முந்திரி ஆலைத் தொழிலாளி சந்தேக மரணம்- கடலூர் திமுக எம்.பி டிஆர்வி. எஸ். ரமேஷ் மீது வழக்கு

கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்வி. எஸ். ரமேஷ்
படக்குறிப்பு, கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்வி. எஸ். ரமேஷ்

திமுகவைச் சேர்ந்த, கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர்வி. எஸ். ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளி ஒருவர் இறந்ததை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரித்து வருகிறது. முதல் தகவல் அறிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட ஐவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உயிரிழந்த தொழிலாளி திருடி மாட்டிக்கொண்ட பின்னர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக ரமேஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

ஆனால், இறந்த தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறும் அவரது உறவினர்கள், அதை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கோவிந்தராசு. இவருக்கு வயது 60. இவர் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 19-ஆம் தேதி (ஞாயிறு) வேலைக்கு சென்ற கோவிந்தராசு இரவு வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.

இதையடுத்து கோவிந்தராசுவின் மகனுக்கு ரமேஷ் தொலைபேசியில் இருந்து ''உங்கள் தகப்பனார் இறந்து விட்டார்'' என்று தகவல் தெரிவித்ததாக, அவரது குடும்பத்தினரால் கூறப்படுகிறது.

அதன்பேரில் சென்னையிலிருந்து வந்த மகன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தந்தையின் உடலை பார்த்துள்ளார். அப்போது அவர் உடல் முழுவதும் முகம் மற்றும் உடலின் பல இடங்களில் காயம் இருந்துள்ளது, என்று இறந்தவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுவதாக காவல்துறை கூறுகிறது.

உயிரிழந்த தொழிலாளி கோவிந்தராசு
படக்குறிப்பு, உயிரிழந்த தொழிலாளி கோவிந்தராசு

இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முந்திரி தொழிற்சாலையில் கோவிந்தராசு கொலை செய்யப்பட்டதாக கூறி, கடலூர் எம்.பி ரமேஷ் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த நபர் பாமக கட்சி ஆதரவாளர் என்பதால், இந்த போராட்டத்தில் உறவினர்களுக்கு ஆதரவாக கடலூர் மாவட்ட பாமக உறுப்பினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு உரிய‌ விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்த பின்னர் உறவினர்கள் மற்றும் பாமக உறுப்பினர்கள் சமரசமாகினர்.

"கோவிந்தராசுவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்து வேண்டும். பிரேதத்தை வெளிமாவட்ட மருத்துவர்களைக் கொண்டு சிறப்பு மருத்துவ குழு அமைத்து உடற்கூறாய்வு செய்ய‌ வேண்டும். அதனை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும்," உறவினர்கள் கோரிக்கை வைத்தனர்.

உயிரிழந்த கூலித் தொழிலாளி கோவிந்தராசு முந்திரி தொழிற்சாலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் உயிரிழந்து இருப்பதால், காடாம்புலியூர் காவல் நிலையத்தில் சந்தேக மரணம், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 174 (i)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.‌

கடலூர் திமுக எம்.பி மீது வழக்கு
படக்குறிப்பு, இறந்தவரின் உறவினர்கள்

மேலும் சந்தேகத்தின் அடிப்படையில் முந்திரி தொழிற்சாலையின் உரிமையாளர் ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜன், கந்தவேலு, அல்லாபிச்சை, வினோத் மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள் உள்ளிட்டோர்‌ மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை என்ன சொல்கிறது?

இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறையை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. அப்போது பேசிய காவல் துறையினர், "ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலை கடந்த 7 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். கடந்த 19ஆம் தேதி இரவு கோவிந்தராசு பணிபுரிந்து வீடு திரும்பியபோது, 7 கிலோ முந்திரியை எடுத்துச் செல்வதாக கூறி அல்லாபிச்சை என்ற ஊழியர், கோவிந்தராசை தொழிற்சாலை பாதுகாவலரிடம்‌ ஒப்படைக்கிறார்."

"இதற்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது அல்லாபிச்சை மற்றும் கந்தவேலு என்பவர்கள் கோவிந்தராசை தாக்கியுள்ளனர். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காயமடைந்த ‌கோவிந்தராஜை காவல் நிலையத்தில் கடந்த 19ஆம் தேதி இரவு 10.15 மணிக்கு ஒப்படைக்க அழைத்து வந்தனர்," என்றனர்.

"காவல் நிலையத்தில் கோவிந்தராசு திருடியதாக கூறி கைது செய்யம்படி முந்திரி கம்பெனி ஊழியர்கள் கூறியுள்ளனர்.‌ ஆனால் கோவிந்தராஜ் காயங்களுடன் இருப்பதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலில்‌ சிகிச்சை அளிக்கும்படி காவல் நிலையத்தில் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் கம்பெனியில் வைத்துவிட்டு காலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்று ஊழியர்கள் முன்று‌‌ பேரும் மீண்டும் முந்திரி கம்பெனிக்கு கோவிந்தராசை அழைத்துச் சென்றுள்ளனர்."

காவல் நிலையம் முற்றுகை
படக்குறிப்பு, பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட இறந்தவரின் உறவினர்கள்

"கம்பெனியில் இருந்தபோது நள்ளிரவு சுமார் ஒரு மணிக்கு சிறுநீர்‌ கழிக்கச் சென்ற கோவிந்தராசு, கழிவறையில் உள்ள விஷ பாட்டிலில் இருந்த விஷத்தை அருந்தியதாக கம்பெனி ஊழியர்கள் கூறுகின்றனர். பின்னர் அங்கிருந்து அவரை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உறவினர்கள் தரப்பில் ரமேஷ் மற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கொலை வழக்கு செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர். தற்போது இறப்பின் தன்மை குறித்து அறிய சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கோவிந்தராசு பிரேதத்தை உடற்கூறாய்வு செய்த பிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும்," என்று காவல் துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.

ரமேஷ் அளிக்கும் பதில் என்ன?

இந்த வழக்கு தொடர்பாக முந்திரி தொழிற்சாலை உரிமையாளரும், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது. அப்போது பதிலளித்த அவர், "கோவிந்தராசு எங்களிடம் இருந்து முந்திரி பயிரை திருடியுள்ளார். அப்போது அவரை அழைத்து விசாரணை செய்யும்போது முந்திரி எடுத்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் இதை ஊர் பஞ்சாயத்தில் சொல்லி பேசிக்கொள்ளலாம் என்று‌ முடிவெடுத்தோம். இதற்கிடையில் சிறுநீர் கழிக்க கழிவறை சென்றவர், மருந்து குடித்துவிட்டார். இதான் நடந்தது," என்ற அவர் தெரிவித்துள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில், கடலூர் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் கோவிந்தராசு என்ற தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கடலூர் எம்.பி உள்ளிட்ட 5 பேர் மற்றும் பிறர் மீது சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கோவிந்தராசு கொலையில் உள்ள ஐயம் போக்கப்பட வேண்டும் என்பதாலும், இதில் சம்பந்தப்பட்டவர் அரசியல் செல்வாக்கு மிக்கவர் என்பதாலும் கோவிந்தராசுவின் உடற்கூறாய்வு தமிழகத்துக்கு வெளியே புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட வேண்டும். கோவிந்தராசு மரணத்திற்கு நீதி வேண்டும்," என்று பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :