எம்எஸ்பி சர்ச்சை: விவசாயிகளின் போராட்டம் தொடருவது ஏன்? - விரிவான அலசல்

விவசாயிகள் போராட்டம் ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டபோது கண்ணீர் சிந்திய விவசாய குடும்பத்தைச் சேர்ந்த போராட்டக்குழு உறுப்பினர். (கோப்புப்படம்)
    • எழுதியவர், ஜோ. மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய அரசின் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 3 வேளாண் திருத்த சட்டங்களையும் திரும்ப பெறும் மசோதா நாடளுமன்றத்தின் இரு அவைகளிலும் இன்று நிறைவேறியுள்ளது. ஆனாலும், "குறைந்தபட்ச ஆதார விலை (MSP) தொடர்பான சட்டபூர்வ உறுதிமொழியை வழங்கிய பிறகே போராட்டம் முடிவடையும்," என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகெய்த் கூறியுள்ளார். விவசாயிகளின் போராட்டம் தொடருவதற்கு உண்மையிலேய என்ன காரணம்?

உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் அதிக விளைச்சல் உள்ளிட்ட காரணங்களால், நஷ்டம் அடையக் கூடாது என்பதற்காக முன் பருவம் மற்றும் பின் பருவ கால பயிர்களுக்கு ஏற்ப குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்து மத்திய அரசு அறிவிக்கிறது.

இதன்படி நெல், கோதுமை, பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் என 23 வகையான விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இத்துடன், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கூடுதல் ஊக்கத் தொகை அளித்து வருகின்றன. ஆனாலும் இந்த விலை நிர்ணயம் போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

வேளாண் துறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வு காணவும், மேம்பாட்டுத் திட்டங்களை எடுத்துச் சொல்லும் வகையிலும் , வேளாண் நிபுணர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான தேசிய வேளாண் குழு தனது பரிந்துரையை 2007ஆம் ஆண்டு மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

அதில், வேளாண் உற்பத்திக்கான அடிப்படை செலவு, உரம், இடு பொருட்கள் விலை உள்ளிட்ட மொத்த செலவினத்தை கணக்கிட்டு, மொத்த உற்பத்தி செலவை விட 50 சதவீதம் கூடுதலாக வேளாண் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டன. ஆனால், 14 ஆண்டுகளாகியும் அந்த பரிந்துரைகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

மக்களவை தேர்தலின் போது விவசாய விளை பொருள்களுக்கு இரு மடங்கு விலை வழங்கப்படும் என்று நரேந்திர மோதி கூறினார். ஆனால், பிரதமராகி 7 ஆண்டுகளுக்கு மேலான பிறகும் தமது வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

உரிமை கோருவது ஏன்?

விவசாயிகள்
படக்குறிப்பு, அய்யாக்கண்ணு, தலைவர் - தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம்

இது குறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பிபிசி தமிழிடம் பேசுகையில், ''கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு 12 மரக்கால் (58 கிலோ) கொண்ட நெல் மூட்டை ரூ. 40க்கு விற்பனை செய்யப்பட்டது. அப்போது எம்.எல்.ஏவிற்கு மாத ஊதியம் ரூ. 250, வங்கி அதிகாரிக்கு ரூ 150. ஒரு பவுன் தங்கம் ரூ. 150க்கு விற்றது. ஆனால், இன்றைக்கு 60 கிலோ நெல் மூட்டை ரூ. 1,600க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மற்றவர்களின் ஊதியம் எவ்வளவு உயர்ந்துள்ளது என்று நீங்களே ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். விவசாய விளைபொருட்களுக்கு மட்டும் உரிய விலை உயர்த்தப்படவில்லை. இப்போது விவசாயிகள் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். அதனால், குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்குமாறு கோருகிறோம். மத்திய அரசு முரண்டு பிடிக்காமல் நிறைவேற்ற வேண்டும்,'' என்று கூறினார்.

நிபுணர்கள் கருத்து என்ன?

குறைந்தபட்ச ஆதரவு விலை அவசியமான ஒன்றுதான் என்று வேளாண் நிபுணர்கள் கூறுகின்றனர்.

விவசாயிகள்
படக்குறிப்பு, கோபிநாத், மூத்த விஞ்ஞானி - எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை

இது குறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் மூத்த விஞ்ஞானி கோபிநாத் பிபிசி தமிழிடம் விரிவாக பேசினார்.

''விவசாய விளைபொருட்களில் நெல் பெரும்பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. நிலக்கடலை, தானியங்கள் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் செய்யப்படுகின்றன. இவ்வாறு நமது கொள்முதல் கட்டமைப்பு வலுவாக உள்ளது. ஆனால், கொள்முதல் செய்யப்படும் விளை பொருட்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வசதிகளை மேம்படுத்த வேண்டியுள்ளது," என்றார்.

"தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நெல், மாநிலத்தின் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை. அதனால் தேவைப்படும் நெல் வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக, பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் நெல் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, குறைந்தபட்ச விலை நிர்ணயம் சட்டபூர்மாக்கப்பட்டால், அரசுகள் மாறினாலும் குறைந்தபட்ச விலை நிர்ணயம் தொடரும். தனியார் ஆதிக்கம் இருக்காது. ஆகையால், சட்டபூர்வ குறைந்தபட்ச விலை நிர்ணயம் அவசியமானது.'' என்கிறார் கோபிநாத்.

ம.ப.சின்னதுரை - விவசாயிகள் சங்க தலைவர்
படக்குறிப்பு, ம.ப.சின்னதுரை, தலைவர் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

காரீஃப், ராபி பருவ வாரியாக மத்திய அரசு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்து வருகிறது. ஆனாலும் குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டபூர்வமாக்க கோருவது ஏன்? என்று தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ம.ப.சின்னதுரையிடம் கேட்டோம்.

''வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை. மொத்த செலவினத்தோடு ஒப்பிடும்போது, விலை நிர்ணயம் குறைவாகவே செய்யப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு அமைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் ஊதியம் உயர்த்தப்படடுகிறது. ஆனால், விவசாயத்திற்காக, விவசாயிகளுக்காக அமைக்கட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் குழு, அர்ஜுன் சென் குப்தா குழு, வைத்தியநாதன் குழு, ரங்கநாதன் குழு உள்ளிட்ட வேளாண் குழுக்களின் பரிந்துரைகளை மத்திய அரசு சரிவர நிறைவேற்றவில்லை. ஆகையால்தான் தற்போது விடாப்பிடியாக போராடுகிறோம்.'' என்றார்.

விவசாயிகள்
படக்குறிப்பு, வீரசேகரன், மாநில செய்தித்தொடர்பாளர் - பாரதிய கிசான் சங்கம்

பாரதிய கிசான் சங்க மாநில செய்தித் தொடர்பாளர் வீரசேகரன் கூறுகையில், "குறைந்தபட்ச ஆதரவு விலையை அரசு நிர்ணயம் செய்கிறது. ஆனால் தனியார் முதலாளிகள் அதை பின்பற்றுவதில்லை. எனவே குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டபூர்வ பாதுகாப்பு வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. மூன்று வேளாண் திருத்த சட்டங்களிலும் இது குறித்த அம்சங்கள் வேண்டும் என்று வலியுறுத்தினோம். இந்த நாடாளுமன்றத்தின் நடப்புக் கூட்டத்தொடரில், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் குறித்த தனி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்," என்கிறார்.

அண்மையில், பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், "பூஜ்ஜிய பட்ஜெட் அடிப்படையிலான விவசாய முறைகளை மேம்படுத்தவும், தேசத்தின் மாறிவரும் இயக்கவியலுக்கு ஏற்ப விவசாயம் செய்யவும் வலியுறுத்தினார். மேலும் எம்எஸ்பி-ஐ மிகவும் வெளிப்படையானதாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக மாற்றவும் ஒரு குழுவை உருவாக்கப்படும்," என்று அறிவித்தார்.

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறும் மசோதா விவாதமின்றி, நிறைவேறியுள்ளது. ஆனால், குறைந்த பட்ச ஆதரவு விலைக்கான விவசாயிகளின் வாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எம்எஸ்பி பிரச்னை என்ன?

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனின் பரிந்துரை அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் இருக்க வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகிறார்கள். இந்த குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது, ஒரு குறிப்பிட்ட பயிரின் குறைந்தபட்ச விலையாகும். அதை அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து வாங்குகிறது.

எம்எஸ்பி பொதுவாக பயிர் உற்பத்தி செய்யும் போது விவசாயிக்கு ஆகும் செலவை விட ஒன்றரை மடங்கு அதிகமாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளப்படும். இந்த பயிர்களை வாங்கும் போது, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவான தொகையை அரசு வழங்காது.

எம்எஸ்பி-ஐ எது தீர்மானிக்கிறது?

தற்போதைய நடைமுறையின்படி வேளாண் செலவினம் மற்றும் விலைகளுக்கான ஆணையமான சிஏசிபிதான் காரீஃப் மற்றும் ராபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை தீர்மானிக்கிறது. கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை கரும்பு ஆணையம் தீர்மானிக்கிறது.

எம்எஸ்பி ஏன் முக்கியம்?

விவசாயிகள் தங்களின் பயிருக்குரிய அடிப்படையான குறைந்தபட்ச செலவுகளை தொடர்ந்து பெறுவதற்கு ஏதுவாக எம்எஸ்பி தீர்மானிக்கப்படுகிறது.

சாந்தகுமார் கமிட்டி ஆய்வின்படி, ஆறு சதவிகித விவசாயிகள் மட்டுமே எம்எஸ்பி பலனைப் பெற முடியும், அதாவது 94 சதவிகித விவசாயிகள் எம்எஸ்பி வரம்பிற்கு அப்பால் இருக்கிறார்கள்.

எம்எஸ்பிக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் ஏன் சர்ச்சைக்குரியது?

விவசாயிகள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

அரசாங்கம் மற்றும் விவசாய நிபுணர்களின் கூற்றுப்படி, எம்எஸ்பி என்பது இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை இருந்த காலத்திலிருந்து நீடித்து வரும் சிந்தனை.

1960களின் நடுப்பகுதியில் போர் மற்றும் உணவு நெருக்கடி நிலவியது. அந்த காலகட்டத்தில் அரசாங்கம் உணவு தானியங்களை பொது விநியோக முறை மூலம் நாடு முழுவதும் அனுப்ப விவசாயிகளிடமிருந்து அவற்றை கொள்முதல் செய்து பாதுகாத்தது. அத்தகைய சூழலில் இந்தியாவில் உணவு தானியங்கள் அதிக அளவில் சேகரிக்கப்பட்டன. குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் அதிகப்படியான உணவு தானியங்களை சேகரிப்பதிலும் அதை விநியோகிக்கும் நடைமுறையை கையாளுவதிலும் அரசுக்கு அதிக பிரச்னைகள் எழலாம் என்று வேளாண் நிபுணர்கள் கருதினர்.

அரசாங்கம் தயங்குவது ஏன்?

நியாய விலையின் அளவுகோலாக எம்எஸ்பி முறையை அமல்படுத்த அரசாங்கம் தயங்குகிறது. அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களின் மூலம் தனியார் பங்களிப்பு மற்றும் முதலீடு பெருமளவில் இருப்பதை நோக்கமாகக் கொண்டிருந்ததாக விவசாயிகள் கூறினர்.

விவசாயிகள் தங்களுடைய பகுதியில் உள்ள சந்தையிலேயே தங்களுடைய உற்பத்தி பொருளை விற்க முடியும் என்று அரசு கூறியது.

ஆனால், தனியார் ஆதாயத்தையே இது ஊக்குவிக்கும் என கருதிய விவசாயிகள், இந்த விஷயத்தில் தங்களுக்கு எழுத்துபூர்வமாக அரசு உத்தரவாதம் தர வேண்டும் என்றும் அதற்கு சட்டபூர்வ அந்தஸ்து இருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். ஆனால், அரசு இதை ஏற்க தயக்கம் காட்டி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :