உதய்பூர் படுகொலை பதற்றத்துக்கு மத்தியில் ஊரடங்கை தளர்த்திய அரசு - கள நிலவரம்

- எழுதியவர், நிதின் ஸ்ரீவாஸ்தவ், மொஹர் சிங் மீனா
- பதவி, ஜெய்பூர் மற்றும் உதய்பூரிலிரிந்து
ராஜஸ்தானில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி கரௌலியிலும், மே 2ஆம் தேதி ஜோத்பூரிலும், ஜூன் 28ஆம் தேதி உதய்பூரிலும் நடந்த வகுப்புவாத வன்முறை சம்பவங்களுக்கு எதிராக இந்தியா முழுவதும் குரல்கள் ஒலித்தன.
வன்முறை, வகுப்புவாதம் கலந்த இந்த மத்திய கால வரலாறு மற்றும் கலாசாரம் மட்டுமின்றி, அமைதிக்காகவும் பெரிதும் அறியப்பட்ட மாநிலம்தான் ராஜஸ்தான். ஆனால், இப்போது நடக்கும் மிகப்பெரிய சம்பவங்கள் சமூக ஊடகங்களில் பெரியளவில் டிரெண்டாகி பேசுபொருளாகி இருக்கின்றன.
அடுத்தடுத்து வந்த மூன்று மாதங்களில், மூன்று பெரிய சம்பவங்கள் நடந்த போதிலும், இத்தகைய சூழ்நிலைகளில் கடைப்பிடித்திருக்க வேண்டிய கடுமையை ராஜஸ்தான் அரசு நிர்வாகம் காட்டாதது போலவே தோன்றுகிறது.
அரசின் கடுமை என்பது வெறும் காகிதத்தில் மட்டும்தான் உள்ளதா, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க ராஜஸ்தான் அரசு நிர்வாகம் என்ன செய்கிறது போன்ற கேள்விகள் இங்கே எழுப்பப்படுகின்றன.
ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவதற்கு அனுமதிக்கப்படக்கூடிய ஒரு நிகழ்ச்சி, ஒரு மாநிலத்தின் பாதுகாப்பை விட அதிமுக்கியமானதாக இருக்க முடியுமா?
உதய்பூரில் 144 தடை உத்தரவு அமல்
கன்ஹையா லால் கொலை சம்பவத்தையடுத்து, உதய்பூர் நகரின் ஏழு காவல் நிலைய வரம்புக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து இடங்களிலும் தற்போது போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கன்ஹையா லால் கொல்லப்பட்ட இரவில் இருந்து, உதய்பூர் முழுவதும் கைபேசி வழி இன்டர்நெட் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
உதய்பூரில் உள்ள அசோக் நகர் பகுதியில் மறுதினம் பிற்பகலில் கன்ஹையா லாலின் உடல் தகனம் செய்யப்பட இருந்தது. ஊரடங்கு அமலில் இருந்தபோதிலும், சுமார் 2,000 பேர் மோட்டார் சைக்கிள்களில் கன்ஹையா லால் என்ற பெயரில் முழக்கங்களை எழுப்பியபடி மயானத்தை அடைந்தனர்.
அங்கிருந்து புறப்பட்ட மெஹ்ராஜ் சிங் என்பவரிடம், "இந்த ஊரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதா?" என்று பிபிசி கேட்டது.
அதற்கு அவர், "ஒரு ராஜஸ்தானி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். அவருக்கு அஞ்சலி செலுத்துவதை இங்கே யாரால் தடுக்க முடியும்," என்று பதிலளித்தார்.
கன்ஹையா கொலைக்குப் பிறகு உதய்பூரில் மூன்றாம் நாளாக ஊரடங்கு தொடர்ந்தது. ஆனால் சில அமைப்புகள் ஜூன் 30ஆம் தேதியன்று, நகரில் 'மௌன ஊர்வலம்' அறிவித்தன, ஊர்வலம் டவுன்ஹாலில் இருந்து புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்த பிறகுதான் முடியும் என்று உறுதியளித்தனர்.
இங்கு சில சமூக விரோதிகள், ஊர்வலத்தின் மீது கற்களை வீசினர். அதனால் போலீசார் மிதமான பலத்தைப் பயன்படுத்திக் கூட்டத்தைக் கையாள வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், ANI
'பழிக்குப் பழி' கோஷம்
இந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்களில் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சில பெண்கள், மத முழக்கங்களை எழுப்பினர். அத்துடன் கன்ஹையா லாலின் கொலைக்கு 'பழிவாங்குவோம்' என்றும் மிரட்டினர்.
ஊர்வலத்தில் பங்கேற்க வந்த மிருகாக்ஷி குமாரி, "எங்களை கோழைகள் என்று யாரும் நினைக்க வேண்டாம். எங்கள் வீடுகள் தாக்கப்படும் போதெல்லாம் மக்கள் மும்மடங்கு பதிலடி கொடுப்பார்கள்," என்றார்.

இவை அனைத்தும் உதய்பூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள சாலையில் நடந்தன. 'மௌன ஊர்வலம்' என்று அறிவிக்கப்பட்ட ஊர்வலத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டது இங்கே கவனிக்கத்தக்கது. அதுவும் அனைத்தும் உதய்பூரில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நேரத்தில் நடந்தன.
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாடு காரணமாக, உதய்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக யாத்திரை நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. ஆனால், இப்போது மிகவும் பதற்றமான சூழலில், வெள்ளிக்கிழமை உதய்பூரில் ஊர்வலம் செல்ல ஏதுவாக ஊரடங்கு உத்தரவுக்கு வகை செய்யும் பிரிவு 144 தளர்த்தப்பட்டிருக்கிறது.
இப்போது எழும் கேள்வியே, இங்குள்ள பதற்றமான சூழலில், காவல்துறை நிர்வாகத்தின் கண்டிப்பிற்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு வருவது ஏற்புடையதா? என்பதுதான்.
இந்தக் கேள்வியை உதய்பூர் கோட்ட ஆணையர் ராஜேந்திர பட்டிடம் பிபிசி கேட்டது.
"காவல்துறையினர் பாதுகாப்பு குறித்து முழு நம்பிக்கையுடன் உள்ளனர். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக அனைத்து மதத்தினருடன் பேசி ஊர்வலகம் சமூகமாக நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். அதன்படியே யாத்திரைக்கு அனுமதிஅளிக்கப்பட்டது" என்கிறார் ராஜேந்திர பட்.
மேலும் அவர், "போதுமான எண்ணிக்கையில் போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டன. ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ரத யாத்திரை பாதைகளில் மட்டும்தான் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது" என்று விளக்கினார்.
இருப்பினும், பிபிசி குழுவினர் ரத யாத்திரை குழுவினருடன் மணிக்கணக்கில் சென்றபோதும் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒரு ட்ரோன் கூட தென்படவில்லை. ரத யாத்திரையில் எத்தனை பேர் பங்கேற்கலாம் என்பதற்கான கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.
பல்வேறு இடங்களில் இருந்து வெவ்வேறு மக்கள் வெளியே வந்தனர். பலரும் நடனம் ஆடி, பாட்டுப்பாடி யாத்திரையில் இணைந்தனர்.

காவல் துறை நிர்வாகம் குறித்த கேள்வி
ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்பூரில் மட்டுமல்ல, வகுப்புவாத பதற்றம் மற்றும் வன்முறை ஏற்பட்ட வேறு சில மாவட்டங்களிலும் காவல்துறை நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
வகுப்புவாதக் கலவரத்தை அடுத்து கரௌலி மற்றும் ஜோத்பூரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, 144 தடை விதிக்கப்பட்டது மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டது. இரு இடங்களிலும் சில நாட்களாகப் பதற்றமான சூழல் நிலவியது. அப்போதும் மக்கள் வீதியில் இறங்கி, ஆர்ப்பாட்டம், தர்னாவில் ஈடுபட்டனர்.
கரௌலியில், ராம நவமி அன்று ஊர்வலம் உள்ளிட்ட அனைத்து மத நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. ஆனால், ஈத் பண்டிகைக்கு முந்தைய நாள் இரவு ஜோத்பூரில் நடந்த கலவரத்திற்குப் பிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடிய பெருநாள் தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இங்கு பெருநாள் தொழுகைக்குப் பிறகு மீண்டும் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதுடன், தீ வைப்பு, நாசவேலை, கல் வீச்சு நடந்ததாக புகார்கள் பதிவு செய்யப்பட்டன. இறுதியில், அந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, காவல்துறை ஊரடங்கை அமல்படுத்தியது.
தற்போது ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் 144 தடை அமலில் உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் இன்டர்நெட் சேவை நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இத்தனைக்கும் மத்தியில், அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 27 அன்று ஜோத்பூரில் ஆர்பிபியின் யுவ ஆக்ரோஷ் பேரணி நடைபெற்றது. இதில் சுமார் 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இத்தகைய சூழ்நிலையில், 144வது பிரிவை அமல்படுத்துவது மற்றும் அதற்கு மக்கள் இணங்குவது சாத்தியம்தானா என்ற கேள்விகளும் எழுகின்றன.
144 தடைக்குப் பிறகும், ஜெய்பூர், சிகார், ஜெய்சால்மர், பாலி, ஜோத்பூர், உதய்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மக்கள் மௌன ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கெலாட் அரசுக்கு கேள்வி
மறுபுறம், ராஜஸ்தானில் எதிர்கட்சியான பாரதிய ஜனதா கட்சி, கரௌலியில் நடந்த கலவரத்திற்குப் பிறகு ராம நவமி ஊர்வலத்தைத் தடை செய்ததற்காகவும், ஜோத்பூரில் நடந்த கலவரத்திற்குப் பிறகு காலையில் ஈத் அன்று ஒன்று கூடுவதைத் தடுக்காததற்காகவும் அங்கு வன்முறை ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் அசோக் கெலாட்டின் காங்கிரஸ் அரசாங்கத்தை பாரதிய ஜனதா கட்சி இலக்கு வைத்து விமர்சனம் செய்கிறது.
உதய்பூரில் கடுமையான வன்முறைச் சம்பவம் நடந்த போதிலும் சரி, பதற்றமான சூழலிலும் ரத யாத்திரையை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கியதிலும் சரி, அவற்றின் பின்னணியில் மாநில அரசுக்கு எதிர்கட்சிகள் கொடுத்த அழுத்தம் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மூத்த அரசியல் மற்றும் சமூக ஆய்வாளர் பிரதாப் பானு மேத்தா, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில், "அரசியல் கட்சி எதுவாக இருந்தாலும் சரி. கன்ஹையா கொலை போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க உறுதியான நம்பிக்கை கொண்டதாக அரசின் முடிவுகள் இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கு நன்மை நடக்கும். இல்லையெனில் ராஜஸ்தானிலும் விரைவில் தேர்தல் வரக்கூடும். " என்று எச்சரித்துள்ளார்.
அதே நேரத்தில், ராஜஸ்தான் கேபினட் அமைச்சர் பிரதாப் சிங் காச்சரியாவாஸ், ஊரடங்கு உத்தரவுக்கும் பதற்றமான சூழலுக்கு மத்தியிலும் தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் கூடுவது மக்களின் நலனுக்கு எதிரானது என்று கூறுகிறார்.
அமைச்சர் காச்சரியாவாஸ் பிபிசியிடம், "ரத யாத்திரையை மேற்கொள்வதன் மூலம் சூழல் எந்த வகையிலும் மோசமடையாது" என்றும் கூறினார்.
மேலும் அவர், "கன்ஹையா கொலையை மக்கள் உண்மையில் எதிர்க்கிறார்கள், ஊரடங்கு உத்தரவை இது பாதிக்காது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து போராட்டங்களிலும், இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் தாமாக முன்வந்து ஆதரவு தெரிவித்தனர். முதல்வரே உதய்பூர் வந்துள்ளது, மக்களுக்கு அரசின் மீதுள்ள நம்பிக்கையை அதிகரிக்கும். மாநிலத்தில் மோசமான சூழல் இருக்காது." என்று தெரிவித்தார்.
பரபரப்பான சூழலில் பெரிய அளவில் தெருக்களில் இறங்கிப் போராடும் எதிர்கட்சியான பாஜகவின் உத்தியும் இங்கே தெளிவாகத் தெரிகிறது.
ஊரடங்கு உத்தரவின் போது ஜகந்நாத் ரத யாத்திரையை அனுமதிப்பது குறித்த விவாதத்தில், பாஜகவின் வசுந்தரா ராஜே அரசாங்கத்தின் உள்துறை அமைச்சராக இருந்த தற்போதைய எதிர்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியா பிபிசியிடம் பேசுகையில், "ரத யாத்திரை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. கோஷங்கள் எழுப்பக் கூடாது உள்ளிட்ட அனைத்து விதிகளும் பின்பற்றப்பட்டன. அவற்றின் அடிப்படையில்தான் யாத்திரை நடத்தப்பட்டது," என்று கூறினார்.
இந்துக்களின் பண்டிகைகளுக்கு மட்டும் ஊரடங்கு சட்டம் விதிப்பது சரியா?" என்றும் அவர் கேட்கிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












