கன்னியாகுமரி மழை: கிராமத்திலேயே முடங்கி வாழும் மோதிரமலை பழங்குடிகள் - கள நிலவரம்

பாலம்
    • எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கன்னியாகுமரி மாவட்டம் மோதிரமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள குக்கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் பழங்குடி காணி இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் மோதிரமலை-குற்றியார் சாலை இணைக்கும் தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்து தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அடுத்துள்ள பேச்சிப்பாறை அணையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது மோதிரமலை கிராமம். இந்த கிராமத்தை சுற்றி சுமார் 12க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் மலைவாழ் பழங்குடி காணி இன மக்கள் வசித்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் வசித்து வரும் மலைவாழ் பழங்குடியின மக்களின் பிரதான தொழில் விவசாயம். இவர்கள் வாழை, கிராம்பு, கிழங்கு, மிளகு, பாக்கு உள்ளிட்ட விளை பொருட்களை விளைவிக்கின்றனர். இன்னும் சிலர் தமிழ்நாடு அரசு ரப்பர் தோட்ட கழகத்தில் விவசாய கூலிகளாக இருந்து வருகின்றனர்.

இந்த பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என மலைவாழ் பழங்குடியின மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் காட்டுப்பன்றி, காட்டு யானை, காட்டு எருமைகளால் விளை நிலங்கள் மற்றும் மக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

இந்த கிராமத்தை சேர்ந்த மலைவாழ் பழங்குடி காணி இன மக்களின் குழந்தைகள் மார்த்தாண்டம், குலசேகரம், தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இப்பகுதியில் மழை, காற்று காரணமாக நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

தொடர் மின் தடையால் குழந்தைகளின் கல்வி பாதிப்பு

மரம்

இதனால் கல்வி பயிலும் குழந்தைகள் இரவு நேரங்களில் மெழுகுவர்த்தி, மண்ணெய் விளக்கை பயன்படுத்தி படிக்கின்றனர். அதேபோல் கன மழை பெய்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் கடும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் இங்குள்ள குழந்தைகள்.

கோதையார் மற்றும் அதனைச் சுற்றி 12 மலைவாழ் பழங்குடி காணி இன மக்களின் கிராமங்களை, மோதிரமலை-குற்றியார் சாலை இணைக்கிறது. இந்த சாலை வழியாக தினசரி ஆறு அரசு பேருந்துகளும், தனியார் வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்களும் சென்று வருகின்றன.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் கன மழையால் கோதையார் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மோதிரமலை-குற்றியார் இணைக்கும் தரைமட்ட பாலத்தின் மீது பாய்ந்தோடி காட்டாற்று வெள்ளம் ஏற்படுவதால் சாலை துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுவது இங்கு தொடர்கதையாகி வருகிறது.

கன மழையால் போக்குவரத்து துண்டிப்பு

தரைமட்ட பாலத்தில் உடைப்பு ஏற்பட்டால் மறுபுறம் உள்ள தங்கள் பழங்குடி கிராமங்களுக்கு செல்லும் வழியறியாது திகைத்து நிற்கின்றனர் அப்பகுதி மலைவாழ் பழங்குடியின மக்கள். மேலும் தரைமட்ட பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டால் பால், உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியவசிய பொருட்கள் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படுகிறது.

சாலை

இப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக முடியும். எனவே அரசு உடனடியாக மோதிரமலை-குற்றியார் இணைக்கும் தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக கட்டிக் கொடுத்து, அங்கு வசிக்கும் மக்கள் அனைவருக்கும் போதிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மலைவாழ் பழங்குடி காணி இன மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

காட்டு விலங்குகளால் விளை நிலங்கள் சேதம்

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மோதிரமலை கிராமத்தை சேர்ந்த மல்லிகா, "நான் ஆதிவாசி காணி இனத்தை சேர்ந்தவர். நாங்கள் பல தலைமுறைகளாக இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகிறோம். இங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. மாலை நேரங்களில் காட்டு யானை, காட்டு பன்றி உள்ளிட்ட காட்டு மிருகங்கள் தொந்தரவு அதிகம் உள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி விடுகிறோம்," என்று கூறினார்.

மல்லிகா

"மேலும் இந்த பகுதியில் முதியவர்கள், குழந்தைகள் என உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முறையான போக்குவரத்து வசதி இல்லாமல் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது."

"எங்களது வாழ்க்கை இந்த காட்டுக்குள் தான்"

இது குறித்து பிபிசி தமிழடம் பேசிய ஞான செல்வி, "இங்கு வசிக்கும் மக்கள் ரப்பர், கிழங்கு, வாழை உள்ளிட்ட விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் காட்டு விலங்குகள் இரவு நேரங்களில் எங்களது விளைநிலங்களை சேதப்படுத்துகின்றன. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது." என்றார்.

ஞானசுந்தரி

"எங்களது வாழ்க்கை இந்த காட்டுக்குள் தான். நாகரிக வளர்ச்சியின் காரணமாக குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரியில் பயின்று வருகின்றனர். ஆனால் மேல் படிப்புக்கு செல்வதில் பெரும் சிரமமாக உள்ளது. மழைக்காலம் வந்து விட்டாலே கடும் சிரமத்தை எதிர்கொள்ள தயாராகி கொள்வோம் நாங்கள். மழை காலங்களில் கடும் சிரமத்திற்கு மத்தியில் எங்களது வாழ்க்கை கடந்த செல்கிறது," என்கிறார் ஞான செல்வி.

உயர்மட்ட பாலம் எப்போது கட்டப்படும்?

தரைமட்ட பாலத்தை உயர்த்தி கட்டி தர அரசிடம் மனு அளித்த அப்பகுதியை சேர்ந்த நடராஜ் பிபிசி தமிழிடம் பேசினார்.

நட்ராஜ்

"மலைவாழ் கிராம மக்கள், அரசு ரப்பர் தோட்டங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தரைப்பாலத்தை கடந்து செல்ல வேண்டியதுள்ளது. தரைமட்ட பாலத்தின் உயரத்தை உயர்த்தி உயர்மட்ட பாலமாக கட்டி தர வேண்டும் என பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து. 2019ஆம் ஆண்டு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பி இருந்தோம். ஆனால் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எங்கள் மனு பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பணிகளை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல் கிடைத்தது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு மீண்டும் இந்த பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் தொடர்ந்து தரைப்பாலம் மழை நேரங்களில் மூழ்கி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது," என்றார் நடராஜ்.

காணொளிக் குறிப்பு, குமரியில் தரைப்பாலம் வலுவில்லாததால் காடுகளிலேயே முடங்கிய மோதிரமலை மக்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :