உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் மத மோதல்: ஒரே மதத்தைச் சேர்ந்த 36 பேர் கைது

kanpur hindu muslim violence

பட மூலாதாரம், Ani

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு நிகழ்ந்த மத வன்முறை தொடர்பாக 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதகாகவும் கான்பூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

இந்த 36 பேரும் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள்.

வெள்ளிக்கிழமை மதியம் 3.30 மணிக்கு வன்முறை நிகழ்ந்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காவல் ஆய்வாளர் நவாப் அகமது அளித்த புகாரின் பேரில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வைத்து காவல்துறையினர் தாக்கப்பட்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

உதவி ஆய்வாளர் ஆரிஃப் ராசா என்பவர் அளித்த புகாரின் பேரில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் நுபுர் சர்மாவின் கருத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் கல் எறிதல் உள்ளிட்ட வன்முறை நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

கான்பூர் நகரின் மேகங்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நேற்று நடந்த மோதல் தொடர்பான காணொளிக் காட்சிகள் மூலம் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சர்ச்சைக்கு காரணமான பாஜக நிர்வாகியின் கருத்து

பாஜக நிர்வாகி நுபுர் சர்மா என்பவர், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் முகமது நபியை பற்றி அவதூறாக பேசியதாகக் கூறி, ஒரு தரப்பினர் ஆவேசம் அடைந்தனர். இதனை பிரச்னையாக்கி கான்பூரில் கடைகளை மூடச் சொல்லி அவர்கள் போராட்டம் நடத்தினர். இன்னொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் வெடித்தது.

வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின், அப்பகுதியில் இருந்த கடைகளை மூட சிலர் முயன்றனர். இதற்கு இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பில் மோதல் உண்டானது. ஒருவர் மீது ஒருவர் கற்களையும் வீசிக்கொண்டனர், என்று உத்தர பிரதேச மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

மத ரீதியான மோதல் நடந்த சமயத்தில் பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் கான்பூரில் இருந்தனர்.

பட மூலாதாரம், Ani

படக்குறிப்பு, மத ரீதியான மோதல் நடந்த சமயத்தில் பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் கான்பூரில் இருந்தனர்.

போலீசார் தலையிட்டு மோதலில் ஈடுபட்ட கும்பலை தடியடி நடத்தி கலைத்தனர். பின்னர் கண்ணீர் புகை குண்டுகள் வீசி அவர்களை விரட்டியடித்தனர். மோதலில் இரு பிரிவினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் சாலை முழுவதும் கற்கள் சிதறிக்கிடந்தன.

இந்த வன்முறை தொடர்பான காணொளிகளும் நேற்று வெளியாகின. இதில் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசிக்கொள்வது தெளிவாகத் தெரிகிறது. கலைந்து செல்லுமாறு சிலரிடம் காவல்துறையினர் கேட்பதையும் அந்தக் காணொளிகள் காட்டுகின்றன.

இது தொடர்பாக, பிபிசி செய்தியாளர் ஆனந்த் ஜனானேவிடம் பேசிய கான்பூர் காவல் ஆணையர் விஜய் மீனா, கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சொத்து பறிமுதல் செய்யப்பட்டு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வன்முறைச் சம்பவம் நிகழ்ந்த, யதீம் கானா, பரேட் க்ராஸ்ரோட்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோதி கான்பூர் வந்திருந்த நிலையில், இந்த வன்முறைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நுபுர் சர்மாவின் முகமது நபி தொடர்பான கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக ஜூன் 3ம் தேதி கடைகளை மூட வேண்டும் என்றும், 'மாற்று மத சகோதரர்கள்' இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்றும் கூறியிருந்தது.

இதற்கிடையில், சட்ட ஒழுங்கு பாதிக்கும் வகையில் பேசிய பாஜக நிர்வாகியை கைது செய்ய வேண்டுமென்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.

காணொளிக் குறிப்பு, "ஒவ்வொரு மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தை தேட வேண்டும்?" - மோகன் பகவத்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: