பிரியாணி விழாக்களில் மாட்டிறைச்சி: ஆதி திராவிடர் ஆணைய உத்தரவு என்ன சொல்கிறது?

ஆம்பூர் பிரியாணி திருவிழா

தமிழ்நாட்டில் அரசு ஏற்பாடு செய்யக்கூடிய பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக்கூடாது என்றும் அப்படித் தவிர்ப்பதன் மூலம் பாகுபாட்டிற்கு வழிவகுக்கக் கூடாது என்றும் மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தை விசாரித்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம், அரசு ஏற்பாடு செய்யக்கூடிய பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது என்பதையும், அப்படித் தவிர்த்தால், அது பாகுபாட்டுக்கு வழி வகுக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி, இனிவரும் காலங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மாவட்ட நிர்வாகம் பாகுபாட்டுக்கு வழிவகுக்கக் கூடாது என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரச்சனையின் பின்னணி

தமிழ்நாட்டில் முதல்முறையாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மே மாதம் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை மூன்று நாட்களுக்கு "ஆம்பூர் பிரியாணி திருவிழா 2022" என்ற திருவிழாவை நடத்த உத்தேசிக்கப்பட்டது.

ஆம்பூர் பிரியாணி
படக்குறிப்பு, கோப்புப்படம்

ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெறும்வகையில் நடத்தப்பட்ட இந்தத் திருவிழாவில் 30க்கும் மேற்பட்ட அரங்குகளும் 20க்கு் மேற்பட்ட பிரியாணி வகைகளும் இடம்பெறுமென திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா, ஆம்பூரில் நடைபெறும் பிரியாணி திருவிழாவில் "பீப் பிரியாணி" தவிர அனைத்து வகையான பிரியாணி வகைகளும் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக ஒரு செய்தி அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதிலும் மாட்டிறைச்சி பிரியாணி ஏன் தவிர்க்கப்படுகிறது என்ற காரணம் குறிப்பிடப்படவில்லை.

இதையடுத்து. ஆம்பூரில் உள்ள தலித் அமைப்புகள் இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகக் கடைப்பிடிக்கப்படும் உணவுத் தீண்டாமை என்று கண்டனம் தெரிவித்தன. இந்த எதிர்ப்பை மீறி, மாட்டிறைச்சி பிரியாணி இன்றி திருவிழா நடக்கும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் நடத்தும் பிரியாணி திருவிழாவுக்கு எதிரிலேயே மாட்டிறைச்சி பிரியாணி கடைகளை நடத்துவோம் என்றும் அறிவித்தனர்.

இதற்குப் பிறகு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியைச் சேர்ந்த மாநிலத் துணைச் செயலாளர் சி. ஓம்பிரகாசம் இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்திடம் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில், "ஆம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். எங்களின் முக்கிய உணவாகிய மாட்டிறைச்சியை அரசு நடத்தும் விழாவில் அனுமதிக்க மாட்டோம் என்று எங்கள் மீது உணவுத் தீண்டாமையை அதிகாரிகள் நிகழ்த்துகின்றனர். ஆட்டிறைச்சியோ, கோழி இறைச்சியோ சாப்பிடாமல், மாட்டிறைச்சி மட்டுமே உண்ணும் எங்களைப் போன்றவர்கள் அவ்விழாவில் பங்கேற்க முடியாத சூழலை அரசு அதிகாரிகளே உருவாக்குகிறார்கள். இது எங்கள் மீது நிகழ்த்தப்பட்ட உளவியல் வன்முறையாகவே நாங்கள் உணர்கிறோம். மாட்டிறைச்சி பிரியாணியை விழாவில் அனுமதித்து நீதி வழங்க வேண்டும் " என்று கூறியிருந்தார்.

பிரியாணி திருவிழா

இதற்குப் பிறகு இந்தப் புகார் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம். இதையடுத்து, பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக ஆட்சியர் அமர்குஷ்வாஹா அறிவித்தார்.

திருவிழா ஒத்திவைப்பு - ஆட்சியர் விளக்கம்

ஆம்பூர் பிரியாணி

பட மூலாதாரம், King's Ambur Biryani

மழை பெய்யும் என்பதால், திருவிழா ஒத்திவைக்கப்படுவதாகவும், அந்தத் திருவிழாவே ஒத்திவைக்கப்பட்டுவிட்டதால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் உத்தரவு செல்லத்தக்கது அல்ல என்றும் ஊடகங்களிடம் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர்.

இதற்குப் பிறகு ஜூன் ஏழாம் தேதி பதில் அறிவிக்கை ஒன்றை ஆட்சியர் அனுப்பியிருந்தார். அதில் பன்றி இறைச்சி பிரியாணி குறித்து குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில்தான், இந்த விவகாரம் குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் தற்போது புது உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அளித்த பேட்டி ஆணையத்தை அவமதிப்பதாக இருந்தது என்பதால் அவர் மீது தனி நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றாலும் ஒரு மாவட்டத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பை அவர் வகிப்பதால் அவருடைய மதிப்பு குறைந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் அத்தகைய நடவடிக்கை எடுப்பதை ஆணையம் தவிர்த்து விட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருந்தபோதும், பிரியாணி திருவிழாவில் மாவட்ட நிர்வாகம் சாதி ரீதியாக பாகுபாடு காட்டவில்லை என்ற ஆட்சியரின் பதிலை ஆணையம் ஏற்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், "அரசு ஏற்பாடு செய்யக்கூடிய பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி தவிர்க்கப்படக் கூடாது என்பதையும், அப்படித் தவிர்த்தால் அது பாகுபாட்டுக்கு வழி வகுக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி, இனிவரும் காலங்களில் நடைபெறும் திருவிழாக்களில் மாவட்ட நிர்வாகம் பாகுபாட்டுக்கு வழிவகுக்கக் கூடாது" என்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :