குஜராத் கலவரம்: நீதி கிடைத்தது யாருக்கு? நம்பிக்கை இழந்தது எத்தனை பேர்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ராக்ஸி காக்டேகர் சாரா
- பதவி, பிபிசி குஜராத்தி, அகமதாபாத்தில் இருந்து
40 வயதாகும் இத்ரிஷ் வோரா, ஆனந்த் மாவட்டத்தின் ஓட் கிராமத்தில் தனது பரம்பரைச் சொத்தை விட்டுச் சென்று விட்டார். அவரது பாட்டி, தாய் மற்றும் நெருங்கிய நண்பர் ஒரு கும்பலால் அவர் கண்முன்னே படுகொலை செய்யப்பட்டனர். அந்தக் கூட்டத்தில் அவரது பள்ளி நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரும் இருந்தனர்.
குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இத்ரிஷ் வோராவும் ஒருவர். தனக்கு நீதி கிடைக்கவில்லை என்று அவர் கருதுகிறார். அவர் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள சமர்தா என்ற சிறிய கிராமத்தில் வசித்து வருகிறார். உங்கள் மூதாதையர் சொத்தை விட்டுவிட்டு ஏன் சென்றீர்கள் என்று நாங்கள் அவரிடம் கேட்டபோது, நான் திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்று இத்ரிஷ் கூறினார்.
"நான் பார்த்ததை யாரும் பார்க்கக் கூடாது. இது யாருக்கும் நடக்கக் கூடாது" என்கிறார் அவர்.
தமது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்ட வழக்கில் 80 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் யாரும் சிறையில் இல்லை என்கிறார் இத்ரிஷ். அனைவருக்கும் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துள்ளது என்கிறார் அவர்.
நரோடா பாட்டியா வழக்கின் முக்கிய சாட்சியாக இருந்தவர் சலீம் ஷேக். இவர், பாஜக முன்னாள் எம்எல்ஏ மாயா கோட்னானிக்கு எதிராக சாட்சியம் அளித்திருந்தார். கடந்த 20 ஆண்டுகளாக நீதிக்காக போராடி வருவதாக சலீம் ஷேக் கூறுகிறார்.
விசாரணை நீதிமன்றம், நரோடா பாட்டியா வழக்கில் முக்கிய சதிகாரராக கோட்னானியை கருதியது. ஆனால், கோட்னானிக்கு ஜாமீன் கிடைத்தது. இத்தனை வருட போராட்டத்தின் பலன் என்ன என்று கேட்கிறார் சலீம் ஷேக்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு திருப்பம்
ஜாகியா ஜாஃப்ரியின் புகார் மீதான இறுதித் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியது. அந்த தீர்ப்புக்குப் பிறகு குஜராத் காவல்துறை நடவடிக்கை எடுத்து, மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா செதல்வாட், முன்னாள் டிஜிபி ஆர்பி ஸ்ரீகுமார், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தது.
இவர்கள் மூவரும் மாநில அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த சதி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குஜராத் அரசின் இந்த நடவடிக்கை தேசிய மற்றும் சர்வதேச அளவிலும் விமர்சிக்கப்படுகிறது.
ஜாகியா ஜாஃப்ரியின் புகாரின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம், சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாகியா ஜாஃப்ரி, முன்னாள் காங்கிரஸ் எம்பி எஹசான் ஜாஃப்ரியின் மனைவி.
2002ஆம் ஆண்டு கலவரத்தில், குல்பர்கா சொசைட்டி படுகொலையில் எஹ்ஸான் ஜாஃப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர். அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதி உட்பட 63 பேர் மீது ஜாகியா ஜாஃப்ரி புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக்குழுவை (எஸ்ஐடி) அமைத்தது.
எஸ்ஐடி அமைக்கப்பட்ட பிறகு, அதனிடம் 9 வழக்குகளின் விசாரணை ஒப்படைக்கப்பட்டது. அந்த ஒன்பது வழக்குகளின் தற்போதைய நிலையை அறிய பிபிசி முயற்சித்தது.
முதலில் கோத்ரா சம்பவத்தைப் பார்ப்போம். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் கலவரம் தொடங்கியது.

பட மூலாதாரம், SEBASTIAN D'SOUZA/AFP VIA GETTY IMAGES
1. கோத்ரா சம்பவம்
கோத்ராவில் சாபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்6 ரயில் பெட்டி மீதான தாக்குதலுக்குப் பிறகுதான் குஜராத் முழுவதும் கலவரம் தொடங்கியது. கோத்ராவில் ஒரு கும்பல் நடத்திய வன்முறைத் தாக்குதலுக்குப் பிறகு, ரயிலின் S6 பெட்டிக்கு தீ வைக்கப்பட்டது, இதில் 59 பேர் கொல்லப்பட்டனர்.
இறந்தவர்களில் பெரும்பாலானோர் அயோத்தியிலிருந்து ஆமதாபாத் திரும்பிக்கொண்டிருந்த கரசேவகர்கள். இந்த சம்பவம் 2002 பிப்ரவரி 27 ஆம் தேதி நடந்தது. இந்த வழக்கில் 103 பேரை கோத்ரா போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு எஸ்ஐடி விசாரணை நடத்தி மேலும் 31 பேரை கைது செய்தது.
இந்த வழக்கில் ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட 26 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 34 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். 67 பேர் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட 67 பேரில் 3 பேர் இறந்துவிட்டனர்.
குஜராத் உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 13 முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் இரண்டு மேல்முறையீடுகள் முடிக்கப்பட்டுவிட்டன. மற்ற எல்லா மேல்முறையீடுகளும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குடன் தொடர்புடைய வழக்கறிஞர் ருலாமின் அகிலா பிபிசி குஜராத்தியிடம் பேசுகையில், இந்த வழக்கில் 10 பேர் தற்போது சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருவதாகவும், சிலர் ஜாமீனில் இருப்பதாகவும் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
2. சர்தார்புரா சம்பவம்
வடக்கு குஜராத்தின் பாடன் மாவட்டத்தில் சர்தார்புரா என்ற சிறிய கிராமம் உள்ளது. பாடன் மாவட்டத்தின் சர்தார்புரா கிராமத்தில் மூன்று தனித்தனி முஸ்லிம் குடியிருப்புகள் இருந்தன. இந்த மூன்று குடியிருப்புகளும் 2002 மார்ச் 1 ஆம் தேதி இரவு ஒரு கும்பலால் தாக்கப்பட்டன.
கூட்டத்திற்கு பயந்து 33 பேர் ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்தனர். இந்த வீட்டைக் கண்டுபிடித்த கும்பல், மின் கம்பி வழியாக மின்சாரத்தை பாய்ச்சியது. இதில் 29 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
முஸ்லிம் சமுதாய மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்பில்லாதபடி அந்த கும்பல், கிராமத்தின் எல்லா சாலைகளையும் அடைத்தது.
உச்ச நீதிமன்றம் எஸ்ஐடி ஐ அமைப்பதற்கு முன், இந்த வழக்கில் 54 பேரை உள்ளூர் போலீசார் கைது செய்து, அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். எஸ்ஐடி விசாரணையை மேற்கொண்டபோது, மேலும் மூன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்த 76 பேரில் 31 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. அதே சமயம் ஒரு பதின்பருவத்தினர் உட்பட 43 பேர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட 76 பேரில் இருவர் வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் இறந்தனர். குற்றவாளிகள் குஜராத் உயர் நீதிமன்றத்தில் நான்கு மேல்முறையீடுகளை தாக்கல் செய்தனர். அவை அனைத்தும் 2012 ஜனவரியில் தீர்க்கப்பட்டன. அதே நேரம் உச்ச நீதிமன்றத்தில் மூன்று மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டு, அவை அனைத்துமே நிலுவையில் உள்ளன.
இரண்டு முக்கிய நபர்களான, கிராமத்தலைவர் கச்ராபாய் படேல் மற்றும் முன்னாள் கிராமத்தலைவர் கனுபாய் படேல் ஆகியோர் படுகொலையில் சம்மந்தப்பட்டுள்ளனர் என்று 'தி வயர்' என்ற இணையதளத்தின் செய்தி தெரிவிக்கிறது. அவர்கள் இருவரும் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என்றும் கூறப்படுகிறது.
உச்ச நீதிமன்றம் 2003 இல் கலவரம் தொடர்பான மற்ற வழக்குகளுடன் இந்த வழக்கின் விசாரணையையும் நிறுத்தி வைத்தது. இந்த வழக்கு 2008 இல் சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் 2011 நவம்பரில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 31 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. அவர்களில் 30 பேர் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

பட மூலாதாரம், Getty Images
3. ஓட் கிராமம்
ஆனந்த் மாவட்டத்தின் ஓட் கிராமத்தில், மூன்று வெவ்வேறு சம்பவங்களில் 27 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இருப்பினும், இரண்டு வழக்குகளில் மட்டுமே புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளின் விசாரணையும் எஸ்ஐடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஓட் கிராமத்தில் வன்முறை சம்பவம் தொடர்பான முதல் வழக்கு 2002 மார்ச் 1 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. பிராவலி பாகோல் பகுதியில் 23 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாக வழக்கின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்களை அடையாளம் கூட காண முடியாத அளவிற்கு உடல்கள் எரிந்திருந்தன.
போலீஸாரால் இரண்டு பேரை மட்டுமே அடையாளம் காண முடிந்தது. மீதமுள்ளவர்கள் காணாமல் போனவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். கம்போலஜ் காவல் நிலையத்தில் ரஃபீக் முகமது அப்துல் கலீஃபா என்பவர் வழக்குப் பதிவு செய்தார்.
விசாரணை செய்து 51 பேரை கைது செய்த போலீசார், குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட 51 பேரில் 23 பேரை குற்றவாளிகள் என்று கூறிய எஸ்ஐடி, மற்ற 23 பேரையும் விடுவித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 3 பேர் விசாரணையின் போது இறந்துவிட்டனர்.
இந்த வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 6 முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 23 குற்றவாளிகளில் 19 பேரின் தண்டனையை குஜராத்
உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 2020 ஆம் ஆண்டில் 15 பேருக்கு ஜாமீன் வழங்கியது.

பட மூலாதாரம், Getty Images
4. மூன்று பேர் எரிக்கப்பட்ட ஓட் கிராமத்தின் மற்றொரு சம்பவம்
ஒட் கிராமத்தில் இந்த இரண்டாவது சம்பவம், முதல் சம்பவம் நடந்த ஒரு நாள் கழித்து நடந்தது. இது தொடர்பாக 2002 மார்ச் 5ஆம் தேதி காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. கிராமத்தின் நடுவே இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் 44 பேரை உள்ளூர் போலீசார் கைது செய்து, அவர்கள் அனைவருக்கும் எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
எஸ்ஐடி விசாரணைக்குப் பிறகு மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆறு பேரை இன்றுவரை காணவில்லை. மற்ற இரண்டு குற்றவாளிகள் விசாரணையின் போது இறந்தனர்.
இந்த வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என்று கூறிய கீழ் நீதிமன்றம், 30 பேரை விடுதலை செய்தது. இந்த வழக்கு தொடர்பான 4 மேல்முறையீடுகள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த வன்முறை சம்பவத்தில் இத்ரிஷ் வோரா தனது பாட்டி, தாய் மற்றும் நெருங்கிய நண்பரை இழந்துள்ளார். இந்த வழக்கில் இத்ரிஷ் முக்கிய சாட்சியாக உள்ளார். அவரும், அவரது தந்தையும் 10 மணி நேரத்திற்கும் மேலாக தங்களை கழிவறைக்குள் பூட்டிக்கொண்டதால், அந்த கும்பலிடம் இருந்து தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள முடிந்தது.
தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் அழித்தவர்கள் சுதந்திரமாக வெளியே இருப்பதை தன்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்கிறார் இத்ரிஷ். 20
ஆண்டுகளாக அலைந்தும் நீதி கிடைக்கவில்லை என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
5. நரோடா பாட்டியா வழக்கு
2002 பிப்ரவரி 28 ஆம் தேதி, அன்று, பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் தலைமையிலான கும்பல், நரோடா பாட்டியா பகுதியைச் சுற்றி வளைத்து, பல வீடுகளுக்குத் தீ வைத்தது. இந்த படுகொலையில் 97 பேர் கொல்லப்பட்டனர்.
எஸ்ஐடி அமைக்கப்படுவதற்கு முன் உள்ளூர் போலீசார் இந்த வழக்கில் 46 பேரை கைது செய்து நான்கு குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தனர். பின்னர் 24 பேரை எஸ்ஐடி கைது செய்து மேலும் 4 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 70 பேரில், ஏழு பேர் விசாரணையின் போது இறந்தனர். இருவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் 32 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் காலமாகிவிட்டனர்.
பாஜக அமைச்சர் மாயா கோட்னானியை கலவரத்திற்கு திட்டமிட்டவர் என்று கூறி அவருக்கு 28 ஆண்டுகள் சிறை தண்டனையை கீழ்நிலை நீதிமன்றம் விதித்தது. இந்த வழக்கில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த பாபு பஜ்ரங்கி என்பவரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
மாயா கோட்னானி உட்பட 32 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. . மாயா கோட்னானி எம்எல்ஏ பொறுப்பை சரியாக நிறைவேற்றவில்லை என்று நீதிபதி தீர்ப்பு வழங்கும்போது குறிப்பிட்டார். அவர் கைது செய்யப்பட்டபோது, நரேந்திர மோதி அரசில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தார்.
இந்த வழக்கில், தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மாயா கோட்னானிக்கு ஆதரவாக SIT முன் சாட்சியமளித்தார், அதில் அவர் கோட்னானியை முதலில்
சட்டப்பேரவையிலும், பின்னர் சோலா சிவில் மருத்துவமனையிலும் பார்த்ததாகக் கூறினார்.

பட மூலாதாரம், THE INDIA TODAY GROUP/GETTY
2002 கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட பிறகும் 2007 தேர்தலில் கோட்னானி போட்டியிட்டார். எஸ்ஐடி அமைக்கப்பட்ட பிறகு 2009ல் அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் 12 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் 2018 ஏப்ரல் 25 ஆம் தேதி தீர்க்கப்பட்டன..
இந்த வழக்கில் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 32 பேரில், பாஜக அமைச்சர் மாயா கோட்னானி உட்பட 18 பேரை உயர்நீதிமன்றம் விடுவித்தது. 13 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. தண்டனை பெற்றவர்களில் பாபு பஜ்ரங்கியும் அடங்குவார்.ஆனால் ஆயுள் தண்டனை, 21 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட 13 பேரில் 4 பேருக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் ஜாமீன் வழங்கினார். நரோடா பாட்டியா வழக்கின் தீர்ப்பு மீது விவாதம் சாத்தியம் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தற்போது 10 மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ளன. உச்சநீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதாக வழக்கின் முக்கிய சாட்சியான சலீம் ஷேக் பிபிசியிடம் தெரிவித்தார். "நான் இன்றும் நரோடா பாட்டியாவில் வசிக்கிறேன். ஆனால் அந்த கலவரத்தால் ஏற்பட்ட இடைவெளியை எந்த நீதிமன்றமும் இட்டு நிரப்ப முடியாது," என்று அவர் கூறினார்.
6. நரோடா கிராம வழக்கு
நரோடா பாட்டியா அருகே உள்ள நரோடா கிராமத்தில் 11 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். போலீஸ் புகாரில் 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
எஸ்ஐடி விசாரணையை மேற்கொண்ட பிறகு, 37 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது. எஸ்ஐடி அளித்த ஆறு குற்றப்பத்திரிகைகள் உட்பட மொத்தம் ஒன்பது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 20 ஆண்டுகள் ஆகியும் இந்த வழக்கின் விசாரணை தொடங்கவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் எம்.எம். திர்மிஃஸி பிபிசியிடம் , " வழக்கு விசாரணை தொடங்கும் நேரம் வரும்போது, நீதிபதி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் அல்லது பதவி உயர்வு பெற்றதால், நடவடிக்கை நின்றுவிடும். இது பல முறை நடந்துள்ளது. இப்போது புதிய நீதிபதிகள் வந்திருக்கிறார்கள்.. வழக்கின் விசாரணை நடவடிக்கை தொடங்கும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்," என்றார்.

பட மூலாதாரம், KALPIT BHACHECH
7. தீப்தா தர்வாஜா
2002 பிப்ரவரி 28 ஆம் தேதியன்று, மெஹ்சானா, விஸ்நகரின் தீப்தா தர்வாஜா பகுதியில் 11 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். அன்றைய தினம் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், 79 பேரை உள்ளூர் போலீசார் கைது செய்தனர். அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது. எஸ்ஐடி விசாரணையைத் தொடங்கியபோது, மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டு மொத்தம் 5 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் குற்றவாளிகள் என கீழ்நிலை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் மொத்தம் 13 மேல்முறையீட்டு
மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அவை அனைத்தும் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 85 பேரில், விஸ்நகர் பாஜக முன்னாள் எம்எல்ஏ பிரஹலாத் படேல் மற்றும் மாநகராட்சி பாஜக தலைவர் தஹ்யாபாய் படேல் உள்ளிட்ட 61 பேர் விடுவிக்கப்பட்டனர்.
8. பிரிட்டிஷ் குடிமக்கள் வழக்கு
2002 பிப்ரவரி 28 அன்று, மூன்று பிரிட்டிஷ் குடிமக்களும், அவர்களது வண்டி ஓட்டுனரும் ஒரு கும்பலால் கொல்லப்பட்டனர். இம்ரான் தாவூத் என்ற நபர் பிரிட்டனில் இருந்து வந்திருந்த தனது மூன்று உறவினர்களுடன் காரில் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகனத்தை நிறுத்திய கும்பல், அதே இடத்தில் 2 பேரை தீ வைத்து எரித்தது. இரண்டு பேர் தப்பி ஓடினர். ஆனால் துரத்திச்சென்ற கும்பல் அவர்களையும் கொன்றது. போலீசாரின் உதவியுடன் இம்ரான் தாவூத் தன்னை காப்பாற்றிக் கொண்டார்.
இந்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்திருந்த நிலையில், அனைவரும் கீழ் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீதான குற்றத்தை நிரூபிக்க முடியாததால் அவர்களை விடுவிப்பதைத் தவிர தனக்கு வேறு வழியில்லை என்று 2015 இல் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியதாக என்டிடிவியின் ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. சாட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காண முடியவில்லை என்பதை எஸ்ஐடியும் ஒப்புக்கொண்டதாக தனது 182 பக்க உத்தரவில் நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்த வழக்கின் மூன்று முக்கிய சாட்சிகள் விசாரணையின் போது தங்கள் வாக்குமூலத்தை மாற்றிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், NISHRIN JAFRI HUSSAIN/FACEBOOK
9. குல்பர்க் படுகொலை
2002 பிப்ரவரி 28 ஆம் தேதி, சமன்புராவின் குல்பர்க் சொசைட்டியில் வசித்த 69 பேர் ஒரு கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் முன்னாள் காங்கிரஸ் எம்பி எஹ்ஸான் ஜாஃப்ரியும் ஒருவர். இந்த வளாகத்தில் 19 பங்களாக்கள் மற்றும் 10 குடியிருப்புகள் உள்ளன.
மேகானிநகர் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்த உள்ளூர் போலீஸார் 46 பேரை கைது செய்தனர். எஸ்ஐடியின் விசாரணை தொடங்கிய பின்னர், இந்த வழக்கில் மேலும் 28 பேர் கைது செய்யப்பட்டு மொத்தம் 12 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் 24 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். 39 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
உயர்நீதிமன்றத்தில் 17 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் தற்போது உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
காவல்துறையால் கைது செய்யப்பட்ட அனைவரும் அடையாளம் காணப்பட்டபிறகும், எதுவும் நடக்காதது போல் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது என்று குல்பர்க் சொசைட்டி படுகொலையில் தனது உறவினர்களை இழந்த 64 வயதான சாய்ரா பானு குறிப்பிட்டார்.
டீஸ்டா செதல்வாட், ஆர்.பி.ஸ்ரீகுமார் போன்ற மனித உரிமை ஆர்வலர்களின் உதவியால் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய முடிந்தது என்று சாய்ரா பானு கூறினார்.
குல்பர்க் சொசைட்டி கலவரத்தில் மகனை இழந்த தாரா மோதி, "எங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சிறைக்கு வெளியே இருக்கிறார்கள். எஸ்ஐடி தனது பணியை செய்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் உயர் நீதிமன்றங்களுக்குச் சென்று விடுதலை பெற்றுவிடுகிறார்கள். எங்கள் போராட்டம் வீண் போனதாக நாங்கள் உணர்கிறோம்," என்றார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












