தமிழ்நாடு வானிலை நிலவரம்: காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் சென்னையில் 20 மணி நேரத்திற்கு மேல் தொடரும் கனமழை

பட மூலாதாரம், Getty Images
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல குடியிருப்புப் பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக சென்னையின் பல சாலைகளில் முழங்கால் அளவுக்கு நீர் தேங்கியுள்ளது.
ஏரிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. பிரதானமான சாலைகளின் இரு புறங்களிலும் மழை நீர் தேங்கியிருப்பதால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்துவருகின்றன. இதனால், கோயம்பேட்டை நோக்கிச் செல்லும் ஜவஹர்லால் நேரு சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கனமழை தொடர்ந்து பெய்ததால், சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

பட மூலாதாரம், Getty Images
சென்னையின் தென் பகுதியான தாம்பரம், செம்பாக்கம், புழுதிவாக்கம் போன்ற பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதுபோல மழை நீர் தேங்கியிருப்பதால் சுமார் 36 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் விடியவிடிய பெய்த கனமழையால் அதிகபட்சமாக தாம்பரத்தில் 23 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னையை அடுத்துள்ள எண்ணூரில் 17.5 செ.மீ. மழை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ. மழையும் மீனம்பாக்கத்தில் 10.2 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வில்லிவாக்கத்தில் 12.2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. எம்.ஆர்.சி. நகரில் 13.6 செ.மீ. மழையும் மேற்கு மாம்பலத்தில் 9.3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று மாலை சென்னை அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கன மழையும் பெய்யக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images
சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அடையாறு ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது, இதனால், அடையாறு ஆற்றின் கரையை ஒட்டி வசிக்கும் பெருங்களத்தூர், தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாக்கம் பகுதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. அங்கு ஒரு வீட்டில் சிக்கித் தவித்த ஒரு பெண்ணையும் அவரது கைக் குழந்தையையும் தேசிய பேரிடம் மீட்புப் படையினர் மீட்டனர்.
மழை நீர் தேங்கியிருந்ததால், சென்னையில் உள்ள 11 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டிருக்கின்றன. 7 சாலைகளும் போக்குவரத்துக்குத் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. இதில் நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை, ஹாரிங்டன் சுரங்கப்பாதை ஆகியவற்றில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டு அதில் போக்குவரத்து துவங்கியுள்ளது.
திருமலைப்பிள்ளை சாலையில் காமராஜர் இல்லத்தின் முன்பாக பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வள்ளுவர் கோட்டத்திற்குச் செல்லும் சாலை மூடப்பட்டுள்ளது.
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெளியேற்றப்படும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், மழை நிலவரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டங்களில் மழை சேத விவரங்களைக் கேட்டறிந்த முதலமைச்சர், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்யவும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடவும் அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டிருக்கிறார்.
பிற செய்திகள்:
- `பருவநிலை பிரச்னையை எதிர்கொள்ள சீனாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்` - COP26 மாநாட்டில் வெளியான அறிவிப்பு
- 'அந்த 3 ஓவர்கள்' இங்கிலாந்தை நியூசிலாந்து வீட்டுக்கு அனுப்பியது எப்படி?
- முதல் உடலுறவும் கற்பும்: 'கன்னித் தன்மை' என்பது ஒரேயொரு கணத்துடன் முடிந்து போவதா?
- மன நோயாளி என அடைக்கப்பட்ட ஆட்டிசம் குறைபாடுள்ள மகனை போராடி மீட்ட தாய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்












