உணவும் உடல்நலமும்: 'டீடாக்ஸ்' உணவுத் திட்டத்தால் உடலில் நச்சுகளை வெளியேற்ற முடியுமா? என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், எம். மணிகண்டன்
- பதவி, பிபிசி தமிழ்
உடல் நலத்தை பாதுகாக்கும் வகையிலான உணவுப் பழக்கங்கள், உடலுக்கு தீங்கான உணவுகள் ஆகியவை தொடர்பாக பிபிசி தமிழ் வெளியிடும் தொடரின் இரண்டாவது கட்டுரை இது.
டீடாக்ஸ் டயட் என்று அழைக்கப்படும் நச்சு நீக்கும் உணவுத் திட்டம் என்பது என்ன, அது எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது, அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு உணவியல் நிபுணர் ரம்யா ராமச்சந்திரன் அளித்த பதில்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
டீடாக்ஸ் டயட் என்பது?
1905-ஆம் ஆண்டில் இதை நச்சுத்தன்மையை உடலில் இருந்து வெளியேற்றும் ஒரு நடைமுறை என்று இதை வரையறுத்திருந்தார்கள். 1971-இல் மாற்றங்களைப் பெற்ற இந்த நடைமுறையானது, குறிப்பிட்ட அடிமையாக்கும் வகையிலான பொருள்களை உடலில் இருந்து நீக்கும் வகையிலான நடைமுறையாக வரையறுக்கப்பட்டது.
1977-ஆம் ஆண்டில் இது மாற்று உடல்நலச் சிகிச்சை என்ற அளவில் பயன்படுத்தப்படும் வகையில் மாற்றம் பெற்றது. அதனால் பொதுவாக ஒரு மருத்துவ நடைமுறையாக மட்டுமே இருந்தது. பெரும்பாலும் இது மருத்துவர்களின் மேற்பார்வையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் காலப் போக்கில் நச்சு நீக்கும் மசாஜ், அக்குபஞ்சர், உணவுப் பழக்கம் என பல வடிவங்கள் வந்தன. அதில் அதிகமாகப் பிரபலமானது டீடாக்ஸ் டயட் எனப்படும் உணவு திட்டம்தான்.
டீடாக்ஸ் உணவுப் பழக்கத்தால் என்ன ஆபத்து?
இந்த உணவுத் திட்டத்தைக் கடைப்பிடிக்கும்போது, முதலில் ஓரளவு நன்மைகள் கிடைக்கும். எடை குறையும். கலோரிகளைக் குறைப்பதால் இது நடக்கிறது. தொடர்ந்து ஒருவர் டீடாக்ஸ் டயட் முறையைக் கடைப்பிடிப்பதால், ரத்தத்தில் இருந்து அசிடிட்டி அதிகமாகும். இது கடைசியில் கோமா முதல் இறப்பு வரை கொண்டுவிடலாம். இந்த டயட்டை கடைப்பிடிப்பதில் இதுபோன்ற பல ஆபத்துகளைக் கொண்டிருக்கிறது.

உடலில் டாக்சின் என்பது என்ன? அதனால்தான் எல்லா நோய்களும் வருகின்றனவா?
டாக்சின் என்பது உடலில் இருக்கும் நச்சுத்தன்மையைக் குறிக்கிறது. ஆனால் இதனால்தான் அனைத்து நோய்களும் வருகின்றன எனக் கூற முடியாது. பாக்டீரியா, வைரஸ் என பல்வேறு காரணங்களால் நோய்கள் வருகின்றன.
டீடாக்ஸ் தயாரிப்புகளால் உடலில் உள்ள நச்சுத் தன்மையை வெளியேற்ற முடியுமா?
டீடாக்ஸ் தயாரிப்புகள் பலவும் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றுவதாகக் குறிப்பிடுகின்றன. ஆனால் இவை பெரும்பாலும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. அதனால் பிரபலங்கள் மூலமாக விளம்பரப்படுத்தப்படும் தயாரிப்புகளை ஆலோசனை இல்லாமல் உண்பதால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

பட மூலாதாரம், Getty Images
உடலில் உள்ள நச்சுத்தன்மையை நாம் வெளியேற்ற வேண்டுமா?
உடலில் உள்ள நச்சுத் தன்மையை செயற்கையாக வெளியேற்ற வேண்டிய அவசியம் பெரும்பாலும் இல்லை. நமது உடல் உறுப்புகள் சரியாக இயங்கிக் கொண்டிருந்தால் எந்த விதமான செயற்கையான பொருள்களும் நச்சுத்தன்மையை வெளியேற்றுவதற்குத் தேவையில்லை. நமது உடல் உறுப்புகளே 24 மணி நேரமும் உடலில் நச்சுத் தன்மை கொண்ட கழிவுகளை வெளியேற்றுவதற்காக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
உதாரணத்துக்கு உடலில் நச்சுத் தன்மை கொண்ட பொருள்களை உடைத்துக் கரைத்து சிறுநீர் மூலமாக நமது உடல் வெளியேற்றுகிறது. இந்த அளவுக்கு மிகச் சிறப்பாகச் செயல்படக்கூடிய, நச்சுத் தன்மையை வெளியேற்றக் கூடிய எந்தத் தயாரிப்பும் உலகத்தில் கிடையாது.
நமது தோல், நோய் எதிர்ப்பு சக்தி, கல்லீரல், போன்றவையும் நச்சுத் தன்மையை வெளியேற்றுகின்றன.
எந்த உணவுகள் நச்சுத் தன்மைக்கு காரணமாக இருக்கின்றன?
நாம் எடுத்துக் கொள்ளும் எந்த உணவும் நச்சுத் தன்மைக்குக் காரணமாக மாறலாம். தண்ணீர் உப்பு, சர்க்கரை, சூறை மீன் போன்ற எதுவும் நச்சுத் தன்மைக்குக் காரணமாக மாறலாம். ஆனால் இவற்றில் உருவாகும் நச்சுகளை நமது உடலே வெளியேற்றி விடுகிறது. இதைக் கருத்தில் கொண்டால், விதவிதமான உணவுக் கட்டுப்பாடுகளை நாம் பின்பற்ற வேண்டியிருக்காது. ஒருவேளை அதையும் தாண்டி டீடாக்ஸ் போன்ற உணவு வழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமெனில் அது நிச்சயமாக மருத்துவரின் ஆலோசனையின்படிதான் இருக்க வேண்டும்.
டீடாக்ஸ் டயட் யாருக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும்?
குழந்தைகள், இதயப் பிரச்னை உள்ளவர்கள், சிறுநீரகப் பிரச்னைகள், நீண்ட நாள் உடல்நலப் பிரச்னைகள் இருப்பவர்கள் நிச்சயமாக டீடாக்ஸ் டயட்டை பின்பற்றக்கூடாது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












