உ.பி மேலவைத் தேர்தல் - பிரதமர் மோதியின் வாரணாசி தொகுதியில் பாஜக தோற்றது ஏன்?

மோதி மற்றும் யோகி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, மோதி - யோகி
    • எழுதியவர், அனந்த் ஜணாணோ
    • பதவி, பிபிசி செய்தியாளர்

உத்தரப் பிரதேசத்தில் சட்ட மேலவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மொத்தமுள்ள 36 இடங்களில் 33 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் பிரதமரின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் படுதோல்வியடைந்துள்ளார். இது விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

உத்தரப் பிரதேச சட்ட மேலவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சுதாமா படேல், சுயேச்சை வேட்பாளரான அன்னபூர்ணா சிங்கிடம் படுதோல்வி அடைந்துள்ளார். இதில், அன்னபூர்ணா சிங் மொத்தம் 4,234 வாக்குகள் பெற்றார். சமாஜ்வாதி வேட்பாளர் உமேஷ் யாதவ் 345 வாக்குகள் பெற்ற நிலையில், பாஜகவின் டாக்டர் சுதாமா படேல் 170 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

ஆளும் பாஜக வேட்பாளரை வீழ்த்திய அன்னப்பூர்ணா சிங், கிழக்கு உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 'பாகுபலி' பிரிஜேஷ் சிங்கின் மனைவி. பிரதமர் நரேந்திர மோதியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் பாஜகவின் எம்எல்சி வேட்பாளர் மிக மோசமாகத் தோல்வியடைந்ததையடுத்து இதற்கான காரணங்கள் குறித்த கேள்விகள் எழுகின்றன.

பிரிஜேஷ் சிங் குறித்து பாஜக வேட்பாளர்

உத்தரப் பிரதேச சட்ட மேலவையின் 100 இடங்களில் 36 இடங்களுக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில், உள்ளாட்சி அமைப்புகள் அதாவது கிராம ஊராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் வாக்களித்தனர். பல மாவட்டங்களைப் போலவே, பனாரஸிலும் உள்ளாட்சி அமைப்புகளில் பாஜக வலுவான நிலையில் உள்ளது.

இருந்தபோதிலும், பாஜக வேட்பாளர் டாக்டர் சுதாமா படேல், அன்னபூர்ணா சிங்கின் கணவரும் சிறையில் உள்ளவருமான பிரிஜேஷ் சிங் தனது பலத்தைப் பயன்படுத்தி வெற்றியடைந்ததாக, ஏப்ரல் 9 ஆம் தேதி வாக்குப்பதிவுக்கு முன்பு குற்றம் சாட்டினார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது கட்சி தொண்டர்கள் குறித்து கூறுகையில், ''இவ்வளவு பெரிய பாகுபலி களத்தில் இறங்கியதால், பிற தொண்டர்கள் செயலிழந்து போகின்றனர்'' என்றார்.

சுதாமா படேல் மேலும் கூறுகையில், "பிரஜேஷ் சிங் வாரணாசி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மத்திய சிறையில் அவரைச் சந்திக்கும் ஒரு கூட்டமும் இங்கு உள்ளது. சுதாமா பட்டேலுக்கு நாம் ஆதரவளித்தால், நாம் இலக்காக்கப்படுவோம் என்ற அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது." என்றார்.

பிரஜேஷ் சிங்கின் செல்வாக்கு குறித்து, சுதாமா படேல், கூறுகையில்"அவர்களின் செல்வாக்கைப் பற்றி நான் என்ன சொல்வது? என்னை விட உங்களுக்கு நன்றாகத் தெரியும். பணம் விநியோகிக்கப்படுகிறது, அவர்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள சாம்ராஜ்யம் உள்ளது. பணத்தை விநியோகிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. என்னை போன்ற ஒரு தொண்டரிடம் அவ்வளவு பணம் இல்லை." என்று கூறினார்.

வாக்கெடுப்புக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய சுதாமா படேல், ''மாவட்ட அதிகாரியிடம் புகார் செய்யப்போவதாகவும், முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் நிலைமை கடுமையாக இருப்பதாகக் கூறப்போவதாகவும்'' தெரிவித்தார். ஆனால், தேர்தலுக்குப் பிறகு இந்த விவகாரம் முடிவடைந்துவிடும் என்றும் சுதாமா பட்டேல் கூறினார்.

கட்சி ஆதரவளிக்கவில்லையா?

வாரணாசி மேலவைத் தேர்தல்

பட மூலாதாரம், AMAN

செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன், ஊடகங்கள் மீண்டும் சுதாமா படேலைச் சூழ்ந்துகொண்டு, பாஜக அவருக்கு ஆதரவளிக்கவில்லையா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சுதாமா படேல், "அப்படி இல்லை. கட்சி தான் வாய்ப்பு கொடுத்தது. கட்சி தான் தேர்தலில் போட்டியிடச் சொன்னது. கட்சி, தன் பலத்தைக் காட்டியிருக்கும்" என்றார்.

அதன்பிறகு பிபிசியிடம் பேசிய சுதாமா படேல், "இந்தத் தேர்தல் மாஃபியா ராஜ்ஜியத்தின் செல்வாக்கை அதிகரித்ததாக நாங்கள் நினைக்கிறோம். மாஃபியாவாக மாறினால், தாதாவாக மாறினால், எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற செய்தி மக்கள் மத்தியில் செல்லும். காசு இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றாகிவிடும்." என்றார்.

மேலும், " டாக்டர் சுதாமாவாகிய நான் தேர்தலில் தோற்கவில்லை. நாங்கள் பாஜகவின் பிராந்திய பிரதிநிதிகள். நாங்கள் அமைப்பின் பணிகளைச் செய்து வருகிறோம், தொடர்ந்து செய்வோம். ஆனால் இதுபோன்ற மாஃபியாக்கள் களமிறங்கினால், பாஜக தானே பின்வாங்கும் என்ற கருத்து பரப்பப்பட்டது." என சுதாமா தெரிவித்தார்.

வெற்றிக்கு அன்னபூர்ணா சிங் கூறும் காரணம்

மறுபுறம், பிரிஜேஷ் சிங்கின் மனைவி அன்னபூர்ணா சிங், ''தனது வெற்றிக்கு, பிரதமர் மோதி, முதல்வர் யோகி , மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பொதுமக்கள் தான் காரணம். பிரதமர், முதலமைச்சர், மாண்புமிகு அமித் ஷா ஜி அவர்களின் தலைமையிலான உத்தரவுகளைப் பின்பற்றுவேன்'' என்றும் அன்னபூர்ணா சிங் கூறினார்.

சுதாமா பட்டேலின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என விவரித்த அன்னபூர்ணா சிங், "அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. குற்றச்சாட்டுகளை விடுங்கள். இதில் பண பலம் இல்லை. மக்கள் அன்பு இருக்கிறது. வளர்ச்சி குறித்த விஷயங்கள் தான் முடிவு செய்கின்றன. அதை இந்த அரசு செய்து வருகிறது." என்றார்.

ப்ரிஜேஷ் சிங்கின் வரலாறு

சுதாமா படேல்

பட மூலாதாரம், Sudama Pater/Twitter

பனாரஸ் அரசியல் குறித்து தொடர்ந்து செய்தி சேகரித்து வரும் மூத்த பத்திரிகையாளர் அசத் கமல் லாரி, பிரஜேஷ் சிங் மற்றும் அவரது குடும்பத்தினரின் அரசியல் பின்னணி குறித்து பிபிசி இந்தி சேவையிடம் பேசினார்.

"இந்த தொகுதியில் அவரது பதவிக்காலம் முடிவடைகிறது, அதில் அவரது மனைவி வருகிறார். மேலும் பிரிஜேஷ் சிங்கின் மறைந்த சகோதரர் உதயநாத் சிங்கும் இந்தப் பதவியை வகித்தார். பிரிஜேஷ் சிங்கின் சகோதரரின் மகன், சுஷில் சிங்கும் சையத் ராஜா தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக பாஜகவின் எம்எல்ஏவாக உள்ளார். பிரிஜேஷ் சிங்கின் சகோதரர் மகன், பனாரஸ் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்துள்ளார். அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் தீவிர அரசியலில் உள்ளனர்." என்றார்.

உத்தரபிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியில் பிரிஜேஷ் சிங் தனிச் செல்வாக்கு பெற்றவர். கடந்த 24 ஆண்டுகளாக வாரணாசி பகுதியில் உள்ள எம்எல்சி தொகுதியில் பிரிஜேஷ் சிங்கின் குடும்பம் பதவியில் இருப்பது அனைவரும் அறிந்ததே.

அரசியல் குடும்பம்

எம்.எல்.சி., எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் தொகுதி பிரமுகராக இருந்த ஒரே குடும்பம் இவரது குடும்பம். அவரது சகோதரர் மகன் சுஷில் சிங் இதுவரை நான்கு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.

பிரிஜேஷ் சிங் இம்முறை தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்பினார். அவரும் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால், தனது வேட்புமனுவை திரும்ப பெற்று, மனைவி அன்னபூர்ணாவை தேர்தலில் போட்டியிட வைத்தார்.

தேர்தல் ஆணையத்திடம் அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், பிரஜேஷ் சிங் மீது கொலை, கொலை முயற்சி போன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் உட்பட 8 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிஜேஷ் சிங்கின் சகோதரர் மகன் பா.ஜ., தலைவர் என்றால், இந்த தேர்தலில் அவரது மனைவிக்கும் சீட் கொடுக்காமல் டாக்டர் சுதாமா படேலை கட்சி ஏன் நிறுத்தியது? என்ற கேள்வி எழுகிறது.

இதுபற்றி அசத் லாரி கூறும்போது, "பிரிஜேஷ் சிங் சிறையில் இருக்கிறார், ஆனால் அன்னபூர்ணா சிங் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஒருவர் சிறையில் இருந்தால், அவரது குடும்பத்தினரைக் கட்சி தேர்தலில் நிறுத்துவது புதிதன்று. அல்லது பிரிஜேஷ் சிங்கின் சகோதரர் மகன் பாஜக எம்.எல்.ஏ., எனவே குடும்ப அரசியலைத் தவிர்க்க அவரது மனைவிக்கு டிக்கெட் கொடுக்க பாஜக விரும்பாமல் இருந்திருக்கலாம்." என்றார்.

அன்னபூர்ணாவின் வெற்றியை எளிதாக்கிய பாஜக

பாஜகவின் இந்த தோல்வி பல கேள்விகளை எழுப்பியுள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் அசத் கமல் லாரி கூறுகிறார். "தொகுதியின் வாக்காளர்கள் எந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்கின்றனர் என்பதை எளிதாக விரல் விட்டு எண்ணலாம். எந்தக் கட்சிக்கு எத்தனை வாக்காளர்கள் என்பதும் தெளிவாகத் தெரியும்." என்றார்.

லாரி மேலும் கூறும்போது, "நகர் பஞ்சாயத்து, நகர் பாலிகா, முனிசிபல் கார்ப்பரேஷன் வரை எல்லா இடங்களிலும் பாஜகதான் பெரும்பான்மை. எனவே அன்னபூர்ணா சிங் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்றால், பாஜக வாக்காளர்கள் தான் கட்சி மாறியிருக்கின்றனர். பிரதமரின் நாடாளுமன்றத் தொகுதியில், அவரது மாவட்டத்தில் பா.ஜ., வேட்பாளரே தோல்வியடைந்து, சுயேட்சை வெற்றி பெறுகிறார்." என்றார்.

அசத் லாரி மேலும் கூறுகையில், "ஆளும் கட்சி வேட்பாளர் தேர்தலில் தோல்வியடைந்து, அவரது ஆதரவாளர்களின் ஆதரவு இடம் மாறுகிறது என்றால், ஆள் பலமும் பணபலமும் ஆட்சியில் உள்ளவர்களையே அடிபணியச் செய்கிறதா? இது வேடிக்கையாக இருக்கிறது." என்றார்.

பா.ஜ.க தரப்பு விளக்கம்

பனாரஸில் பாஜக வேட்பாளர் தோல்வி குறித்து அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி கூறும்போது, "உத்திரபிரதேசத்தில் மொத்தமுள்ள 36 இடங்களில் பாஜக 33 இடங்களில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. தோல்வியடைந்த 3 இடங்களில் தோல்விக்கான காரணம் குறித்து ஆராயப்படும்.

ஆனால், உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆதரவு என்பது, அது பொது மக்களாக இருந்தாலும் சரி, மக்கள் பிரதிநிதிகளாக இருந்தாலும் சரி, இவர்கள் அனைவரின் மத்தியிலும் கட்சி என்ற ஈர்ப்பு இருக்கிறது என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன" என்றார்.

திரிபாதி மேலும் கூறுகையில், "பிஜேபிக்கு ஒவ்வொரு தொகுதியும் முக்கியம். நாங்கள் எந்தத் தொகுதியையும் விஐபி சீட் என்றோ மோசமான சீட் என்றோ கருதுவதில்லை. ஒவ்வொரு தொகுதிக்கும் தனித் தனியான வியூகம் உள்ளது. எங்கு தோல்வி ஏற்பட்டாலும், உள்ளூர் காரணங்கள் என்ன ? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்."என்று தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, பயிற்சி மையம் கோரும் மாற்றுத் திறன் நீச்சல் வீரர்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: