இந்தியாவில் கொரோனாவால் 40 லட்சம் பேர் உயிரிழப்பா? - மத்திய அரசு தந்த விளக்கம்

கொரோனா பரிசோதனை

பட மூலாதாரம், Getty Images

இன்றைய நாளிதழ்கள், இணையதள பக்கங்களில் உள்ள முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து இங்கே வழங்குகிறோம்.

கொரோனா இறப்புகள் குறித்து மத்திய அரசு விளக்கம்

'உலகளாவிய கொரோனா இறப்பு எண்ணிக்கையை பகிரங்கமாக வெளியிடும் உலக சுகாதார அமைப்பின் முயற்சிகளை இந்தியா தடுத்து நிறுத்துகிறது' என்ற தலைப்பில் அமெரிக்காவின் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியாவில் கொரோனாவால் 5 லட்சம் பேர் இறந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது ஆனால், 40 லட்சம் வரையில் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கணக்கீட்டு முறையை ஏற்கவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இதுதொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளது மத்திய அரசு என தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் விளக்கம்:

  • உலக சுகாதார அமைப்பு ஆய்வில் முதல் அடுக்கு நாடுகளில் இருந்து ( அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்றவை) நேரடியாக பெறப்பட்ட இறப்பு புள்ளிவிவரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தியா உள்ளிட்ட இரண்டாம் அடுக்கு நாடுகளுக்கு கணித மாதிரி செயல்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா இந்த வழிமுறையை எதிர்க்கிறது.
  • இந்த வழிமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா தனது கவலைகளை பிற உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொண்டது. இதையொட்டி உலக சுகாதார அமைப்புக்கு 2021, 2022 ஆண்டுகளில் 6 கடிதங்களை இந்தியா எழுதி உள்ளது. அவற்றிலும், காணொளி காட்சி வழி கூட்டங்களிலும், இறப்புகளை கணக்கிடும் வழிமுறை மற்றும் அதிகாரப்பூர்வமற்ற தரவுகளின் பயன்பாடுகள் பற்றி சீனா, ஈரான், வங்காள தேசம், சிரியா, எத்தியோப்பியா, எகிப்து போன்ற பிற உறுப்பு நாடுகளுடன் சேர்ந்து இந்தியா குறிப்பிட்ட கேள்விகளை எழுப்பியது.
  • இந்தியாவின் முக்கிய கவலை, பூகோள ரீதியில் பெரிய அளவிலானதும், மக்கள் தொகையை அதிகமாக கொண்டுள்ள ஒரு நாட்டிற்கான புள்ளி விவர மாதிரி திட்ட மதிப்பீடுகள், சிறிய மக்கள் தொகை கொண்ட பிற நாடுகளுடன் எவ்வாறு பொருந்தும்? துனிசியா போன்ற சிறிய நாடுகளுக்கு பொருந்தும் மாதிரிகள், 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவுக்கு பொருந்தாது.
  • மாதிரி துல்லியமானதாக, நம்பகமானதாக இருந்தால், அதை அனைத்து முதல் அடுக்கு நாடுகளுக்கும் இயக்குவதன் மூலம் அங்கீகரிக்க வேண்டும்.
  • இந்தியா தனது கவலைகளை வெளிப்படுத்தி இருந்தாலும், உலக சுகாதார அமைப்பிடம் இருந்து திருப்திகரமான பதில் எதுவும் வரவில்லை.
  • கொள்கை உருவாக்கும் பார்வையில் இருந்து இது போன்ற தரவுத்தொகுப்புகள் உதவியாக இருக்கும் என்பதால் உலக சுகாதார அமைப்புடன் ஒத்துழைப்பதற்கு இந்தியா தயாராக உள்ளது. அதே நேரத்தில் கொள்கை வகுப்பவர்கள், எந்த விஷயத்திலும் நம்பிகையுடன் இருக்க வேண்டும், வழிமுறைகளில் ஆழமான தெளிவு இருக்க வேண்டும், செல்லுபடியாகும் தெளிவான ஆதாரம் முக்கியம் என்று இந்தியா நம்புகிறது.
  • இந்தியாவைப் பொறுத்தமட்டில் அதிகமான கொரோனா இறப்புகள் என்ற புள்ளிவிரங்களை 'நியூயார்க் டைம்ஸ்' பெற முடிந்தாலும், மற்ற நாடுகளுக்கான மதிப்பீடுகளை அறிந்து கொள்ள முடியவில்லை என்பது ஆச்சரியம் அளிக்கிறது.

25 மாவட்டங்களில் நடந்த உட்கட்சி தேர்தல் - தேர்வான அதிமுக நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வம்

பட மூலாதாரம், Getty Images

அதிமுக உட்கட்சி தேர்தல் நடந்த 25 மாவட்டங்களில் தேர்வான நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

அதிமுகவில் அமைப்பு ரீதியாக 75 மாவட்டங்கள் உள்ளன. கடந்தஆண்டு டிச.7-ம் தேதி ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் நடத்தப்பட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து, மாவட்டங்களின் கிளை, பேரூராட்சி வார்டு, நகராட்சி வார்டு, மாநகராட்சி வட்ட நிர்வாகிகளுக்கான முதல்கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27-ம் தேதி நடத்தப்பட்டது. இதையடுத்து, ராணிப்பேட்டை, கோவை, திருவண்ணாமலை, கடலூர், திருப்பூர், நாமக்கல்,தென்காசி, கரூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட அமைப்பு ரீதியான மாவட்டங்களுக்கு 2-ம் கட்டமாக கடந்த 11-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான தேர்தல் பொறுப்பாளர்கள், ஆணையர்களாக பிற மாவட்டங்களை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், 25 மாவட்டங்களில் ஒருமனதாக தேர்வான ஒன்றிய, நகர,பேரூராட்சி, பகுதி கழக நிர்வாகிகள் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி அறிவித்துள்ளனர் என மேலும் விவரிக்கிறது அச்செய்தி.

மேற்கு வங்க இடைத்தேர்தல்: திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி

சத்ருஹன் சின்ஹா

பட மூலாதாரம், Getty Images

மேற்கு வங்கத்தில் ஆசன்சோல் மக்களவைத் தொகுதி மற்றும் பாலிகஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது என்கிறது தினமணியின் செய்தி.

மேற்கு வங்கத்தில் உள்ள ஆசன்சோல் மக்களைத் தொகுதி மற்றும் பாலிகஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆசன்சோலில் 64.03 சதவீத வாக்குகளும், பாலிகஞ்சில் 41.1 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.

இந்நிலையில் பாலிகஞ்ச் தொகுதியில் திரிணாமூல் வேட்பாளர் பாபுல் சுப்ரியோவும், ஆசன்சோல் தொகுதியில் திரிணாமூல் வேட்பாளர் சத்ருகன் சின்ஹாவும் வெற்றி பெற்றுள்ளனர்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :