யோகி அரசின் பசு ஆம்புலன்ஸ், விந்து தொழில்நுட்ப சேவை - டிசம்பரில் அமல்

பட மூலாதாரம், Getty Images
உத்தர பிரதேச மாநிலத்தில் பசுக்களுக்காக 24 மணி நேரமும் இயங்கக் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை வரும் டிசம்பர் மாதம் அமல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார் அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
இந்த திட்டத்தின்படி சிகிச்சை தேவைப்படும் பசுக்கள், அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். இது தவிர பசுக்களின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்கும் புதிய முறை பற்றிய விழிப்புணர்வை கால்நடை பராமரிப்பாளர்களிடையே ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டிருக்கிறது.
பசுக்களுக்கான அவசரஊர்தி சேவைக்காக 515 வாகனங்களை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு கால்நடை மருத்துவர், இரண்டு ஊழியர்கள் என 24 மணி நேரமும் அவர்கள் பணியில் இருக்கும் வகையில் பணி முறை அமைக்கப்படும்.
இந்த சேவையை ஒருங்கிணைக்க ஒரு பிரத்யேக கால் சென்டர் வசதியையும் உத்தர பிரதேச அரசு உருவாக்கவிருக்கிறது.
இந்த கால் சென்டரை அழைத்து பசுக்களின் சிகிச்சை தேவையை தெரிவித்தவுடனேயே அடுத்த 15 நிமிடங்களுக்குள்ளாக அவர்களை தேடி ஆம்புலன்ஸ் சேவை வரும். பசுக்கள் தவிர மற்ற விவசாய கால்நடைகளுக்கான மருத்துவ சேவையையும் விவசாயிகள் பெற முடியும்.
பசுக்களின் இனப்பெருக்கத்தைப் பொருத்தவரை, அதற்கென ஒரு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி, 'கரு மாற்று அறுவை சிகிச்சை' நுட்பத்தின் மூலம், பசுக்களுக்கு 100 சதவீதம் கருவூட்டல் செய்ய அரசே ஏற்பாடு செய்யும்.

பட மூலாதாரம், Getty Images
இந்த தொழில்நுட்பம் இதற்கு முன்பே பாராபங்கி மாவட்டத்தில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டதில் சாதகமான முடிவுகல் கிடைத்துள்ளதாக அந்த மாநில அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். இதைத்தொடர்ந்தே இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்த யோகி ஆதித்யநாத் அரசு முடிவு செய்திருக்கிறது.
இந்த திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தர பிரதேச மீன் வளத்துறை மற்றும் கால்நடை வளர்ப்புத்துறை அமைச்சர் லக்ஷ்மி நாராயண் செளத்ரி, "அடுத்த மாதம் தொடங்கப்படும் திட்டத்துக்கு அபினவ் ஆம்புலன்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன் அங்கமாக 515 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கும். 24 மணி நேரமும் இயங்கும் இந்த சேவையை ஒருங்கிணைக்கும் கால்சென்டர் லக்னெளவில் இருந்து செயல்படும்," என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
பசுக்கள் இனப்பெருக்க திட்டத்தின்படி ஒரு பசுவுக்கு மூன்று முறை கருவூட்டல் வசதி இலவசமாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் செளத்ரி கூறினார்.
இலவச உயர்தர விந்து மற்றும் கரு மாற்று தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் மாநிலத்தின் பசுக்கள் இனப்பெருக்க திட்டத்திற்கு ஊக்கம் கிடைக்கும் என்று உத்தர பிரதேச அரசு நம்புகிறது.
மலட்டுத்தன்மையுள்ள பசுக்களைக் கூட அதிக பால் தரும் விலங்குகளாக மாற்றும் தொழில்நுட்பம் மாநிலத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று அந்த மாநில கால்நடைத்துறை அமைச்சர் செளத்ரி தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- வங்கதேசத்திடம் தொடரை இழந்த ஆஸ்திரேலியா டி20 உலகக்கோப்பையை வென்றது எப்படி?
- வெள்ளத்தில் குமரி: தீவாக மாறிய கிராமம் - இன்றைய கள நிலவரம் என்ன?
- இலங்கை குற்றக்குழு தலைவன் அங்கொட லொக்காவின் கூட்டாளி உள்பட இருவர் கைது
- சூர்யாவின் அறிவிப்பு: 'ஜெய்பீம்' ராஜாக்கண்ணு மனைவி பெயரில் ரூ. 10 லட்சம் டெபாசிட்
- கோவை மாணவி மரண விவகாரம்: பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் பெங்களூரில் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












