'ஆர்யா- சாயிஷாவுக்கு நடந்தது ஷூட்டிங் கல்யாணம் - ஜெர்மனி பெண் புகாரின் பின்னணி

பட மூலாதாரம், @aryaoffl instagram
- எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஜெர்மனியை சேர்ந்த பெண்ணை ஏமாற்றி, பண மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரில் நடிகர் ஆர்யா நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் நேரில் ஆஜரானார். இந்த வழக்கில் நடந்தது என்ன என்று புகார் அளித்த பெண்ணின் தரப்பு பிபிசி தமிழிடம் பகிந்துகொண்டது.
ஆர்யா தரப்பின் பதிலைக் கேட்க பிபிசி தமிழ் சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், அவர்கள் யாரும் இதுகுறித்துப் பேச முன்வரவில்லை.
ஆர்யா- சாயிஷா திருமணம்
கடந்த 2019-ம் வருடம் நடிகர் ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் திருமணம் நடந்தது. 'வனமகன்', 'கஜினிகாந்த்' உள்ளிட்ட படங்களில் சாயிஷா நடித்துள்ளார்.
கஜினிகாந்த் படத்தில் திருமணத்திற்கு முன்பு ஆர்யாவும் சாயிஷாவும் சேர்ந்து நடித்திருந்தனர். கடந்த மாதம் இவர்களுக்கு பெண்குழந்தை பிறந்தது.
இதற்கு முன்பே தனியார் தொலைக்காட்சி ஒன்றில், திருமணம் செய்து கொள்ள இந்த நிகழ்ச்சி மூலமாக பெண்ணை தேர்ந்தெடுக்க போவதாக ஆர்யா சொல்லியிருந்ததும் பின்பு அது வெறும் நிகழ்ச்சியாகவே முடிந்ததும் அந்த சமயத்தில் பார்வையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
புகார் அளித்த பெண் தரப்பு கூறுவது என்ன?
இந்த நிலையில்தான், ஜெர்மனியை சேர்ந்த வித்ஜா, நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் மோசடி செய்திருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளித்திருந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று விசாரணைக்காக நேரில் ஆஜராகியிருந்தார் ஆர்யா.

பட மூலாதாரம், @aryaoffl instagram
இந்த வழக்கு தொடர்பாக, தான் பாதிக்கப்பட்டதாக கூறி ஆர்யா மீது புகார் கொடுத்திருக்கும் வித்ஜாவின் வழக்கறிஞர் ஆனந்தனை பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம்.
"நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி செய்ததாக வித்ஜா பிரதமர் அலுவகத்தில் முன்பு புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரோடு ஆர்யாவுடன் பேசியது, பணம் அனுப்ப சொல்லி அவர் கேட்டது, பின்பு வித்ஜா பணம் அனுப்பியதற்கான சான்று உள்ளிட்டவையும் அந்த புகாரில் இணைக்கப்பட்டிருந்தது."
"இதை தமிழ்நாடு தலைமை செயலளாளருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி இருக்கிறார்கள். இது சைபர் க்ரைம் பிரிவுக்கு சென்று அங்கு இதனை விசாரித்து இருக்கிறார்கள். பின்பு, இது சிபிசிஐடி வசம் சென்று மீண்டும் சைபர் க்ரைம் பிரிவுக்கு வந்திருக்கிறது."
"இந்த வழக்கு விசாரணையின் போது, ஆர்யா முன் ஜாமீன் கேட்டிருந்தார். எங்கள் தரப்பில் மனுதாரரிடம் பணம் வாங்கி ஏமாற்றி, மிரட்டிய காரணத்தால் முன் ஜாமீன் ஆர்யாவுக்கு வழங்கக்கூடாது என கேட்டிருந்தோம். இதற்கிடையில் ஆர்யா நடித்த வெளிவரக் காத்திருந்த படங்களான 'சார்பட்டா பரம்பரை', 'அரண்மனை-3', 'ரெண்டகம்' ஆகிய படங்கள் வெளிவரக்கூடாது எனவும் கேட்டிருந்தோம்."
"இதனையடுத்து, வழக்கை தற்போது விசாரித்து ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பியிருக்கிறார்கள். இதற்கு நேற்று நடிகர் ஆர்யா நேரில் ஆஜராகி விசாரணையில் பதில் சொல்லியிருக்கிறார். தற்போது வழக்கை வருகின்ற ஆகஸ்ட் 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள்," என்று தெரிவித்தார்.
சமூக வலைத்தளம் மூலம் உருவான பழக்கம்
"வித்ஜா தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? ஆர்யா- வித்ஜா எப்படி சந்தித்தார்கள்?" என கேட்டோம்,

"வித்ஜா ஜெர்மனியில் வசித்து வரும் 28 வயதான தமிழ்ப்பெண். அவர் ஒரு கார்டியாலஜிஸ்ட். கடந்த 2018ம் வருடம் மார்ச்சில் ஆர்யாதான் முதலில் வித்ஜாவை சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். பேசிய ஒரே மாதத்திலேயே அதாவது ஏப்ரல் மாதமே வித்ஜாவிடம் காதலை சொல்லியிருக்கிறார். வித்ஜாவும் அதை ஒப்புக்கொண்டு இருவரும் பேசியிருக்கிறார்கள். வீடியோ கால், சாட் மூலமாகவே பேசி பழகியிருக்கிறார்களே தவிர நேரில் இதுவரை சந்தித்தது இல்லை.
தனக்கு நிறைய பணப் பிரச்னைகள் இருப்பதாகவும், கொரோனா காலத்தால் படங்கள் இல்லாததால் பணம் தேவைப்படுவதாகவும் சொல்லி ஆர்யாவும் அவரது அம்மா ஜமிலாவும் வித்ஜாவிடம் தங்களது குடும்ப உறுப்பினராக எண்ணி பணம் தந்து உதவுமாறும், ஆர்யா படங்கள் ஒப்புக்கொண்டு விட்டால் திரும்ப தந்து விடுவதாகவும் சொல்லி கிட்டத்தட்ட 80,000 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.70,40,000) பணம் வாங்கியிருக்கிறார்கள்.
"சாயிஷாவுடன் நடந்தது ஷூட்டிங் கல்யாணம்"
இதற்கிடையில் சாயிஷாவுடன் திருமணம் என செய்தி கேள்விப்பட்டு வித்ஜா ஆர்யாவிடமும் அவரது அம்மாவிடமும் இது குறித்து கேட்டிருக்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
அதற்கு ஆர்யாவின் அம்மா, "அவளை எங்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. தற்போதுள்ள கடன் பிரச்னைகளை சாயிஷா குடும்பம் பணம் கொடுத்து சமாளிப்பதாக சொல்லியதன் காரணமாகவே ஆர்யாவுடைய அப்பா ஒப்புக் கொண்டார். இது ஒரு ஷூட்டிங் கல்யாணம் போலதான். ஆறு மாதங்களுக்கு பிறகு அந்த பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு உன்னைத்தான் திருமணம் செய்து வைப்போம்" என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்," என்கிறார் ஆனந்தன்.
"ஆனால், இதில் சமாதானம் அடையாத வித்ஜா தன்னுடைய பணத்தை திருப்பி கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார். அதற்கு அவரை மிரட்டும் விதமாக, 'பணம் வராது, உன் வீட்டிற்கு ஆள்தான் வரும்' என சொல்லி மெசேஜ் அனுப்பி இருக்கிறார்கள். அதன் பிறகுதான் வித்ஜாவுக்கு ஆர்யா இது போன்று பல பெண்களை ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது."
"இந்த அனைத்து குறுஞ்செய்திகளுமே ஆர்யா மற்றும் அவரது அம்மாவின் மொபைலில் இருந்துதான் அனுப்பப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் 130 பக்கங்கள் கொண்ட ஆதாராமாக சைபர் க்ரைமில் இருந்து எடுத்து இருக்கிறார்கள். இதனை வைத்தே வித்ஜா வழக்கு பதிவு செய்திருக்கிறார்" என்றார்.
ஆர்யா தரப்பு என்ன சொல்கிறது?
வழக்கறிஞர் ஆனந்தன் கூறிய புகார்களை பிபிசி தமிழால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.
இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி தரப்பில் இருந்து ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, ஆர்யா நேற்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் நேரில் ஆஜராகியுள்ளார். இது குறித்தான விளக்கம் பெற நடிகர் ஆர்யா தரப்பை தொடர்பு கொண்டோம். ஆனால், அவர்கள் தரப்பில் யாரும் சரியான விளக்கம் கொடுக்க முன்வரவில்லை.
பிற செய்திகள்:
- ரூ.1.25 லட்சம் கோடி ரூபாய் கடனில் மின் வாரியம்: கட்டணத்தை உயர்த்துவதுதான் ஒரே தீர்வா?
- பருவநிலை மாற்றம் உங்களை மோசமாக பாதிக்கும் 4 வழிகள் - முழு விவரங்கள்
- ஏடிஎம்மில் பணம் இல்லையா? இனிமேல் வங்கிகளுக்கு அபராதம் - ஆர்பிஐ அதிரடி
- மறதி நோயால் கவலையா? - நல்ல செய்தி சொல்கிறது புதிய தொழில்நுட்பம்
- 'யானை வருது; வழிய விடுங்க' - ஒன்றரை லட்சம் பேரை இடம்பெயர வைத்த சீனா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












