின்னப்பட்டுள்ளது. அதைச் செய்தவர்கள் யார் என்பதை மக்களே புரிந்துகொண்டு சரியான தீர்ப்பு வழங்குவார்கள்" என்றார். அப்போது, உங்களின் அரசியல் எதிர்காலம் என்ன?' என செய்தியாளர் ஒருவர் கேட்டபோது,''என்னுடைய எதிர்காலத்தை அம்மாவின் தொண்டர்களும் மக்களும் நிர்ணயிப்பார்கள்'' என்றார்.

பட மூலாதாரம், Getty Images
மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-க்கு கிடைத்த வரவேற்பு, தமிழகம் முழுவதும் செல்லும்போது அவருக்குக் கிடைக்குமா, அந்த சுற்றுப்பயணத்தால் அவர் கட்சியில் இழந்த இடத்தைப் பெற முடியுமா என அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம்.
சொந்த மாவட்டத்தில் ஆதரவில்லை
அதிமுகவின் கட்சி நடவடிக்கைகளைத் தொடர்ந்து கவனித்து வரும் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன், "ஓபிஎஸ்-இன் சுற்றுப்பயணம் மிகவும் காலம் தாழ்த்தி எடுக்கப்பட்ட முடிவு" என்கிறார்.
''ஜூன் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே, அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டும் பல விஷயங்கள் நடந்தன. எப்போது ஒற்றைத் தலைமை குறித்த பேச்சுகள் தொடங்கியதோ, அப்போதே ஓபிஎஸ் தனக்கென கட்சியில் இருக்கும் பலத்தைக் காட்டுவதற்கான வேலையைச் செய்திருக்கவேண்டும். ஆனால், அவருக்கு ஆதரவாக கட்சியில் பெருந்தலைகள் யாரும் இல்லை என்ற நிலையில், சுற்றுப்பயணம் செய்வதால் என்ன பயன்? அவரது சொந்த மாவட்டமான தேனியில் எடப்பாடி பழனிசாமி நற்பணி மன்றங்கள் தொடங்குகிறார்கள், போஸ்டர்கள் ஓட்டுகிறார்கள். ஓபிஎஸ் எப்படி தனக்கான ஆதரவாளர்களை தமிழகம் முழுவதும் இருந்து திரட்டுவார் என்பது கேள்விக்குறிதான்,'' என்கிறார் குபேந்திரன்.

பட மூலாதாரம், Getty Images
ஓபிஎஸ்-இபிஎஸ் என இருவருக்கும் வாய்ப்புகள் கிடைத்தபோதும், ஓபிஎஸ் தனக்கான இடத்தை பலப்படுத்திக் கொள்ளவில்லை என்கிறார் குபேந்திரன். ''ஓபிஎஸ் தான் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் எனச் சொல்கிறார். அதாவது, சசிகலா-தினகரன் ஆகியோர் ஆதரவோடும் அவர் இருந்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர், சசிகலா-தினகரன் ஆதரவில் ஓபிஎஸ் போலவே, முதல்வர் ஆனவர்தான் இபிஎஸ். ஆனால் அவர் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, அதிமுக ஆட்சியிலிருந்தபோதும் கட்சியை நிர்வகித்ததிலும் தன்னைப் பலப்படுத்திக் கொண்டுள்ளார். ஓபிஎஸ் தொடர்ந்து அனுதாபங்களை மட்டுமே நம்பியிருக்கிறார். பாஜகவுக்கு ஆதரவானவர் என்ற சாயல் அவருக்கு இருந்ததும் ஒரு குறை. இதனால், அவர் கட்சியில் பலத்த சரிவைச் சந்தித்துள்ளார்,'' என்கிறார் குபேந்திரன்.
அரசியல் தற்கொலைக்கு சமம்
ஒருவேளை கோவை செல்வராஜ் சொல்வது போல ஓபிஎஸ் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தால் அதன் விளைவு எவ்வாறு இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங்கிடம் கேட்டோம்.
எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் உள்ளிட்ட தலைவர்கள் அரசியலில் தங்களுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டபோது, அவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அந்த செய்திகளைச் சேகரித்தவர் என்ற அனுபவத்துடன், ஓபிஎஸ் சுற்றுப்பயணம் குறித்து பேசினார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
''திமுகவில் இருந்து விலகிய எம்ஜிஆர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்றபோது, நான் என்ன தவறு செய்தேன், எனக்கான நியாயத்தை நீங்களே கொடுங்கள் என மக்களிடம் நேரடியாகக் கேட்டார். அப்போது, அவருக்குக் குவிந்த மக்கள் கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை. குறிப்பாக பெண்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்தார்கள். அந்த சுற்றுப்பயணத்தின் எதிரொலியாகத்தான் அவர் இறக்கும் வரை ஆட்சிக் கட்டிலில் தொடர்ந்து நீடித்தார்.
அதேபோல, ஆந்திராவில் என்டி ராமாராவ், இந்திராகாந்தியால் நிராகரிக்கப்பட்டபோது, சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவு அதிகமானது. முதல்வராக நீடித்தார். ஆனால் தற்போது ஓபிஎஸ் சுற்றுப்பயணம் செய்வது - பொலிடிகல் சூசைட்- அரசியலில் தற்கொலை செய்துகொள்வதற்குச் சமமாக இருக்கும்,'' என்கிறார் பகவான் சிங்.

பட மூலாதாரம், Getty Images
''அரசியல் தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்யும்போது, அவர்களுடைய எதிர் அணியினருக்குத் தங்களது இருப்பையும் பலத்தையும் உணர்த்தமுடியும். பொதுக்குழுவில் அவர் மோசமாக நடத்தப்பட்டது ஒரு வீட்டுக்குள் நடந்த சண்டையைப் போன்றது. ஆனால் சுற்றுப்பயணம் மேற்கொண்டால், வீட்டு சண்டையை தெருவுக்குக் கொண்டு வருவது போலாகிவிடும்.
இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் செல்லும் இடங்களில் இருப்பார்கள். அவரது செயல்பாடுகள் மேலும் இவரைக் காயப்படுத்தும். இவரது பலவீனத்தை இவரே காட்டிக் கொடுப்பது போலாகிவிடும். அனுதாப அரசியல்வாதியாக தன்னை முன்னிறுத்தும் ஒருவரை தொண்டர்கள் எவ்வாறு வலிமையான தலைவனாகப் பார்ப்பார்கள்?,''என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












