குஜராத்தில் முன்கூட்டியே தேர்தல் வர பாஜக விரும்புகிறதா?

பாஜக கொடி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ராக்ஸி கக்டேகர் சாரா
    • பதவி, அகமதாபாத்திலிருந்து

குஜராத்தில் நடப்பு சட்டப் பேரவையின் பதவிக்காலம் 2022 டிசம்பரில் முடிவடைய உள்ளது. மாநிலத்தில் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள் உள்ளன. ஆனால் மாநிலத்தின் அரசியல் சூழ்நிலை முன்கூட்டிய தேர்தலை சுட்டிக்காட்டுகிறது. 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 77 இடங்களை வென்றது.

பிரதமர் நரேந்திர மோதியின் அதிகரித்து வரும் வருகைகள் மற்றும் பழங்குடியினர் பெரும்பான்மை பகுதிகளில் அவரால் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்கள் போன்றவை, முன்கூட்டியே தேர்தல் வரக்கூடும் என்று சிந்திக்க அரசியல் ஆய்வாளர்களை கட்டாயப்படுத்தியுள்ளது. கூடவே ஜே.பி. நட்டா மற்றும் அனுராக் தாக்கூர் உள்ளிட்ட பாஜகவின் உயர்மட்ட தலைவர்களின் சமீபத்திய வருகைகளும் மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தல் நடக்கும் என்ற ஊகங்களை மேலும் அதிகரித்துள்ளன.

மும்பை மாகாணத்தில் இருந்து பிரிந்து 1960 ஆம் ஆண்டு உருவான குஜராத் மாநிலம், இதுவரை மூன்று முன்கூட்டிய தேர்தல்களை சந்தித்துள்ளது. முதலாவது 1975-ம் ஆண்டு. இரண்டாவது முறையாக 1998-ம் ஆண்டு மற்றும் கடைசியாக 2002-ம் ஆண்டு தற்போதைய பிரதமர் நரேந்திர மோதி மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றபோது தேர்தல் முன்கூட்டியே நடைபெற்றது.

தற்போது, பாஜக மாநிலத் தலைவர் சிஆர் பாட்டீல் நடத்திவரும் மாவட்ட வாரியான கூட்டங்களுடன் அக்கட்சி தேர்தல் தயாரிப்பில் இருப்பதுபோலத் தெரிகிறது. மறுபுறம் காங்கிரஸும் மாநிலத்தின் எல்லா மாவட்டங்களிலும் தனது 'சிந்தன் ஷிவிர்களை'( சிந்தனை கூட்டங்களை) முடுக்கிவிட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சி தற்போது மாநிலத்தில் தனது அமைப்பைக் கட்டியெழுப்புவதில் மும்முரமாக உள்ளது. மேலும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மனீஷ் சிசோடியாவின் தனித்தனியான சமீபத்திய வருகைகளுக்குப் பிறகு தொண்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க கட்சி முயற்சி செய்கிறது.

காங்கிரஸ் கொடி

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும், 2017 இல் இருந்த நிலைமையைப் போலல்லாமல், காங்கிரஸின் தற்போதைய நிலை கேள்விக்குறியாக உள்ளது. பெரும்பாலான தலைவர்கள் கட்சியை சீர்செய்யும் பணியில் மும்முரமாக உள்ளனர். அக்கட்சியின் பல சட்டப்பேரவை உறுப்பினர்களும், மூத்த தலைவர்களும் கடந்த சில ஆண்டுகளில் பாஜக அல்லது ஆம் ஆத்மி கட்சிக்கு மாறியுள்ளனர்.

மாநிலத்தில் பாஜகவின் நிலை என்ன?

பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார். மேலும் இந்த மாத இறுதியில் அவர் மீண்டும் அங்கு செல்ல இருக்கிறார்.

மாநில பாஜக தலைவர், சிஆர் பாட்டீல், மாநிலத்தின் 33 மாவட்டங்களில் உள்ள தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க 'ஒவ்வொரு நாளும்-ஒவ்வொரு மாவட்டம்' திட்டத்தை அறிவித்திருந்தார். மோதி சமீபத்தில் பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். மாநிலத்தில் உள்ள பழங்குடியின மக்களை ஈர்க்க பழங்குடியினர் பகுதியில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டன.

"உத்திரபிரதேசத்தில் எங்களின் வெற்றிக்குப் பிறகு அதிக உற்சாகத்துடன் இருக்கும் தொண்டர்கள் மத்தியில் உத்வேகத்தை அதிகரிக்க விரும்புகிறோம் ," என்று பெயர் வெளியிட விரும்பாத பாஜகவின் உயர்மட்ட தலைவர் ஒருவர் பிபிசியிடம் கூறினார். இருப்பினும், மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது பாட்டீல் கூறினார்.

பாஜக

பட மூலாதாரம், Getty Images

தனது அரசியல் எதிரிகளை எதிர்பாராத வகையில் தேர்தல் அதிர்ச்சியில் ஆழ்த்தவே இந்த நடவடிக்கை என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மோதி தனது கடைசி பயணத்தின் போது, மாநிலத்தின் சில உயர்மட்ட பாஜக தலைவர்களுடன் நேரத்தை செலவிட்டார் மற்றும் மாநிலத்தில் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விவாதித்தார்.

காங்கிரஸ் தயாராக உள்ளதா?

2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், தற்போது காங்கிரஸின் நிலை சரியில்லை என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹார்திக் படேல் காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவில் இணையப்போவதாக அரசியல் வட்டாரத்தில் வதந்திகள் பரவி வரும் நிலையில், உயர்மட்ட தலைவர்களுக்கு இடையேயான உட் பூசல் உச்சத்தில் உள்ளது. 2017 தேர்தலைப் போல், மக்கள் முன்னிலையில் கொண்டு செல்ல காங்கிரஸுக்கு பெரிய விஷயம் எதுவும் இல்லை. 2017ல் பட்டேல்களின் மாநிலம் தழுவிய போராட்டத்தால் அக்கட்சிக்கு உத்வேகம் கிடைத்தது.

செல்வாக்கு மிக்க படேல் தலைவர் நரேஷ் படேல் காங்கிரஸில் இணைவதாக தலைப்புச் செய்தி வெளியான பிறகு, அவர் இன்னும் கட்சியில் சேரவில்லை. டெல்லியில் கட்சி மேலிடம் முடிவெடுப்பதில் தாமதம் செய்வதே இதற்கு காரணம் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் உயர்மட்ட தலைவர் ஒருவர் பிபிசியிடம், கட்சி மோசமான நிலையில் இருப்பதாகவும், இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பாஜக விரும்புவதாகவும் கூறினார். காங்கிரஸின் தற்போதைய சூழ்நிலையும், ஆம் ஆத்மியின் எழுச்சியும் பாஜகவை முன்கூட்டிய தேர்தலுக்குத் தயாராக தூண்டியிருக்கும் என்று அந்தத்தலைவர் கூறினார். கட்சி தனது தொண்டர்களை ஊக்குவிப்பதில் மும்முரமாக உள்ளது என்றும், மாவட்ட வாரியாக சிந்தனை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்றும் மற்றொரு காங்கிரஸ் தலைவரான அர்ஜுன் மோத்வாடியா பிபிசியிடம் தெரிவித்தார். இந்தத் தேர்தலில் 2017-ஐ விட சிறப்பாக செயல்பட தாங்கள் அனைவரும் தயாராக இருப்பதாக அவர் மேலும் கூறினார். உட்பூசலை முடிவுக்கு கொண்டுவரும் பொறுப்பு, குறைந்தபட்சம் 48 வேட்பாளர்களிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

புதிய நுழைவு - ஆம் ஆத்மி கட்சி

செல்வாக்குமிக்க சூரத் மாநகராட்சியில் 27 இடங்களை வென்ற ஆம் ஆத்மி கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. இருப்பினும் 2021 இல் நடைபெற்ற காந்திநகர் நகராட்சி தேர்தல்களில் கட்சியால் எந்த வெற்றியும் பெற முடியவில்லை. ஆம் ஆத்மி கட்சி , மாவட்ட வாரியான அமைப்பைக் கட்டியெழுப்ப இன்னும் போராடி வருகிறது. மேலும் எல்லா 182 இடங்களுக்கும் நல்ல வேட்பாளர்களைத் தேடுகிறது. 148 சட்டப்பேரவை தொகுதிகளில் கட்சி தனது கட்டமைப்பை முடித்துவிட்டதாகவும், மற்றவை மிகக் குறுகிய காலத்தில் சரி செய்யப்படும் என்றும் ஆம் ஆத்மி கட்சியின் பொதுச் செயலர் மனோஜ் சொராத்தியா பிபிசியிடம் கூறினார். "நாங்கள் அனைவரும் எந்த நேரத்திலும் தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். மேலும் மாநிலத்தில் சிறப்பாக செயல் திறனை காட்டுவோம்," என்று அவர் கூறினார்.

கேஜ்ரிவால்

பட மூலாதாரம், Getty Images

எழுத்தர் ஆட்சேர்ப்புக்கான அரசுத் தேர்வின் கேள்வித்தாள் கசிவு தொடர்பாக அரசுக்கு எதிராக பிரசாரம் செய்வது உட்பட மாநிலத்தில் சமீபத்தில் நடந்த போராட்டங்களில் கட்சித் தொண்டர்கள் முக்கியப் பங்காற்றினர். பாழடைந்த அரசுப் பள்ளிக் கட்டடங்கள் பிரச்னையில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தவும் கட்சி ஏற்பாடு செய்திருந்தது. "இந்தப் போராட்டங்கள் மக்களிடம் சென்று வாக்குகளை சேகரிப்பதில் ஆம் ஆத்மி கட்சிக்கு உதவும்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

அரசியல் ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

முன்கூட்டியே தேர்தல் வருவதற்கான வாய்ப்புகள் பற்றித்தெரிந்துகொள்ள பிபிசி, சில அரசியல் ஆய்வாளர்களிடம் பேசியது. இந்த கட்டத்தில் சட்டப்பேரவையை கலைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்று சிலர் நம்புகிறார்கள், அதே நேரத்தில் பலவீனமான எதிர்க்கட்சியின் வாய்ப்பைக் கருத்தில் கொள்ள கட்சி விரும்பலாம் என்று மற்றவர்கள் கூறுகிறார்கள்.

கன்ஷ்யாம் ஷா ஒரு மூத்த அரசியல் ஆய்வாளர் மற்றும் குஜராத் அரசியலை ஆரம்பத்திலிருந்தே ஆய்வு செய்பவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதாக கருதுவது தவறு என்று அவர் கூறுகிறார். மாநிலத்தில் நிலவும் பணவீக்கம் மற்றும் தண்ணீர் நெருக்கடிக்கு மத்தியில் பாஜக தேர்தலுக்கு செல்ல முடிவு செய்தால் அது பின்னடைவை சந்திக்க வேண்டியிருக்கும் என்றார் அவர். மாநிலத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயிகள் பிரச்னை மிகவும் உக்கிரமாக இருப்பதாகவும், கடந்த காலங்களில் தண்ணீர் தொடர்பான பிரச்னை வரும்போது மக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்ததை மறந்துவிடக் கூடாது என்றும் ஷா கூறினார்.

இருப்பினும், பாஜக நிச்சயமாக பலவீனமான எதிரிகள் சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்த விரும்புகிறது. மேலும் ஆம் ஆத்மி மாநிலத்தில் ஆதிக்கம் பெறுவதை அது விரும்பவில்லை என்று மற்றொரு அரசியல் ஆய்வாளரான சார்தக் பாக்சி பிபிசியிடம் தெரிவித்தார்.

"நவம்பரில் தேர்தல் நடந்தால் மாநிலத்தில் தனது இருப்பை நிலைநாட்ட ஆம் ஆத்மி கட்சிக்கு மேலும் ஆறு மாதங்கள் கிடைக்கும். அது பாஜகவுக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும்," என்று சார்தக் பாக்சி குறிப்பிட்டார்.

பாஜக எதற்காக முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்று பொருளாதார நிபுணரும் அரசியல் ஆய்வாளருமான ஹேமந்த் ஷா பிபிசியிடம், கேள்வி எழுப்பினார். "பாஜக தற்போது நல்ல நிலையில்தான் இருக்கிறது. அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகும் அப்படித்தான் இருக்கும். கட்சி அவசரப்பட வேண்டிய அவசியம் இல்லை. எந்தக் காரணமும் இல்லாமல் எட்டு மாதங்களுக்கு முன்னரே தற்போதைய அரசை கலைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு," என்றார் அவர்.

தேர்தல் ஆணையத்தின் தயார் நிலை?

தேர்தல் ஆணையமும் முன்கூட்டிய தேர்தலை நடத்த ஆயத்தமாகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. முதல்முறை வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்படுவதைத் தவிர்த்து, வாக்காளர் பட்டியல் தயாராக உள்ளது. அதற்கான பிரசாரம் செப்டம்பர் மாதத்தில் மட்டுமே தொடங்கும். மாநிலம் முழுவதும் தொகுதிகள் மட்டத்தில் அதிகாரிகளை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் பள்ளி ஆசிரியர்களில் இருந்து அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொகுதிகள் மட்ட அதிகாரிகளை நியமனம் செய்வதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: