நீலகிரி மலை 50 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்ததில் ஒருவர் பலி - சென்னை ஐடி ஊழியர்கள் படுகாயம்

நீலகிரி கல்லட்டி மலைப்பாதை

நீலகிரி மாவட்டத்தில் மசினக்குடிக்கு செல்லும் கல்லட்டி மலை பாதையில் 50 அடி பள்ளத்தில் டெம்போ டிராவலர் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளாானது. இதில் சென்னையை சேர்ந்த மென்பொறியாளர் பலியானதாக தெரிய வந்துள்ளது.

சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தை சேர்ந்த 18 பேர் உதகையை சுற்றிப் பார்க்க வந்துள்ளனர்.

இந்த குழுவினர் உதகையை சுற்றிப் பார்த்து விட்ட பிறகு, கல்லட்டி அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்குவதற்காகச் சென்றுள்ளனர்.

கல்லட்டி பாதை
படக்குறிப்பு, கல்லட்டி மலை பாதையில் விழுந்த வேனுக்குள் இருந்து வெளியே மீண்டு வரும் பயணிகள்

15-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் இவர்களின் வாகனம் வந்தபோது அது கட்டுப்பாட்டை இழந்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அந்த வேனில் 14 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உள்பட18 பேர் பயணம் செய்தனர்.

இந்த விபத்தில் திருநெல்வேலியை சேர்ந்த 24 வயது முத்துமாரி பெண் சம்பவ இடத்திலேயே பலி ஆனார். உடன் பயணம் செய்தவர்கள் படுகாயங்களுடன் உதகை அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதில் கல்லட்டி மலை பாதை சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்ட சாலை என்றும் அந்த வழியாகவே இரவில் விபத்துக்குள்ளான வேன் வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த பாதை தொடங்கும் முன்பாக, தலைக்குந்தாவில் போலீஸ் தணிக்கைச் சாவடி வைத்து சுற்றுலா பயணிகளை மேற்கொண்டு அந்த வழியில் அனுப்பாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.இந்த நிலையில் சனிக்கிழமை சுமார் 10 மணிக்கு கல்லட்டி மலைப்பாதை அமைந்துள்ள தங்கும் விடுதியின் உரிமையாளர் வினோத் குமார், அவரது உதவியாளர் ஜோசப் இருவரும் காவல்துறைக்கு தெரியாமல் வேறு ஒரு குறுக்குப் பாதையில் சென்னையில் இருந்து வந்த டெம்போ வாகனத்தை அழைத்து வந்தனர். இத்தகைய நிலையில்தான் அந்த வாகனம் விபத்துக்குள்ளானது தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக தங்கும் விடுதி உரிமையாளர் ,அவரது உதவியாளர் இருவர் மீதும் புதுமந்து காவல் நிலைய குற்ற எண் 40/22 u/s 279, 337, 338, 304(A) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: