'சரக் சப்த்' உறுதிமொழி சர்ச்சை: குழப்பம் ஏற்பட்டது ஏன்? கேள்வியும் பதிலும்

பட மூலாதாரம், Getty Images
சமஸ்கிருதத்தில் உறுதிமொழியை வாசித்த விவகாரத்தில் மதுரையைத் தொடர்ந்து ராமநாதபுரம் உள்பட சில மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ''தேசிய மருத்துவ ஆணையம் அனுப்பிய சுற்றறிக்கையின் அடிப்படையில் சில கல்லூரிகளின் முதல்வர்கள் செயல்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பெறப்படும் விளக்கத்தைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்கிறார் தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு.
நிதியமைச்சரின் கண்டனம்
மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி, கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கல்லூரி முதல்வர் ரத்தினவேல் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது, மருத்துவ உடையணிந்த பின்னர் உறுதிமொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது. வழக்கமான 'ஹிப்போக்ரடிக்' உறுதிமொழியை வாசிக்காமல் அண்மையில் தேசிய மருத்துவக் கல்வி ஆணையம் அறிவுறுத்தியுள்ள 'மகரிஷி சரக சபதம்' என்ற உறுதிமொழியை வாசித்தனர்.
இதுகுறித்து நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், ''உலகம் முழுவதும் மருத்துவர்கள் பின்பற்றக்கூடிய உறுதிமொழி நடைமுறையைத்தான் பின்பற்ற வேண்டும். அரசியல்வாதிகளாகிய நாங்கள் அரசில் பொறுப்பேற்கும்போது, உலகம் முழுவதும் பின்பற்றப்படும் பாரம்பரிய நடைமுறையைத்தான் பின்பற்றி வருகிறோம். இதைத்தான் நானும் பரிந்துரை செய்ய விரும்புகிறேன்'' என்றார்.

தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தவே, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் இடமாற்றம் செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டார். டீன் இடமாற்றம் தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில், ''அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவர்களும் மற்றும் மருத்துவ கல்வி முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவர்களும் ஹிப்போக்ரடிக் உறுதிமொழியை ஏற்பது என்பது காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதற்கு மாறாக மகிரிஷி சரக சபத உறுதிமொழியை ஏற்றது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும்,'' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவசரத்தில் செய்த தவறா?
மேலும், ''இதன்பொருட்டு மதுரை மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார். தன்னிச்சையாக விதிகளை மீறி மகிரிஷி சரக சபதம் எனும் உறுதிமொழியை மாணவர்களை எடுக்க வைத்ததற்கு துறைரீதியாக விசாரணை நடத்துவதற்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இனி வரும் காலங்களில் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் எப்போதும் பின்பற்றப்படும் ஹிப்போக்ரடிக் உறுதிமொழியை தவறாது ஏற்பதற்கு மருத்துவக் கல்வி இயக்குநர் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்படும்'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், 'தேசிய மருத்துவக் கல்வி ஆணையத்தின் இணையத்தளத்தில் இருந்து மாணவர்கள் தவறுதலாக பதிவிறக்கம் செய்து வாசித்துவிட்டனர். இந்த விவகாரத்தில் டீன் ரத்தினவேல் தவறு செய்யவில்லை' எனவும் ஒரு சாரார் பேசி வந்தனர். இதுதொடர்பாக விளக்கம் அளித்த மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் ஜோதி, 'சமஸ்கிருதத்தில் உறுதிமொழியேற்றதாகச் சொல்கின்றனர். ஆனால், நாங்கள் சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்ததைத்தான் வாசித்தோம். தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறோம். 'சரக் சப்த்' உறுதிமொழியை பரிந்துரைப்பதாகத்தான் மருத்துவ ஆணையம் கூறியிருந்தது. அதனை கட்டாயம் எனக் கூறவில்லை. சரக் சப்த் உறுதிமொழியை வாசிக்கக் கூடாது என எங்களுக்கு யாரும் சொல்லவில்லை. ஹிப்போகிரடிக் உறுதிமொழியைத்தான் வாசிக்க வேண்டும் என மே 2 அன்றுதான் சுற்றறிக்கை வந்தது. வரவேற்பு விழா நடத்துவதற்கு போதிய அவகாசம் கிடைக்காததால் அவசரத்தில் தவறு செய்துவிட்டோம்' என்றார்.
சிக்கலில் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள்
மதுரையைப் போலவே ராமநாதபுரம் உள்பட மேலும் சில கல்லூரிகளில் மகிரிஷி சரக சபத உறுதிமொழியை வாசித்ததாகவும் தகவல் வெளியானது. இதில், மதுரை விவகாரம் மட்டுமே வெளியில் வந்தது. இதர மருத்துவக் கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கல்வியாளர்களால் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனும் இன்று (மே 4) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். 'இதன் முடிவில் எத்தகைய நடவடிக்கை பாயப் போகிறது எனத் தெரியும்' என்கின்றனர், மருத்துவக் கல்வி அதிகாரிகள்.

பட மூலாதாரம், Ma Subramanian facebook
அதேநேரம், தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை விமர்சித்துப் பேசும் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ''மருத்துவ படிப்பு துவங்குவதற்கு முன் இதுநாள் வரை நடைமுறையில் ஹிப்போகிரடிக் (Hipporcratic Oath) உறுதிமொழி இருந்தது. இது பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்த நடைமுறைக்கு மாற்றான உறுதிமொழி பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மருத்துவம் படிக்கும் முதலாமாண்டு மாணவர்கள் எடுத்து கொள்ளும் இந்த உறுதிமொழி, இந்திய பண்பாட்டையொட்டியுள்ளது.''
''மேலும், இந்த உறுதிமொழியை தாங்கள் ஆங்கிலத்திலேயே எடுத்து கொண்டதாக பங்கேற்ற மாணவர்கள் கூறியுள்ளனர். ஆனால், சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டது என்று பொய் சொல்லி, மக்களின் மொழி உணர்வை தூண்டிவிட்டு, நடந்தது குறித்து ஒன்றும் தெரியாமல், தேவையில்லாத விமர்சனங்களை முன்வைத்து தலைமை மருத்துவர் மீது நடவடிக்கை எடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் மாணவர்களிடமும் தலைமை மருத்துவரிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டு நடவடிக்கையை அரசு திரும்பப்பெற வேண்டும்,'' எனத் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்லமும் மதுரை மருத்துவக் கல்லூரியில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட ரத்தினவேலுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தநிலையில், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக ரத்தினவேல் நீடிப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் கல்வி இயக்குநர் சொல்வது என்ன?
தற்போது மதுரை மருத்துவக் கல்லூரி விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் மருத்துவர் நாராயணபாபுவிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். '' ஹிப்போகிரடிக் உறுதிமொழிக்கு மாறாக மாற்று உறுதிமொழியை எடுத்த அனைத்து கல்லூரி முதல்வர்களிடமும் விளக்கம் கேட்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும். மருத்துவக் கல்லூரிகளில் ஹிப்போகிரடிக் உறுதிமொழியை மட்டும் ஏற்க வேண்டும். இதில் மாற்றுக் கருத்து என்பதே கிடையாது'' என்கிறார்.
மேலும், ''பல தலைமுறைகளாக 'ஹிப்போக்ரடிக்' உறுதிமொழியைத்தான் மருத்துவர்கள் எடுத்து வருகின்றனர். ஒரு சுற்றறிக்கையை வைத்து எதையும் மாற்ற முடியாது. மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நேரடியாக சுற்றறிக்கையை அனுப்பியதால் கல்லூரி முதல்வர்கள் குழப்பமடைந்துவிட்டனர். ஆனால், 'ஹிப்போக்ரடிக்' உறுதிமொழியைத்தான் ஏற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்'' என்கிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












