மக்கள் மதங்களை பின்பற்ற காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரேச்சல் நூவர்
- பதவி, பிபிசி
வாழ்க்கை என்பது மரணத்துடன் முடிந்துவிடக்கூடியது என நம்புபவர்கள் எண்ணிக்கை கோடிக்கணக்கில் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பல நாடுகளில் முன் எப்போதும் இல்லாத அளவு கடவுள் மறுப்பு கொள்கை பெருகியிருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. கடவுள் இல்லை, வாழ்க்கை என்பது நிச்சயம் ஒருமுறைதான் என இவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
"முன் எப்போதையும் விட இப்போது கடவுள் மறுப்பாளர்களின் எண்ணிக்கை பெருகிவிட்டது" என்கிறார் ஃபில் ஜாக்கர்மேன். கலிஃபோர்னியாவின் க்ளேர்மோன்ட்டில் உள்ள பிட்சர் கல்லூரியில் சமூகவியல் மற்றும் மதம் சார்பற்ற கல்வித்துறை பேராசிரியராக உள்ளார். "மதசார்பு இல்லாமல் வாழ்வது" என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தையும் இவர் எழுதியுள்ளார்.
கேலப் இன்டர்நேஷனல எனும் அமைப்பு 57 நாடுகளில் 50,000 பேரிடம் ஒரு ஆய்வை நடத்தியது.
இதில் 2005ல் 77% பேர் மத நம்பிக்கை உள்ளது எனக் கூறிய நிலையில், 2011ல் இது 68% ஆக குறைந்துவிட்டது. அதே சமயம் கடவுள் மறுப்பாளர்கள் என அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் எண்ணிக்கை 3% அதிகரித்துவிட்டது. கடவுள் இல்லை என நம்புபவர்கள் அளவு உலகளவில் 13% ஆக அதிகரித்திருப்பது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
தற்போது கடவுள் மறுப்பாளர்கள் சிறுபான்மையினராக உள்ள நிலையில் எதிர்காலத்தில் இந்நிலை மாறும் என்பதற்கு தற்போதைய ஆய்வு முடிவுகள் கட்டியம் கூறுகின்றனவா என்றும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதையெல்லாம் பார்த்தால் மதம் என்பது ஒரு நாளில் முற்றிலும் இல்லாமல் போய்விடுமா என்றெல்லாம் கேள்வி எழுகிறது.
எதிர்காலத்தை பற்றி துல்லியமாக கணிப்பது இயலாத ஒன்று என்றாலும் அதை பற்றி பகுத்தாய்வது சாத்தியமே. மதங்களை பலரும் பின்பற்ற காரணம் என்ன? சிலர் மதத்தை பின்பற்ற விரும்புகின்றனர். சிலர் விரும்புவதில்லை. இதை ஏன் என ஆராயலாம். இதன் மூலம் அடுத்து வரும் காலங்களில் ஆன்மீகத்துடனான மனிதனின் எப்படி தொடர்பு இருக்கும் என்பதை கணிக்க இயலும்.

பட மூலாதாரம், Getty Images
மக்களை அல்லது தேசத்தை கடவுள் மறுப்பு கொள்கையை நோக்கி தள்ளும் சிக்கலான காரணிகள் என்னவாக இருக்கும் என கண்டறிய கற்றறிந்தோர் இன்னும் முயன்று கொண்டுதான் உள்ளனர்.
நிலையற்ற இந்த உலகில் பாதுகாப்பு என்ற அம்சத்தை காட்டி கவர்ந்திழுப்பது மதம் வியாபித்துள்ளதற்கு ஒரு காரணம்.
ஒப்பீட்டளவில், பொருளாதார வளர்ச்சி பெற்ற, அரசியல் நிலைத்தன்மை கொண்ட தேசங்களில் நாத்திக வாதம் அதிகம் இருப்பது ஆச்சரியமில்லைதான்.
சமூகத்தில் கிடைக்க தொடங்கியிருக்கும் பாதுகாப்பே மத நம்பிக்கைகள் மறைய காரணம் என்கிறார் ஜக்கர்மேன். முதலாளித்துவம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள பரவலாவது, கல்வி உள்ளிட்டவை மத நம்பிக்கை தொய்வடைவதற்கு காரணமாக உள்ளது என்கிறார் ஜக்கர்மேன்.
நம்பிக்கைக்கு ஏற்பட்ட நெருக்கடி
பிரிட்டன், ஜப்பான், கனடா, தென் கொரியா, நெதர்லாந்து, செக் குடியரசு, எஸ்டோனியா, ஜெர்மனி, பிரான்ஸ், உருகுவே ஆகிய நாடுகளில் மதம் என்பது நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆழ வேர் விட்டிருந்தது. (இந்நாடுகள் அனைத்திலும் பெரும்பகுதி குடிமக்கள் ஐரோப்பிய தொடர்பை கொண்டவர்கள்). ஆனால் இந்நாடுகள்தான் மத நம்பிக்கை குறைவாக உள்ளவர்கள் நிறைந்த நாடு என தற்போது பெயர்பெற்றுள்ளன.
இந்நாடுகளில் மக்கள் சிறந்த கல்வியறிவு பெற்றுள்ளதுடன் சமூக பாதுகாப்பு கட்டமைப்பும்நிறைந்தவையாக உள்ளன. இங்கு சமூக ஏற்றத்தாழ்வுகள் குறைவு. பிற நாட்டினருடன் ஒப்பிடுகையில் இங்குள்ளவர்கள் செல்வந்தர்களாக உள்ளனர். தங்களுக்கு எதுவும் நடந்துவிடுமோ என்ற அச்சவுணர்வு இங்கெல்லாம் அடிப்படையில் குறைவு என்கிறார் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை நிபுணர் க்வென்டின் ஆட்கின்ஸன்.
ஆனால் பிரேசில், ஜமைக்கா, அயர்லாந்து போன்ற நாடுகளில் மதம் என்பது வலுவாக திகழ்வதாக கூறுகிறார் ஜக்கர்மேன். 40-50 ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட மிகச்சில சமூகங்களில் மத நம்பிக்கை அதிகரித்துள்ளதாக கூறுகிறார் ஜக்கர்மேன்.

பட மூலாதாரம், Getty Images
இரான் நாட்டை மட்டும் இதற்கு விதிவிலக்காக கூறலாம் என்றும் ஏனெனில் அங்கெல்லாம் மதச்சார்பற்ற மக்கள் தங்கள் நம்பிக்கைகளை வெளிப்படையாக கூறாமல் இருக்கலாம் என்றும் ஜக்கர்மேன் தெரிவிக்கிறார்.
இதற்கு விதிவிலக்காக அமெரிக்கா உள்ளது. உலகின் பணக்கார நாடுகளுள் ஒன்றான அமெரிக்காவில் மத நம்பிக்கை உள்ளவர்கள் எண்ணிக்கையும் அதிகம். (அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பியூ ஆய்வில் 2007க்கும் 2012க்கும் இடையில் கடவுள் மறுப்பாளர்களின் எண்ணிக்கை 1.6%ல் இருந்து 2.4% ஆக அதிகரித்துள்ளது)
மத நம்பிக்கை உள்ளோர் எண்ணிக்கை குறைவதை மத நம்பிக்கை மறைந்துவிட்டது என எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறார் அரா நொரன்ஜயன். இவர் கனடாவின் வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சமூக உளவியல் பேராசிரியராக உள்ளார். இதற்கு அவர் நல்ல உதாரணங்களையும் கூறுகிறார்.
ஒரு நொடியில் எல்லாம் தலைகீழாகிவிடும். குடிகார ஓட்டுநர் ஒருவர் தான் விரும்பக்கூடிய ஒருவரை கொன்றுவிடக்கூடும், புயல் ஒரு நகரத்தையே அழித்துவிடலாம். மரணத்தில் தள்ளும் நோய் உங்களுக்கு வந்துள்ளது என மருத்துவர் கூறி விடலாம். பருவநிலை மாற்றம் உலகையே உலகையே அழிக்கலாம். இயற்கை வளங்கள் அரிதாகி விடலாம். இது போன்றவற்றால் அச்சமும் பாதிப்பும் அதிகமாகி அது மீண்டும் மத நம்பிக்கையை உருவாக்கலாம் என்கிறார் இந்த பேராசிரியர்.
பாதிப்புகளில் இருந்து தப்பவே மக்கள் முற்படுவார்கள். வெளியே வர முடியாவிட்டால் அதற்கு நிச்சயம் அதற்கு காரணம் தேட முற்படுவார்கள் என்கிறார் அவர்.
பாதிப்புகளுக்கு மதம் ஒரு அர்த்தம் தருவதாக தெரிகிறது. மத நம்பிக்கையற்ற நிலையில் கிடைக்கும் அர்த்தத்தை விட இது அதிகமாக இருக்கும் என்கிறார் நொரன்ஜயன். இந்த பண்பு உலகில் மருத்துவமனைகளில் இருந்து பேரிடர் பாதிப்பு பகுதிகள் வரை முக்கிய பங்காற்றுகிறது.

பட மூலாதாரம், Getty Images
உதாரணமாக 2011ல் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை எடுத்துக்கொள்ளலாம். மத சார்பு இல்லாதவர்கள் எண்ணிக்கை நிறைந்த இப்பகுதியில்நில நடுக்கத்திற்கு பின் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது.
ஆனால் கிறைஸ்ட்சர்ச் தவிர்த்த பிற பகுதிகளில் இருந்தோர் எப்போதும்போல் இறை நம்பிக்கை இன்றியே இருந்தனர். ஜப்பானில் இரண்டாம் உலகப்போர் முடிவில் ஜப்பானில் பெரும்பகுதியினர் கடவுள் நம்பிக்கை உள்ளோராக மாறினர்.
கடவுளின் மனம்
உலகின் பிரச்சனைகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் தீர்ந்து சமமான சமூகமாக அமைதியுடன் வாழ்ந்துவந்தாலும் கூட மதம் சூழ்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளன.
இதை தெளிவாக அறிய இரட்டைசெயல்பாட்டு கருத்தாக்கத்தை அறிவது அவசியம். இதன்படி பார்த்தால் நம்மிடம் இரு வகையான சிந்தனைகள் உள்ளன. சிஸ்டம் 1, சிஸ்டம் 2 என்பதுதான் அவை.
இதில் சிஸ்டம் 1 உடன் ஒப்பிடுகையில் சிஸ்டம் 2 புதியது. சிஸ்டம் 2 என்பது நமது மூளையின் குரலாகும். இது திட்டமிடுவதற்கும் தர்க்க ரீதியில் சிந்திக்கவும் தூண்டுகிறது.
சிஸ்டம் 1 என்பது உள்ளுணர்வு அடிப்படையிலானது. தன்னூக்கம் கொண்டது. தானாக வருவது. எங்கு பிறந்தார்கள் என்ற வேறுபாடு இல்லாமல் மனித மனத்துக்குள் வளர்பவை இவை. இவை இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான நடைமுறை என்றும் சொல்லலாம். சிஸ்டம் 1 எந்த முன்னெடுப்பும் இல்லாமல் நமது சொந்த மொழியை பேசுவதற்கு இது உதவுகிறது. குழந்தைகள் தம் பெற்றோரை அடையாளம் காணவும், உயிருள்ள உயிரற்ற பொருட்களை அடையாளம் காணவும் இது பயன்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
அபாயங்களை எதிர்கொள்வதிலும், துணையை தேடுவதிலும் சிஸ்டம் 1 உதவுகிறது. மேலும் சிஸ்டம் 1 மனப்பாங்குதான் மதங்களின் மாற்றங்களுக்கு வித்திட்டு நிலைத்தன்மையை ஏற்படவும் காரணம் என்பதும் சில கல்வியாளர்களின் கருத்து.
சிஸ்டம் 1 என்பது விஷயங்களை இரு கோணங்களில் பார்க்க ஊக்குவிக்கிறது. எந்த ஒரு கலாசார பின்னணி உள்ள இளஞ்சிறார்கள் தங்கள் ஆத்மா அழிவில்லாதது என நம்புகிறார்கள். அந்த உணர்வு பிறப்பிற்கு முன்பே அவர்கள் மனதில் பதிந்து பின் நிலைத்துவிட்டதாக இருக்கும். இந்த ஒழுங்கமைவு என்பது தற்போதுள்ள மதங்களுக்கு பொருந்திப்போகிறது. அல்லது சில புதிய கருத்தாக்கங்களுக்கு இது உதவிகரமாக உள்ளது.
ஸ்காண்டிநேவிய பகுதியை சேர்ந்த சக உளவியல் நிபுணர் ஒருவர் தனது 3 வயது மகள் தூக்கத்திலிருக்கும்பொது எழுந்து கடவுள் எல்லா நேரமும் எல்லா இடத்திலும் இருக்கிறார் என சொன்னதாக கூறுகிறார் ஜஸ்டின் பெர்ரட். இவர் கலிஃபோர்னியாவின் பாசதீனாவில் உள்ள மனித இன வளர்ச்சி மையத்தின் இயக்குநராக உள்ளார்.
Born Believers என்ற நூலையும் இவர்எழுதியுள்ளார். தனது சக ஊழியரின மகளை பொறுத்தவரை கடவுள் என்பவர் வயதான ஒரு பெண் ஆக உள்ளார் என்கிறார் பெர்ரட். எனவே இந்த கருத்தை அவள் லுத்தரன் சர்ச்சிலிருந்து பெற்றிருக்க முடியாது என்கிறார் பெர்ரட்.
இது போன்ற பல காரணங்களை வைத்து மதம் என்பது பரம்பரையாக நம்முள் உள்ள அறிவாற்றலின் உடன் விளைபொருளே என பல கல்வியாளர்கள் கருதுவதாக கூறுகிறார் ராபர்ட் மெக்காலி. இவர் ஜார்ஜியாவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தின் மூளை, மனம் குறித்த ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஆவார். அறிவியல் இயற்கையானதல்ல... மதம் இயற்கையானது... ஏன்? என்ற புத்தகத்தை எழுதியவர் இவர்.
கை விடுவதற்கு கடினமான பழக்கங்கள்
கல்வி கற்றதன் விளைவாக அறிவியல் மீதான நம்பிக்கையும் ஆழ்ந்து யோசிப்பதும் அதிகமாகி விட்டது. இதன் காரணமாக மக்கள் தங்கள் உள்ளுணர்வுகளை நம்புவதை குறைத்துக் கொண்டிருக்கலாம் என்கிறார் நொரன்ஜயன். ஆனால் உள்ளுணர்வு என்பது இருக்கத்தான் செய்கிறது என்கிறார் அவர்.

பட மூலாதாரம், Getty Images
மற்றொரு புறம் பல நாத்திகர்கள் இயற்கையான உலகை புரிந்துகொள்ள அறிவியலின் உதவியை நாடுகின்றனர். ஆனால் இது அவ்வளவு எளிதானதல்ல. அறிவியல் என்பது சிஸ்டம் 1ஆல் ஏற்படக்கூடிய தூண்டுதல்களை சரிசெய்வதாகும் என்கிறார் மெக்காலி.
உலக உருண்டை சுழல்வதை நாம் உணராவிட்டாலும் அதை நாம் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். நமது எண்ணங்கள் தவறானவை என்பதை ஏற்பது கடினமாக இருந்தாலும், நமது உள்ளுணர்வுகளை தடுத்துவிட்டு உண்மையை ஏற்றுக்கொள்வது அறிவியலின் பிரதான கூறாக பார்க்கப்படுகிறது.
அறிவியல் என்பது ஒரு வகையில் இயற்கை அல்லாதது; மதம் என்பது நாம் கற்காதது. ஆனால் ஏற்கனவே நாம் அறிந்தது என கூறுகிறார் மெக்காலி.
மதம் என்பது குறைவான தடையுள்ள பாதை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளதாக கூறுகிறார் பேர்ரட். மனித குலத்தை மதத்தில் இருந்து வெளியே எடுத்து வருவதற்கு அடிப்படையில் எதாவது செய்தாக வேண்டும் என்கிறார் பேர்ரட்.
20% அமெரிக்கர்களுக்கு சர்ச்சுடன் தொடர்பில்லை. ஆனால் இவர்களில் 68% பேர் கடவுள் நம்பிக்கை இருப்பதாக கூறுகிறார்கள். இவர்களில் 37% பேர் ஆன்மிகவாதிகள் எனக்கூறிக்கொள்கின்றனர். மதம் என்ற ஒரு அமைப்பு இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு பெரிய சக்தி உலகை வழிநடத்துவதாக இவர்கள் கருதுகின்றனர்.
தங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என பலர் கூறினாலும் பேய் பிசாசுகளை நம்புதல், ஜோதிடம், கர்மா, டெலிபதி, மறு பிறவி உள்ளிட்டவற்றை நம்புகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
ஸ்காண்டிநேவிய நாடுகளில் கடவுள் நம்பிக்கை இல்லை என பலர் கூறினாலும் மூடநம்பிக்கைகள் அதிகளவில் இருப்பதாக கூறுகிறார் நோரன்ஜயன். அமெரிக்காவில் சூனியம் வைக்கும் வழக்கம் பிரபலமாகி வருகிறது. பிரிட்டனில் பேகனிசம் எனப்படும் புறச்சமய முறை பெருகி வருகிறது.
