பெரும்பாக்கம் மக்களின் நீங்கா துயரம்: கள நிலவரம் வெளிப்படுத்தும் உண்மைகள்

Perumbakkam
    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

"கூவத்துக்குப் பக்கத்துல நாங்க இருந்தது வேணா சேரியா இருக்கலாம். ஆனால் நல்லாத்தான் வளர்ந்தோம். இங்க எட்டு அடுக்கு மாடியில குடியிருக்கோம். ஆனால் உள்ள வந்து பார்த்தாதான் எங்க நிலைமை தெரியும். நாங்க டீசன்டா இருக்கனும்னு இங்க கொண்டு வந்தாங்க. ஆனா எங்க புள்ளைக கெட்டுப் போயிருமோன்னு பயமா இருக்கு"

"உடம்பு சரியில்லாம போனா அங்க இருந்த மாதிரியான ஆஸ்பத்திரிக இங்க இல்லை. ஆம்புலன்ஸ் வர்ற வரைக்கும் காத்திருக்கணும். வாடகை, கரன்ட் பில், தண்ணி வரி என எல்லாத்தையும் கட்டறோம். நாலாவது மாடியில இருக்கேன். வீட்டுக்குள்ளேயே தண்ணி ஒழுகுது. அங்க ஓட்டு வீட்டுல இருந்தாலும் நிம்மதியா இருந்தோம்" - பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வசித்து வரும் கே.சரளாவின் குமுறல் இது.

பெரும்பாக்கத்தில் அரசால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்குள் இவர் குடியேறி நான்காண்டுகளே ஆகின்றன. கணவரின் வேலை, குழந்தைகளின் கல்வி என அனைத்துக்கும் மாத பட்ஜெட் போட முடியாத நிலையில் தான் இருப்பதாக வேதனைப்பட்டார்.

இது சரளாவின் குமுறல் மட்டுமல்ல. பெரும்பாக்கத்தில் உள்ள பெரும்பாலான பெண்களின் வேதனைக்குரலாகவே அவரது பேச்சு வெளிப்பட்டது.

எதனால் பிரச்னை?

சென்னையில் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றை சீரமைக்கும் நோக்கில் சென்னை ஆறுகள் சீரமைப்பு அறக்கட்டளை (Chennai River Restoration Trust) ஏற்படுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசின் இந்த அறக்கட்டளையில் சென்னை மாநகராட்சி, சென்னை குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் ஆகியவை அரசுத் துறைகள் அங்கம் வகிக்கின்றன.

இந்தத் துறைகளின் மூலம் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் கரையோரங்களில் வசித்து வந்த மக்கள், சென்னையின் புறநகர்ப் பகுதிகளான கண்ணகி நகர், செம்மஞ்சேரி, எழில் நகர், பெரும்பாக்கம் ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் இடம் பெயர்ந்தனர்.

Perumbakkam issue 1

குறிப்பாக, 2015ஆம் ஆண்டில் சென்னையில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது ஆக்கிரமிப்புகளைக் காரணம் காட்டி கூவம், அடையாறு ஆகிய ஆறுகளின் கரையோரங்களில் வசித்து வந்த 14,257 குடும்பங்களை பெரும்பாக்கத்துக்கு அரசு மறுகுடியமர்வு செய்ததாகவும் அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

`உங்கள் குழந்தைகளுக்கான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்தையும் கொடுக்கிறோம். அங்கு குடியேறினால் போதும்' என அரசுத்துறை அதிகாரிகளின் வார்த்தைகளை நம்பியே அம்மக்கள் இடம்பெயர்ந்தனர்.

``சாப்பிடறதுக்கு சோறு இல்லாம தவிக்கிறோம். ஆம்பளைகளுக்கு இங்க வேலையே கிடைக்கறதில்ல. கூவம் பக்கத்துல இருந்த வரைக்கும் வீட்டு வேலைக்குப் போய் பாத்திரம் தேய்த்தாவது சோறு சாப்பிடுவோம். நாங்க சந்தோஷமா வாழ்ந்த காலம் எல்லாம் போயிருச்சு. நல்ல நாள்ல துணிகூட வாங்க முடியாத அளவுலதான் இருக்கோம். இங்க வசதியா இருக்கும்னு வந்து பார்த்தா லிஃப்ட் பராமரிக்க கட்டணம், வாடகை எல்லாம் கேட்கறாங்க. பட்டினி, பசியைவிட அதிகாரிக கொடுக்கிற தொல்லையை தாங்க முடியல'' என்கிறார், வேளாங்கண்ணி.

ஈரமான தரைகள்; சென்சார் இல்லாத லிஃப்ட்டுகள்

``இங்க தண்ணியும் சரியில்லை. தோல் எல்லாம் அலர்ஜியாவுது. பணம் கொடுத்து சிகிச்சை எடுக்க முடியல. எங்களை மறுபடியும் சிந்தாரிப்பேட்டைக்கே அனுப்பினா போதும். அங்க எவ்வளவோ வெள்ளத்தையெல்லாம் சகிச்சுட்டோம். கல் வீடு கட்டித் தர்றோம்னு சொல்லி இங்க கொண்டு வந்துவிட்டாங்க. அங்க குடிச்ச தண்ணிகூட இன்பமா இருந்துச்சு. இங்க 25 ரூபாய் கொடுத்து கேன் வாட்டர் வாங்கி குடிக்கிறோம். இங்க கட்டடம்தான் பெரிசா இருக்கு. ஆனா, எந்த வசதியும் இல்லை'' எனவும் வேதனைப்படுகிறார்.

இதே பகுதியில் நாம் சந்தித்த ரேணுகாதேவியோ, ``தினமும் சென்னைக்குத்தான் வேலைக்கு போயிட்டு வந்தேன். ஒருகட்டத்துல வேலைக்குப் போயிட்டு வர்ற ரொம்ப லேட்டாகறதால வேலைக்குப் போறதையே நிறுத்திட்டேன். எங்க புள்ளைக எல்லாம் அங்க இருந்த வரைக்கும் நல்லா படிச்சுட்டு இருந்துச்சு. இங்க வந்து கெட்டுப் போகுதுங்க. ஒரு அவசரம்னாகூட பிரைவேட் ஆஸ்பத்திரிதான் இருக்கு. அவ்வளவு செலவு பண்ணி எங்களால வைத்தியம் பார்க்க முடியாது. சென்னையில இருந்த வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை" என்கிறார். அதேநேரம், ``நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வேலை கொடுக்கப்படுவதில்லை" எனவும் இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

Perumbakkam issue 2

இதையடுத்து, இங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குள் சென்று பார்த்தோம். அங்குள்ள லிஃப்ட்டில் ஏறியபோது அதன் சென்சார் வேலை செய்யவில்லை. சற்று நின்றிருந்தாலும் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழலே நிலவியது.

``இதெல்லாம் எங்களுக்குப் பழகிப் போயிருச்சு சார். ஒருமுறை என் கால் மாட்டிருச்சு. அந்தக் காயம் ஆறவே ரொம்ப நாள் ஆச்சு. குழந்தைகள் யாரும் லிஃப்ட் பக்கம் போகாம பாத்துக்கறோம். இதைப் பத்தி பலமுறை புகார் சொல்லிட்டோம். யாரும் வந்து பார்க்கலை" என்கிறார் காசிமா.

எகிறும் குற்றச் சம்பவங்கள்

இவர் பெரும்பாக்கத்தில் குடியேறி நான்காண்டுகள் ஆகின்றன. `` வீட்டு சுவரெல்லாம் தண்ணி ஏறி ரொம்ப சிரமப்படுறோம். தரையில் கால் வைக்க முடியாத அளவுக்கு ஈரமாவே இருக்கும். கட்டில் மேலதான் உட்கார்ந்துட்டே இருக்கணும். வீட்டைச் சுத்தி இருக்கற பைப்புகள்ல கசிவு ஏற்பட்டு அதனால ஈரம் அதிகமாயிட்டே போகுது. அதிகாரிகள்கிட்ட போய் சொன்னோம். வந்து சரி பண்ணித் தர்றோம்னு சொன்னாங்க. ஆனா வரல" என்கிறார்.

``40 கிலோமீட்டர் தள்ளி வந்த பிறகும் நிம்மதியா வாழ முடியவில்லை. சென்னையில் இருந்தவரைக்கும் பெயின்ட் வேலை உள்பட எல்லா வேலையும் கிடைக்கும். இங்க வந்த பிறகு செம்மஞ்சேரி வரைக்கும் ஷேர் ஆட்டோவில் போனால்தான் பஸ் கிடைக்கும். வர்ற வருமானம் பஸ்ஸுக்கே போயிருது. கண்ணகி நகரில் கிரைம் நிறைய நடக்குது. அந்த ஏரியா பசங்க இங்க வந்தால் சண்டை நடக்குது. அடிக்கடி ஆயுதங்களோட சண்டை போட்டுக்கறாங்க. எங்க பசங்கள்ல பல பேர் வழிதவறிப் போறாங்க" என்கிறார், இதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கர்.

அரசின் 3 நோக்கங்கள்

சென்னை நகரின் உள்கட்டமைப்பு, ஆறுகளை மீட்டெடுப்பது, இயற்கைப் பேரிடர் ஆகிய மூன்று பிரச்னைகளை மையமாக வைத்துத்தான் மறுகுடியமர்வு திட்டத்தை அரசு முன்னெடுத்தது.

1980 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரையில் 70,000 மக்கள் சென்னை புறநகரில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர். இங்குள்ள கண்ணகி நகர், எழில் நகர், சுனாமி நகர், செம்மஞ்சேரி ஆகிய பகுதிகளில் மட்டும் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதுதவிர, பெரும்பாக்கத்தில் மட்டும் 23,000 குடிசை மாற்றுவாரிய வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். மொத்தமாகக் கணக்கிட்டால் 1,30,000 மக்கள் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர். `மக்களின் நலனுக்காக மறுகுடியமர்வு செய்கிறோம்' என அரசு சொல்கிறது. ஆனால், `குடியமர்த்தப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறவில்லை' என அப்பகுதி மக்கள் வேதனையோடு பேசுகின்றனர்.

`` வெள்ளத்தால் பாதிப்பு எனக் கூறி கூவம் கரையோர மக்களை அகற்றினாலும் கடந்த நவம்பர் மாத வெள்ளத்தில் பெரும்பாக்கம் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியதையும் பார்க்க வேண்டியுள்ளது. இந்தப் பகுதியில் 2 ஆரம்ப சுகாதார நிலையங்களே உள்ளன.

சென்னையில் இருப்பதைப் போன்ற அரசு மருத்துவமனைகள் ஒன்றுகூட இல்லை.

பெரும்பாக்கம் பகுதியைச் சுற்றிலும் 500 மீட்டர் தொலைவில் பெரிய பெரிய தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், பெரும் குடியிருப்புகள் இருந்தாலும் கல்வி, வேலை ஆகியவற்றில் இம்மக்கள் போட்டிபோட முடியாத சூழலே உள்ளது'' என்கிறார் கிஷோர்குமார். இவர் அமெரிக்காவில் உள்ள மாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டு வருகிறார். மறுகுடியமர்வினால் ஏற்படும் சிக்கல்கள் தொடர்பான ஆராய்ச்சிலும் ஈடுபட்டுள்ளார்.

அரசு எதையும் சொல்வதில்லை

`` மறுகுடியமர்வின் மூலம் வேலைவாய்ப்பின்மை, மருத்துவ வசதியின்மை, குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு எனப் பல்வேறு துயரங்களை அந்த மக்கள் சுமந்து கொண்டிருக்கின்றனர். தவிர, பல்வேறு சேரிப் பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஒரே இடத்தில் அமர்த்தி வைத்துள்ளனர். இவர்களில் குற்றப் பின்னணி உள்ளவர்களும் அதே இடத்தில் குழுமியிருப்பதால் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன. அங்கு ஊருக்குள் செல்லவே ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும். கார் இருந்தால் அங்கு பயணிக்கலாம். இவர்கள் பேருந்தைப் பிடிப்பதற்கே பத்து நிமிடம் நடக்க வேண்டும்.

அரசாங்கம் மகளிருக்கு இலவச பயணச் சீட்டை வழங்கினாலும் உள்ளூரில் பயணிப்பதற்கு அவர்கள் ஷேர் ஆட்டோவை பயன்படுத்த வேண்டும். இதற்கு 20 ரூபாய் கொடுக்க வேண்டும். அங்கு தனியார் பள்ளிகள் நிறைய உள்ளன. ஆனால், அரசுப் பள்ளிகள் திருப்தியாக இல்லை. நிறைய தொண்டு நிறுவனங்களை வைத்துக் கொண்டு திறன் பயிற்சிகளை அரசு கொடுக்கிறது. 15 முதல் 25 வயதில் உள்ளவர்களுக்கு பயிற்சியளிக்கலாம். ஆனால், 45 வயதைக் கடந்தவர்களுக்கு இந்தப் பயிற்சிகளால் என்ன பலன் எனப் பார்க்க வேண்டும்'' என்கிறார் கிஷோர்குமார்.

மேலும், ``கரையோர மக்களை அப்புறப்படுத்திய பிறகு சில வளர்ச்சித் திட்டங்களையும் அரசு செயல்படுத்தியுள்ளது. காந்தி நகரில் ஆற்றை சீரமைத்துள்ளனர். சில இடங்களில் சாலைகளைக் கொண்டு வந்துள்ளனர். ரேடியோ நகரில் துறைமுக சாலையை விரிவாக்கம் செய்துள்ளனர். ஐ.டி காரிடாரை விரிவாக்கம் செய்வதற்கு பக்கிங்ஹாம் கால்வாய் அருகில் குடியிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். முதலமைச்சரின் தொகுதியான கொளத்தூரில் பாலம் கொண்டு வரவுள்ளனர். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், எந்த காரணத்துக்காக மக்களை அகற்றுகிறார்களோ, அதற்கான காரணத்தை அம்மக்களிடம் சொல்ல வேண்டும் என மறுகுடியமர்த்துதல் கொள்கை கூறுகிறது. ஆனால், அரசு ஒருபோதும் அவ்வாறு சொல்வதில்லை" எனவும் சுட்டிக் காட்டுகிறார்.

பெண்கள் தனியாக இருக்க முடியவில்லை

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுக்குக் குடிபெயர்ந்த மக்களின் நிலையைப் பார்த்து, `அங்கு செல்லவே மாட்டோம்' என கூவம் கரையோரங்களில் எஞ்சியுள்ள குடும்பங்கள் கூறுவதுதான். `` எனக்கு 32 வயசு ஆகுது. பொறந்து வளர்ந்ததில் இருந்து தீவுத்திடல் பக்கத்துல இருக்கற காந்தி நகரில்தான் இருக்கோம். இங்க ஆயிரக்கணக்கான வீடுகளை எடுத்தாங்க. அதுல எங்க அக்கா வீடும் ஒன்னு. பெரும்பாக்கத்துல ஸ்கூல் வசதி இருக்குன்னு சொல்லிக் கூப்பிட்டுப் போனாங்க. ஆனா அப்படி எதுவும் இல்லை. பத்தாவதுக்கு மேல அங்க படிக்க வசதியில்லை. அக்காவோட பொண்ணு என்கூடதான் இருக்கா. வயசு பொண்ணை அங்க தனியா இருக்க வைக்க முடியல. யாராவது உள்ள நுழைஞ்சிடறாங்க. குழந்தைகளையும் விட்டுட்டுப் போக முடியல'' என்கிறார் பாத்திமா.

``இடுப்பு வலியிலும் இங்க வந்துதான் பிரசவம் பார்த்துக்கறாங்க. இந்த இடத்துல இருந்தா பத்து நிமிஷத்துல ஆஸ்பத்திரி போயிருவோம். இந்த இடத்தைவிட்டு எங்கேயும் போக மாட்டோம். அங்க போனா உயிருதான் போவும். இந்த ஜனத்தைவிட்டு எங்க போறது? இங்க இருந்து பெரும்பாக்கம் போறதுக்கே 2 மணிநேரம் ஆகுது. வேலைவாய்ப்பே சுத்தமா இல்லை. எங்க அக்கா வீட்டுக்காரர் இங்க இருந்த வரையிலும் மீன் வியாபாரத்துக்குப் போனாங்க. இப்ப வேலையில்லாம சின்னப் பசங்களோட பந்து விளையாடிட்டு இருக்கார். ஏன்னா வேலையில்லை'' என்கிறார். இந்தப் பகுதியில் இருந்து சென்னையின் புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்ல மாட்டோம் என 191 குடும்பங்கள் போராடி வருவதாகவும் இப்பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் குறிப்பிடுகிறார்.

மறுகுடியமர்வு திட்டம், தோற்றுப் போன மாடலா?

`` தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மறுகுடியமர்வு திட்டம் என்பது முற்றிலும் தோற்றுப்போன ஒரு திட்டமாகவே உள்ளது. ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாரத்தையும் நசுக்கிய திட்டம் இது. உதாரணமாக சென்னையில் எடுத்துக் கொண்டால் மாநகரின் மையப் பகுதியில் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் என நன்றாக இருந்த மக்களை நாற்பது கிலோமீட்டருக்கு அப்பால் கண்ணகி நகர், செம்மஞ்சேரி, எழில் நகர், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பப்பட்டதால் எந்த வசதிகளும் இல்லாமல் மக்கள் துன்பத்தில் உள்ளனர்'' என்கிறார், சி.பி.எம் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் செல்வா.

Perumbakkam issue

மேலும், ``கடன் கொடுக்கிறோம் என்ற பெயரில் உலக வங்கி கொடுத்த நிர்பந்தத்தின் காரணமாக இப்படிப்பட்ட தனிக்குடியிருப்புகளை அரசு உருவாக்கியது. சென்னையைச் சுற்றிலும் உதிரி தொழிலாளர்கள் நிரம்பியுள்ளனர். ஆட்டோ ஓட்டுவது, முறைசாரா வேலை, காய்கறி, பழ வியாபாரம், தூய்மைப் பணி என இவர்களுக்கு நகரைச் சுற்றித்தான் வேலை அதிகமாக உள்ளது. இவர்களைக் கொண்டு போய் நகரத்துக்கு வெளியே அமர்த்துவதால் என்ன பலன்?'' என கேள்வி எழுப்புகிறார்.

வாரியத்தின் நிர்வாக இயக்குநர் சொல்வது என்ன?

அரசின் மறுகுடியமர்வு திட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்த தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக இயக்குநர் கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ், `` கூவம், அடையாறு ஆகிய கரையோரங்களில் பாதுகாப்பற்ற நிலையிலும் சுகாதாரமற்ற முறையிலும் மக்கள் வசித்து வந்தனர். சென்னையின் பல இடங்களில் இப்படிப்பட்ட சூழல்கள் இருந்தன. வெள்ளம், பேரிடர் போன்ற காலங்களில் இம்மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இதற்காக அவர்களுக்கான குடியிருப்புகளை அரசு ஏற்படுத்தியது. சென்னை நகரின் வளர்ச்சியில் இந்த மக்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

மறுகுடியமர்த்தலின்போது அவர்களின் ரேசன் கார்டு, ஆதார் அட்டை உள்பட அனைத்தும் புதிய முகவரிக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டன,'' என்கிறார்.

மேலும், `` மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் வகையில் சமூகத் தணிக்கையையும் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க் என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துகிறோம். மறுகுடியமர்த்தலுக்கு முன்பும் பின்பும் அங்குள்ள வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு வசதிகளை மக்களிடம் எடுத்துக் கூறுகிறோம்," என்கிறார்.

``மக்கள் குடியேறிய பிறகு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், காவல் நிலையம், பேருந்து நிலையங்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு ஐ.ஐ.டி, கலை அறிவியல் கல்லூரி வரவுள்ளது. அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதற்கு திறன் வளர்க்கும் பயிற்சிகளை வழங்குகிறோம். இதன்மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்பினை அளிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

குடியிருப்புக்கான பராமரிப்பு என்பது லிஃப்ட் இல்லாமல் 250 ரூபாயும் லிஃப்ட் வசதியுடன் என்றால் 750 ரூபாயையும் பெறப்படுகிறது. அவர்களுக்கு இது தங்கள் குடியிருப்பு என்ற பெருமிதம் வரும் வகையில் `நம் குடியிருப்பு நம் பொறுப்பு' என்ற திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், இந்த ஆண்டுக்கு மட்டும் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளின் பராமரிப்புக்காக மக்களே செலவு செய்யும் வகையிலும் திட்டத்தைச் செயல்படுத்துகிறோம்'' என்கிறார், கோவிந்தராவ் ஐ.ஏ.எஸ்.

குடியிருப்புகளில் உள்ள தரமற்ற வீடுகள், லிஃப்ட்டுகளில் சென்சார் வேலை செய்யாதது ஆகியவை குறித்துக் கேட்டபோது, ``அங்கு உடனடியாக சரிசெய்ய வேண்டிய பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். கட்டடத்தின் தரம் தொடர்பாக ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணிபுரியும் தொழில்நுட்பக் குழுக்களை அனுப்பி ஆய்வு செய்து வருகிறோம். எந்தப் புகார் வந்தாலும் அங்கு எங்கள் அலுவலர்களை அனுப்பி சரிசெய்து வருகிறோம். அந்தப் பகுதியில் உள்ளவர்களும் எங்கள் அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பில் உள்ளனர். அவர்களுக்கு எந்தப் பிரச்னை என்றாலும் எங்களிடம் புகார் தெரிவிக்கின்றனர். பெரும்பாக்கம் பகுதி மக்களின் நலனுக்கு சிறப்புக் கவனம் கொடுக்கப்பட்டு வருகிறது,'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: