நபிகள் பற்றிய சர்ச்சை கருத்து: "நூபுர் ஷர்மாவை ஆகஸ்ட் 10வரை கைது செய்ய வேண்டாம்" - உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், NUPUR SHARMA
தனக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் தன்னை கைது செய்யாமல் இருக்கவும், இந்த வழக்குகளை ஒரே விவகாரமாக கருதி விசாரிக்க உத்தரவிடக் கோரியும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா தாக்கல் செய்துள்ள மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், அடுத்த விசாரணை நடைபெறும் ஆகஸ்ட் 10ஆம் தேதிவரை அவருக்கு எதிரான கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பான நூபுரின் மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி. பர்திவாலா அடங்கிய அமர்வு இன்று பரிசீலித்தது. அப்போது நூபுரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மணீந்தர் சிங், "ஜூலை 1ஆம் தேதி நடந்த விசாரணையின்போது தமது கட்சிக்காரருக்கு எதிராக நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை செய்தது. அந்த கருத்துக்கள் ஊடகங்களில் வெளிவந்த பிறகு நூபுர் ஷர்மாவுக்கு பல முனைகளில் இருந்தும் கொலை மிரட்டல் வருகிறது. உச்ச நீதிமன்றம் தெரிவித்த அந்த கருத்துகளை நீக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக, டெல்லியில் நூபுருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பிறகு, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அவரது தலையை துண்டிக்கப் போவதாக மிரட்டியதாக உச்ச நீதிமன்றத்தில் மணீந்தர் சிங் கூறினார்.
"நூபுரை கொல்வதற்காக பாகிஸ்தானில் இருந்து வந்த ஒருவர் பாட்னாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் இதே விவகாரத்தில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது உண்மையிலேயே மிகப்பெரிய அச்சுறுத்தலான விஷயம்."
"சர்ச்சை கருத்து தொடர்பாக நூபுர் ஷர்மாவுக்கு எதிராக வெவ்வேறு வழக்குகள் தொடரப்பட்டாலும் அவை ஒரே விவகாரம் தொடர்பானவை. எனவே, நாடு முழுவதும் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட அனைத்து எஃப்.ஐ.ஆர்.களையும் இணைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்," என்று நூபுரின் வழக்கறிஞர் வாதிட்டார்.
எனவே, நூபுருக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் டெல்லியில் பதிவு செய்யப்பட்ட வழக்குடன் இணைக்கும்படி உத்தரவிட வேண்டும் என்று வழக்கறிஞர் மணீந்தர் சிங் கேட்டுக் கொண்டார்.
அப்போது நீதிபதி சூர்யகாந்த், இந்த விவகாரத்தை உயர் நீதிமன்றத்தில் முறையிட விரும்புகிறீர்களா என்று கேட்டார்.
அதற்கு மணீந்தர் சிங், "டெல்லியில் தான் முதலாவது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிதான் இப்போது விவகாரத்துக்கு உள்ளான வழக்கு. எங்கு வழக்கு தொடர்ந்தாலும் அச்சுறுத்தல் நிலவும் சூழலில் எங்கும் பயணம் செய்ய நூபுர் ஷர்மாவால் முடியாது. எனவே எல்லா வழக்கையும் ஒரே விவகாரமாக கருதி விசாரிக்க உத்தரவிட வேண்டும்," என்று வழக்கறிஞர் மணீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து நீதிபதிகள் அடுத்த விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை, நூபுர் ஷர்மாவுக்கு எதிரான கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டாம் என்று கூறி அவருக்கு தற்காலிக நிவாரணம் அளித்துள்ளனர்.


ஜூலை 1 விசாரணையில் என்ன நடந்தது?
பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா, ஞானவாபி மசூதி சர்ச்சை தொடர்பான தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற போது நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். பிறகு தமது கருத்துக்காக அவர் வருத்தம் கோரினார்.
ஆனால், அதற்குள்ளாக நூபுர் ஷர்மாவின் பேச்சு மத உணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதாக கூறி இஸ்லாமியர்கள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் போர்க்கொடி உயர்த்தினர். அவரை கைது செய்ய வலியுறுத்தி வாரக்கணக்கில் போராட்டங்களும் நடத்தப்பட்டன.

பட மூலாதாரம், Getty Images
இந்த நிலையில், முந்தைய விசாரணை நடைபெற்ற ஜூலை 1ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் நூபுர் ஷர்மாவின் கருத்துகளை கண்டிக்கும் வகையில் பேசினார்.
"இந்த விவகாரத்தால் நூபுர் ஷர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது அவரே நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகி உள்ளாரா?" என்று கூறினார். மேலும், "சிந்திக்காமல் அமைந்த அவரது பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் பற்றி எரிய வைத்துள்ளது," என்று நீதிபதி விமர்சித்தார்.
உதய்பூர் தையல்காரர் படுகொலை செய்யப்பட்ட துரதிருஷ்டவசமான சம்பவத்திற்கு நூபுரின் சர்ச்சை பேச்சை காரணம். நடந்த வன்முறைக்கு அவர் மட்டுமே தனிப்பட்ட பொறுப்பு என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
அத்துடன், "ஏற்கெனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதிப்பது, அரசியல் திட்ட நோக்கத்தை விளம்பரப்படுத்துவதைத் தவிர, வேறு என்ன நோக்கத்தில் இருக்க முடியும்?" என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்த விமர்சனங்களை முன்வைத்த பிறகு நூபுருக்கு எதிரான வழக்குகளை ஒரே விவகாரமாக கருதி விசாரிக்க உத்தரவிடும்படி அவரது சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து அந்த மனுவை நூபுர் ஷர்மா திரும்பப் பெற்றார்.
இந்த நிலையில், நீதிமன்றம் வெளிப்படுத்திய கடுமையான விமர்சனத்துக்கு பிறகு நூபுரின் உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாகக் கூறி மீண்டும் தமது கோரிக்கையை பரசிலீக்கும்படி அவரது சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Reuters
இந்தியா மட்டுமின்றி நூபுர் ஷர்மாவின் கருத்துகளுக்கு எதிராக பாகிஸ்தானிலும் எதிர்வினை கிளம்பியது. அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானும் நூபுர் ஷர்மாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். வளைகுடாவில் உள்ள சில நாடுகளும் நூபுர் ஷர்மாவின் கருத்துக்கு எதிர்வினையாற்றின.
இந்த நிலையில், நூபுர் ஷர்மாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உறுதிப்படுத்திய மத்திய அரசு, தற்போது அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கியிருக்கிறது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












