வங்கிப் பணிகள்: வட இந்தியர்களுக்காக தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறதா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆ. விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
பொதுத்துறை வங்கிப் பணியிடங்களில் தமிழ் மொழி கட்டாயம் இல்லை என்ற அறிவிப்பின் மூலம் தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'தமிழ்நாடு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் இது பொருந்தும். வங்கிகளின் எழுத்தர் பணிகளுக்கு மாநில மொழி தெரியாதவர்களை நியமிப்பது என்பது அந்தந்த மாநில மக்களைத் துன்புறுத்துவதற்கு நிகரானது' என்கின்றனர் வங்கி ஊழியர் சங்கங்கள்.
843 பேரில் 400 பேர் யார்?
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளில் உள்ள கிளார்க் பணிகளுக்கு அந்தந்த மாநில மொழிகளைப் படிக்கவும் எழுதவும் பேசவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாய விதி இருந்தது. இதன் காரணமாக வங்கிகளின் கிளார்க் பணிகளுக்கு தமிழ்நாட்டில் தமிழ் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது அதற்கான வாய்ப்பு பறிபோய்விட்டதாக அனைத்திந்திய ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் வங்கியின் தொழிலாளர் நலச்சங்க பொதுச் செயலாளர் ஜி.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜி.கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த சில ஆண்டுகளாக வங்கித் தேர்வு நடத்தும் வங்கிப் பணியாளர் தேர்வுக் கழகம் (IBPS) வெளியிடும் விளம்பரங்களில், மாநில மொழிகளில் தேர்ச்சி என்பது கட்டாயம் இல்லை எனவும் அது ஒரு முன்னுரிமை மட்டுமே என விளம்பரப்படுத்தி வருகிறது. இதனால் வெளிமாநிலங்களில் உள்ளவர்கள், தமிழ்நாட்டில் தேர்வு எழுதி கிளார்க் பணிகளில் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, 2022-23 ஆகிய ஆண்டுக்கான கிளார்க் பணிகளுக்கு நடைபெற்ற வங்கித் தேர்வு குறித்து விவரிக்கும் கருணாநிதி, ' கிளார்க் பதவி நியமனங்களுக்கு தேர்வுகள் நடைபெற்று 843 பேர் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி, பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, இந்தியன் வங்கி, பஞ்சார் அண்ட் சிந்த் வங்கி, யூகோ வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றில் பணியில் சேருகிறவர்களில் 50 சதவீதம் பேர் வெளிமாநிலத்தவர்கள். அதாவது, 843 பேரில் 400 பேர் வெளிமாநிலத்தவர்கள். இவர்கள் தமிழ் தெரியாமல் பணியில் சேர உள்ளதாகத் தகவல்கள் வெளிவருகின்றன' என்கிறார்.
மேலும் 'வங்கிப் பணியாளர் தேர்வுக் கழகம் நடத்தும் தேர்வு மூலமாக பெரும்பாலும் ஒடிஷா, கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து கிளார்க் பணியில் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இவர்களுக்குத் தமிழ் தெரியாது. இவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட வேண்டும். தமிழ் மொழி தெரிந்தவர்களுக்கே பணி வழங்கப்பட வேண்டும் என்ற முந்தைய ஆண்டில் எங்களின் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு எழுதிய கடிதங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை' எனக் குறிப்பிட்டுள்ளார்.
விதிகள் தளர்த்தப்பட்டதா?
'' வங்கிகளில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கு மாநில மொழி என்பது அவசியம் கிடையாது. காரணம், அது அனைத்திந்திய அளவிலான பணியாக இருப்பதுதான். ஆனால், கிளார்க் பணிகளுக்கு மாநில மொழி அவசியம் என்ற விதி உள்ளது. அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வங்கிப் பணிகளுக்கு வரும்போது அதற்கான மொழிகளில் குறைந்தபட்சம் எழுதுவதற்கும் பேசுவதற்கும் தெரிந்திருக்க வேண்டும். அந்த விதியைத் தளர்த்தி மொழி தெரியாதவர்கள், ஆறு மாதங்களுக்குள் கற்றுக் கொள்ளலாம் எனக் கூறி உறுதிமொழியை எழுதி வாங்கினார்கள். தற்போது இந்த விதியும் தளர்த்தப்பட்டதாகத்தான் தகவல் வெளியாகியுள்ளது. இது மிகவும் தவறானது'' என்கிறார், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் இணைச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன்.

பட மூலாதாரம், Krishnan C.P
மேலும், '' தமிழ்நாட்டுக்குள் தமிழ் தெரியாத நபர்களை வங்கிப் பணிச் சேவைக்கு கொண்டு வந்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். கிராமம் மட்டுமல்லாமல் சென்னை போன்ற மெட்ரோபாலிடன் நகர்களின் வசிக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். தனது கணக்கில் இருந்து பணம் பறிபோய்விட்டதாக பொதுமக்கள் கூறினால், அதனைப் புரிந்து கொள்ள முடியாத வங்கி ஊழியர்களால் மக்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்படுவார்கள் என்பதைப் பார்த்துள்ளோம். இதுபோன்று விதிகளைத் தளர்த்துவதன் மூலம் வங்கிகளின் வாடிக்கையாளர் சேவை என்பது கடுமையாக பாதிக்கப்படும்'' என்கிறார்.
இது தவறான முன்னுதாரணம்
'' தமிழ்நாட்டவருக்கான பணியிடங்களில் வடமாநிலத்தவர் அதிகளவில் நிரப்பப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் வருகிறதே?'' என்றோம். '' தமிழ்நாட்டில் வங்கித் தேர்வுகளை எழுத விரும்புவர்களுக்கு இங்கு வீடு இருப்பதற்கான ஆதாரம் இருக்க வேண்டும். ஆந்திராவில் இருந்து பணிமாறுதலில் அதிகாரி ஒருவர் வருகிறார் என்றால், அவரது மகன் இங்கு தேர்வெழுத விரும்பினால் அவருக்குத் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதாவது, பேசுவதற்கோ எழுதுவதற்கோ குறைந்தபட்ச மாநில மொழி அறிவு வேண்டும். அதுகூட இல்லாதவர்கள் கிளரிக்கல் பதவிகளுக்கு வருவது என்பது அம்மாநில மக்களுக்கு எந்தவகையிலும் உதவப் போவதில்லை. இது தவறான முன்னுதாரணம்'' என்கிறார்.
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய சி.பி.கிருஷ்ணன், '' தமிழ்நாடு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களுக்கும் இது பொருந்தும். கேரளாவுக்குச் சென்றால் மலையாளம் அறிந்திருக்க வேண்டும். குஜராத் மாநிலத்தில் பதவிக்குச் சென்றால் இந்தி மட்டுமல்லாமல் குஜராத்தி மொழியும் தெரிந்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் எண்ணை நாம் பயன்படுத்துவதில்லை. ஆனால் குஜராத்தில் குஜராத்தி எண்ணைப் பயன்படுத்துவார்கள். அதேபோல், மகாராஷ்டிராவில் இந்தி எண்ணைப் பயன்படுத்துவார்கள். எனவே, அந்தந்த மாநிலங்களுக்குச் செல்லும்போது அம்மாநில மொழி அறிவு என்பது அவசியம். அதனைவிடுத்து, மாநில மொழிகளைத் தெரியாதவர்களை நியமிப்பது என்பது அம்மாநில மக்களைத் துன்புறுத்துவதுபோல ஆகிவிடும்'' என்கிறார்.

பட மூலாதாரம், Arunabarathi FB
பின்னணி என்ன?
இதையடுத்து, பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் துணைச் செயலாளர் அருணபாரதி, ''தமிழ்நாட்டில் வங்கிப் பணிகளில் தமிழ் தெரிந்தவர்கள்தான் நூறு சதவீதம் நியமிக்கப்பட வேண்டும். இதற்கான சட்டத்தை தமிழ்நாடு அரசு சட்டம் கொண்டு வரவேண்டும். கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இப்படிப்பட்ட சட்டங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மாநில அரசு இதில் தலையிடாமல் உள்ளது. வெளிமாநிலத்தவர் நேரடியாக அரசுப் பதவிகளில் வருகின்ற வகையில் மத்திய அரசு படிப்படியாக விதிகளைத் திருத்தி வருகிறது'' என்கிறார்.
''2016ஆம் ஆண்டு மதுரையில் அஞ்சலகத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் ஹரியானாவைச் சேர்ந்த பல மாணவர்கள் 25 மதிப்பெண்ணுக்கு 25 மதிப்பெண்ணை பெற்றனர். 'தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்வில் மாநில மொழியை அறியாமல் இவ்வளவு மதிப்பெண் பெற்றது எப்படி?' என அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர்கள் யாருக்கும் தமிழ் தெரியவில்லை என்ற உண்மை வெளியில் வந்தது. இதுதொடர்பாக சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. 'தமிழில் தேர்வு இல்லை' எனக் கூறுவதால் நேரடியாகவே வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களை இங்கு வேலையில் அமர்த்த முடியும். அதற்காகத்தான் இதுபோன்ற வேலைகளைச் செய்கின்றனர். அதன்மூலம் பிற மாநிலத்தவர்களை அதிகளவில் இங்கு நிரப்பச் செய்கின்றனர். இதனைச் செய்வதால் தமிழர் என்ற உணர்வை காலப்போக்கில் மழுங்கடிக்கும் யுக்தியாகவும் இதனைச் செய்கின்றனர்'' என்கிறார் அருணபாரதி.
பா.ஜ.கவிடம் 3 கேள்விகள்
''வங்கிப் பணிகளில் தமிழ் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?'' என தமிழ்நாடு பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். ''வங்கிப் பணி என்பது அகில இந்திய அளவில் நடக்கும் தேர்வு. அதில் இடஒதுக்கீடு என்பதெல்லாம் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில்தான் தேர்வு செய்யப்படுகின்றனர். வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை ஒப்பிடும்போது அறிவுரீதியாக தமிழ்நாடு பின்தங்கவில்லை. ஆட்சியாளர்களுக்கு பிற மொழிகள் தெரியாமல் இருக்கலாம். ஆனால், மாணவர்களுக்கு அப்படியல்ல. பிற மொழிகளைக் கற்றுக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் உள்ளனர்'' என்கிறார்.

பட மூலாதாரம், S.R.Sekar
தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், '' தி.மு.கவின் தேர்தல் அறிக்கையிலும், 'பிறருக்கு இடையூறு இல்லாமல் பிற மொழிகளை கற்றுத் தருவதற்கு முயற்சி செய்வோம்' என்கிறது. அதாவது, இந்தி தவிர அவர்கள் விரும்பினால் பிற மொழிகளைக் கற்றுத் தருவோம் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. 'அரசியமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு பணியாற்றுவோம்' எனக் கூறும் ஒரு கட்சி, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பறிபோவதாகக் கூறுவதை ஏற்க முடியாது. தற்போது நடந்த வங்கித் தேர்வு, அதில் கடைபிடிக்கும் வழிமுறைகள் எல்லாம் மத்தியில் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது கடைபிடிக்கப்பட்டவைதான். இதில் எந்த மாற்றமும் இல்லாதபோது இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராக தவறான தகவல்களை சிலர் பரப்புகின்றனர்'' என்கிறார்.
''கிளரிக்கல் பணிகளில் எளிய மக்களோடு பேசுவதற்கு மாகாண மொழி அவசியம்தானே?'' என்றோம். '' வங்கிகளில் கிளார்க் பதவிகளில் உள்ளவர்களை எல்லாம் எந்த ஊருக்கும் மாற்றப்படலாம் என்ற அடிப்படைல்தான் நியமன ஆணையே வழங்கப்படுகிறது. இதில், அதிகாரிகளுக்கு ரெகுலர் பணியிட மாற்றம் இருக்கும். கிளார்க் பதவிகளுக்கு அவசியம் ஏற்பட்டால் பணியிட மாறுதல் இருக்கும். அதேநேரம், தமிழர்களுக்கே மட்டுமே வேலை என்ற கருத்தை, பிற மாநிலத்தவர்களும் கடைப்பிடித்தால் என்ன ஆகும்? அங்கெல்லாம் பணிபுரியும் தமிழ் அதிகாரிகளின் நிலை என்னவாகும்?'' என்கிறார்.
'' 2016ஆம் ஆண்டு நடந்த அஞ்சலகத் தேர்வில் தமிழ் தெரியாவர்கள் எல்லாம் அதிக மதிப்பெண் எடுத்த சம்பவம் நடந்ததே?'' என்றோம். ''அனைத்து இடங்களிலும் கறுப்பு ஆடுகள் இருக்கத்தான் செய்யும். அதற்காக அனைத்தையும் தவறு எனக் கூறிவிட முடியாது. அஞ்சல தேர்வில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்துப் பேசுவது என்பது சரியல்ல. வங்கித் தேர்வில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எந்தவகையிலும் ஆபத்து இல்லை. நாட்டின் பொது அமைதிக்கு எதிராக சில தொழிற்சங்க நிர்வாகிகளால் தவறான தகவல் பரப்பப்படுகிறது'' என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்









