திருச்சி ஆதி திராவிடர் நல அலுவலர் கார் பயணத்தில் கைது: ரூ.38 லட்சம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை

கைப்பற்றப்பட்ட பணம்
படக்குறிப்பு, கைப்பற்றப்பட்ட பணம்

திருச்சியில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்த திருச்சி ஆதி திராவிடர் நலத் துணை ஆட்சியர் சரவணகுமார் விழுப்புரம் அருகே லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் காரில் இருந்து ரூ.38.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆதி திராவிட நலத்துறையில் சமையலர் உட்பட பல்வேறு பணிகள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில், இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக பெற்ற லஞ்சப் பணத்தை விழுப்புரம் வழியாக இவர் சென்னைக்கு கொண்டு செல்வதாக, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் தேவநாதன் தலைமையிலான காவல் துறையினர் திருச்சி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசூரில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த சரவணகுமாரின் வாகனத்தையும் அவர்கள் சோதனையிட்டனர். அப்போது, அந்தக் காரில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாக 500 ரூபாய், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரியவந்தது. எண்ணிப் பார்த்தபோது அதில் 38 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததாகவும், அதனை பறிமுதல் செய்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சரவணகுமார், அவரது உதவியாளர் மணி ஆகியோரை விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்திலுள்ள ஆதிதிராவிட நலத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஆதிதிராவிட நலத்துறையில் காலியாக உள்ள சமையலர் பணிக்காக பல்வேறு நபர்களிடம் லஞ்சமாக 38 லட்சத்து 75 ஆயிரம் ரொக்க பணத்தைப் பெற்று சென்னை எழிலகத்திலுள்ள ஆதி திராவிட நலத்துறை உதவி இயக்குனரக செயற்பொறியாளருக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்வதாக அவர் ஒப்புக் கொண்டார் என லஞ்ச ஒழிப்புத் துறையினர் கூறுகின்றனர்.

துணை ஆட்சியர் சரவணகுமார்
படக்குறிப்பு, பிடிபட்ட பணத்துடன் சரவணகுமார்.

இது தொடர்பாக சென்னையிலுள்ள லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரக உதவி செயற்பொறியாளர் கலைமோகனிடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளர் தேவநாதனை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு கேட்டது. அப்போது திருச்சி ஆதிதிராவிட நலத்துறையில் சமையலர் பணிக்காக திருச்சியை சேர்ந்தவர்களிடம் இருந்து லஞ்சமாகப் பெற்ற 38 லட்சத்து 75ஆயிரம் ருபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், "விசாரணையின் போது திருச்சி ஆதிதிராவிட நலத்துறையில் சமையலர் பணிக்கு பெற்ற லஞ்ச பணத்தை சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரக உதவி செயற் பொறியாளர் கலைமோகன் என்பவரிடம் கொடுக்க செல்வதாகவும் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்கள் குறித்து விசாரணையில் தெரிய வரும்போது, அவர்கள் மீதும் வழக்குப் பதிந்து அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்ள உள்ளோம்," என்றும் தேவநாதன் தெரிவித்தார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: