பிகாரில் கைகள் கட்டப்பட்ட பெண்களின் வைரல் காணொளி - கள நிலவரம் என்ன?

பட மூலாதாரம், SEETU TIWARI/BBC
- எழுதியவர், சீது திவாரி
- பதவி, கயாவிலிருந்து பிபிசி ஹிந்திக்காக
பிகாரின் கயாவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு காணொளி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பிகார் காவல்துறையினர், சில பெண்கள் மற்றும் ஆண்களின் கைகளை பின்னால் கட்டி அவர்களை ஆற்றங்கரையில் உட்கார வைத்திருப்பது போல அந்த காணொளியில் சில காட்சிகளைப் பார்க்க முடிகிறது.
இந்த விவகாரத்தில் மணல் அள்ளும் பகுதியின் எல்லை நிர்ணயம் மற்றும் அதன் எதிர்ப்பு தொடர்பாக காவல்துறையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாகவும் அதைத்தொடர்ந்து 6 பெண்கள் உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும், நடந்த மோதலில் காவல்துறையினர் நடத்திய தடியடியில் கிராமவாசிகள் பலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அந்த சம்பவத்தின்போது சில காவலர்கள் வீடுகளை சூறையாடியதாகவும் கிராமப்புற பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
காவல்துறைக்கும் கிராம மக்களுக்கும் இடையே மோதல்கள் நடந்ததையும், அதன்பிறகு காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையையும் கயா நகர எஸ்பி ராகேஷ் குமார் ஒப்புக்கொள்கிறார்.
ஆனால் போலீஸ் மீதான சூறையாடல் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்கிறார் அவர்.
இந்த முழு விஷயம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள கயாவின் பெலாக்கண்ட் தொகுதியின் ஆடத்பூர் கிராமத்துக்கு பிபிசி சென்றது.
இந்த கிராமத்தின் 20 வயதான பாலோ குமாரியின் திருமணம் கேள்விக்குரியதாகி உள்ளது. இவரது திருமணத்திற்காக ரொக்கம் மற்றும் நகைகள் வீட்டின் ஒரு பெரிய அலுமினியப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.
"பிப்ரவரி 15ஆம் தேதி, எங்களுடைய வீட்டிற்குள் 10 காவலர்கள் நுழைந்தனர். வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அவர்கள் உடைத்தனர். அலமாரியில் பிப்ரவரி 16ஆம் தேதி மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுக்க வேண்டிய பணமும் திருமண ஏற்பாடுகளுக்கு தேவையான பணமும் இருந்தது. இரு இடங்களில் இருந்த ரூபாய் 5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூபாய் 3 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்," என்று பாலோ குமாரி குற்றம்சாட்டுகிறார்.
பாலோவின் பெற்றோர் காலமாகி விட்டனர். மூத்த சகோதரர் ஃபூலேந்திர யாதவ் தங்கையின் திருமண பொறுப்பை ஏற்றுள்ளார். ஃபூலேந்திர யாதவ் காது கேளாதவர் மற்றும் வாய் பேச முடியாதவர். அவரது மனைவி ரஞ்சு தேவி சிறையில் உள்ளார்.

பட மூலாதாரம், SEETU TIWARI/BBC
அவரால் பேச முடியாது என்றாலும் இன்று அவர் தனது மூன்று சிறிய குழந்தைகளையும் மார்போடு சேர்த்து அணைத்துக்கொண்டு இருக்கிறார். ஃபூலேந்திராவின் மூன்று குழந்தைகளில் ஒரு மகள் மன வளர்ச்சி குன்றியவர்.
இதே கிராமத்தைச்சேர்ந்த ஹரேராம் யாதவின் கண்கள் கலங்குகின்றன. ஆறாவது வகுப்பு படிக்கும் அவரது மகன் தனது தந்தை மற்றும் இரண்டு உடன்பிறப்புகளை கவனித்துக் கொள்கிறார்.
இதே விவகாரம் தொடர்பாக ஹரேராமின் மனைவி கீதாதேவியும் சிறையில் உள்ளார். தற்போது இந்த செய்தியை கேள்விப்பட்டு குழந்தைகளின் தாய்வழி பாட்டி தேத்ரி தேவி அவர்களுக்கு உதவி செய்ய வந்துள்ளார்.
"அம்மாவை சீக்கிரம் விட்டு விடுங்கள்.. அம்மா இல்லாமல் நாங்கள் எப்படி வாழமுடியும்," என்று கேட்கின்றனர் இந்த தம்பதியின் குழந்தைகள்.
விஷயம் என்ன?
பேலாகஞ்ச் தொகுதியின் முக்கிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆடத்பூர் கிராமத்தைச் சேர்ந்த 6 பெண்கள் மற்றும் 4 ஆண்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி 15-ம் தேதி இந்த கிராமத்தில் மணல் அள்ள எல்லை நிர்ணயம் செய்யச் சென்ற போலீசாருக்கும் அப்பகுதி கிராம மக்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
பிப்ரவரி 15 அன்று, மாவட்ட போக்குவரத்து அதிகாரி, வட்ட அதிகாரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், கனிம வளர்ச்சி அதிகாரி, கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர், பேகாகஞ்ச், சாகந்த், மெயின், பாயிபிகாஹா ஆகிய நான்கு காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் காவலர்கள் குழு இங்கு வந்தது.
"200 முதல் 300 பேர் வரை வந்தனர். மதியம் ஒன்றரை மணியளவில் இவர்கள் கிராமத்திற்குள் நுழைந்து ஆற்றுப் பகுதியில் அளக்க ஆரம்பித்தனர். மணல் அள்ளுவதற்கு நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அன்றும் நாங்கள் போராட்டம் நடத்தியபோது, இரு தரப்பிலும் கைகலப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

பட மூலாதாரம், SEETU TIWARI/BBC
இதிலிருந்து தப்பிக்க நாங்கள் கிராமத்தை நோக்கி ஓடி, பாதுகாப்பான இடத்தில் நுழைந்தோம். ஆனால் போலீசார் வீட்டிற்குள் நுழைந்து அனைவரையும் தடிகளாலும் காலணிகளாலும் தாக்கினர். இதற்குப் பிறகு போலீசார் எங்களை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று 12 பேரையும் கைகளை பின்னால் கட்டி இரண்டு மணி நேரம் உட்கார வைத்தனர்," என்று ஆற்றுப் பகுதிக்கு மிக அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராகோ யாதவ் கூறினார்.
ராகோ யாதவ் மற்றும் அவரது மருமகள் பபிதா தேவியின் உடல்களில் தடிகளால் அடித்த தடயங்கள் தெளிவாகத் தெரிகிறது. அவர்களது வீட்டின் அறைக் கதவும் போலீஸ் தடியடிகளின் கொடூரமான கதையைச் சொல்கிறது. ராகோ, பபிதா மட்டுமின்றி, கிராமத்தைச் சேர்ந்த அனிசா தேவி, தௌலதி தேவி, ராம் பாலக் யாதவ், இந்திரதேவ் யாதவ் உள்ளிட்ட பலரது உடல்களிலும் காயங்களின் அடையாளங்களை பார்க்க முடிகிறது.
சிகிச்சைக்காக பேலாகஞ்ச் சமூக சுகாதார நிலையம் மற்றும் கயா சதர் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், ஆனால் அங்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவர்கள் அனைவரும் குற்றம் சாட்டுகின்றனர்.
2015-ம் ஆண்டிலிருந்து தொடரும் பதற்றம்
மோர்ஹர் ஆற்றின் கரையில் உள்ள ஆடத்பூர் கிராமத்தில் மணல் அள்ளுவதற்கு உரிமம் வழங்குவது தொடர்பான கோபம் புதிதல்ல.
2015ஆம் ஆண்டிலேயே இங்குள்ள கிராம மக்கள் தங்கள் எம்எல்ஏ சுரேந்திர பிரசாத் யாதவிடம், இதற்கு எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பை எழுதினர்.
இது குறித்து 2015ம் ஆண்டு மாவட்ட அலுவலருக்கும், 2020ம் ஆண்டு, சுரங்கத்துறை உதவிஅதிகாரிக்கும், எம்.எல்.ஏ., கடிதம் எழுதியுள்ளார்.
யாதவர் ஆதிக்கம் நிறைந்த இந்த கிராமத்தில் பெரும்பாலானோரின் தொழில் விவசாயம். மணல் அள்ளுவதால் மழையின் போது கிராமத்திற்குள் தண்ணீர் வருவதாகவும், இதனால் தாங்கள் சிரமப்படுவதாகவும் கிராம மக்கள் எம்எல்ஏவுக்கு எழுதிய கடிதத்தில் தெளிவாக எழுதி உள்ளனர்.
72 வயதான முனேஷ்வர் யாதவ், "எங்கள் கிராமம் அழிந்து விடும். இங்கு மணல் அள்ள அனுமதி வழங்கக் கூடாது," என்கிறார்.
மறுபுறம், இளைஞர் யோகேஷ் குமார் யாதவ், "ஒருவருக்கு உணவளிக்க ஆயிரம் பேரைக் கொல்லுமா அரசு?" என்று கோபமாக கேட்கிறார்.

பட மூலாதாரம், SEETU TIWARI/BBC
ஆனால் வாழ்வாதாரத்திற்காக போராடுவதாக கிராம மக்கள் ஒருபுறம் வாதிடும் நிலையில், இந்தக் கிராமத்தின் மணல் திட்டில் (பிளாக் எண் 61) மணல் அள்ள உரிமம் பெற்றவர்கள் வேறுவிதமாக வாதிடுகின்றனர்.
ஜனவரி 14 அன்று இந்த உரிமத்தை தீரஜ் குமார் பெற்றார். இந்த வேலையை ராம்ஷ்ரே சர்மா எனப்படும் புண்ய ஷர்மா கவனித்து வருகிறார்.
சட்டவிரோத மணல் அள்ளலை விரும்பும் கிராமங்கள்
புண்யா ஷர்மா 2020 ஆம் ஆண்டு லோக் ஜனசக்தி கட்சி (சிராக் பிரிவு) வேட்பாளராக சட்டப்பேரவைத்தேர்தலில் போட்டியிட்டார்.
" தண்ணீரில் மூழ்கி உயிரிழப்போம் என்று கிராம மக்கள் பயந்தால், தடுப்புச்சுவர் கட்டுங்கள். இவையெல்லாம் முறைகேடாக மணல் அள்ளுவதற்காக நடக்கிறது. கிராம மக்கள் சில உள்ளூர் தலைவர்களின் ஆதரவுடன் சட்டவிரோதமாக மணல் அள்ளுகின்றனர். ஆற்றின் கரையோரத்தில் காணப்படும் பெரிய பள்ளங்கள் இதற்கு சான்றாகும். உரிமம் பெற்றவர்கள் (அரசு மணல் அள்ளுவதற்கு உரிமம் வழங்கியவர்கள்) மணல் அள்ளுவதை இந்த மக்கள் விரும்பவில்லை. நாங்கள் 2022 ஜனவரி முதல் மார்ச் வரை மணல் அள்ள 1.5 கோடி ரூபாயை அரசிடம் டெபாசிட் செய்துள்ளோம்," என்று புண்யா ஷர்மா கூறுகிறார்.
மாவட்ட காவல்துறையின் மூத்த கண்காணிப்பாளர் விடுப்பில் உள்ளதால், கயா மாநகர எஸ்.பி ராகேஷ் குமார் இந்த மாவட்டத்தின் விவகாரங்களை தற்காலிகமாக கவனித்து வருகிறார். டெண்டர் பெற்றவர்கள், மணல் அள்ள அங்கு செல்லும்போதெல்லாம் அப்பகுதி மக்கள் அதை தடுக்கின்றனர்.
