பொறியியல் படிப்புகளுக்கு கட்டணங்களை உயர்த்திய ஏ.ஐ.சி.டி.இ: தமிழ்நாடு அரசு ஏற்குமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம், பேராசிரியர்களின் சம்பளம் ஆகியவற்றை உயர்த்தி ஏ.ஐ.சி.டி.இ வெளியிட்டுள்ள உத்தரவு, கல்வியாளர்கள் மத்தியில் ஆதரவையும் எதிர்ப்பையும் ஒருசேர பெற்றுள்ளது. ''குறைந்தபட்சம், அதிகபட்சம் என நிர்ணயிப்பதன் மூலம் பிற கல்லூரிகளில் ஏழை எளிய மாணவர்களுக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும்'' என்கின்றனர் கல்வியாளர்கள். கட்டண நிர்ணயம் சரிதானா?
ஏ.ஐ.சி.டி.இ வகுத்துள்ள கட்டணம் என்ன?
இந்தியாவில் உள்ள பொறியியல் படிப்புகள், தொழில்நுட்பப் பட்டயப் படிப்புகள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கான ஊதியம் ஆகியவற்றை உயர்த்தி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இதன்மூலம், பொறியியல் படிப்புகளுக்கு மாற்றியமைக்கப்பட்ட புதிய கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய உத்தரவின்படி, தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் பி.இ, பி.டெக், பி.ஆர்க் போன்ற படிப்புகளில் சேருவதற்கு குறைந்தபட்ச கட்டணமாக 79,600 ரூபாயும் அதிகபட்சமாக 1 லட்சத்து 89 ஆயிரத்து 800 ரூபாயும் செலுத்த வேண்டும். இவை ஒரு செமஸ்டருக்கு செலுத்த வேண்டிய தொகைகள் ஆகும். பொறியியல் படிப்புகளைப் பொறுத்தவரையில் தற்போது குறைந்தபட்சமாக 55 ஆயிரம் ரூபாயும் அதிகபட்சமாக 1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயும் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இதனைத் தொடர்ந்து தொழில்நுட்பப் பட்டயப் படிப்புகளான டிப்ளமோ படிப்புகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இங்கு பயிலும் மாணவர்கள் ஒரு செமஸ்டருக்கு 67 ஆயிரத்து 900 ரூபாயும் அதிகபட்சமாக 1 லட்சத்து 40 ஆயிரத்து 900 ரூபாயும் செலுத்த வேண்டும் எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், முதுகலை பொறியியல் படிப்புகளான எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் ஆகிய படிப்புகளுக்கு செமஸ்டர் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக 1,41,200 ரூபாயும் அதிகபட்சமாக 3,04,000 ரூபாயும் செலுத்த வேண்டும்.
மேலும், மூன்று ஆண்டு எம்.சி.ஏ படிப்புக்கு 88,500 ரூபாயை குறைந்தபட்ச கட்டணமாகவும் 1,94,100 ரூபாயை அதிகபட்சக் கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம்.பி.ஏ படிப்புக்கும் 85 ஆயிரம் ரூபாயை குறைந்தபட்ச கட்டணமாகவும் 1,95,200 ரூபாயை அதிகபட்ச கட்டணமாகவும் ஏ.ஐ.சி.டி.இ நிர்ணயித்துள்ளது. இந்தக் கட்டண உயர்வை கல்வி நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டுமெனவும் ஏ.ஐ.சி.டி.இ தெரிவித்துள்ளது. அதன்படி, உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம்தோறும் 1,37,189 ரூபாயும் பேராசிரியர்களுக்கு 2,60,379 ரூபாயும் வழங்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், 'மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தால் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும்' எனத் தெரிவித்துள்ளது. இணைப் பேராசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 1,32,000 ரூபாயும், அதிகபட்சமாக 2,40,000 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு ஏற்குமா?
