பிராங்கோ முலக்கல்: கன்னியாஸ்திரி மீதான பாலியல் வல்லுறவு வழக்கில் பிஷப் விடுதலை

2014 மற்றும் 2016க்கு இடையில் கன்னியாஸ்திரியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட பிஷப் ஒருவரை இந்திய நீதிமன்றம் விடுவித்துள்ளது,
54 வயதான பிராங்கோ முலக்கல், 2018ஆம் ஆண்டு இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில் கைது செய்யப்பட்டார். அவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தார்.
இந்த நிலையில், பிஷப் மீதான தனது புகார்களை கத்தோலிக்க திருச்சபை புறக்கணித்ததாக கன்னியாஸ்திரி குற்றம்சாட்டிய பிறகு இந்த விவகாரம் பரவலான எதிர்ப்பைத் தூண்டியது.
இதைத்தொடர்ந்து பிஷப்பை அவரது பணிகளில் இருந்து தற்காலிகமாக வத்திக்கான் விடுவித்தது.
இந்த நிலையில், கேரளாவில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் பிஷப் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பளித்திருக்கிறது.
"குற்றம் சாட்டப்பட்டவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது" என்று கோட்டயம் கூடுதல் அமர்வு நீதிபதி (ஏஎஸ்ஜே) ஜி. கோபகுமார் கூறினார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக கன்னியாஸ்திரியின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
"இது மிகவும் சவாலான வழக்கு. இது உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யக் கூடிய வழக்கே. அப்படி நடந்தாலும் பரவாயில்லை" என்று முலக்கலின் சட்ட நடவடிக்கைகளை வழிநடத்திய ராமன் பிள்ளை பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார்.
"ஆனால் நீதிமன்றம் அவர் குற்றவாளி இல்லை என்று கூறியிருக்கிறது. தெளிவாக, அரசு தரப்பு சாட்சிகள் அளித்த ஆதாரங்கள் நிராகரிக்கப்பட்டன. இதன் பொருள் குற்றச்சாட்டு பொய்யானது என்பதே. பாலியல் வல்லுறவு எதையும் அவர் செய்யவில்லை என்றே இந்த தீர்ப்பின் மூலம் கருத வேண்டும்," என ராமன் பிள்ளை கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
வட மாநிலமான பஞ்சாபில் உள்ள ஜலந்தரில் உள்ள ஒரு மறைமாவட்டத்தின் பிஷப் ஆக பிராங்கோ முலக்கல் இருந்தார். அவர் மீது குற்றம்சாட்டியவர் ஜலந்தர் மறைமாவட்டத்தின் ஒரு பகுதியான கேரளாவில் உள்ள மிஷனரிஸ் ஆஃப் ஜீசஸ் சபையைச் சேர்ந்தவர்.
பிஷப் தன்னை 13 முறை பாலியல் வல்லுறவுக்கு செய்ததாகவும், கேரளாவில் உள்ள கோட்டயம் நகரில் தான் வசித்த கான்வென்ட்டுக்கு சென்றபோது பிஷப் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வத்திக்கானுக்கு மனு அளித்த பிறகு, 2018இல் இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள போப்பின் பிரதிநிதிக்கு அந்த கன்னியாஸ்திரி ஒரு கடிதம் எழுதினார்.
இது அவருக்கு தான் எழுதிய நான்காவது கடிதம் என்று அந்த கன்னியாஸ்திரி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அந்த கன்னியாஸ்திரிக்கு ஆதரவாக மேலும் சில கன்னியாஸ்திரிகள் திரண்டனர். அவர்களுடன் பிற பெண்ணுரிமை ஆர்வலர்களும் கைகோர்த்து முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்களை நடத்தினர்.
பிஷப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய பல கன்னியாஸ்திரிகள், கேரளாவில் உள்ள தேவாலயமும், வத்திக்கான் பிரதிநிதிகளும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காமல் கண்களை மூடிக் கொண்டு இருப்பதாக குற்றம் சாட்டினர்.
புகார்தாரரான கன்னியாஸ்திருக்கு ஆதரவாக போராட்டங்களில் பங்கேற்றதற்காக ஒழுங்கு நடவடிக்கை, எச்சரிக்கைகள், இடமாற்ற நோட்டீஸ்கள் போன்றவற்றுக்கு தாங்கள் ஆளாவதாக பல கன்னியாஸ்திரிகள் குற்றம்சாட்டினர்.
பிற செய்திகள்:
- மொரிஷியஸ் விமானத்தின் கழிவறை குப்பைத்தொட்டியில் பச்சிளம் குழந்தை
- சத்ய பால் மாலிக்கின் சர்ச்சை பேச்சுகள்: மோதி, அமித் ஷா பொறுமைக்கு என்ன காரணம்?
- வங்கதேசம் மீதான அமெரிக்காவின் கோபம் தொடர்ந்து அதிகரிக்க என்ன காரணம்?
- புதுக்கோட்டை சிறுவன் உயிரிழப்பு - கோபத்தில் உறவினர்கள் சாலை மறியல்
- சீனா: கொரோனா தனிமைப்படுத்துதலுக்காக நள்ளிரவில் கொண்டு செல்லப்படும் மக்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