ஆகவே அவர்கள் பலமுறை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். நிர்வாகம் முன்பும் அங்கு சென்று பார்வையிட்டிருக்கிறது. ஆனால் இப்போது கிராம மக்கள் சுரங்க ஆய்வாளரை அடித்து விட்டனர். இவர்கள் மணல் திருட நினைப்பதே, மணல் அள்ளும்பகுதியை நிர்ணயம் செய்ய அனுமதிக்காததற்கு காரணம்," என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், SEETU TIWARI/BBC
சம்பவம் நடந்த நாள் குறித்து ராகேஷ் குமாரிடம் கேட்டபோது, "கடந்த 15ஆம் தேதியும், மாவட்டத்தின் கூட்டு உத்தரவின் பேரில் அதிகாரிகள் அனைவரும் எல்லை நிர்ணயம் செய்ய சென்றிருந்தனர்.
ஆனால், கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்லெறிதலில் ஈடுபட்டனர். போலீஸ் எந்தவிதமான தாக்குதலையும் பொறுத்துக்கொள்ளாது. இதில் எங்கள் போலீசார் 10 பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் மைனிங் இன்ஸ்பெக்டரால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 16 பேரின் பெயர்களும், சில பெயர் குறிப்பிடாதவர்களும் உள்ளனர். இவர்களில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,"என்றார்.
மணல் அள்ளுவது தொடர்பாக சுரங்கத்துறை அதிகாரிகளுக்கும், கிராம மக்களுக்கும் இடையே தகராறு நீடித்து வருகிறது. 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில், மைனிங் இன்ஸ்பெக்டர் வியாஸ் பாஸ்வான் கிராம மக்களால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் முக்கிய காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்தார். இந்த வழக்கில் 42 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதேபோல், இந்த ஆண்டு ஜனவரியிலும் சுரங்க ஆய்வாளர் அமிதாப் இதேபோன்ற புகாரை அளித்தார்.
காவலில் பதின்ம வயது சிறுமி
ஆடத்பூர் கிராமத்தில் கைது செய்யப்பட்ட 10 பேரில் 14 வயது சிறுமியும் ஒருவர். சிறுமியின் தாய் நிஷா தேவியின் கண்களில் இருந்து தூக்கம் தொலைந்துவிட்டது. எட்டாம் வகுப்பு படிக்கும் தனது மகள் சத்தம் கேட்டு வேறு ஒருவரின் வீட்டில் பதுங்கி இருந்ததாகவும், ஆனால் போலீசார் அவளை அங்கிருந்து பிடித்ததாகவும் அவர் கூறுகிறார்.
"சத்தம் கேட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்த வைக்கோல் புதருக்குள் நாங்கள் பதுங்கியிருந்தோம்.ஆனால் போலீசார் வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்து வைக்கோல் அடுக்கில் இருந்து எங்களை வெளியே இழுத்து தாக்கினர். பெட்டியில் வைத்திருந்த பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர். என் பெண்ணை திருப்பிக் கொடுங்கள். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை," என்று கூறுகிறார் நிஷா.
ஒருபுறம் போலீசில் சிக்கியவர்களின் குடும்பங்களுக்கு பலவித பிரச்சனைகள் உள்ளன. மறுபுறம் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். அச்சம் காரணமாக தாங்கள் மலம் கழிக்கும் இடத்தைக்கூட கிராமப்பெண்கள் மாற்றிவிட்டார்கள்.

பட மூலாதாரம், SEETU TIWARI/BBC
முன்பெல்லாம் ஆற்றுப் பகுதிக்கு சென்று மலம் கழித்தோம். இப்போது பக்கத்தில் இருக்கும் வயலுக்குப் போக ஆரம்பித்துள்ளோம். தனியாகச் செல்லும் துணிச்சல் இல்லை என்கிறார் அச்சனா தேவி.
தலைவர்கள் கூட்டம்
பேலாகஞ்ச் பகுதியில் இருந்து ஆடத்பூரை அடைவது எளிதல்ல. இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
ஆனால் ஆடத்பூர் கிராமத்தில் பிப்ரவரி 18ஆம் தேதி மக்கள் கூட்டம் அலைமோதியது.
கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியின் திறந்தவெளி முற்றத்தில் வெள்ளைத் துணி விரிக்கப்பட்ட மேசைகள் போடப்பட்டிருந்தன. இது தலைவர்களின் மேடையாக அமைந்தது. இது தவிர சிவப்பு நிற பிளாஸ்டிக் நாற்காலிகளும் போடப்பட்டன. அதில் உள்ளூர் மக்கள் அமர்ந்து தலைவர்களின் உரைகளை கேட்டனர்.
ஜன் அதிகார் கட்சித்தலைவர் பப்பு யாதவ் மதியம் கிராமத்திற்கு வந்தபோது, அர்வல் மாவட்டத்தைச் சேர்ந்த சிபிஐ (எம்எல்) எம்எல்ஏவான மஹானந்த் சிங் தன்னுடைய விசாரணைக் குழுவுடன் வந்தார்.
இது தவிர, உள்ளூர் தலைவர்களின் கூட்டம் நாள் முழுவதும் நடந்தது. ஆடத்பூரில் நடக்கும் இந்த பரபரப்பான விவகாரத்தை அருகில் உள்ள கிராம மக்களும் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
மஞ்சள் தங்கம், கருப்புப்பண வருமானம்
பிகாரில், மணல் 'மஞ்சள் தங்கம்' என்று அழைக்கப்படுகிறது .அதன் சட்டவிரோத அகழ்வு ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது. சுரங்கம் மற்றும் புவியியல் துறையின் இணையதளத்தின்படி, மாநிலத்தின் 29 மாவட்டங்களில் மணல் கனிமங்கள் கிடைக்கின்றன. அவை 25 மணல் அள்ளல் பிரிவுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், SEETU TIWARI/BBC
கடந்த ஆண்டு போஜ்பூரின் அப்போதைய எஸ்பி ஆக இருந்த ராகேஷ் குமார் துபே பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் சிக்கியதை வைத்தே, இந்த மணல் குவாரிகளில் இருந்து சட்டவிரோதமாக எவ்வளவு கருப்புப் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை ஊகிக்க முடிகிறது.
சட்டவிரோத மணல் அள்ளல் மற்றும் பிற சட்டவிரோத வர்த்தகம் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரி ராகேஷ் துபே, இதுவரை பணியின் போது ஈட்டிய தனது சம்பளத்தை வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கவேயில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
"மணல் வியாபாரத்தையும் சாதியின் அடிப்படையில் பார்க்க வேண்டும். முன்பு ராஜ்புத் மற்றும் பூமிஹார் ஜாதியினர் ஆதிக்கம் செலுத்தினர். பின்னர் லாலுவின் ஆட்சியின் போது யாதவர்கள் வந்தனர். இவை அனைத்தும் நிதிஷ் குமார் ஆட்சியில் முறியடிக்கப்பட்டன. தற்போது மணல் வியாபாரத்தை நிறுவுவதற்கும் அதன் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் பல சாதியினரிடையே போராட்டம் நடைபெற்று வருகிறது,"என்று மூத்த பத்திரிக்கையாளர் கன்னையா பெலாரி கூறினார்.
"இந்த வணிகத்தில் பழைய மற்றும் புதிய முகங்களுக்கு இடையே மோதல் உள்ளது. பல வைரஸ் வீடியோக்களில் இதை நீங்கள் பார்க்கலாம்," என்கிறார் கன்னையா பெலாரி.

பிற செய்திகள்:
- 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர்
- ஆடுகளை வரைவதில் அலாதி இன்பம்: ஓவியர் என்.எஸ்.மனோகரன்
- 'அரை நிர்வாண தாக்குதல்' - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீடியோவால் சர்ச்சை
- யோகி ஆதித்யநாத் அரசு விவசாயிகளுக்குச் செய்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதா?
- "என்னுடைய நிர்வாணப் படங்களை டெலிகிராம் நீக்காதது ஏன்?"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்