''ஏ.ஐ.சி.டி.இயின் கட்டண உயர்வை மாநில அரசு ஏற்குமா?'' என பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டோம். '' பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டண உயர்வு தொடர்பாக மாநில அரசு குழு அமைத்துச் செயல்படுத்துகிறது. இந்தநிலையில் ஏ.ஐ.சி.டி.இ உயர்த்த வேண்டிய அவசியம் என்ன? கட்டண உயர்வை இவர்கள் தீர்மானிக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் சில பிரச்னைகள் உள்ளன. ஒரு கல்லூரியைக் கட்டுவதற்கு இடம் ஒதுக்குவது உள்பட பல்வேறு சலுகைகளை மாநில அரசு கொடுக்கிறது. அந்தக் கல்லூரியின் தன்மை என்ன என்பதுவும் மாநில அரசுக்குத் தெரியும். கட்டணத்தை நிர்ணயிக்கும் உரிமை மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது. மாநிலங்களின் நிலை என்ன என்பதை ஏ.ஐ.சி.டி.இ புரிந்து கொள்ளவில்லை. இதில் 79 ஆயிரம் ரூபாயை குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயித்துள்ளனர். இதுதான் குறைந்தபட்சம் என்றால் என்ன நியாயம் உள்ளது?'' எனக் கேள்வியெழுப்புகிறார்.

பட மூலாதாரம், Getty Images
''கல்வி என்பது சந்தையை தீர்மானிக்கக் கூடிய விஷயமாக உள்ளது. இதில் குறைந்தபட்ச கட்டணம், அதிகபட்ச கட்டணம் என நிர்ணயிப்பதால் பலரும் அதிகபட்ச கட்டணங்களை வாங்குவதற்கே முயற்சி செய்வார்கள். எந்தவித வசதியும் இல்லாத கல்லூரிகள் மட்டுமே குறைந்தபட்ச கட்டணத்தை வாங்குவார்கள். ஏ.ஐ.சி.டி.இ உயர்த்தியுள்ள கட்டணங்களுக்கு இடையிலான வித்தியாசம் மட்டுமே ஒரு லட்ச ரூபாய். அப்படியென்றால், கல்லூரிகள் ஒரே தரத்தில் இருக்கக் கூடாது என்பதைத்தானே இது எடுத்துக் காட்டுகிறது. ஒரே தரத்தில் இருந்தால் கட்டணமும் ஒரே மாதிரியாக இருக்கும். கல்லூரிகளின் செலவை மாணவர்களிடம் இருந்து பெறுகின்ற கட்டணத்தில்தான் ஈடுகட்ட வேண்டும் என்பது முழுக்க நியாயமற்ற ஓர் அணுகுமுறை'' என்கிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
யாருக்குச் சிரமம்?
''இந்தக் கட்டண உயர்வை பலரும் வரவேற்கிறார்களே?'' என்றோம். '' கட்டண உயர்வு என்பது சந்தையோடு தொடர்புடையது. அதனால் வரவேற்பார்கள். சந்தை அணுகுமுறை என்பது கல்விக்குப் பொருந்தாது. தண்ணீர், மின்சாரம் என செலவு அதிகமாகும்போது அதனை மாணவர்களின் கட்டணத்தில் ஈடுகட்டுவது என்பது சரியல்ல. இன்றைக்குள்ள சட்டத்தின்படி கல்வி என்பது வர்த்தகம் கிடையாது. அதனை லாபநோக்கமற்ற நிறுவனம்தான் நடத்த வேண்டும். கல்லூரி நிர்வாகங்களும், பல்வேறு மூலங்கள் மூலமாக நிதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
தனியார் கல்லூரிகளில் கட்டணங்களுக்குப் பல்வேறு பெயர்களை வைத்திருப்பார்கள். அதற்குப் புரவலர்கள் பெயரை வைப்பதற்குக் காரணம், மாணவர்களிடம் இருந்து அதிகப்படியாக வசூல் செய்யக் கூடாது என்பதால்தான். பொறியியல் உள்பட தொழில்நுட்பப் படிப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பது என்பது நியாயமல்ல. குறைந்தபட்சம், அதிகபட்சம் எனக் கட்டணத்தை உயர்த்துவது என்பது அதிகக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கு சிரமத்தைக் கொடுக்கும். இவர்களால் பிற கல்லூரிகளில் சேருவதற்கு வாய்ப்பற்றவர்களாக மாற்றிவிடும்'' என்கிறார்.
கட்டண உயர்வு வரவேற்கக் கூடியது
அதேநேரம், பிரின்ஸின் வாதத்தை மறுத்துப் பேசும் மூத்த கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, '' இந்தக் கட்டண உயர்வு மிகச் சரியானது. ஆறு வருடங்களுக்குப் பிறகு ஏ.ஐ.சி.டி.இ கட்டணத்தை உயர்த்தியுள்ளது. கட்டண உயர்வை விமர்சித்து சிலர் பேசுகிறார்கள். அரசுக் கல்லூரிகளுக்கு மாணவர்கள் ஏன் செல்வதில்லை? பிரபலமான தனியார் கல்லூரிகளை நோக்கி மாணவர்கள் செல்வதற்குக் காரணம், அங்கு தரமான கல்வி கிடைப்பதால்தான். அவர்கள் செலவு செய்வதற்கும் தயாராக உள்ளனர்'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், ''ஒரு ஊழியருக்கு ஆறு வருடங்களாக சம்பள உயர்வே இல்லாவிட்டால் அவர் தொடர்ந்து வேலை செய்வதற்கு வாய்ப்பில்லை. அதேபோல்தான் இதுவும். இன்றைக்கு உள்ள பணவீக்கத்தைப் பார்க்கும்போது இது சரியான ஒன்று. அரசுக் கல்லூரிகளில் தரமான கல்வியை வழங்கி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை அரசு உறுதி செய்யட்டும். அரசு பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் பல மாணவர்கள், ஏன் வேலைவாய்ப்பு முகாம்களில் தேர்வாவதில்லை? அதுவே தனியார் கல்லூரிகளில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாம்களில் பங்கேற்று நல்ல சம்பளத்தில் வேலை பெறுகின்றனர். நவீன தொழில்நுட்பங்களை திறம்பட பல தனியார் கல்லூரிகள் கற்றுத் தருகின்றன. அரசு போதிய அளவு முதலீடு செய்யாததால் அங்கு பயிலும் மாணவர்கள்தான் சிரமப்படுகின்றனர்'' என்கிறார்.
உதவித் தொகை குறித்தே தெரிவதில்லை
''குறைந்தபட்சம், அதிகபட்சம் என நிர்ணயிப்பதால் ஏழை மாணவர்கள் பாதிக்கும் சூழல் உருவாகுமே?'' என்றோம்.'' இந்த விவகாரத்தில் குறைந்தபட்ச கட்டணத்தை ஏ.ஐ.சி.டி.இ நிர்ணயிக்க வேண்டும். இதன்பிறகு கல்லூரிகளைப் பொறுத்து அதிகபட்ச கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம். சில முதல்தரமான பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுக்கு ஆறு லட்ச ரூபாய் வரையில் செலவழித்து மாணவர்கள் படிக்கின்றனர். ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வுகள் உள்ளன. மாணவர்களுக்கு கிடைக்கக் கூடிய அரசின் பல்வேறு உதவித் தொகைகள் குறித்த தகவல்களே தெரிவதில்லை.

பட மூலாதாரம், Getty Images
தேசிய கல்வி உதவித் தொகைக்கு எவ்வளவு விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரத்தைப் பார்த்தாலே அது தெரியும். பெண் குழந்தைகளின் கல்விக்காக 'பிரகதி' என்ற பெயரில் கல்வி உதவித் தொகை திட்டம் உள்ளது. இதன் அடிப்படையில் ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. வங்கிக் கடனுக்கு 'வித்யா லட்சுமி' என்ற பெயரில் போர்டல் (Portal) தொடங்கியுள்ளனர். இதன்படி பெற்றோருக்கும் மாணவருக்கும் பான் கார்டு என்பது அவசியம். இங்கு எத்தனை மாணவர்களுக்கு பான் கார்டு உள்ளது? எவ்வளவோ மானியங்களைக் கொடுக்கும் அரசு, அரசுப் பள்ளியைத் தவிர இதர ஏழை மாணவர்களுக்கும் உதவித் தொகையைக் கொண்டு வருவதில் என்ன தயக்கம்?'' எனக் கேள்வியெழுப்புகிறார்.
மேலும், ''ஏ.ஐ.சி.டி.இ வகுத்துள்ள சம்பள உயர்வும் சரியானதுதான். தனியார் பொறியியல் கல்லூரிகளில் சிறப்பாகச் செயல்படும் ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது. தரத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் செயல்படும் கல்லூரிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு என்பது மிக அதிகம்'' என்கிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












