மணிமேகலையில் சுனாமி குறிப்பு: பேரிடர் ஆராய்ச்சியில் அசத்தும் பெண் விஞ்ஞானி

Kusala Rajendran

பட மூலாதாரம், Kusala Rajendran

படக்குறிப்பு, குஜராத் நிலநடுக்கத்தை ஆய்வு செய்ய சென்ற இடத்தில் பேரிடரில் சிக்கினேன் - குஷாலா ராஜேந்திரன்
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

நிலநடுக்கம் என்றவுடன் பலரும் அச்சப்படுவார்கள் ஆனால், பெங்களுருவில் உள்ள 63வயது குஷாலா ராஜேந்திரன் உடனடியாக பரபரப்பாக ஆராய்ச்சியில் ஈடுபடுவார். 1970களில் இருந்து இந்தியாவின் நிலம் மற்றும் கடல் பகுதிகளில் ஏற்படும் பேரிடர்களை தொடர்ந்து ஆராய்ந்துவரும் குஷாலாவுக்கு மத்திய புவிஅறிவியல் அமைச்சகம் விருதுஅளித்து பெருமைப்படுத்தியுள்ளது.

2018ல் அறிவிக்கப்பட்ட 'கடல் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் வளிமண்டல அறிவியல்' துறையில் சாதிக்கும் பெண் விஞ்ஞானிக்காக முதல் விருதை கடந்தவாரம் பெற்றுள்ள குஷாலா ராஜேந்திரன், புவி அறிவியல் மற்றும் புவி இயற்பியல் ஆய்வுகளில் பெண்களின் பங்கு அதிகரிக்கவேண்டும் என்பதை உணர்த்தும் தருணம் இது என்கிறார்.

பேரிடர்களை ஆய்வு செய்த பெண்மணி

கேரளாவை சேர்ந்த குஷாலா, வேதியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு, அதிகம் அறியப்படாத புவி அறிவியல் படிப்பில் எம்டெக் படித்தார். அமெரிக்காவில் உள்ள தென்கரோலினா பல்கலைக்கழகத்தில் நிலநடுக்க அறிவியல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்.

நிலநடுக்க ஆராய்ச்சி: அஞ்சாத இந்திய பெண் விஞ்ஞானியின் சாதனை

பட மூலாதாரம், Paula Bronstein

படிக்கும் காலம் தொடங்கி இயற்கை பேரிடர்களை ஆய்வுக்களமாக கொண்ட குஷாலாவின் ஆய்வு அனுபவங்கள் ஒவ்வொன்றும் திரில்லர் திரைப்படம்போல் விரிகின்றன.

இந்தியாவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய குஜராத் நிலநடுக்கம் (2001), உத்திரகாசி(1991), லத்தூர்(1993), தமிழகம் மற்றும் அந்தமானில் ஏற்பட்ட சுனாமி(2004) போன்ற இடங்களில் ஆய்வு செய்து எதிர்காலத்தில் இந்தியா சந்திக்கவுள்ள பேரிடர் பிரச்சனைகளை எடுத்துரைத்துள்ளார் இவர்.

குஜராத் நிலநடுக்கம் அனுபவம்

குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் ஆராய்ச்சி செய்வதற்காக ஆறு நாட்கள் ஒரு கூடாரம் அமைத்து தங்கியிருந்த குஷாலா, ஏழாவது நாள் ஒரு விடுதியில் அறை எடுத்து வேலைசெய்துகொண்டிருந்த சமயம் இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

''நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் அதற்கான காரணங்கள் என்ன, மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமா என அரசு அதிகாரிகள் கேட்பார்கள். குஜராத் நிலநடுக்கத்தை ஆய்வு செய்ய சென்ற இடத்தில் பேரிடரில் சிக்கினேன். உயிருக்கு ஆபத்து இல்லாமல் தப்பித்தேன். அந்த சமயத்தில் ஆய்வாளராக நான் யோசித்துக்கொண்டிருந்தேன். நாங்கள் இருந்த கட்டடத்தில் விரிசல்கள் இருந்தன, அச்சமில்லாமல் அடுத்தவேலையில் கவனம் செலுத்தினேன்,'' என்கிறார் இயல்பாக.

மணிமேகலையில் சுனாமி பற்றிய குறிப்புகள்

பேரிடர்களுக்கான காரணங்களை கண்டறிய வெறும் புவி அறிவியல் அறிவு மட்டும் போதாது என்று கூறும் குஷாலா தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி குறித்த ஆய்வுக்கு சங்க இலக்கியமான மணிமேகலை உதவியது என்கிறார்.

நிலநடுக்க ஆராய்ச்சி: அஞ்சாத இந்திய பெண் விஞ்ஞானியின் சாதனை

பட மூலாதாரம், STR

''பேரிடர்களை ஆய்வு செய்ய வரலாறு, கணிதம், இலக்கியம்,தொல்லியல் என எல்லா துறையையும் படிக்கவேண்டும். சுனாமி ஆராய்ச்சியின்போது, கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை அறிய வரலாறு மற்றும் இலக்கியத்தில் குறிப்புகள் உள்ளனவா என்று பார்த்தோம். காவேரிப்பட்டினத்தில் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்த மணல் மாதிரிகளை நானும், புவியியல் வல்லுநரான என் கணவர் ராஜேந்திரனும் சோதனை செய்தோம். பாதிப்புக்கு ஆளாகாத காவேரிப்பட்டினத்தின் உட்பகுதிகளில் மணல் மாதிரிகளை எடுத்தோம். இரண்டு மாதிரிகளுக்கும் உள்ள கால அளவை கணக்கிட்டோம். மணிமேகலையில் பிரளயம் ஏற்பட்டதாக குறிப்புக்கள் இருப்பதை கவனத்தில் எடுத்துக்கொண்டோம். 2004க்கு முன்னர் சுனாமி ஏற்பட்டதற்கான சான்றாக பழைய மணல் மாதிரி உள்ளது என்பதை அறிவியல்பூர்வமாக சோதனை செய்து, மணிமேகலையில் குறிப்பிட்டுள்ள பிரளயம், சுனாமி என்றும் அந்தபகுதியில் முன்னர் சுனாமி ஏற்பட்டுள்ளது என்பதை உறுதிசெய்தோம்,'' என்கிறார் குஷாலா.

வாய்ப்புகளை இழக்கும் பெண்கள்

நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது தனது ஆய்வு மாணவியுடன் வேலைசெய்ததாக கூறும் குஷாலா, பெண்கள் புவிஅறிவியல் படிப்புகளில் சேருவதற்கு குடும்பங்களில் ஊக்கம் அளிக்கப்படுவதில்லை என்கிறார்.

''என்னுடைய ஆய்வு மாணவி தற்போது ஐஸ்லாந்தில் வேலைசெய்கிறார். நான் ஒரு ஆசிரியை என்பதால், என்னுடன் அவர் நேபாளத்துக்கு வருவதற்கு அவரது பெற்றோர் ஒப்புக்கொண்டனர். இதுபோல எத்தனை பேருக்கு வாய்ப்பு இருக்கும் என்று தெரியவில்லை. நாம் முன்னேறுவதற்கு நாமே தடையாக இருக்கிறோம் என்பதை எப்போது புரிந்துகொள்ளப்போகிறோம்,"என்று கேள்விஎழுப்புகிறார்.

''வெளிநாடுகளில் புவிஅறிவியல் படிப்புகளில் ஈடுபடுவார்களுக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. நம் நாட்டில் இன்னும் கூட குழந்தைகள் என்ன படிக்கவேண்டும் என பெற்றோர்கள் தீர்மானித்துக்கொண்டு இருக்கிறார்கள். அயல்நாடுகளில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட பாடங்களை படிப்பதால் சாதிக்கின்றார்கள். நம் நாட்டில் பெற்றோர்கள் தாங்கள் விரும்புகிற பள்ளியில் சேர்த்து, டியூஷன் அனுப்புகிறார்கள், மருத்துவம்,பொறியியல்,தகவல்தொழில்நுட்ப படிப்புகளில் சேர்த்து, நல்ல வருமானம் கொடுக்கும் பணியில் குழந்தைகள் வேலைசெய்யவேண்டும் என்று எண்ணுகிறார்கள். சம்பளம் வாங்குவது மட்டும்தான் சமூகத்தில் அந்தஸ்து தரும் என்ற சிந்தனையில் இருக்கிறார்கள். சம்பளம் முக்கியம் ஆனால் பயனுள்ள வாழ்க்கை அதைவிட அவசியம்,'' என புவிஅறிவியல் போன்ற படிப்புகள் அரிதான படிப்பாகவே இருக்கிறது என்று விளக்கினார்.

நிலநடுக்க ஆராய்ச்சி: அஞ்சாத இந்திய பெண் விஞ்ஞானியின் சாதனை

பட மூலாதாரம், ARKO DATTA

படக்குறிப்பு, குஜராத் பூகம்பத்தின் சிதிலங்கள்

மேலும் அவர், ''நான் 1976ல் ரூர்கி பல்கலைக்கழகத்தில் எம்.டெக் படித்தபோது எங்கள் வகுப்பில் ஆறு நபர்கள் இருந்தோம். நான் மட்டும்தான் ஒரே மாணவி. தற்போதும்கூட ஆராய்ச்சி படிப்புகளை பெண்கள் தேர்வு செய்தாலும், பயோடெக்னாலாஜி போன்ற படிப்பை எடுத்துக்கொண்டு ஒரு அறிவியல் ஆய்வகத்தில் வேலைசெய்தால் போதும் என்ற நிலைதான் உள்ளது. எங்களைப் போல புவிஅறிவியல்,இயற்கை பேரிடர்களை பற்றி படிக்க அதிமாக பயணம் செய்யவேண்டும். ஒருவேளை ஆண் ஆசிரியர்கள் மட்டும் இருந்தால், மாணவியை ஆய்வுகளுக்கு அனுப்பிவைக்க பெற்றோர்கள் யோசிக்கிறார்கள். இந்தநிலை மாறவேண்டும்,'' என்று பெற்றோர்களிடம் ஏற்படவேண்டிய மனமாற்றம் பற்றி பேசுகிறார் குஷாலா.

''மருத்துவம்,ராணுவம் மட்டுமே சேவையில்லை''

புவிஅறிவியல் ஆராய்ச்சி படிப்புகளை தேர்ந்தெடுக்கவேண்டிய தேவைபற்றி பேசிய குஷாலா, ''பேரிடர்கள் வெறும் இயற்கையால் மட்டுமே ஏற்படுவதில்லை;மனிதசெயல்களால் ஏற்படும் பேரிடர்கள் அதிகரித்துள்ள இந்த சமயத்தில் புவிஅறிவியல் படிப்புகளான தேவையும் அதிகமாகி வருகிறது. நிலநடுக்கம், வெள்ளம், நிலச்சரிவு போன்றவற்றை தடுக்க ஆராய்ச்சிகள் தேவை. இயற்கையோடு சமரசம் செய்துகொள்ள முடியாது. ஆனால் நிலத்தை எப்படி பயன்படுத்தலாம், ஆபத்துகளை தடுக்கலாம் என்று கண்டறியலாம்,'' என்கிறார்.

தற்போது பெங்களுருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் புவிஅறிவியல் மையத்தின் தலைவராக உள்ள குஷாலா இளம் மாணவ,மாணவியருக்கு கற்பித்துவருகிறார். ''இளம் தலைமுறையில் பேதமின்றி விருப்பத்தோடு ஆய்வு படிப்புகளில் மாணவ,மாணவிகள் சேரவேண்டும். நம் நாட்டுக்கு உழைக்க வெறும் மருத்துவர் அல்லது ராணுவ வீரராக மட்டுமே இருக்கவேண்டியதில்லை. நம் நாட்டுக்கு ஏற்படப்போகும் பேரிடர்களை தடுக்க ஆய்வுகள் செய்து உண்மையை உலகுக்கு சொன்னால் அது நாட்டுகாக நாம் செய்யும் முக்கிய சேவை'' என்கிறார் குஷாலா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :