கர்நாடக விவசாயிகளின் ஹீரோ ஆன பழங்குடி பெண் - யார் இவர்?

பிரேமே கர்நாடகா விவசாயி

பட மூலாதாரம், Imran Qureshi

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பெங்களூரில் இருந்து பிபிசி இந்தி சேவைக்காக

பிரேமா படித்திருந்தால், இந்நேரம் அவர் சமூக ஊடகங்களில் பிரபலமானவராக இருந்திருப்பார். அவரது அடையாளம் ஒரு 'செல்வாக்குள்ள நபர்' அந்தஸ்தை அவருக்கு கொடுத்திருக்கும்.

ஆனால் விவசாயம் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் நல்லெண்ண தூதுவராக இருக்கக் கூடிய திறமை அவரிடம் உள்ளது. 13 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வனப்பகுதியில் வசித்து வந்த பிரேமா தாசப்பா (50) மிகக் குறைந்த கூலிக்கு கூலி வேலை செய்து வந்தார்.

இப்போது அவர் மற்ற பழங்குடி பெண்கள், தங்கள் சொந்த பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொள்ள எப்படி பணியாற்ற வேண்டும் என்பதை பயிற்றுவித்து வருகிறார்.

கர்நாடக்தின் மைசூர் மாவட்டத்தின் எச்டி கோட்டாவில் உள்ள அவர் பிபிசியிடம் பேசினார்.

முதல் ஆண்டில் ஒரு ஏக்கர் நிலத்தில் சியா விதைகளை விதைத்ததாகவும், அதன் மூலம் 90 ஆயிரம் ரூபாய் விற்பனை செய்ததாகவும் அவர் கூறினார்.

இந்த விதைகளை குவிண்டால் 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அந்த வருமானத்தில் மகனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கினார்.

2007-08ல் நாகர்ஹோலே புலிகள் சரணாலயத்தின் காடுகளில் இருந்து வெளியேறுவதற்கு ஈடாக மூன்று ஏக்கர் நிலத்திற்கு இழப்பீடு வழங்கப்பட்ட குருபா பழங்குடி சமூகத்தின் 60 பழங்குடியின குடும்பங்களில் பிரேமாவும் ஒருவர்.

இவர்களில் 15 குடும்பங்கள் இன்னும் வனத்துறையில் வேலை செய்கின்றனர், மற்ற 45 குடும்பங்கள் இந்த நிலத்தை வாழ்வதற்கு மட்டுமே பயன்படுத்தினர். பிரேமா மட்டும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தார்.

பிரேமே கர்நாடகா விவசாயி

பட மூலாதாரம், Imran Qureshi

இந்த நிலத்தை எப்படி சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது என்று பிரேமா பல இடங்களுக்குச் சென்று ஆராய்ந்தார். கடைசியில் கணவருடன் இங்கு விவசாயம் செய்யத் தொடங்கினார். இந்த தம்பதி அரிசி, சோளம், காய்கறிகளை பயிரிட்டனர்.

கடந்த தசாப்தத்தின் கடைசி சில ஆண்டுகளில் அவரது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது.

அது பற்றி பிரேமா கூறுகையில், "இஞ்சி சாகுபடி செய்ய விரும்பிய கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு எங்கள் நிலத்தை ஒப்பந்த அடிப்படையில் கொடுத்தோம். பதிலுக்கு நாங்கள் அவரிடம் பணம் வாங்கவில்லை, ஆனால் கிணற்றை பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை கேட்டோம்," என்றார்.

"பழங்குடியினருக்கு நிலம் வழங்கப்பட்ட பகுதியில் நீர்ப்பாசனம் இல்லை. எல்லோரும் மழையை நம்பித்தான் இருந்தோம், இந்த நிலம் மிகவும் வறண்டு கிடக்கிறது, மக்கள் இங்கு விவசாயம் செய்யாமல் வேறு இடங்களுக்குச் செல்வதையே விரும்புகின்றனர். இங்கு விவசாயம் செய்யும் செலவை இழக்கும் அபாயம் உள்ளது" என்கிறார் பிரேமா.

ஆனால் பிரேமாவின் வித்தியாசமான கண்ணோட்டமும், கற்க வேண்டும் என்ற ஆர்வமும் அவருக்குப் பெரிதும் பயனளித்தன.

பிரேமே கர்நாடகா விவசாயி

பட மூலாதாரம், Imran Qureshi

வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் (WLS), கர்நாடக அரசின் வனத்துறையுடன் இணைந்து மக்களின் மறுவாழ்வுக்காகச் செயல்படும் அமைப்பும் அவர்களின் திறனை அங்கீகரித்துள்ளது.

WLS-ல் பணிபுரியும் கோவிந்தப்பா பிபிசியிடம் இது பற்றி கூறுகையில், "அவரது நிலத்தில் நாங்கள் ஒரு பாலி ஹவுஸ் அமைத்தோம், அங்கு அவர் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பலவிதமான பருப்பு வகைகள், தக்காளி, ராகி மற்றும் வாழைப்பழங்களை வளர்ப்பார். நாங்கள் விதைகளை மட்டுமே தருகிறோம், பயிர் விவசாயிக்கு சொந்தமானது," என்றார்.

பாலி ஹவுஸ் என்பது பசுமை இல்லம் போன்றது, ஆனால் இது பாலிதீனால் ஆனது மற்றும் சூரிய ஒளி அதன் விளிம்புகள் வழியாக நுழைகிறது.

வனத்துறை மற்றும் WLS வழங்கிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரேமாவின் ஆர்வம் இப்போது அவருக்குப் பெரிதும் பயனளித்துள்ளது.

இப்போது அவர் சியா விதைகளை வளர்த்து, ஒரு சூப்பர்ஃபுட் தரத்தில் அவற்றை அதிக விலைக்கு விற்கிறார்.

இதை சிரித்தபடி நம்மிடம் பகிர்ந்த பிரேமா, "நான் மற்ற விவசாயிகளுக்கும் சியாவை வளர்க்க விதைகளை விற்கிறேன்," என்றார்.

பிரேமே கர்நாடகா விவசாயி

பட மூலாதாரம், Imran Qureshi

தற்போது வனத்துறையினர் தன்னை வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க கேட்டுக் கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார் பிரேமா.

பிரேமா சராசரியாக 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை ஒவ்வொரு இரண்டாவது - மூன்றாவது மாதங்களில் சம்பாதிக்கிறார்.

பிரேமாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர், இருவரும் திருமணமானவர்கள். தனது பேத்தி ஆங்கில வழிப் பள்ளியில் படிக்கிறார் என்று பெருமையுடன் கூறுகிறார் அவர்.

கிரிஷி மேளா என்ற பெயரில் விவசாய கண்காட்சியை துவக்கி வைக்குமாறு, வனத்துறையினர் இவரிடம் கேட்டனர். வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அந்த கண்காட்சியை முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால், கர்நாடகாவில் மேலவை தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அதில் முதல்வர் பங்கேற்காமல் தவிர்க்குமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதையடுத்து அந்த கண்காட்சியை திறந்து வைக்கும் வாய்ப்பு பிரேமாவுக்கு கிடைத்தது.

அந்த தருணம் தன்னை மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்தது என்கிறார் பிரேமா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :