எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் முன்னெடுத்த முதல் திமுக எதிர்ப்பு போராட்டம் - எவ்வளவு தாக்கம் இருந்தது?

பட மூலாதாரம், EDAPPADI PALANISWAMY
தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வருவதற்காக தேர்தலின்போது பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்ததாகக் குற்றம்சாட்டியிருக்கிறார் தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாடு முழுவதும், தேர்தல் வாக்குறுதிகளை ஆளும் திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
பல இடங்களில் அதிமுகவினர் தங்களுடைய வீடுகளின் முன்பாக கட்சிக் கொடி ஏந்தியவாறும் சிலர் பொது இடங்களில் கூடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த எடப்பாடி பழனிசாமி, "தேர்தல் நேரத்தில் தற்போது மாநிலத்தில் ஆளும் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அதை அந்த கட்சி நிறைவேற்ற வேண்டும் என அதன் கவனத்தை ஈர்க்கவே இந்த ஆர்ப்பாட்டத்தை அதிமுக நடத்துகிறது," என்றார்.
நீட் தேர்வு, கல்விக்கடன் ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால், எதையும் அந்த கட்சி நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டார் எடப்பாடி பழனிசாமி.
இதேபோல, தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளரும் அந்த தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம், "திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த 55 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் ஜனநாயகத்துக்கு விரோதமாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சராக நான் இருந்தபோது பதவியில் இருந்த அதே நிதித்துறை செயலாளர் தான் இப்போதும் பொறுப்பில் இருக்கிறார். நான் எவ்வாறு செயலாற்றினேன் என அவருக்கு தெரியும். அது பற்றி தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் என்ன கேள்வி கேட்டாலும் பதிலளிக்கத் தயார்," என்று கூறினார்.
சென்னை ராயபுரத்ததில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், "அண்ணே, அண்ணே, ஸ்டாலின் அண்ணே....நம்ம ஊரு நல்ல ஊரு, இப்ப ரொம்ப கெட்டு போச்சுண்ணே" என பாட்டு பாடி பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க முற்பட்டார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தமிழக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்ட பலரும் அவரவர் வீடுகளின் முன்பாக நின்று கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டங்கள் தொடர்பான படங்களையும் அவர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தனர்.
கோவை குனியாமுத்தூர் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, "ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு, மக்களின் கவனத்தை திசை திருப்ப முன்னாள் அமைச்சர்களை இலக்கு வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி அச்சுறுத்தப் பார்க்கிறது," என்று குற்றம்சாட்டினார்.

பட மூலாதாரம், S P Velumani
அதிமுகவின் முதல் திமுக எதிர்ப்பு போராட்டம்
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு ஆளும் ஆட்சிக்கு எதிராக அதிமுக நடத்தும் மாநிலம் தழுவிய போராட்டமாக இன்றைய நிகழ்ச்சிகள் கருதப்படுகின்றன.
கடந்த திங்கட்கிழமை ஓ.பன்னீர்செல்வத்துடன் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம், "திமுக அரசுக்கு எதிராக புகார் ஏதும் பிரதமரிடம் தெரிவித்தீர்களா?" என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "திமுக ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆகின்றன. தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் நலனுக்காக அதிமுக குரல் கொடுக்கும்," என்று பதிலளித்திருந்தார்.
இருப்பினும், சென்னைக்கு திரும்பிய நாளுக்கு மறுதினமே மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தை அதிமுக முன்னெடுத்திருப்பது அரசியல் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சொதப்பியதா அதிமுக?தமிழகத்தில் அதிமுக நடத்திய இந்த போராட்டம், எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று சென்னையில் உள்ள மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனிடம் பிபிசி தமிழ் கேட்டது."இது எதிர்கட்சி வரிசையில் அதிமுக அமர்ந்த பிறகு ஆளும் கட்சிக்கு எதிராக நடத்திய முதல் போராட்டம். கொரோனா காலத்தில் வீதிகளில் கூட்டமாக கூடாமல் அவரவர் வீடுகளின் முன்பாக அதிமுகவினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியது வரவேற்புக்குரியது தான்," என்றார்.ஆனால், அதிமுகவினர் மேற்கொண்ட இந்த போராட்ட வியூகம், எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை என்று கூறிய அவர், அது தொடர்பான தமது பார்வையையும் விவரித்தார்.

பட மூலாதாரம், Paulcharles Muthu
"டீசல் விலை குறைப்பு, பெண்களுக்கு உரிமைத்தொகை என தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்ததும் திமுக நிறைவேற்றவில்லை எனக் கூறி அதிமுகவினர் முழக்கமிட்டது, மக்களை ஈர்க்கும் முயற்சியாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், போராட்டத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமியும். ஓ.பன்னீர்செல்வமும் டெல்லி சென்று வந்ததை சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியாது," என்று குபேந்திரன் குறிப்பிட்டார்."தமிழக சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோதியை சந்தித்து அவர் வழங்கிய தேர்தல் ஆதரவுக்காக நன்றி தெரிவித்தோம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இந்த நன்றியை தெரிவிக்க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் தனியாக டெல்லி சென்று பிரதமரை சந்தித்து விட்டு வந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமியும் அவருடன் சென்று திரும்பியிருப்பதை கவனிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி வெறும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் கிடையாது. அவர் எதிர்கட்சித்தலைவர். கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து பெற்றிருப்பவர். இவர் தமிழ்நாட்டில் இருந்து மாநில நலன்சார்ந்து பேசுவதற்காகவே டெல்லி செல்வதாக இருந்தால், அதை தமிழ்நாட்டில் இருந்து புறப்படும் முன்பே செய்தியாளர்களிடம் பேட்டியளித்து விட்டோ அல்லது அறிக்கை வெளியிட்டு விட்டோ சென்றிருக்கலாம். ஆனால், அப்படி செல்லாமல் முதலில் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி செல்ல, அவரை பின்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் சென்றிருப்பதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது."டெல்லியில் பிரதமர், அமித் ஷாவை சந்தித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக ஆட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, இப்போதுதான் ஸ்டாலின் ஆட்சியமைத்திருக்கிறார். எந்த கட்சி ஆட்சி அமைத்தாலும் மக்கள் நலனுக்காக அதிமுக குரல் கொடுக்கும் என்று பதிலளித்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், மறுநாள் தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவித்திருந்த மாநில அளவிலான போராட்டத்தை பற்றி செய்தியாளர்களிடம் கூறியிருந்தால் அது டெல்லி ஊடகங்களில் பிரதான செய்தியாக வெளிவந்திருக்கும். ஆனால், அப்படி வெளியிட முடியாத அளவுக்கு என்ன சிந்தனையில் இருந்ததார் எடப்பாடி பழனிசாமி?" என்று குபேந்திரன் கேள்வி எழுப்பினார். மொத்தத்தில் வேறு ஏதோ ஒரு விஷயத்துக்காக பேச டெல்லிக்கு சென்று விட்டு, தமிழகத்தில் பெயருக்காக ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கும் அதிமுக, அதன் நோக்கத்தை சொதப்பியிருப்பதாகவே கருதுகிறேன் என்கிறார் குபேந்திரன்.
பிற செய்திகள்:
- ஒலிம்பிக் மாரத்தானில் 37ஆவது இடம் பிடித்தவருக்கு ஏன் ராஜ மரியாதை?
- பெகாசஸ் உளவு செயலி: இலக்கான தமிழ்நாட்டுத் தலைவர்கள் - புதிய தகவல்கள்
- மோதி, அமித் ஷா சந்திப்புக்கு இ.பி.எஸ், ஓ.பி.எஸ் காட்டிய அவசரம் - டெல்லியில் நடந்தது என்ன?
- தாராளமயமாக்கத்தை தமிழ்நாடு எப்படி பயன்படுத்திக் கொண்டது?
- தாராளமயமாக்கல்: பழைய இந்தியா Vs புதிய இந்தியா - 4 வேறுபாடுகள்
- டோக்யோ ஒலிம்பிக்: தங்கப் பதக்கம் வென்ற 13 வயது வீராங்கனை
- சைபர் தாக்குதல்: ஹேக்கிங் தரவுகளை மீட்க முடியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