உட் குழுக்கள்
மதம் என்பது குழு ஒற்றுமைத்தன்மையை வளர்ப்பதுடன் கூட்டு ஒத்துழைப்பையும் வளர்க்கிறது. சக்தி வாய்ந்த கடவுள் அல்லது கடவுளர்கள் நம் அனைவரையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்ற அச்ச உணர்வு பழங்கால சமூகங்களில் ஒழுங்கு முறையை காக்க உதவுகிறது.
தண்டனை கிடைக்கும் என்ற அச்சம் இருந்தால் எல்லாம் ஒழுங்காக நடக்கும் என்கிறார் ஆட்கின்சன்.
மதங்களில் கடுமையான கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் விதிக்கப்படுவதற்கு மக்கள் மத்தியில் உள்ள பாதுகாப்பின்மையும், பாதிப்புகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
உலகில் உள்ள 600 பழமையான சமூகங்களின் மத நம்பிக்கை நடைமுறை குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜோசப் பல்புலியா மற்றும் அவரது சகாக்கள் இந்த சோதனையை நடத்தினர். அதீத காலநிலை உள்ள பகுதிகளில் கடவுள் நம்பிக்கை வாய்ப்பு அதிகம் இருப்பதாக இதில் கண்டறிந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
பரஸ்பரம் உதவிகரமாக இருப்பவர்கள், வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான வித்தியாசமாக விளங்குகின்றனர். இதன் அடிப்படையில் பார்த்தால் மதிப்பு மிக்க பொது அமைப்பாக விளங்கிகிறது.
இறுதியாக மதம் நீடித்து நிலைத்திருப்பதன் பின்னணியில் எளிய ஒரு கணக்கும் உள்ளது. கலாசார பின்னணிகளை கடந்து பார்த்தால் மத நம்பிக்கை உள்ளவர்கள் அதிக பிள்ளைகளை பெற்றுள்ளதும் மத நம்பிக்கை அற்றவர்கள் குறைந்த பிள்ளைகளை பெற்றதும் தெரியவந்தது என்கிறார் நொரன்ஜயன்.
மத நம்பிக்கையுள்ளவர்களிலேயே தீவிர அடிப்படைவாதிகளுக்கு பிள்ளைப்பேறு விகிதம் அதிகமாக உள்ளதாகவும் இவர் கூறுகிறார். இது போன்ளவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளும் பெற்றோரை போலவே மத நம்பிக்கை உள்ளவர்களாக மாறுவதாக கூறுகிறார் நொரன்ஜயன். இது போன்ற நிலையில் முழுவதும் மத நம்பிக்கை அற்ற உலகம் என்பதற்கு சாத்தியம் மிக்க குறைவு என்கிறார் இவர்.
நீளும் நம்பிக்கைகள்
உளவியல், நரம்பியல், வரலாறு, கலாசாரம் என எந்த கோணத்தில் பார்த்தாலும் மதம் என்ற அமைப்பு முடிவுக்கு வர வாய்ப்பு இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
அன்பு அல்லது அச்சம் என்ற அடிப்படையில் இருந்தால் மதம் என்பது நீடித்து நிலைத்திருக்கும் இல்லாவிட்டால் மதம் நீண்ட காலம் நிலைத்திருக்காது என்கின்றனர் நிபுணர்கள்.
கிறிஸ்துவ, இஸ்லாமிய, இந்து மற்றும் பிற மத கடவுளர்கள் இல்லாவிட்டாலும், மூடநம்பிக்கைகள், ஆன்மீகம் தொடரும் என்கின்றனர் நிபுணர்கள். சிறந்த மத சார்பற்ற அரசாக இருந்தாலும் அது எல்லாவற்றிலுமிருந்து உங்களை பாதுகாக்க முடியாது என்கிறார் மெக்காலி. அணு ஆயுத சண்டை, வால் மீன்கள் என எந்த பிரச்னை வந்தாலும் கடவுள் நம்பிக்கை நிச்சயம் தோன்றும்.
மக்கள் வலிகளில் இருந்தும் பிரச்சனைகளில் இருந்தும் விடுபட்டு முகத்தில் நிம்மதி பரவ வாழ விரும்புகிறார்கள். கடவுள் நம்பிக்கை உள்ள மனிதர்கள் இருக்கும்வரை அவர்கள் பெரும்பான்மையினராக இருப்பதில் ஆச்சரியம் இல்லை என்கிறார் ஜக்கர்மேன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












