சிக்கன் ஷவர்மா சர்ச்சை உணவு வகையா? நிபுணர்கள் விளக்கம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
கேரளாவில் ஷவர்மா சாப்பிட்டு மாணவி ஒருவர் மரணமடைந்த விவகாரத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. ' வெயில் காலத்தில் இறைச்சிகள் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு அதிகம். உணவகங்களில் இறைச்சிகளைக் கையாள்வதில் உள்ள குறைபாடுகளால்தான் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்' என்கின்றனர் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள்.
கேரளாவை தொடர்ந்து தஞ்சை
கேரள மாநிலம் காசர்கோட்டில் தேவநந்தா என்ற பிளஸ் 2 மாணவி தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி படித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு மாணவியும் அவருடன் பயிலும் 18 பேரும் ஒரு கடையில் சிக்கன் ஷவர்மா வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்துள்ளனர்.
இவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், உணவு விஷத்தால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
இதில், மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் தேவநந்தா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ஷவர்மாவை விற்பனை செய்த கடைக்கு கேரள உணவுத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுதொடர்பாக விரிவான விசாரணைக்கும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவைத் தொடர்ந்து தஞ்சை ஒரத்தநாட்டிலும் ஷவர்மா உணவு மீது புகார் எழுந்துள்ளது. ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மூன்று பேர், துரித உணவகம் ஒன்றில் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து ஷவர்மாவை விற்ற தனியார் உணவகத்தில் சோதனை நடத்தி அக்கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். தற்போது ஒரத்தநாடு மாணவர்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள ஷவர்மா கடைகளின் மீது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் பார்வை திரும்பியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, திருச்சி தில்லை நகர், வயலூர் ரோடு, மத்திய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த ஷவர்மா விற்பனை செய்யும் 21 கடைகளில் மே 6 ஆம் தேதி அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இதில் 12 கிலோ கெட்டுப் போன கோழி இறைச்சி பிடிபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் ஐந்து கடைகளுக்கு உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006ன்கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அறந்தாங்கியிலும் பிரியாணி சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதிகரிக்கும் ஷவர்மா மோகம்

பட மூலாதாரம், JOSEPH EID
கோழி இறைச்சி உணவுகளில் ஷவர்மாவை விரும்பிச் சாப்பிடுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. குறிப்பாக, வளரிளம் பருவத்தினர் மத்தியில் ஷவர்மா உணவுக்கு கூடுதல் வரவேற்பு இருப்பதால் தெருவுக்குத் தெரு கடைகள் முளைத்துள்ளன.
ஒரு கம்பியில் கோழியின் சதைகளை மசாலா தடவி நேரடி வெப்பத்தால் அதனை வேகவைக்கின்றனர். பின்னர் சிக்கனை துருவி எடுத்து முட்டைகோஸ், மயோனைஸ் ஆகியவற்றைச் சேர்த்து கத்தியால் சிறு சிறு துண்டுகளாக நறுக்குகின்றனர். பின்னர் ரொட்டியை சூடாக்கி அதனுள் இந்தக் கலவையை அடைத்து சாப்பிடுவதற்குக் கொடுக்கின்றனர். இப்படியொரு உணவின் மீதுதான் கடந்த சில நாள்களாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
''உணவு நஞ்சால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்?'' என எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையின் முன்னாள் இயக்குநர் மருத்துவர் அரசர் சீராளரிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம்.
''வெயில் காலத்தில் வெகுவிரைவில் இறைச்சி கெட்டுப் போய்விடும். இதனால் இறைச்சி மீது கிருமிகளின் தாக்குதல் ஏற்படும். இறைச்சி உணவை நன்றாகப் பதப்படுத்தாவிட்டாலும் உடலுக்கு கேடு விளைவிக்கும். மேலும், உணவை பாதி வேகும் அளவுக்கு சமைத்தால் கிருமி இறப்பதற்கு வாய்ப்பில்லை. இது பால் பொருள்களுக்கும் பொருந்தும். பழைய அல்வா, பழைய தேன் ஆகியவற்றை சாப்பிட்டால்கூட பாதிப்பு வரும். பழைய தேனை பதப்படுத்தாமல் இருந்தால் botulism என்ற நச்சு வெளியாகும். குழந்தைகளுக்கு இந்தத் தேனைக் கொடுத்தால் கை, கால் இயக்கத்தில் பாதிப்பு வரும்'' என்கிறார்.
ஷவர்மாவை சூடாக்குவதில் என்ன பிரச்னை?

''அதிக வெப்பத்தில் வைத்துத்தான் ஷவர்மாவை வேகவைக்கின்றனர். அதில் என்ன பிரச்னை?'' என்றோம்.
''ஷவர்மாவை பொறுத்தவரையில் ஒருமுறை கம்பியில் குத்திவிட்டால் அது சூடான பிறகு வெட்டிக் கொடுக்கிறார்கள். அதனை சூடாக்கும்போது வெளியில் உள்ள பகுதி மட்டுமே வேகிறது. அதன் உள்ளே உள்ள இறைச்சி போதிய அளவில் வேகாமல் உள்ளன. அதே ஷவர்மாவை காலியாகும் வரையில் மறுநாள் வரையில் பயன்படுத்துகின்றனர். அதனைப் பதப்படுத்தி சரியான முறையில் வேக வைக்க வேண்டும். அவ்வாறு செய்யாததுதான் பிரச்னையே. வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் அசைவத்தை வைக்கின்றனர். அதனை முறையாக சமைக்காவிட்டாலும் பாதிப்பு ஏற்படும். பொதுவாக, இந்தத் துயரம் எல்லாம் வெயில் காலத்தில் அதிகம்,'' என்கிறார்.
மேலும், '' உணவு தொடர்பான பிரச்னைகளைப் பொருத்தவரையில் பண்டிகை காலங்களில் அதிக நோயாளிகள் வருவார்கள். பள்ளி விடுமுறை தொடங்கிவிட்டால் மாணவர்கள் வெளியில் சாப்பிடுவது அதிகரிக்கும். அப்போதும் சிகிச்சைக்காக அதிகம் பேர் வருவார்கள். எந்த உணவாக இருந்தாலும் நல்ல கடையாகப் பார்த்து வாங்க வேண்டும். வெளிநாட்டில் பதப்படுத்தி முறையாகச் சாப்பிடுகின்றனர். அங்கு உணவின் தரம் என்ன என்பதை சரியான முறையில் கடைபிடிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. உணவு பரிமாறும் இடம் மற்றும் பதப்படுத்தும் இடம் ஆகியவற்றில் ஊழியர்களுக்கு போதிய பயிற்சியை அளிக்க வேண்டும்'' என்கிறார்.
உணவுப் பாதுகாப்பு அதிகாரி சொல்வது என்ன?
''இறைச்சியைக் கையாள்வதால் வரக்கூடிய தவறுகளால்தான் உடலுக்கு கேடு ஏற்படுகின்றன. இதில் காலநிலை மாற்றம் என்ற காரணத்தைச் சொல்ல முடியாது. ஆடு, கோழி ஆகிய இறைச்சிகளை காலையிலேயே வெட்டி எடுத்து வைத்துவிடுகின்றனர். இந்த இறைச்சியை வைத்து மாலை நேரத்தில் ஷவர்மா உள்பட பல்வேறு துரித உணவுகளைத் தயார் செய்து விற்கின்றனர். கோழிக் கறியை குளிர்பதனப் பெட்டியில் வைக்காமல் வெளியிலேயே வைத்திருப்பதால் அவை கெட்டுப் போய்விடுகின்றன. உணவு நஞ்சாவதற்கு மிக முக்கியமான காரணம், கைகளை சுத்தமில்லாமல் கையாள்வது, இறைச்சியை பதப்படுத்தாமல் வைத்திருப்பது போன்றவை'' என்கிறார், உணவுப் பாதுகாப்புத்துறையின் (சென்னை மாவட்டம்) நியமன அலுவலர் சதீஷ்குமார்.

பட மூலாதாரம், Getty Images
''இறைச்சி உணவகங்கள் மீது புகாரின் அடிப்படையில்தான் சோதனை நடத்தப்படுகிறதா?'' என அவரிடம் கேட்டோம். ''நாங்கள் பரவலாக தினமும் சோதனை நடத்தி வருகிறோம். தினம்தோறும் தகவல்களும் வந்து கொண்டேயிருக்கின்றன. சென்னையில் கடந்த 3 நாள்களாக 200 கடைகளுக்கும் மேல் சோதனை நடத்தியுள்ளோம். எங்கு ஷவர்மா விற்கப்பட்டாலும் அங்கு அதிகாரிகள் சென்று சோதனை நடத்துகின்றனர். இதில் சந்தேகம் வரக்கூடிய கடைகளில் இருந்து கோழி இறைச்சி மாதிரிகளை சேகரித்து ஆய்வகங்களுக்கு அனுப்புகின்றனர். இந்தச் சோதனையில் மிகக் குறைவான நபர்களே சிக்கியுள்ளனர். நாங்கள் போதிய விழிப்புணர்வு கொடுத்து வருவதால் மீந்துபோகும் பழைய கோழி இறைச்சிகளை விற்பதை பெரும்பாலான கடைக்காரர்கள் தவிர்த்துவிடுகின்றனர்'' என்கிறார்.
2 கேள்விகள்; 3 எச்சரிக்கைகள்
''கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத்துறை கொடுக்கும் அறிவுறுத்தல்கள் என்ன?'' என்றோம். '' தினமும் விலைக்கு வாங்கிய கோழிக்கறியை முறையாகக் கையாள வேண்டும். இரண்டாவதாக, பதப்படுத்துதல் முறையாக நடக்க வேண்டும். மூன்றாவதாக, அன்றைக்கு எடுத்த இறைச்சியை அன்றே முடித்துவிட வேண்டும். முதல் நாள் ஊற வைத்த கோழி இறைச்சியை மறுநாள் பயன்படுத்தக் கூடாது எனக் கூறி கடுமையான எச்சரிக்கைகளை வழங்கியுள்ளோம். பத்து கிலோ சிக்கன் விற்பனையாகிறது என்றால் அதனை மட்டும் வாங்க வேண்டும். 15 கிலோ சிக்கனை வாங்கிவிட்டு மறுநாள் பயன்படுத்துவது எவ்வளவு தவறானது என்பதையும் கூறி வருகிறோம். அதனைக் கடைக்காரர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்'' என்கிறார்.
''ஒரு கடையின் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி என்ன தண்டனை வழங்கப்படுகிறது?'' என்றோம். '' முதலில் கெட்டுப் போன இறைச்சி இருப்பது தெரியவந்தால் அங்குள்ள உணவுகளை முழுமையாகக் கைப்பற்றிவிடுவோம். அதனை யாரும் சாப்பிட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்போம். அடுத்து, விற்பனை செய்யக் கூடாது எனக் கூறி விற்பனை நிறுத்த அறிவிக்கையை (Stop Order Notice) கொடுப்போம். மூன்றாவதாக, அங்குள்ள சமையலறையை தற்காலிமாக மூடிவிடுவோம். அங்கு உள்ள அனைத்தையும் சோதித்த பிறகு எங்களுக்குத் திருப்தியாக இல்லாவிட்டால் உடனே நோட்டீஸ் கொடுத்து ஐந்தாயிரம் ரூபாயை அபராதமாக விதிப்போம்'' என்கிறார்.
'' நான்காவதாக, உணவுப் பாதுகாப்புத்துறையின் விதிகளின்படி முறையாக சமையலறை மாற்றியமைக்கப்பட்ட பிறகு உணவக உரிமையாளரிடம் இருந்து தகவல் வரும். அப்போது மீண்டும் ஆய்வு செய்து கடையைத் திறக்க அனுமதிப்போம். இதற்கு 15 நாள் அவகாசம் கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையும் தவறு நடந்தால் நிரந்தரமாக கடையை மூடுவதற்கு (emergency propagation notice) நடவடிக்கை எடுப்போம். இதற்கான உத்தரவை ஆணையரிடம் பெற்று கடையை சீல் வைத்துவிடுவோம். இதன்பின்னர் நீதிமன்ற நடவடிக்கையின் மூலம்தான் அவர்களால் கடையைத் திறக்க முடியும்'' என்கிறார் சதீஷ்குமார்.
மேலும், '' உணவை சாப்பிட்டு ஒருவர் இறந்துபோனால் உணவக உரிமையாளருக்கு பத்து வருட சிறைத் தண்டனையும் பத்து லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இதில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இணைந்து காவல்துறை அதிகாரிகளும் செயல்படுகின்றனர்'' என்கிறார்.
இறைச்சியைக் கையாள்வதில்தான் சிக்கலா?
'' உணவகங்கள் இறைச்சியைக் கையாள்வதில்தான் சிக்கலா?'' என தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் இட்லி இனியவனிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். '' உணவகத்தில் சாப்பிட்டதால் நஞ்சாகிவிட்டதாக சிலர் புகார் கூறுகின்றனர் என்றால், அங்கு உணவருந்திய நூறு பேரில் ஒரு சிலருக்குத்தான் ஒவ்வாமை ஏற்படுகிறது. சுகாதார முறையில் மக்களுக்கு உணவை கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதற்கான அளவுகோல் என்ன என்பதுதான் கேள்வி.

மேலும், சென்னை மாநகராட்சியின் குடிநீரானது குடிப்பதற்கு உகந்ததாக இல்லை என்பது மக்களின் கருத்தாக உள்ளது. எனவே இறைச்சியை மெட்ரோ குடிநீரில் ஊற வைப்பதா..அல்லது கேன் தண்ணீரில் ஊற வைப்பதா என்பதற்கு எந்தப் பதிலும் இல்லை. காற்று, குடிநீர் ஆகியவற்றை சுகாதாரமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமை. இதில் சுகாதாரம் என்பது கூட்டு முயற்சியாக உள்ளது. உணவகத்தில் கரப்பான் பூச்சி வந்துவிட்டால் பெரிய பிரச்னையாகப் பேசுகிறார்கள். இன்றைக்கு வீடுகளில் உள்ள பூஜை அறைகளில்கூட கரப்பான் பூச்சி உள்ளது'' என்கிறார்.
இங்கு பிரச்னைகள் ஏராளம்
தொடர்ந்து பேசுகையில், '' உணவகத்தில் உள்ள சமையலறைக்குத் தேவையான நீர், சுகாதாரம் உள்பட போதிய தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத சூழலில் அரசும் தனியார் நிறுவனங்களும் உள்ளன. ஒரு பிரச்னை வந்த பிறகு சென்று பார்ப்பதைவிட தொடக்கத்தில் இருந்தே அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். கேரள ஷவர்மா விவகாரத்தில் இறைச்சியில் பிரச்னை இருப்பதாகத் தகவல் வரவில்லை. அங்குள்ளவர்கள் சுகாதாரமற்ற முறையில் கையாண்டிருக்கலாம் என்ற செய்தியும் வருகிறது. இதையொட்டி இங்கும் சோதனை நடத்துகின்றனர். ஆனால், இங்கு குடிநீர் முதல் வெளியேறும் கழிவுநீர் வரையில் சிக்கல்கள் உள்ளன'' என்கிறார்.
'' தவிர இறைச்சியை பதப்படுத்தும் வசதிகள் சில கடைகளில் இருக்கலாம். சாலையோர கடைக்காரர்களுக்கு அதுபோன்ற வசதிகள் கிடைப்பதில்லை. நட்சத்திர விடுதிகளின் உணவு விலைக்கும் சாதாரண கடைகளின் கட்டணத்துக்கும் வித்தியாசம் உள்ளன. ஏராளமான மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையாக சாலையோரக் கடைகள் உள்ளன. எங்களை மட்டுமே குற்றவாளிகள் எனக் கூறுவதைவிடவும் கட்டமைப்பை உருவாக்குகிறவர்களை நோக்கியும் கைகள் காட்டப்பட வேண்டும். இதை ஒரு கூட்டு முயற்சி எனக் கருதி முறைப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை'' என்கிறார் 'இட்லி' இனியவன்.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












