ஜம்மு காஷ்மீர் தொகுதிகள் மறுவரையரை: பலன் பெறுமா பாஜக கூட்டணி?

ஜம்மு காஷ்மீரில் எல்லை மறுவரையறுப்பால் ஏற்படும் விளைவுகள்

பட மூலாதாரம், ANADOLU AGENCY

ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக அமைக்கப்பட்ட எல்லை மறுநிர்ணய ஆணையத்தின் அறிக்கைக்குப் பிறகு, சட்டப் பேரவை மற்றும் மக்களவை தொகுதிகள் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் 90 சட்டப்பேரவை இடங்களும் 5 நாடாளுமன்ற இடங்களும் இருக்கும் என தலைமை தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளார். 43 சட்டப்பேரவை தொகுதிகள் ஜம்மு பிராந்தியத்திலும் 47 தொகுதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் இருக்கும்.

90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏழு இடங்கள் பட்டியல் சாதியினருக்கும் ஒன்பது இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்படும். பாரமுல்லா, ஸ்ரீநகர், அனந்த்நாக்-ரஜோரி, உதம்பூர் மற்றும் ஜம்மு ஆகிய ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கும்.

"முன்பு ஒரு சட்டப்பேரவை தொகுதி பல மாவட்டங்களில் பரவியிருக்கும். ஆனால் இப்போது சட்டப்பேரவைத் தொகுதி ஒரே மாவட்டத்திற்குள் இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம்," என்று சுஷீல் சந்திரா கூறினார். இந்த ஆணையத்தை அரசு 2020 மார்ச் மாதம் அமைத்தது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்சிகள் ஆணையத்தின் பரிந்துரையை எப்படிப் பார்க்கின்றன?

இதற்கு ஜம்மு - காஷ்மீரில் சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளன. இது ஜம்மு - காஷ்மீர் மக்களை அதிகாரமற்றவர்களாக மாற்றும் முயற்சி என்றும் அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்றும் அவை கூறியுள்ளன.

எல்லை மறுவரையறுப்பு ஆணையக்குழுவை உருவாக்கும் தேவை ஏன் ஏற்பட்டது, அது ஏன் சர்ச்சைக்குரியது?

ஜம்மு - காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் மூலம் 2019 இல் சட்டப்பேரவை இடங்கள் அதிகரிக்கப்பட்ட பின்னர் எல்லை மறுநிர்ணயம் அவசியமானது. முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் 111 இடங்கள் சட்டப்பேரவை தொகுதிகள் இருந்தன. அதாவது காஷ்மீரில் 46, ஜம்முவில் 37 மற்றும் லடாக்கில் நான்கு இடங்கள் இருந்தன. இது தவிர 24 இடங்கள் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீரில் (PAK) இருந்தன.

ஜம்மு காஷ்மீரில் இருந்து லடாக் பிரிக்கப்பட்டபோது இங்கு 107 இடங்கள் மட்டுமே எஞ்சின. மறுசீரமைப்பு சட்டத்தில், இந்த இடங்கள் 114 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 90 இடங்கள் ஜம்மு காஷ்மீருக்கும் 24 இடங்கள் பாகிஸ்தானால் நிர்வகிக்கப்படும் காஷ்மீருக்கும் உள்ளன.

எல்லை மறுசீரமைப்பு ஆணையம் 2020, மார்ச் 6ஆம் தேதி உருவாக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான ஆணையத்தில், நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மற்றும் துணைத் தேர்தல் ஆணையர் சந்திர பூஷண் குமார் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான ஆணையத்தில், நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா மற்றும் நாட்டின் துணைத் தேர்தல் ஆணையர் சந்திர பூஷண் குமார் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

பட மூலாதாரம், ANI

எல்லை மறுசீரமைப்பு ஏன் சர்ச்சைக்குரியது?

ஜம்மு-காஷ்மீரில் மட்டுமே எல்லை மறுசீரமைப்பு செய்யப்படுவதாகவும் நாடு முழுவதும் இந்த நடவடிக்கை 2026 வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. 2019ஆம் ஆண்டு, சட்டப்பிரிவு 370 நீக்கப்படுவதற்கு முன்பு, மத்திய அரசு மாநிலத்தின் நாடாளுமன்ற இடங்களையும் மாநில அரசு சட்டப்பேரவை தொகுதிகளையும் மறுசீரமைப்பு செய்து வந்தது. ஆனால், இப்போது ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக ஆன பிறகு, இரண்டு பொறுப்புகளும் மத்திய அரசிடம் உள்ளன.

ஜம்மு - காஷ்மீரில் கடைசியாக தொகுதி மறுசீரமைப்பு 1995ல் செய்யப்பட்டது. அதன் பிறகு மாநில அரசு அதை 2026க்கு ஒத்திவைத்தது. மாநில அரசின் முடிவை எதிர்த்து ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இரு நீதிமன்றங்களும் இந்த ஒத்திவைப்பை உறுதி செய்தன.

மறுசீரமைப்பு சட்டத்தின் கீழ் எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது, ஆனால் இந்தச்சட்டம் இன்னும் பரிசீலனையின் கீழ் மட்டுமே இருப்பதாக ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் கூறுகின்றன.

ஜம்மு - காஷ்மீரை இரு தனிப் பகுதிகளாகக் கருதாமல், ஒரே பகுதியாக கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளதாக ஆணையம் கூறுகிறது. சில சட்டப்பேரவை தொகுதிகளின் பெயர் அல்லது பிராந்திய மாற்றத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளது. தங்மார்க் என்பது குல்மார்க் என்றும் ஜூனிமர் என்பது ஜைதிபால் என்றும் சோனார் என்பது லால் சௌக் என்றும், கட்டுவா வடக்கு என்பது ஜஸ்ரோட்டா என்றும் அழைக்கப்படும்.

ஆணையம் இரண்டு முறை ஜம்மு காஷ்மீர் சென்று 242 பிரதிநிதி குழுக்களுடன் கலந்துரையாடி அறிக்கையை தயார் செய்தது.

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆணையம் என்னென்ன பரிந்துரைகளை செய்துள்ளது, அதில் என்ன மாற்றம் வரப்போகிறது?

எல்லை மறுநிர்ணய ஆணையம், ஏழு இடங்களை அதிகரிக்க பரிந்துரை செய்துள்ளது. இதன்மூலம் ஜம்முவில் இருந்த 37 தொகுதிகள் இப்போது 43 ஆகவும் காஷ்மீரில் இருந்த 46 இடங்கள் இப்போது 47 ஆகவும் ஆகிவிடும்.

இது தவிர, முதன்முறையாக ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகள் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ரஜோரி, புத்தல், தானா மண்டி, சூரன்கோட்டே, பூஞ்ச் ஹவேலி, மெந்தர், கோகர்நாக், குரேஸ் மற்றும் குல்பர்க் ஆகியவை அடங்கும். யூனியன் பிரதேசம் அமைக்கப்படுவதற்கு முன்பு குறிப்பாக புலம்பெயர்ந்த குஜ்ஜார் மற்றும் பகர்வால்களுக்கு இந்த ஏற்பாடு இருக்கவில்லை.

ஜம்மு காஷ்மீரில் எல்லை மறுவரையறுப்பால் ஏற்படும் விளைவுகள்

பட மூலாதாரம், Getty Images

நாடாளுமன்ற தொகுதிகளை எடுத்துக்கொண்டால், அனந்த்நாக் மற்றும் ஜம்மு தொகுதிகளின் எல்லையை ஆணையம் மாற்றியுள்ளது. ஜம்முவின் பீர் பஞ்சால் பகுதி காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்கள் பீர் பஞ்சால் பகுதியில் வருகின்றன. மேலும், ஸ்ரீநகர் நாடாளுமன்றத் தொகுதியில் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் ஒரு பகுதி, பள்ளத்தாக்கில் உள்ள பாரமுல்லா தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு சட்டமன்றத்தில் இடம் கிடைக்குமா?

காஷ்மீரில் இருந்து புலம்பெயர்ந்தோர் (காஷ்மீரி இந்துக்கள்) சமூகத்தைச் சேர்ந்த குறைந்தது இரண்டு உறுப்பினர்களாவது சட்டப்பேரவையில் இருக்கவேண்டும் என்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பான பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்த உதவுவதற்காக இந்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நிர்வாக காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு, ஜம்மு காஷ்மீர் சட்டப் பேரவையில் பிரதிநிதித்துவம் வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. நாட்டின் பிரிவினைக்குப் பிறகு இவர்கள் ஜம்முவுக்கு குடிபெயர்ந்தனர். நியமன உறுப்பினர்களாக இவர்கள் பரிந்துரை செய்யப்படுவதன் மூலம் இது சாத்தியமாகலாம்.

காஷ்மீரி பண்டிட்டுகளுக்கோ பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கோ இடங்களை ஒதுக்க ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. இருப்பினும், மறுசீரமைப்புச் சட்டம், 2019, பட்டியல் பழங்குடியினருக்கான இடங்களை ஒதுக்குவதற்கு எல்லை நிர்ணய ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

ஆனால், ஆணையத்தின் பரிந்துரை காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை உள்துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கும் இந்த சமூகம் எடுத்துச் சென்றுள்ளது. மறுசீரமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை அவர்கள் கோருகின்றனர்.

பாஜகவின் காஷ்மீர் பண்டிட் தலைவர் அஷ்வினி சுருங்கு இந்தப் பரிந்துரைகளை வரலாற்று சிறப்புமிக்கது என்று எக்கனாமிக் டைம்ஸ் நாளிதழிடம் வர்ணித்துள்ளார். காஷ்மீரி சீக்கியர்களை பரிந்துரைத்து நியமிக்கவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் எல்லை மறுவரையறுப்பால் ஏற்படும் விளைவுகள்

பட மூலாதாரம், BILAL BAHADUR

சட்டமன்றத்தின் இடங்களை மறுசீரமைப்பதன் பொருள் என்ன?

இந்த மாற்றங்களுக்குப் பிறகு, ஜம்முவின் மக்கள் தொகையில் 44% பேர் 48% இடங்களிலும், காஷ்மீரில் வாழும் 56% மக்கள் மீதமுள்ள 52% இடங்களிலும் வாக்களிப்பார்கள். முந்தைய அமைப்பில், காஷ்மீர் மக்களில் 56% பேர் 55.4% இடங்களிலும், ஜம்முவில் 43.8% பேர், 44.5% தொகுதிகளிலும் வாக்களித்தனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற ஆங்கில நாளிதழின்படி, ஜம்முவில் உள்ள ஆறு புதிய தொகுதிகளில் நான்கு இடங்களில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களை உள்ளடக்கிய செனாப் பகுதியில் உள்ள இரண்டு புதிய இடங்களில் மற்றும் பாடர் தொகுதியிலும் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர். காஷ்மீரில் பாஜகவுக்கு நெருக்கமானதாகக் கருதப்படும் பீப்பிள்ஸ் காங்கிரஸின் வலுக்கோட்டையான குப்வாராவில் ஒரு புதிய தொகுதி உள்ளது.

காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் பாகிஸ்தானிலிருந்து இடம் பெயர்ந்தவர்களுக்கான இட ஒதுக்கீடும் பாஜகவுக்கு உதவும் என்று கூறப்படுகிறது. காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு ஏற்கனவே உள்ள தொகுதிகளில் இருந்து இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டுமா அல்லது அவர்களுக்கு கூடுதல் இடங்கள் வழங்கப்பட வேண்டுமா என்பதை ஆணையம் குறிப்பிடவில்லை.

அனந்த்நாக் மற்றும் ஜம்முவின் மறுசீரமைப்பு, இந்தத் தொகுதிகளில் வெவ்வேறு சமூக மக்களின் தாக்கத்தை மாற்றும்.

பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு ஒன்பது சட்டப்பேரவை இடங்களை ஆணையம் ஒதுக்கியுள்ளது. இதில் ஆறு இடங்கள் மறுசீரமைக்கப்பட்ட அனந்த்நாக் நாடாளுமன்றத் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் பூஞ்ச் மற்றும் ரஜோரி ஆகியவை அடங்கும். அவை பட்டியல் பழங்குடியினரின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளன. இந்த நாடாளுமன்றத் தொகுதியும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன.

முன்னதாக, அனந்த்நாக் தொகுதியில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினமக்கள் தொகை குறைவாக இருந்தது. ஆனால் இந்த மாற்றங்களுக்குப் பிறகு, இந்தத் தொகுதியின் தேர்தல் முடிவுகள் பூஞ்ச் மற்றும் ரஜோரியைப் பொருத்து அமையும். இது காஷ்மீரி மொழி பேசும் முஸ்லிம் வாக்காளர்களின் செல்வாக்கைக் குறைப்பதாக பள்ளத்தாக்கில் உள்ள அரசியல் கட்சிகள் கருதுகின்றன.

ஜம்மு காஷ்மீரில் எல்லை மறுவரையறுப்பால் ஏற்படும் விளைவுகள்

பட மூலாதாரம், EPA

ஜம்மு மக்களவைத்தொகுதியில் பூஞ்ச் மற்றும் ரஜோரி தொடர்ந்து இருந்தால், அது பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட மக்களவை தொகுதியாக அறிவிக்கப்படக்கூடும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது. இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க இது பாஜகவுக்கு உதவலாம்.

பாரமுல்லா மறுசீரமைப்பு ஷியா வாக்குகளை பலப்படுத்தும் என்று பள்ளத்தாக்கில் உள்ள கட்சிகள் கூறுகின்றன. இது சஜ்ஜாத் லோனின் பீப்பிள்ஸ் காங்கிரஸின் ஷியா தலைவர் இம்ரான் ராஸா அன்சாரிக்கு உதவக்கூடும்.

ஜம்மு காஷ்மீர் கட்சிகள் யார் என்ன சொல்கின்றன?

பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், "நாங்கள் அதை முற்றிலும் நிராகரிக்கிறோம். எல்லை நிர்ணய ஆணையக்குழு மக்கள்தொகை அடிப்படையை புறக்கணித்து அதன் விருப்பத்திற்கேற்ப செயல்படுகிறது. அதன் பரிந்துரைகள், 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததன் ஒரு பகுதியாகும்... ஜம்மு காஷ்மீரில் மக்கள் அதிகாரமற்றவர்களாக மாற்றப்பட்டுள்ளனர்," என்றார்.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

"ஒரு குறிப்பிட்ட சமூகம் மற்றும் பிராந்தியத்தைச் சேர்ந்த மக்களை வலுவற்றவர்களாக ஆக்கச் செய்வதற்கான பாஜகவின் நிகழ்ச்சி நிரலின்படி, எல்லை மறுநிர்ணய ஆணையம் செயல்படுகிறது என்று பிடிபி முதல் நாளிலிருந்தே கூறி வருகிறது. தேர்தல் பெரும்பான்மையை, சிறுபான்மையாக மாற்றியதன் மூலம் இந்திய அரசு மீண்டும் இந்த நாட்டின் அரசியலமைப்பை காலில் போட்டு மிதித்துள்ளது."

"எல்லை மறுநிர்ணய ஆணையத்தின் இறுதி பரிந்துரைகளை நாங்கள் பார்த்தோம். இந்த பரிந்துரைகளை ஒவ்வொரு தொகுதி வாரியாக ஆய்வு செய்து வருகிறோம். எப்பொழுது தேர்தல் வந்தாலும், கடந்த நான்காண்டுகளில் செய்த காரியங்களுக்காக பாஜகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் வாக்காளர்கள் தண்டிப்பார்கள் என்ற அடிப்படை யதார்த்தத்தை எந்த வித சூழ்ச்சியாலும் மாற்ற முடியாது," என்று தேசிய மாநாட்டின் தலைமை செய்தி தொடர்பாளர் தன்வீர் சாதிக் தெரிவித்தார்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

" தற்போது பரிசீலனையில் உள்ள ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எங்களிடம் கருத்து கேட்கப்படவில்லை. நாங்கள் இல்லாத நேரத்தில் எடுக்கும் எந்த முடிவும் ஒருபோதும் சரியாக இருக்காது. அதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்," என்று குப்கார் கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் முகமது யூசுஃப் தாரிகாமி எக்கனாமிக் டைம்ஸிடம் தெரிவித்தார்.

"எதிர்பார்த்தபடி மாற்றங்கள் செய்யப்படவில்லை. இது பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டுமே பலன் தரும். இது அரசியல் விளையாட்டை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையாகும். எப்போது தேர்தல் நடந்தாலும், பாஜக மற்றும் அதனுடன் இணைந்த கட்சிகளுக்கு வாக்காளர்கள் உறுதியான பதிலை அளிப்பார்கள் என்று நாங்கள் கருதுகிறோம்," என்று தேசிய மாநாட்டின் இம்ரான் தார் கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் எல்லை மறுவரையறுப்பால் ஏற்படும் விளைவுகள்

பட மூலாதாரம், Getty Images

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சைஃபுதீன் சோஸ், இந்த மாற்றங்கள் குறித்து தனது ஏமாற்றத்தை எக்கனாமிக் டைம்ஸ் நாளேட்டிடம் வெளிப்படுத்தினார். ஜம்மு காஷ்மீர் மக்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். அதேவேளை சிறுத்தைகள் கட்சியும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் ஆதாயத்திற்காக செய்யப்பட்ட நடவடிக்கை இது என்று ' ஜம்மு காஷ்மீர் அப்னி கட்சியை' சேர்ந்த முந்தாசிர் மொஹியுதீன் கூறியுள்ளார். "அவர்கள் ஜம்மு காஷ்மீர் மக்களை பிரிக்க விரும்புகிறார்கள். எங்கள் பரிந்துரைகளுக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. கூடவே இந்த நடவடிக்கையை கேலிக்கூத்தாக ஆக்கிவிட்டனர்,"என்று குறிப்பிட்டார்.

இந்த மாற்றங்கள் சிறப்பானவை என்று பாஜக மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறுகிறார். உரிய நேரத்தில் பணிகளை முடித்த ஆணையத்திற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, காஷ்மீர் முஸ்லிம்களுக்கு குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு: தாலிபன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: