கல்லூரி மாணவி தற்கொலை: குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதாக குற்றச்சாட்டு

''ரொம்ப நாள் வாழ ஆசை, ஆனால் கடவுள் என்னை வாழ விடவில்லை'' என்று தன் தாய்க்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் அவர். அரசு கல்லூரியில் படித்து வந்தார். மாணவியின் 5 வயதில் அவருடைய தந்தை உயிரிழந்து விட்டார். தாயார் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.
இன்று(புதன்கிழமை) அதிகாலை மாட்டுக்கொட்டகையில் இறந்த நிலையில் காணப்பட்டார். காலையில் எழுந்தும் அவரது தாய் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் சடலதை உடற் கூறாய்வு பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.
கடிதத்தில் என்ன ?

அந்த கடிதத்தில், "என்னை மன்னித்துவிடு அம்மா எனக்கு வேறுவழி தெரியவில்லை. குளிப்பதை வீடியோ எடுத்து ஒருவன் என்னை மிரட்டி வருகிறான். அவனிடமிருந்து தப்பிக்க வேறு வழி தெரியவில்லை. என்னை மன்னித்துவிடு, தம்பியை நன்றாக பார்த்துக்கொள். எனக்கு ரொம்ப நாள் வாழனும் என்று ஆசை. ஆனால் என்ன பண்ண கடவுள் என்னை வாழ விடவில்லை. எனக்கு வேறு வழியில்லை. மாமா மற்றும் அனைவரிடமும் இதை சொல்லுங்க அம்மா," என்று மாணவி தனது தாய்க்கு எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தை கைப்பற்றிய காவல் துறையினர், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் என்ன சொல்கிறார்?
"நேற்று கல்லூரியில் இருந்து நல்லபடியாக தான் வீட்டிற்கு வந்திருந்தாள். காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் உள்ள மேஜையில் செல்போன் கொலுசு, கடிதம் இருந்தது. பின்னர் மகளைக் காணாமல் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது அவள் தற்கொலை செய்துகொண்டிருந்தது தெரிந்தது.
அவள் கடிதத்தில் குறிப்பிட்டபடி இந்த செயலில் ஈடுபட்டது யார் என்பது தெரியவில்லை. எந்த நோக்கத்தில் மகளை மிரட்டினார்கள் என்பதும் தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று மாணவின் தாயார் தெரிவித்துள்ளார்.
காவல்துறை விளக்கம்
இந்த குறித்து சிதம்பரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் (பொ) சுந்தரம் கூறுகையில், "மாணவி தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மேற்கொண்டு ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு அதன் மூலம் இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் ? என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்," என்று அவர் தெரிவித்தார்.
கல்லூரி மாணவி ஒருவர் கடிதம் எழுதி வைத்து விட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













